மதம், அரசியல் இரண்டுக்குமே உணர்ச்சிகரமான முட்டாள்தனமான கூட்டம் தேவை!
அறிவு, உண்மை இரண்டையும் தொலைத்தவர்கள் தான் இவர்களின் தேவை!
அது தான் திருமாவளவன் பாஜக விவகாரத்தில் நடந்து கொண்டுள்ளது.
இவர் ஏன் 3,500 வருஷத்திற்கு முன்பு சொல்லப்பட்டதை தற்போது பேசுகிறார்? இந்த காலத்தில் யாருக்கு மனுதர்ம நூல் பற்றித் தெரியும்? அதை யாரும் கடைப்பிடிப்பது இல்லையே..சமூகம் அதைக் கடந்து எவ்வளவோ தூரம் வந்துவிட்டதே..தற்போது எந்த இந்து மத சாமியாரும் அதையெல்லாம் பேசுவதில்லை! எந்த ஆண்மகனும் மனுவைச் சொல்லி மனைவியை மிரட்டுவதில்லை! எல்லோரும் அதையெல்லாம் மறந்துவிட்டனர். சமூகம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறதல்லவா? இந்த ஆள் எதுக்கு தேவையில்லாமல் மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி இழிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்றெல்லாம் பேசி இந்துக்களை வம்புக்கு இழுக்கிறார்…!
இது தான் பல நண்பர்களும் வைக்கும் கேள்வி?
உண்மையில் திருமாவளவன் இப்படி ஒரு சர்ச்சை தான் பேசுவதையொட்டி எழும் என்பதை நினைத்தும் பார்த்திருக்கமாட்டார் என்று தான் எண்ணுகிறேன்.ஏனெனில்,திருமாவளவனின் அந்த பேச்சு ஒரு மாதத்திற்கு முன்பு (செப்டம்பர்-27) ஜீம் மீட்டிங்கில் ஐரோப்பிய பெரியார் உணர்வாளர் களிடையே பேசியதாகும்! இது சற்றே காலதாமதமாக பாஜகவின் கண்ணில்பட்டுவிட்டது
சர்ச்சைகளை உருவாக்கவும்,மோதல்களை எதிர்பார்த்தும் பாஜக கண்கொத்தி பாம்பாக காத்திருக்கிறது என்பது இதற்கு முன்பே நடிகர் சிவகுமார், நடிகை ஜோதிகா ஆகியோர் மிக இயல்பாகப் பேசியதை இந்துமதத்திற்கு எதிராகப் பேசியதாக திசை திருப்பிய போதே நாம் அறிந்தது தானே!
எனவே பிடித்துக் கொண்டார்கள் ‘’ஆகா, இந்து பெண்களை பரத்தையர்கள்,விபசாரிகள் என்று சொல்கிறாயா…?விட்டோமா பார் ஒழுங்கா மன்னிப்பு கேள்…’’ என்று கிளம்பி விட்டார்கள்!
மனு அவ்வாறு எழுதியிருப்பது உண்மைதானே…! ’’அதை நான் ஏற்கவில்லை, கடைப்பிடிக்க வில்லை, அது காலாவதியான விஷயம்’’ என்று சொல்லிவிட்டு போகவேண்டியது தானே…’’
எவனோ,எப்பவோ,எதையோ எழுதியிருக்கலாம். ஆனால், அதை இந்தாளு ஏன் சொல்லணும்? என்பது தான் இவங்க கேள்வியாயிருக்குது! நாம் அவங்களுக்கு சொல்ல வருவதெல்லாம், எவனோ,எந்தக் கூட்டத்திலோ, எதையோ பேசிட்டுப் போனதை நீ ஏன் தேடிப் பிடித்து எடுத்து வந்து அனைத்து மக்களுக்கும் போட்டு காட்டுகிறாய்? ஒரு குறிப்பிட்ட சிந்தனையாளர் குழு அவரிடம், ’’பெரியாரும்,இந்திய அரசியலும்’’ என்று பேச சொல்லி கேட்கிறாங்க.. அந்த குறிப்பிட்ட சிலரிடம் அவர் சில வரலாற்றுத் தரவுகளுடன் இவற்றையெல்லாம் பேசுகிறார்… அங்கே பேசியதைப் போய் நீ எடுத்துட்டு வந்து ஒட்டியும்,வெட்டியுமாகப் போட்டு சமூக அமைதியைக் குலைப்பானேன்…?
எனக்கென்ன கவலையென்றால்,சந்தடி சாக்கில் குஷ்புவை இன்னொரு புரட்சித் தலைவியாக்கியே தீருவதென்று இவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டது போலல்லவா சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன…!
மதம் என்பது ஒரு நெருப்பு, அது குளிர்காய நினைப்பவனுக்கு எப்போதும் கொண்டாட்டம் தான்! ஆனால்,அதை யாராவது தீண்டிப்பார்க்க நினைத்தால் அவர்களுக்குத் தாங்கமுடியாத திண்டாட்டம் தான்!
நீங்கள் வரலாற்றை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால்,மதத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியவர்கள் பெரும்பாலும் அழிவைச் சந்தித்தாக வேண்டும் அல்லது அடங்கிப் போய்விட வேண்டும் என்பது தான் யதார்த்தமாக உள்ளது.
சாக்ரட்டீஸ் ஏன் கொல்லப்பட்டார்…? கடவுள் குறித்து அவர் ஆழமான கேள்விகளை எழுப்பினார்! யாராலும் பதில் சொல்லமுடியாத கூர்மையான கேள்விகளை வைத்தார்! ஏதென்ஸ் நகர மக்களுக்கு ஏகத்துக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது.அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டார்!
இயேசு கிறிஸ்து ஏன் கொல்லப்பட்டார்? யூத மதத்தை அவர் கேள்விக்கு உட்படுத்தினார். அதனால் சிலுவையில் அறையப்பட்டார்! ஆனால்,அதே கிறிஸ்துவின் போதனைகள் ஒரு மத வடிவம் பெற்றவுடன் அவர் யூதமதத்திற்கு எதிராக என்ன கேள்விகள் வைத்தாரோ.. அதே கேள்விகளைக் கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக கேட்டவர் தான் ஓஷோ! உண்மையில் இயேசுவை மிக உயர்வாக ஓஷோ மதித்தார்.அவர் கேள்விகேட்டது கிறிஸ்துவத்தில் புகுந்து கொண்ட ஆதிக்க சக்திகளை எதிர்த்துத் தான்! உலகில் ஜனநாயகத்திற்குப் பேர் போன அமெரிக்கர்களாலேயே அதைத் தாங்கமுடியவில்லை! பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு அவர் அமெரிக்காவிலிருந்து விரட்டப்பட்டார்!
ஆக, உலகில் மதத்திற்கு எதிராக நியாயங்களைப் பேசியவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். என்றாலும் அந்த நியாயங்கள் காலங்கடந்தாவது மக்களின் மனசாட்சியை உலுக்கவே செய்துள்ளன!
அரசியல்,மதம் இரண்டிலும் ஒருவர் நியாயங்களைப் பேசி வெற்றியடைவது என்பது மிக,மிக அரிதாகத் தான் நிகழ்ந்துள்ளன! தந்திரசாலிகளே இங்கே வெற்றி பெறுவது வாடிக்கையாகவுள்ளது!
என் அனுபவத்தில் ஜெயலலிதாவின் அரசியல் என்பது முழுக்க,முழுக்க தந்திரத்தால் கட்டமைக்கப்பட்டு வெற்றிபெற்ற ஒன்று தான்! ஜெயலலிதாவுக்கு உண்மையில் திராவிட அரசியல், தமிழ் உணர்ச்சி…இதெல்லாம் எட்டிக்காயாகும்!
ஜெயலலிதாவின் ஆரம்பக்கால நண்பர்கள் பலருக்கு இந்த உண்மைகள் நன்கு தெரியும்! எம்.ஜி.ஆரின் அரசியலைக் கூட அவர் கோமாளி அரசியலாகவே பார்த்தார் என்பது அவரோடு நெருங்கிப் பழகிய சிலர் சொல்லக் கேட்டு நான் வியந்துள்ளேன்! அவர் மனம் ஆரம்பத்தில் தேசிய அரசியலில் தான் லயித்திருந்தது! ஆனால், அவர் தனக்கு முற்றிலும் உடன்பாடில்லாத கட்சிக்குள் வந்தார்! அதே சமயம் வந்த பிறகு முழுமையாக அதற்கு தன்னை தகவமைத்துக் கொண்டார். அரசியல் என்பது வேஷம் கட்டும் இடம் என்பதையும், அது கலைத்துப் போடமுடியாத வேஷம் என்பதையும் அவர் நன்றாகவே உணர்ந்திருந்தார்!
சம்பவங்களைச் சாதுரியமாகப் பயன்படுத்தி கொள்வதிலும், தந்திரங்களிலே தளராமல் நம்பிக்கை வைப்பதிலும் தான் அவர் தன் வெற்றியை சாத்தியப்படுத்தினார்!
விருப்பம் இல்லாவிட்டாலும் எம்.ஜி.ஆரோடு தனக்கிருந்த நெருக்கத்தை அவர் தொடர்ந்து சமூகத்திற்கு அடையாளப்படுத்திக் கொண்டே இருந்தார்! கடைசியில் எம்.ஜி.ஆர் மறைவின் போது கூட அவர் அதை நிரூபிக்க எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் அவர் உடல் வைக்கப்பட்ட ராணுவ டிரக்கில் ஏறினார்! அது அத்துமீறல் என்பது அவருக்கு நன்கு தெரியும்! அதனால், அவர் வலுக்கட்டாயமாகப் பிடித்திழுத்து இறக்கப்பட்டார். ஆனால், அப்படியொரு சம்பவத்திற்கு தானே அவர் காத்திருந்தார்! இறக்கப்பட்ட நிகழ்வை தன் மீது இரக்கப்படுவதற்கான நிகழ்வாக அவர் மாற்றிக் கொண்டார்! தன் வெற்றியை அங்கேயே அவர் உறுதிப்படுத்திவிட்டார்! அதன் பிறகு அவர் சட்டமன்றத்திலே திமுகவினரை வெறுப்பேற்றி தன்னை தாக்கும் சூழலை திட்டமிட்டு உருவாக்கினார்! அவர் போட்ட திட்டத்திற்கு உணர்ச்சிவசப்பட்ட திமுகவினர் தங்களையும் அறியாமல் பூரண ஒத்துழைப்பு தந்து அவரை வளர்த்துவிட்டனர்!
உலகின் அனைத்து மதங்களும் பாரபட்சமின்றி பெண்களை ஆண்களின் சொத்தாகவோ அல்லது ஆண்களுக்கு கட்டுபட்டவர்களாகவோ தான் பார்க்கின்றன! காலப்போக்கில் தான் அதில் சில மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன! எந்த மதத்திலும் இறைதூதர்களாக பெண்கள் அங்கீகரிக்கப் படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம் பெண்களுக்கு எதிரான விஷயங்களை பெண்களைக் கொண்டே ஆதரிக்க வைத்து அரங்கேற்றுவார்கள்! அந்த தந்திரத்தை தான் பாஜக தற்போது அரங்கேற்றிவருகிறது.
Also read
அழகான பெண்களுக்கு என்று ஒரு ராசி உண்டு! அவர்கள் தங்களுக்குப் பாதகமான சம்பவங்களைக் கூட சாதகமாக மாற்றிவிடும் வல்லமை உள்ளவர்கள்! அதற்கு அத்தனை மீடியாக்களும் துணைபோவார்கள்… என்பதை நான் பல சம்பவங்களில் பார்த்துள்ளேன். அரசியலில் ஈடுபடக் கூடிய எல்லா பெண்களையும் குறித்தும் இங்கு நான் பேசவில்லை! அரசியலில் நேர்மையாக மக்கள் பணியாற்றும் பெண் தோழர்களை நான் நன்கறிவேன்! ஜெயலலிதா எப்படி விரும்பாத அரசியலுக்குள் நுழைந்து பிறகு அதை தனக்கு விருப்பம் போல வளைத்துக் கொண்டாரோ, அதைப் போல தான் முற்றிலும் விரும்பாத பெண் அடிமை அரசியலுக்கு துணை போவதன் மூலம் பாஜகவில் தன்னை வளர்த்துக் கொள்வதற்கு தன்னை தகவமைத்துக் கொண்டு வருகிறார் குஷ்பு. அன்று ஜெயலலிதா கையாண்ட தந்திரங்களைப் போலவே இன்று குஷ்புவை வைத்து பாஜக அரங்கேற்றுகிறதோ என்று எனக்கு நினைக்க தோன்றுகிறது! அதற்கு விசிகவினர் உணர்ச்சி வசப்பட்டு தங்களைத் தொடர்ந்து ஒப்புக் கொடுத்து வருகிறார்கள் என்பது அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு இந்த பிரச்சினையை கையாளுவதில் தெரிகிறது! குஷ்பு பேசிவருவதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் நீதிமன்றத்தை எதிர்கொள்வதில் விசிக கவனம் காட்ட வேண்டும்! வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுத்து பொறுப்பு அரசியலை கைகொள்ளாவிட்டால்…பிரச்சினை பாஜகவிற்கு சாதகமாக செல்லக் கூடிய வாய்ப்புகளே அதிகம்! ஆக்கப்பூர்வமான அரசியலுக்கு அடியெடுத்து வைப்போம்!
உண்மையான நடுநிலையான பார்வை, பாராட்டுக்கள் வழிவழியாகச் சொல்லப்பட்டு மூளையின் அசுக்களில் படிந்து கிடக்கும் அழுக்கு இப்பபோதும் பழக்க வழக்கங்களாக சமூகத்தில் ஆழ ஊடுறுவிக்கிடப்பதை மறுக்கமுடியாது அதன் வலி உணர்பவர்களின் வதறையை இந்த வேடிக்கை அரசியல் நபர்களிடம் எதிர்பாப்பது தவறுதான்