வட சென்னையின் வாழ்வாதாரத்தை சூறையாடும் சி.பிசி.எல்!

-சாவித்திரி கண்ணன், வெங்கடேஷ்

மிக்ஜம் புயலில் வட சென்னையின் மணலி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் (CPCL) ஏற்பட்ட மிகப் பெரிய எண்ணெய் கசிவு குடியிருப்புகளில் புகுந்து சகலவற்றையும் சர்வநாசம் செய்துள்ளது! இந்த பேரவலம் இன்னும் தொடர்கிறது. எண்ணெய் பரவலால் 25 கீ,மீ வரை கடலில்  மீன்கள் செத்து மிதக்கின்றன! மீளாத் துயரில் மீனவர்கள்! 

சென்னை மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடட் (சிபிசிஎல்) நிறுவனத்தில் இருந்து கசிந்த பெரிய அளவிலான எண்ணெய்க் கசிவால் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பரவிய எண்ணெய் படலம் வட சென்னை மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையே கேள்விக்கு உள்ளாக்கிவிட்டது. எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், அனல் மின் நிலையங்கள் , சிமெண்ட் ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள், ஸ்டீல் கம்பெனிகள்..என சுற்றுச் சூழலுக்கு பேராபத்தான நிறுவனங்கள் நாளும்,பொழுதும் மூச்சுத் திணறி வாழ்ந்து கொண்டிருக்கும் வட சென்னைவாசிகள் தற்போதைய எண்ணெய்க் கசிவால் தாங்கொண்ணாத் துயரத்திற்கும், இழப்பிற்கும் ஆளாகியுள்ளனர்.

மணலி, எண்ணூர்,திருவொற்றியூர்… பகுதிகளின்  குடியிருப்பு சுவர்கள், தெருக்கள், மரங்கள், தாவரங்கள் மீதும் எண்ணெய் படலம் படிந்துள்ளது. அங்கு பெட்ரோலிய துர்நாற்றத்தால் மூச்சு முட்டி மக்கள் சுவாசிப்பதற்கே சிரமப்படுகின்றனர். வீட்டில் உள்ள சோபா, நாற்காலி,டி.வி.பிரிட்க்,பேன், பல்ப், துணிமணிகள், பாத்திரங்கள்…என எல்லாவற்றிலும் எண்ணெய் படலம் தான்.. எதை ஒன்றையுமே பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அனைத்தையும் இழந்து தற்போது நிற்கதி ஆகியுள்ளனர்!

கொசஸ்தலையாறு, எண்ணூர் கழிமுகம், எண்ணூர் குப்பம், எண்ணூர் முகத்துவாரம். மணலி மண்டலம் சடையங்குப்பம், எர்ணாவூர் ஆதிதிராவிடர் காலனி, பங்கிங்காம் கால்வாயை ஒட்டியுள்ள பகுதிகள், கிரிஜா நகர்  திருவொற்றியூர் நெட்டுக்குப்பம் , தாழங்குப்பம், காட்டுக்குப்பம், காசிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவி, கடலுக்குள் சென்று சுமார் 25 கிமீ தூரத்துக்கு பரவியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதிகளின் மீன்கள் , கடல்வாழ் உயிரினங்கள் எல்லாம் செத்து மிதக்கின்றன! கடல்பாசிகள் அழிந்துவிட்டன! அப்பகுதிகளுக்கு இரைதேடி வரும் பறவைகள் எங்கே போனதென்றே தெரியவில்லை.

மீனவப் பகுதிகளில் மீன்படி படகுகள், வலைகள் மீது தடிமனான பிசின் போன்ற கரிய நிறக்கழிவு படிந்து அவை பயன்படுத்த முடியாமல் பாழாகியுள்ளன! பாழாகியுள்ளன. இதனால் மீனவர்கள் அங்கு தற்போது மீன்பிடிக்க முடியாமல் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். வயிற்றுபசி காரணமாக மீன் பிடித்து வந்தாலும் அதை யாரும் வாங்கத் தகுதியற்ற வகையில் உள்ளன!  இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் இருந்து காசிமேடு துறைமுகம் வரை 25 கி.மீட்டர் வரை எண்ணெய் கசிவு படர்ந்துள்ளதால் அவை மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்தியக் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பவுடர் எண்ணெய் கரைப்பான் தெளித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்துள்ளது. மேலும், எண்ணெய் கசிவு தொடர்பாக ஆய்வு செய்ய வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில், சுற்றுச்சூழல் துறை செயலர் மற்றும் சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.

எண்ணெய் கசிவுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்ய, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன் தலைமையில் ஒரு தொழில்நுட்ப குழுவை அரசு அமைத்து உத்தரவிட்டுள்ளது. இக்குழு சிபிசிஎல் வளாகம் மற்றும் தொடர்புடைய தொழிற்சாலையில் ஆய்வு செய்து, முதற்கட்ட விசாரணை அறிக்கையை சமர்ப்பித்ததுள்ளனர்!

இத்தனை அழிவுகளுக்கும், துயர்களுக்கும் காரணம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்து வரும் சி.பி.சி.எல் நிர்வாகம் தான்! ஆனால். இந்த துயரத்தில் இருந்து மக்களை மீட்க அவர்கள் எந்த உதவியோ, முயற்சியோ மேற்கொள்ளாமல் இருப்பது தான் வேதனையளிக்கிறது என மக்கள் கொந்தளிக்கின்றனர். இந்த ஆலை தன்னைச் சுற்றி உள்ள பெருந்திரள் மக்களின் துயரத்தை தீர்க்க அது கடுகளவும் முயற்சிக்காமல் இருப்பதை எப்படி புரிந்து கொள்வது எனத் தெரியவில்லை.

ஆனால், சி.பி.சி.எல். நிறுவனமோ தங்கள் ஆலையிலிருந்து எண்ணெய் வெளியேறியதாகச் சொல்வதை மறுக்கிறது. அந்த நிறுவனம் X சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த விளக்கத்தில், “சி.பி.சி.எல். மணலி சுத்திகரிப்பு நிலையத்தின் எந்தக் குழாயிலும் கசிவு ஏதும் இல்லை என பதிவிட்டு உள்ளனர். ஆனால், மாசுகட்டுபாட்டு வாரியம் தொடங்கி அனைவரும் இவர்களையே கைக்காட்டுகின்றனர்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி 28 தேதி எண்ணூரில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டன. இதில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதமடைந்து எண்ணெய் கடலில் கொட்டியது. இதனால் எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரை எண்ணெய் படலம் பரவியது. கடல் மாசடைந்து மீன், நண்டு உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தது நினைவிருக்கலாம். அப்போது 10 நாட்களுக்கும் மேலாக 1000க்கும் மேற்பட்ட மக்களே கைகளால் வாளிகளில் எண்ணெய் படலத்தை மொண்டு ஊற்றி அகற்றினர். அதற்குள் அது கல்பாக்கம் வரை விரிந்து விரவிவிட்டது. அதே போலத் தற்போதும் நடக்க் கூடாது என மக்களே சில தடுப்பு முயற்சிகளை கைகளால் மேற்கொள்கின்றனர்! இது பேரவலம்!

கடலில் ஆங்காங்கே மிதக்கும் கனமான எண்ணெய் படலம்!

ஆனால், பேராபத்தை உண்டாக்கும்  இந்த  எண்ணெய் கசிவுக்கு மத்திய, மாநில அரசுகளின் போர்க்கால நடவடிக்கை அவசியமாகும்!

CPCL (Chennai Petrolium Corporation Limited) எண்ணெய் நிறுவனத்தில் இருந்து வந்த எண்ணெய் கசிவு, எண்ணூர் ஓடை மூலம் கடலில் கலந்துள்ளதை டிசம்பர் 9 அன்று கள ஆய்வு செய்த இன்வோடெக் நிறுவனம் ஒரு அறிக்கை தந்துள்ளது;

எங்கள் குழு எண்ணெய்க் கசிவு ஏற்பட்டுள்ள சிபிசில்  தொடங்கி எண்ணூர் ஓடை வரை ஆய்வுகளை செய்தது. கடலில் கலந்துள்ள எண்ணெய், பெட்ரோலிய பொருள்களிலிருந்து வரும் வாடையாக உள்ளது. இது பொது மக்களுக்கு ஒவ்வாமை மற்றும் மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. இன்னும் தொடர்ந்து எண்ணெய்க் கசிவு வந்து கொண்டே இருப்பதாக ஐயம் கொள்கிறோம். எண்ணூர் ஓடையில் கலக்கும் கசிவை தடுக்க CPCL நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. CPCL அதிகாரிகள் விரைந்து துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும்.

எண்ணூர் சிற்றோடை சதுப்பு நிலம் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட செடிகொடிகள் மற்றும் பறவை வகைகள், மீன்கள் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அடங்கிய பன்மய உயிர்ச்சூழல் கொண்டது. இது மிகவும் பலவீனமான சென்சிடிவ்வான உயிர்ச் சூழல் மண்டலம். தவிர, இந்தக் கடலை சார்ந்து தான் ஆயிரக்கணக்கான மீனவ மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அது கடல் சார்ந்த வாழ்வை மேற்கொள்ளும் மீனவ மக்களுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும்…

இந்த எண்ணெய் கசிவை எண்ணூர் அருகே தடுக்காவிட்டால், அவை விரைவில் விரிந்து பரந்து பெசன்ட் நகர், நீலாங்கரை, அக்கறை, திருவான்மியூர், கோவளம், மாமல்லபுரம், கல்பாக்கம் வரை பரவிவிடும். தற்போது காசிமேடு வரை பரவி விட்டது. இந்த எண்ணெய் கடலில் கரையாது. பிளாஸ்டிக், குப்பைகள் போன்று கடற்கரையில் அடித்து ஒதுங்கி கடற்பரப்பை நாசமாக்கும்.

செய்யக்கூடிய தீர்வுகள்:

பகிங்காம் கால்வாயில் இந்தக் குறிப்பிட்ட இடத்தில் (13.1750524, 80.2909867 வரைபடத்தில் காண்க) அகலம் குறைவாக உள்ளது. அவ்விடம் அதிகாரிகள் கசிவுகளை தேக்கி booms ( மிதக்கும், ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட தடுப்புகள்)  மூலம் அகற்ற முடியும். எண்ணெய்க் கசிவு பரவுதலை தடுக்க https://innovotek.in/about-us  நிறுவனம் அளிக்கும்  பரிந்துரைகள்:

எண்ணெய் கசிவு அடர்த்தியாக உள்ளது. இது ஓடும் நீரில் மிதக்கும் தன்மை கொண்டுள்ளது. மற்ற குப்பைகளோடு கலக்கிறது…!

# Boom பயன்படுத்தி தடுக்க முடியும். அதன் மூலம் அடர்தியுள்ள கசிவு மேலே தடுக்கப்பட்டு, அடர்த்தி குறைந்த நீர் கீழே கடலில் கலக்கும்.

# Boom க்கு முன்னே மெஷ் தடுப்பு (filter) அமைப்பதன் மூலம் குப்பைகளை தடுக்க முடியும்.

# சேரும் குப்பைகளை தொடர்ந்து அகற்ற வேண்டும். கால்வாய் அகலத்தை கணக்கில் கொண்டு அவ்வப்போது அகற்ற வேண்டும் என்று முடிவு செய்யலாம்.

# இப்படி boom மூலம் நிறுத்தப்பட்ட கசிவை உறிஞ்சும் பம்புகள் (vaccum pump) மூலமோ மனித முயற்சியில் மூலமோ அகற்றி லாரிகள் மூலம் கொண்டுசெல்லப்பட வேண்டும்.

# பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்ற பின் எண்ணெய்யை உணவாக உண்ணும் பாக்டீரியாக்களை கொண்டு அழிக்கப்பட வேண்டும்.

TERI கூறும் தீர்வுகள்:

# மனித முயற்சியில் கசிவுகள் அகற்றுதல் வேண்டும்.

# கசிவால் கரைவாழ் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் சூழலியல் பாதிப்புகள்:

கடல் மற்றும் கரையோர தாவர மற்றும் விலங்குகளுக்கு பாதிப்புகள் ஏற்படலாம். கரையோரம் உள்ள மீன்கள் இன்னும் கூடுதலாக பாதிக்கப்பட்டு இறக்கும்.

முகத் துவாரத்தில் உள்ள உணவுச் சங்கிலி அறுக்கப்பட்டு சூழலியல் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும். கடல் பாசிகள் அழிக்கப்படும் அதன்மூலம் அதை உணவாக உட்கொள்ளும் உயிரினங்கள் பாதிக்கப்படும். சதுப்பு நிலங்கள் பாதிக்கப்படும். சுவாசிக்கும் தன்மை கொண்ட வேர்கள் பாதிக்கப்படும். கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆக்சிசன் பற்றாக்குறை ஏற்படும். கடல் மேல் பறக்கும் பறவைகள் சூழலியல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும். அவற்றின் சிறகுகள் பாதிக்கும்.

குறுகிய கால கள ஆய்வில் மீன்களும், செடி கொடிகளும் பாதிக்கப்பட்டது  நன்றாகவே தெரிகிறது. குளிர் நீரில் இருந்து காத்துக் கொள்ள முடியாமல் மீன்களும் இதர உயிரினங்களும் மேலும் இறக்கும். தங்களை சுத்தம் செய்து கொள்ள நீரில் இறங்கும் பறவைகளும் விலங்குகளும் கசிவு கலந்த நீரை உட்கொண்டு அதன் மூலம் விரைவில் இறக்கும். புலம்பெயர் ஆமைகள் அதிகம் வரும் கிழக்குக் கரையில் இது அவைகளுக்கு தடையாக, ஆபத்தாக இருக்கும். ஜனவரியில் இதன் எதிர்பார்க்கப்பட்ட வருகை குறைய வாய்ப்புண்டு. பெரிய மீன்களும் ஓடுடைய மீன்களும் வருங்காலத்தில் கடுமையாக பாதிக்கப்படும். பெரிய மீன்கள் வளர்ச்சிக் குறைபாடு, கணைய வீக்கம், செதில் அரிப்பு போன்றவற்றில் பாதிக்கப்படும். இவற்றை உண்ணும் மனிதர்களுக்கு கேன்சர் பாதிப்புகள் வரும்.

சாவித்திரி கண்ணன்

(வெங்கடேஷ் உதவியுடன்)

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time