அரசாங்க பலத்தில் நில ஆக்கிரமிப்பு!

-சாவித்திரி கண்ணன்

ஒரு அரண்மனை கோட்டையின் முகப்பு போல கம்பீரத்துடன் திகழும் சேலம் மாடர்ன்  ஸ்டுடியோவை வசப்படுத்த ஆளும் தலைமைக்கு ஏற்பட்ட ஆசை, தற்போது அவலத்தில் நிற்கிறது! ‘வாழ வைத்த நிறுவனத்தையே வளைத்துப் போடத் துடிக்கும் இந்த அணுகுமுறை’ தமிழக மக்களிடையே திமுகவின் இமேஜை கடுமையாக பாதித்துள்ளது.

சேலம்-ஏற்காடு சாலையில் 1935-ல்டி.ஆர்.சுந்தரத்தால் தொடங்கப்பட்ட மாடர்ன் தியேட்டர்ஸ்  ஸ்டுடியோவின் முகப்பு இன்றும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஏற்காடு செல்லும் சுற்றுலா பயணிகள் இதைப் பார்த்ததும் வண்டியை நிறுத்தி, இறங்கி அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து செல்வது பல காலமாகவே வழக்கத்தில் உள்ளது.

மாடர்ன் தியேட்டர்ஸ் என்பது 1930 களில் இருந்து 1980 கள் வரை மிகப் புகழ்பெற்ற  திரைக் காவியங்களை தயாரித்து உள்ளது! முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், என்.டிஆர், ஜானகி, ஜெயலலிதா உள்ளிட்டோர் இங்கு பணிபுரிந்துள்ளனர். தமிழ் ஆங்கிலம், இந்தி, மலையாளம்,சிங்களம்..உள்ளிட்ட ஏழு மொழிகளில் 116 படங்களை தயாரித்த மாடர்ன் தியேட்டர் பாரதிதாசன், கண்ணதாசன்,கா.மு.ஷெரிப்..போன்ற இலக்கிய ஆளுமைகளுக்கும் அடித்தளம் போட்ட இடமாகும். கருணாநிதியும், கண்ணதாசனும் இங்கே மாதச் சம்பளத்திற்கு இருந்துள்ளனர்! எம்.ஜி.ஆர், கருணாநிதி, கண்ணதாசன் போன்றோர்களின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட இடம் மாடர்ன் தியேட்டர்ஸ்!  அந்த காலத்திலேயே ஐரோப்பிய இயக்குனர்கள், கேமராமேன்கள் பலரையும் தருவித்து பல புதுமைகளை திரைத் துறையில் சாதித்துக் காட்டியவர் டி.ஆர்.சுந்தரம். மலையாளத்திலும், சிங்களத்திலும் முதல் பேசும் படத்தை தயாரித்த நிறுவனமும் இது தான்! அவரது மகன் ராமசுந்தரம் ஜெய்சங்கரை வைத்து பல ஜேம்ஸ்பாண்ட் பாணியிலான படங்களைத் தந்துள்ளார்! 1982 க்கு பிறகு  மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் சினிமா தயாரிப்பில் ஈடுபடவில்லை.

அதன் பின்னர், வர்மா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் அந்த இடத்தை வாங்கி, வீடுகளைக் கட்டி விற்பனை செய்தது என்றாலும், அதன் புகழ் பெற்ற முகப்பை தகர்க்க மனமில்லாமல் பாதுகாத்து வந்தது.  மாடர்ன் தியேட்டர்ஸ்  செயல்பட்டு வந்த 8.9 ஏக்கர் நிலமானது, தற்போது மனைகளாகவும், வணிகப் பகுதியாகவும் மாற்றப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  தற்போது நினைவு வளைவுடன் கூடிய நுழைவுவாயில், உள்ளே காலியிடமாக 1,345 சதுர அடி இடம் ஆகியவை மட்டுமே உள்ளன.

இந்த இடத்தை அப்படியே மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த சினிமா சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் அதில் பணியாற்றிய புகழ் பெற்ற கலைஞர்களை நினைவுகூறும் புகைப்படங்கள் மேலும் அந்தக் காலத்தில் டி.ஆர்.சுந்தரம் வெளிநாடுகளான இங்கிலந்து, ஜெர்மன் ஆகியவற்றில் இருந்து வாங்கிப் பயன்படுத்திய கேமரா உள்ளிட்ட தொழில் நுட்பக் கருவிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தும் சிறிய அருங்காட்சியகத்தை நிறுவும் திட்டம் தங்களுக்கு இருப்பதாக தற்போதைய அந்த இடத்தின் உரிமையாளர் விஜய் வர்மா தெரிவிக்கிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரியில் சேலம் வந்தபோது, நுழைவுவாயில் அருகே செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். அன்று இரவே சேலம் மாவட்ட ஆட்சியர் இதன் உரிமையாளரை அழைத்து, முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கச் சொல்கிறார்.

எதற்காக அழைக்கப்பட்டோம் எனத் தெரியாமல் குடும்பத்துடனும், ஊழியர்களுடனும் சென்று சந்திக்கிறார் முதல்வரை சந்திக்கிறார் விஜய் வர்மா! ஸ்டாலின் நேரடியாகவே மாடர்ன் தியேட்டர் முகப்பில் தன் தந்தைக்கு சிலை வைக்க விரும்புவதாகக் கூறவே, இவர் குடும்பத்தில் மற்ற பெரியவர்களை கலந்து பேசி சொல்வதாகச் சொல்கிறார். தொடர்ந்து அதிகாரிகள் மூலம் தனக்கு நெருக்கடி தரப்பட்டதாக விஜய்வர்மா சொல்கிறார்!

இந்திய அரசாங்கத்தின் தபால்தலை

பிறகு திடீரென்று அவருக்கு சொந்தமான மாடர்ன் ஸ்டுடியோ முகப்பில் ‘இந்த இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது’ என்ற பேனரும், முட்டுக்கல்லும் வைக்கப்படுகிறது. அதாவது அந்த முகப்பை அரசுடமையாக்கிவிட்டார்களாம். ‘அந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு உரியது’ என்ற புதிய கண்டுபிடிப்பு தற்போது நடந்துள்ளது! கருணாநிதி ஐந்து முறை முதல்வராக இருந்த போது கூட, பாவம் அவருக்கு இது தெரியவில்லை. கருணா நிதியின் சிலைக்கு அவர்கள் அனுமதித்து இருந்தால் இந்த கண்டுபிடிப்புக்கு அவசியம் இருந்து இருக்காது.

மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தை வாங்கிய விஜய் வர்மாவின் தந்தையான ரவி வர்மாவிடம் 2009 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி, ”எந்த காரணத்தைக் கொண்டும் இந்த முகப்பை தகர்த்துவிடாதீர்கள். காலாகாலத்திற்கும் இதை பாதுகாத்திடுங்கள். ஏனென்றால், இது நான் உள்ளிட்ட பல அரசியல் ஆளுமைகள் உருவாகி வளர்ந்த இடம்”என வேண்டுகோள் வைத்திருக்கிறார். ரவிவர்மாவும் அதை ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது.

கருணாநிதி சிலை தங்கள் இடத்தில் வைக்கப்படுவதில் அதன் உரிமையாளருக்கு விருப்பம் இல்லாத நிலையில் தற்போது திமுக அரசு மாடர்ன் தியேட்டர் முகப்பை ஆக்கிரமித்துள்ளதாக குமுறியவாறும், கொந்தளித்தவாறும் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார் விஜய் சர்மா! ” இது எங்கும் நடக்காத அநிதீ. என் உயிருக்கே ஆபத்து’ என்று அவர் கதறியுள்ளார் குடும்ப சகிதமாக!

இடத்தின் உரிமையாளர்கள் விஜய் வர்மா, ரவி வர்மா குடும்பத்துடன் பத்திரிகையாளர் சந்திப்பு

இதைத் தொடர்ந்து பாஜகவின் அண்ணாமலை, ”கருணாநிதி பணிபுரிந்த இடங்களில் எல்லாம் அவரது சிலையை வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது எந்த விதத்தில் நியாயம்? பாரம்பரியமிக்க மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தை உருவாக்கி,  கருணாநிதிக்கு மாதச் சம்பளம் வழங்கி வாழ்வளித்த அமரர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் இடத்தையே ஆக்கிரமித்து, தனது சிலை வைப்பதை, கருணாநிதியே ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமே” என அறிக்கைவிட்டார்.

இதையடுத்து பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவாயில் வளைவு, தற்போது நெடுஞ்சாலைத் துறையின் நிலத்திலேயே முழுமையாக அமைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ள  நிலையில், பழமையான இந்த நுழைவாயில் வளைவைப் பாதுகாத்து, பராமரிப்பது மட்டுமே அரசின் நோக்கம். இந்தப் பகுதியில், வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கோ, சிலைகளை நிறுவுவதற்கோ அரசிடம் எந்த ஒரு திட்டமும் இல்லை” என்று தமிழக பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

”பாஜகவினர் இதை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்கவே அமைச்சர் அறிக்கை தந்துள்ளார். ஆனால், தற்காலிகமாக பின்வாங்கி பிறகு அதிரடியாய் செய்வதைச் செய்வார்கள்…” என்பதே தமிழக மக்கள் பார்வையாக உள்ளது! இந்த விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டுவிட்டு, பிறகு அரசு அதிகாரிகள், அமைச்சர்களை ஏவிவிட்டு அமைதி காக்கிறார் ஸ்டாலின்! பல விவகாரங்களிலும் இதே நிலைபாட்டையே அவர் கொண்டுள்ளார்! உள்ளத்தில் தெளிவிருப்பின் கள்ள மெளனம் எதற்கு?

இதற்குத் தானா, ஆசைப்பட்டீர் முதல்வர் ஐயா ஸ்டாலின்!

சேலம்வாசிகள் இந்த கம்பீரமான முகப்பை நகரின் முக்கிய அடையாளமாக உணர்வு பூர்வமாகக் கொண்டாடுகின்றனர். தமிழக மக்களின் உள்ளத்திலும், உணர்விலும் அழுத்தமாக தடம் பதித்த ஒரு வரலாற்று பெருமையாக அது தொடர வேண்டும் என்றால், அது அரசியல் நோக்கமற்ற அதன் உரிமையாளர்களிடம் இருப்பதே பொருத்தமானது! அவர்களிடம் இருந்து அதை வலுக்கட்டாயமாக பறித்து உங்கள் அரசியல் நோக்கங்களுக்கு சிதைக்காதீர்கள்! பல்லாண்டுகள் புழக்கத்திலும், புகழிலும் உள்ள ஒருவரின் சொந்த நிலத்தை அபகரிக்கத் துடிக்கும் அரசியல் அருவெறுக்கதக்கது! உடனடியாக அவர்களிடம் ஒப்படைத்துவிடுவதே சாலச் சிறந்தது. அவர்களே விரும்பி அரசிடம் ஒப்படைத்தால், அது தான் பெருமை!

திமுக அரசு, சேலம் மாடர்ன் ஸ்டுடியோ முகப்பை அபகரித்துள்ளது கொங்கு வட்டாரத்திலேயே பெரும் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது. எ.வ.வேலுவின் அறிக்கைப்படி அதை பாதுகாப்பது தான் அரசின் நோக்கம் என்றால், நல்லது, அதை அரசின் செலவின்றி அந்த நிறுவனமே செய்யட்டும் என விட்டுவிடுவதே உத்தமம்! ஏனெனில், அதை நீங்கள் கருணாநிதியின் நினைவுக்கானது என்று மட்டுமே நினைக்கிறீர்கள்! இந்த நோக்கம் பிழையானது, நியாயமற்றது.

ஏனெனில், அங்கு மாடர்ன் தியேட்டர் நினைவாக வைக்கப்படவுள்ள கண்காட்சியை அந்த நிறுவனத்தால் மட்டுமே தான் வைக்க முடியும். அன்றைய மேகராக்கள், தொழில்ட் நுட்ப கருவிகள், அரிய புகைப்படங்கள், படங்களுக்கு எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் உட்பட அரிய பொக்கிஷங்களை அவர்கள் பாதுகாத்து வைத்துள்ளதாக தெரிய வருகிறது. அதில் கலைஞரின் சாதனைகளும், பசுமையான நினைவுகளும் கலந்தே இருக்கும். அத்துடன் தென் இந்திய திரையுலகத்திற்கே பெருமை சேர்க்கும் மற்ற ஆளுமைகளான எல்லீஸ் ஆர்.டங்கன், எம்.ஜி.ஆர். என்.டி.ஆர். சிவாஜி, எம்.ஆர்.ராதா, கண்ணதாசன், சந்திரபாபு, ஜெய்சங்கர், ஜானகி, ஜெயலலிதா ஏகப்பட்ட பலரை நினைவுகூறும் போது தான் அது முழுமை பெறும்.

அரசாங்க அதிகார பலத்துடன் நடைபெற்றுள்ள இந்த ஆக்கிமிப்பால் தேவையற்ற ஒரு பதட்டமும், கெட்ட பெயருமே இந்த அரசுக்கு ஏற்படும். ஆட்சித் தலைமையை குளிர்விக்க செயல்படும் அதிகாரிகளை இஷ்டத்திற்கு ஆடவிட்டால்…,  அமைதி காக்கும் அரசியல் தலைமையின் முதிர்ச்சியும், பக்குவமும் கேள்விக்கு ஆளாகும்.

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time