மனித நேயத்தின் மகுடம் ஸ்டான்லி மறைந்தார்!

-சாவித்திரி கண்ணன்

சமூகச் செயற்பாட்டாளர் ஸ்டான்லி மறைந்து விட்டார்! எளிய விளிம்பு நிலை மக்களுக்காகவே சதா சர்வகாலமும் சிந்தித்து செயல்பட்ட அவரது செயல்பாடுகள், பண்புகள் உன்னதமானவை! பல்லாயிரம் மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை உருவாக்கிய அவரது வாழ்க்கை சொல்லும் செய்திகள் அர்த்தமுள்ளவை!

திண்டிவனம் பூர்வீகமாகக் கொண்ட வில்லியம் ஸ்டான்லி 1970 களின் பிற்பகுதியில் வேலூர் மாவட்டம் ஏலகிரியில் தன் சமூகத் தொண்டைத் தொடங்கியவர்! 1980 ல் அவர் இந்தியாவிலேயே பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஒரிசாவிற்கு சமூகத் தொண்டு செய்யச் சென்றார்! ஒரிசா மலைவாழ் ஆதிவாசிகளை சந்திக்க அவர்கள் வாழ்க்கை நிலைமையை உணரவும் இவர் எந்த பேருந்துகளும், செல்ல முடியாத பகுதிகளுக்கு கால் நடையாக கடும் பயணம் மேற்கொண்டு மலைமுகடுகள் எல்லாம் ஏறி இறங்கி சென்று சந்தித்து உள்ளார்!

பிறகு படிப்படியாக அப்பகுதிகளுக்கு சாலை வாசதிகள் ஏற்படவும், ஆங்காங்கே கல்விக் கூடங்கள், சிறு மருத்து மையங்கள் உருவாகவும் அரசிடம் போராடிக் கொண்டு வந்தார்! உலகளாவிய தொண்டு நிறுவனங்களின் உதவிகள் பெற்று ஆதிவாசிகள் சுய தொழில் பயிற்சிகளுக்கு, அவர்களின் தற்சார்பு வாழ்க்கைக்கு அடித்தளமிட்டார்! நாற்பதாண்டுகளாக அயராத அரும் தொண்டாற்றிய ஸ்டான்லி பழங்குடி மக்களோடு இரண்டற கலந்துவிட்டார்!

ஒவ்வொரு பகுதியில் ஆதிவாசிகள் பேசும் மொழிகள் எல்லாம் அவருக்கு அத்துப்படியாகி இருந்தது! கோண்டு பழங்குடிகளிடம் அவர்கள் ஸ்லாங்கிலேயே பேசுவார். முண்டா பழங்குடிகளிடம் அவர்கள் சொல்லாடல்களை ஒத்து பேசுவார்! கோலி, பைடா, லோடா என ஒவ்வொரு பழங்குடிகளுமே அவரை தங்களில் ஒருவராக பாவித்தனர்! இவற்றை நான் நேரடியாக கண்டு வியந்துள்ளேன். ஓரிசா பழங்குடி வாழ்க்கை பற்றியும், அவர்களிடையே உள்ள வினோத வழக்கங்கள் பற்றியும் அப்போது நான் குமுதத்தில் எழுதினேன்.

நலிந்த பிரிவினருக்கான ஒருங்கிணைந்த கிராம்புற மேம்பாடு ( WIDA ) என்ற பெயரில் அவர் உருவாக்கிய இயக்கம் சார்பில் பல்லாயிரம் ஆதிவாசி குடும்பங்களுக்கு வீடுகள் கிடைக்க வழிவகை தந்தார்! மக்களிடையே அவருக்கு இருந்த செல்வாக்கால் ஒரிசாவில் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் எம்.பி சீட் தர முன்வந்த போது அன்போடு மறுத்துவிட்டார்! இயற்கையை சூறையாடி சூழலியலை கெடுக்கும் பெரு நிறுவனங்களை எதிர்த்து போராடும் சுதந்திரத்தை அரசியல் வாழ்க்கை பறித்துவிடும் எனக் கருதினார்! அதே சமயம் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக அரசாங்கத்தின் சட்டதிட்டங்கள் உருவாக்க வேலை செய்தார்!

இன்றைக்கு அங்குள்ள லட்சக்கணக்கான பழங்குடிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு பின்னணியில் அவருடைய சேவைகளின் பங்களிப்பு புதைந்துள்ளது! தன்னோடு இணைந்து செயல்படத்தக்க வாழ்க்கைத் துணையாக ஆந்திராவை சேர்ந்த சசி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்! இதன் மூலம் இவரது செயல்பாடுகள் ஆந்திராவுக்கும் விரிந்தது! சசியும் மிகத் தீவிரமாக ஆதிவாசிகள் வாழ்க்கை மேம்பாட்டிற்கு வேலை செய்தார்!

இது அவரது வாழ்க்கையின் ஒருபக்கம் என்றால், மறுபக்கம் இந்தியாவில் எங்கு பெரிய அளவில் இயற்கை பேரிடர் நடந்தாலும் அங்கே ஸ்டான்லியின் பிரசன்ஸ் இருக்கும்! பெருமழை வெள்ளம், பூகம்பம், சுனாமி..என எது நடந்தாலும் ஸ்டான்லி களத்தில் இறங்கி தீர ஆய்வு செய்து அங்கே தேவைப்படும் உதவிகளை பட்டியலிட்டு, அதை சரியாக கொண்டு சேர்க்க அந்த பகுதி மக்களிடையே நல்ல முறையில் செயல்படும் மக்கள் இயக்கங்களை கண்டறிந்து அவர்களிடம் நிதியைத் தந்து அவர்கள் சிறப்பாக செயல்பட துணை நிற்பார்.

அந்த வகையில் குஜராத்தில் 2001ல் பூகம்பம் ஏற்பட்ட போது அவரோடு ஒருவார காலம் களத்தில் இறங்க எனக்கொரு வாய்ப்பு என் நெருங்கிய நண்பன் சிவக்குமார் மூலம் வாய்த்தது! சாப்ட்வேர் நிபுணரான என் நண்பன் சிவகுமார்  மூலம் தான் ஸ்டான்லியும் நட்பு கிடைத்தது! இதனால் குஜராத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் ஸ்டான்லியோடு நாங்கள் பயணித்து அங்கு நிகழ்ந்த பூகம்பத்தின் விளைவுகளை நான் துக்ளக்கில் விரிவாக எழுதினேன்! அப்போது நரேந்திர மோடி குஜராத்தில் பிரபலமடையாத காலகட்டம். கேசுபாய் பட்டேல் முதல்வராக இருந்தார்.

இதே போல தமிழகத்தில் சுனாமி ஏற்பட்ட போது மீனவ மக்களுக்கு பெரும் உதவிகள் கிடைக்க மீனவ இயக்கங்களையே அழைத்து அவர்களிடம் நிதியை வழங்கி செயல்பட வைத்தார்! இது போன்ற நிதிகளை பெறுவதற்கு அவர் உலகின் எல்லா நாடுகளுக்கும் பயணித்து உள்ளார்! அனேகமாக அவர் கால்படாத நாடுகளே இருக்க முடியாது! 2015ல் பெருவெள்ளம் ஏற்பட்ட போது சுமார் ஒரு லட்சம் விளிம்பு நிலை மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க வழிவகை செய்தார்!

அவர் அடிக்கடி சென்ற இடம் ஜெனீவா! இது போன்ற தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் தலைமையகம் அங்கு தான் இருந்தது. எல்லா மக்கள் இயக்கங்களையும் ஒருங்கிணைத்து வழி நடத்துவதில் ஸ்டான்லிக்கு உள்ள ஆற்றல் மற்றும், நேர்மை கருதி ஜெனிவா தலைமையகத்தில் இவருக்கு ஒரு முக்கிய பதவி தந்து வருட சம்பளமாக பெரும் தொகையை நிர்ணயித்து அவர்கள் ஸ்டான்லியை அழைத்த போது ஸ்டான்லி செல்ல மறுத்து விட்டார்! தான் மக்கள் மத்தியில் இயங்குவதே அவருக்கு பேருவகையாக இருந்தது!

வெளி நாட்டில் அங்குள்ள சமூக செயற்பாட்டாளர்களுடன் ஸ்டான்லி!

பணம், அதிகாரம், பதவி எதுவும் இந்த மகிழ்ச்சியை நிறைவு செய்யாது என்பது அவர் கண்ட அனுபவ உண்மை! அவர் எப்போதுமே எளிய மக்களோடேயே பேசி உறவாடி மகிழ்வார்! அவர் எந்த ஹோட்டலில் தங்கினாலும் அந்த ஊழையர்களும், சர்வர்களும அவருக்கு நெருக்கமாகிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். அவருக்கு அவ்வப்போது கார் ஓட்ட வருபவரின் வாழ்க்கையில் அவர் முக்கிய அங்கமாகிவிடும் அதிசயம் கண்டுள்ளேன்! நெருங்கி பழகுபவர்களின் தவறுகளையும், பலவீனங்களையும் சகித்துக் கொண்டு நட்பு பாராட்டுவார்! சுயநல நோக்கங்களோடு பழகுபவர்களிடம் இருந்து நாசுக்காக விலகி நிற்பார்! அதை வெளிப்படுத்தக் கூட மாட்டார்!

நிறைய மக்கள் இயக்கங்களுக்கு பெரும் நிதியை அனாசியமாக கொடுத்துவிட்டு, அடுத்தடுத்து என்று வேகமாக ஓடிக் கொண்டு இருப்பார். அவர்கள் செய்யும் சிற்சில குற்றம், குறைகளை யாரும் அவர் கவனத்திற்கு கொண்டு போனால், ”விடுங்க நெல்லுக்கு இறைத்தால், ஆங்காங்கே புல்லுக்கும் போகலாம்.. இதையெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் நடக்க வேண்டியது எதுவுமே நடக்காது! முதலாவதாக ‘நாம் நேர்மையாக இருக்கிறோம்’ என்பதே அவர்கள் பெரிய தவறுகள் செய்யாமல் தற்காத்துவிடும். அவ்வளவு தான்” என்பார்! அவருக்கு யாரிடமும் குற்றம் குறைகள் தவறுகளை பார்க்கவே தெரியாது! உண்மையிலேயே ‘ஜெண்டில்மேன்’ என்பதன் இலக்கணம் ஸ்டான்லி தான்!

2014 ல் பாஜக ஆட்சி பொறுப்பேற்று வந்தவுடன் கிறிஸ்த்துவ அமைப்புகள் வெளிநாட்டு நிதிகளை பெற்று உதவுவதை தடுக்க பற்பல கடுமையான நடைமுறைகளை அமல்படுத்தியது! இதனால் அதற்கு பிறகு ஸ்டான்லி அவர்களால் முன்பு போல விளிம்பு நிலை மக்களுக்கு அதிகமான உதவிகளைச் செய்ய முடியாமல் போயிற்று! நான் பழகிய வகையில் அவர் எந்த கடவுளையும் வணங்கிப் பார்த்ததில்லை! மத நடவடிக்கைகள் மருந்தளவுக்கு கூட அவரிடம் இல்லை!

‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் குணம்’ அவரிடம் பரிபூரணமாக இருந்தது! அவரோடு பழகியவர்களுக்கு அவரது நற்குணங்களும், சமூகப் பார்வையும், தொண்டு செய்வதில் சுகம் காணும் பண்பும் தொற்றாமல் இருக்காது! அது தொடர்ந்து பல்லாண்டுகள் இந்த சமூகத்தில் அதிர்வுகளை உண்டாக்கிய வண்ணம் இருக்கும்! அவர்கள் அனைவரும் ஸ்டான்லி நினைவை போற்றி செயல்பட்டுக் கொண்டே இருப்பார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time