கேரள அரசியல் களத்தை பேசும் தீப்பொறி பென்னி!

-பீட்டர் துரைராஜ்

கேரளாவின் களத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் பின்னணியில் எடுக்கப்பட்ட நகைசுவை கதை! அரசியல் பேசும் மூர்க்கமான தொண்டர்கள். கொள்கை பிடிப்புள்ள சென்ற தலைமுறை, சந்தர்ப்பவாத அரசியலின் இளம் தலைமுறை. காதல் ரொமன்ஸ்..என இனிமை சேர்க்கும் நட்சத்திர நடிகர்களற்ற  சிம்பிள் பட்ஜெட் படம்!

கேரளாவில் தொண்டர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் மூர்க்கமாக அரசியல் பேசுவார்கள். இதில் மக்கள் சேவை ஒன்றையே முக்கியமாகக் கருதும் ஒரு மூத்த கம்யூனிஸ்ட், சமகாலத்தைச் சார்ந்த அவரது மகன் – இவர்களுக்கிடையேயான முரண்பாட்டை – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் மோதலின் ஊடாக காட்டுகிறது தற்போது வெளிவந்துள்ள,  தீப்பொறி பென்னி.

கேரளா அரசியல் படங்களுக்கு பேர் போன ஒன்று. விடுதலை அடையும் காலத்தில் தலைமறைவாக இருந்த கம்யூனிஸ்ட் – அவனோடு தோள் கொடுத்துப் போராடி பின்னர் அமைச்சராகும் கம்யூனிஸ்டுகளை வைத்து ‘லால் சலாம்’ வெளியானது.’ஈடா’ வானது கேரளாவில் நிகழும் அரசியல் வன்முறைகளை  வைத்து  வந்தது. மாவட்ட ஆட்சித் தலைவரை பணயக் கைதியாக பிடித்து வைத்து ஆதிவாசிகள் பிரச்சினையை பேசிய ‘படா’. அறுபதுகளில்  வெளியான ‘துலாபாரம்’  தொழிற்சங்க போராட்டத்தை மையப்படுத்தியது. இப்படி பல அரசியல் படங்கள் மலையாளத்தில் உள்ளன. இந்த வரிசையில் இப்போது சேர்ந்துள்ள படம் தீப்பொறி பென்னி.

இக்கதையின் வரும் சேட்டாயி ஒரு தன்னலமற்ற கம்யூனிஸ்ட். எங்கோ நடக்கும் யுக்ரேன் போருக்காக, யாரும் வரவில்லையென்றாலும் தனியாக போராட்டம் நடத்துகிறான். எப்போதோ தியாகம் செய்தவரின் மகள் திருமணத்தை  தன் சொத்தை விற்று நடத்துகிறான். கட்சி அலுவகத்தில் ஒரு கட்டன் சாயோவோடு பல திருமணங்களை அவன் நடத்தி இருக்கிறான். இவன் நடத்தும் விழாவிற்கு ஆள் வராமல் போகலாம்; ஆனால் தனக்கு சரியென்றுபடுவதற்கு உறுதியாக போராடுபவன்தான் சேட்டாயி. பழம்பெரும் நடிகரான ஜெகதீஷ் இதில் நடித்துள்ளார்.

ஆனால், இவன் மகன் பென்னி, தன் அப்பாவை வெறுக்கிறான். சொத்துகளை விற்காமல் இருந்திருந்தால் இந்நேரம் பெருத்த பணக்காரனாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறான். பற்பல அரசாங்க வேலைகளுக்கு தேர்வுகள் எழுதி தனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று மாதாவிடம் மன்றாடுகிறான். தன் தந்தையின் பெருந்தன்மையான குணத்தை ஏமாளித்தனம் என நினைக்கிறான்.

பென்னி ஒரு காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் கறுப்பு பையைக் காட்ட, கறுப்புக் கொடி காட்டுகிறான் என காவல்துறை பிடித்துச் சென்று விடுகிறது. அதிலிருந்து விடுபடுவது, பிறகு மோதலை தவிர்க்க என்ன செய்வது என்பதை நோக்கி கதை நகர்கிறது.. இந்த பாத்திரத்தில் அர்ஜூன் அசோகன் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்துள்ளார்.

சேட்டாயி இல்லை என்றால், அந்த ஊரே அங்கு இருந்திருக்காது என்பதை உணர்ந்த குடும்பங்களும் அங்குதான் உள்ளன. கம்யூனிஸ்டுகளை  யதார்த்தத்தமாக எல்லோரும் கிண்டல் செய்யும் வசனங்கள் வருகின்றன. அதே சமயம் அவர்களின்  மேதமையும் வருகின்றன. ராஜேஷ் மோகன், ஜோஜி தாமஸ் ஆகியோர்கள் எழுதி இயக்கி உள்ளனர். மாறுபட்ட படம் என்பதால் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள். வசனங்கள் பொருத்தமானதாக உள்ளன.

”மலையாளிகளின் பெரிய பிரச்சினை என்ன தெரியுமா? அவங்க என்ன நினைப்பாங்க, இவங்க என்ன நினைப்பாங்க என பயப்படுவது தான்! யார் வேணா என்ன வேணா நினைக்கட்டுமே! நமக்கு என்ன?”

”பிரச்சினை என வரும் போது அதை பேஸ் பண்ணாம ஓடிவிடுவதால் நாம் ஜெயித்திட முடியாது…”

போன்ற வசனங்கள் குறிப்பிடத் தக்கன!

இரண்டு மணி நேரத்தையும் வசனங்கள் தான் இழுத்துச்  செல்கின்றன. இப்போது இது பிரைம் தளத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இக்கதையின் அழகான நாயகி பொன்னிலா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர். பென்னியோடு எட்டாம் வகுப்பு வரை படித்த உறவுக்காரி! சேட்டாயியின் கடைசி காலத்தில் அவரை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறாள். இந்தப் பாத்திரத்தில் பெமினா ஜார்ஜ் என்பவர் நயமாக நடித்துள்ளார். பொன்னிலா இறுதியில் என்னவோ சிறப்பாக செய்யப் போகிறாள் எனப் பார்த்தால், ஒன்றுமேயில்லாமல் முடிவடைகிறது. படம் ஏறக்குறைய ஒரு கிராமத்திலேயே முடிந்து விடுகிறது. பெரிய பொருட் செலவு இல்லை. ஆனால், இது சம்மந்தப்பட்டவர்களை ஏதோ ஒருவகையில் சிந்திக்க வைக்கும்.

கலைஞனுக்கு உள்ள பொறுப்போடு அவதூறு செய்யாமல் – அதே சமயம் நடைமுறை கிண்டல்களையும், தியாகத்தையும் – காலத்தோடு ஒட்டி செயல்பட வேண்டும் என்றும் சொல்கிறது.

அடிவாங்கி அடிகொடுத்து, பல குடும்பங்களுக்கு வாழ்வளித்த சேட்டாயி எங்கே ? தான் செய்யாத போராட்டத்தை முகநூலின் காட்டி லைக் வாங்கும் பென்னி எங்கே ? டீக்கடையில் வாங்கிய கடனுக்கு நன்கொடை ரசீதை நீட்டும் கட்சிப் பொருளாளரும் இதில் வருகிறார்.

இந்த வயதிலும் அரசாங்கத்தை தேவைப்பட்டால் எதிர்க்க நினைக்கும் சேட்டாயிக்கு அடைமொழி இல்லை. ஆனால், கால்பந்து மைதானத்தை சீரமைத்த பென்னிக்கு ‘தீப்பொறி’ பட்டம் தேவையாக இருக்கிறது. மெதுவாகவே கதை நகர்கிறது. கதாநாயகனின் செயல்பாடுகளால் எதிரிகள் மிரள்வது போல காட்டுவது சற்று ஓவர்! திரைக்கதை இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம்.

சேட்டாயி சமூகத்தின் உயர் மட்டத்திற்கு வந்திருக்க வேண்டியவன். இதற்கு கட்சி அவனுக்கு வாய்ப்பளிக்கவில்லை. அவனுக்கு இது குறித்த புகார் ஏதுமில்லை. ஆனால் அதே சமயம் தனது குடும்பம் அவனை புறக்கணிப்பதை நினைத்து வருந்துகிறான். தனது மகனுக்கு நல்ல விழுமியங்கள் இல்லை என வருந்துகிறான். கதை மேலாகவும், உள்ளீடாகவும் பல செய்திகளைச் சொல்கிறது.

திரை விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time