யார் குற்றவாளி ? இளைஞர்களா? ஆட்சியாளர்களா?

-சாவித்திரி கண்ணன்

பாராளுமன்றத்திற்கு பாதுகாப்பு இல்லையாம்! ஆனால், பேசப்படவேவில்லை கைதான இளைஞர்களின் குரல்கள்! வேலையின்மை, விலைவாசி ஏற்றம், சிறுகுறுந்தொழில்கள் நசிவு, அரசின் சர்வாதிகார போக்கு, ஊழல்கள் ஆகியவற்றை எதிர்த்து போராடிய இந்த இளைஞர்கள் யார்? பின்னணி என்ன? இதோ முழு விபரங்கள்:

இந்த இளைஞர்கள் கவனப்படுத்தியுள்ள முக்கிய பிரச்சினை அரசு வேலை வாய்ப்புகள் குறைந்து வருவது! அப்படியே கிடைத்தாலும் அதில் முறைகேடுகள்! லஞ்சம் கொடுத்து வேலை பெறும் கொடுமை! அரசின் தொழில் கொள்கையால் சிறுகுறுந்தொழில்கள் நசிவு! கார்ப்பரேட்களுக்கு சலுகை! விவசாயத்தை அழிக்கும் அரசின் சட்ட திட்டங்கள், தனியார் நிறுவனங்களின் உழைப்பு சுரண்டல்! இதை உரக்க பேசவே இந்த இளைஞர்கள் அந்த அத்துமீறல் வடிவத்தை ஆபத்தை பொருட்படுத்தாமல் கையாண்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது.

இது வரையிலான விசாரணையில் வெளிப்பட்டுள்ளது என்னவெனில், வேலை வாய்ப்பற்ற நிலையில் ஏற்பட்ட விரக்தியின் உச்சமும், மத்திய பாஜக அரசின் சர்வாதிகார அணுகுமுறையும் தான் பாராளுமன்றத்தில் அதிரடி கவன ஈர்ப்பு அவர்கள் கோரியதற்கு காரணமாகத் தெரிய வந்துள்ளது! மேலும் அவர்கள் தங்களுக்கு தாங்களே தீயிட்டு கொள்ளவும் திட்டமிட்டு, பிறகு கைவிட்டுள்ளனர்.

”மஞ்சள் புகை என்பது தற்போதைய சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான ஜனநாயகத்தின் அன்னையை நினைவுபடுத்தும் முயற்சியே” என கைது செய்யப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்!

மனோரஞ்சன்( மைசூர்)  பாராளுமன்றத்தில் மஞ்சள் புகை கேனை வீசிய 33 வயதாகும் மனோரஞ்சன் பொறியியல் பட்டதாரி ஆவார். முன்னாள் ஐ.டி ஊழியரான இவர் தற்போது விவசாயியான தந்தைக்கு உதவியாக விவசாயக் களத்தில் செயல்பட்டு வருகிறார். இவர் தான் சாகர் சர்மாவையும் இந்த செயல்திட்டத்தில் இணைத்தவர். இவர்கள் இருவரும் தான் பாராளுமன்றத்திற்குள் நுழைந்தவர்களாவர்.

சாகர் சர்மா; (லக்னோ)

பாராளுமன்றத்திற்குள் குதித்து கைதான இளைஞர்களில் ஒருவரான லக்னோவைச் சேர்ந்த சாகர் சர்மா (25) ஒரு கூலித் தொழிலாளியான கார்பெண்டரின் மகனாவார். குடும்ப வறுமை காரணமாக 12 ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்ட இவர், தனது இருபதாம் வயதில் பெங்களுருக்கு வேலை தேடி புலம் பெயர்ந்தார். அப்போது மனோரஞ்சனுக்கு பழக்கமாகி நண்பராகி உள்ளார். பெங்களுர் வேலை கொரானா காலத்தில் பறிபோனதை அடுத்து மீண்டும் தன் மண்ணிற்கே திரும்பி, வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது சமூக வலைத் தளங்களின் மூலமாக இவர் பகத்சிங் மீது மிகுந்த பற்றுள்ளவர் எனத் தெரிய வருகிறது. இவரது டைரிக் குறிப்புகள் நமது கல்வித் துறை குறித்த கடுமையான விமர்சனங்களைக் கொண்டுள்ளது. ”முக்கியமாக வசதி வாய்ப்புள்ளோர்க்கு மட்டும் தான் கல்வியா?’’ என்ற கேள்வியை இவர் எழுப்பி உள்ளார்.

இந்தியாவிலேயே அதிக வேலை வாய்ப்பை நல்கக் கூடிய ரயில்வே துறை கூட ஏராளமான பணி இடங்களை நிரப்ப மறுக்கிறது. அப்படியே வேலை தந்தாலும் தற்காலிக வேலை வாய்ப்பாகவே தருகிறது! ராணுவ வேலை வாய்ப்பும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் நான்காண்டாக சுருக்கப்பட்டுவிட்டது. அதில் 25 சதவிகிதமானோர்க்கே நிரந்தர பணி வாய்ப்பு கிடைக்கிறது. இளைஞர்களை வேலைக்கு எடுக்கும் வயது 21 முதல் 23 என தற்போது வரையறுத்து உள்ளனர்.

அமோல்ஷிண்டே; ( மகாராஷ்டிரா)

கைதானவர்களில் ஒருவரான 25 வயதாகும் அமோல் ஷிண்டே ஒரு விவசாயியின் மகன். விவசாயத்தில் தன் அப்பா படும் இன்னல்களையும், நஷ்டத்தையும் நாளும் பார்த்து வளர்ந்த அவன்,  ”நானும் உன்னைப் போல விவசாயக் கூலியாக வாழ்ந்து சாகமாட்டேன்’ எனக் கூறி ராணுவத்திற்கும், காவல்துறைக்கும் வேலைக்கு பலவாறு முயன்ற நிலையில், தற்போது அவனுக்கு வயது கடந்துவிட்டதால் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டான்’’ என அவன் அப்பா, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நிருபருக்கு பேட்டி தந்துள்ளார்.

பொதுவாக வேலையற்ற இளைஞர்கள் மத்தியில் இது போன்ற கொந்தளிப்புகளும், ஆவேசங்களும் ஏற்படுவது பல நாடுகளிலும் நடப்பது தான். சென்ற ஆண்டு ஜனவரி 2022ல் கூட பீகாரில் வேலை கேட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராடினர்! வேலைக்கு எடுப்பதில் நடக்கும் முறைகேடுகள், லஞ்சம் வாங்கி வேலை தரும் அரசியல் நடைமுறைகள் ஆகியவற்றை எதிர்த்து ரயில்மறியல் போராட்டம் நடத்தினர் என்பது நமக்கு நினைவிருக்கலாம்.

நீலம் ஆசாத் தேவி; ( ஹரியானா)

37 வயது பெண்ணான இவர் ”சர்வாதிகாரத்தை அனுமதியோம்” என பாராளுமன்ற வளாகத்தில் கோஷமிட்டவர். அத்துடன் அவர் நாங்கள் சாதாரண மனிதர்கள். மாணவர்கள், இளைஞர்கள். எங்க பெற்றோர்கள் கடினமாக உழைக்கும் தொழிலாளர்கள் ,விவசாயிகள்..சிறு வியாபாரிகள்..! !எப்போதெல்லாம் நாங்க எங்க உரிமைக்காக போராடுகின்றோமோ.., அப்போதெல்லாம் தடியடிகளை எதிர்கொண்டு கைதாகிறோம். எங்கள் குரலை யாரும் சட்டை செய்வதில்லை. நாங்கள் எந்த அமைப்பிலும் இல்லை. அதனால், எங்களுக்கு வேறு வழியில்லை..என உரக்க கத்தியவாறு பேசினார். இவர் விவசாயிகள் போராட்டத்தில் ஆர்வமாக பங்கெடுத்தவர். மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹரியானாவின் அராஜக பாஜக எம்.பி பிரிஜ்பூசனுக்கு எதிரான போராட்டங்களில் பங்கெடுத்தவர்.

நன்றி; இங்கிலிஷ் ’ஜாக்ரன்’

இந்த நீலம் ஆசாத் தேவியின் தந்தை இனிப்பு மிட்டாய் செய்து சிறிய விற்பனை செய்து வருகிறார். சகோதரர் பால் வியாபாரம் செய்கிறார்! 37 வயதாகும் நீலம் M.A, M.Ed, M.Phil படித்துள்ளார். ஹரியானாவில் ஆசிரியர் தகுதி தேர்வு (HTET) எழுதியுள்ளார். அது மட்டுமின்றி தேசிய தகுதி தேர்வும் (NET) எழுதியுள்ளார்! எவ்வளவு முயன்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதி,எழுதி போராடி சோர்ந்துள்ளார்! நீலத்தின் தாய் சரஸ்வதி இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபரிடம் கூறுகையில், ”என் மகள் என்னிடம் அம்மா நான் உங்களுக்கு அதிக சிரமம் தந்து தேவைக்கும் அதிகமாக படித்து ஐந்து பட்டங்கள் வாங்கியுள்ளேன். இவ்வளவு தகுதி இருந்தும் வேலை இல்லாத நான் வாழ்வதைக் காட்டிலும் சாவதே மேல்..” என்றெல்லாம் பேசுவாள். எவ்வளவோ முயன்றும் வேலை கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் இவளுக்கு உச்சத்தில் இருந்தது’’ என்கிறார். இவர்கள் குடும்பமே பகத்சிங் மீது பற்றுள்ள குடும்பமாம்!

இந்தியாவிலேயே படித்து வேலையில்லாதவர்கள் ஹரியானாவில் தான் அதிகம் உள்ளதாக மத்திய பொருளாதார மதிப்பீட்டகம் (CMIE) கூறியுள்ளது. அதாவது, தேசிய சராசரியை விட இரு மடங்கு அதிகமாக இங்கு இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர். மணிப்பூர், நாகலாந்து, கோவாலிலும் இது தான் நிலைமை!

மகேஷ் குமாவத் , லலித் ஜா

இவர்கள் போராட்டத்தை வீடியோவாக எடுத்து சமூக ஊடகத்தில் பதிவிட்டவர் லலித் ஜா என்பவர். இவர் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆசிரியராவார். அக்கம்பக்கத்தில் உள்ள மாணவர்களுக்கு நல்ல முறையில் கல்வி போதிக்கும் அமைதியான மனிதர் என்கிறார்கள்! பகத்சிங் மீது பற்றுள்ளவர். எனவே அவரை முன்மாதிரியாகக் கொண்டு இவர் தான் இதற்கு மூளையாக இருந்து செயல்பட்டுள்ளாராம். கடைசியாக கைதாகியுள்ள மகேஷ் குமாவாத் என்பவர் குறித்து இனி தான் விபரங்கள் தெரிய வரும். இவர்கள் அனைவர் மீதும் கொடூரமான ஊபா சட்டம் பாய்ந்துள்ளது. கனிவோடு அணுக வேண்டிய இளைஞர்களை கர்ண கொடூரமாக கையாளுவது தீர்வாகாது! பாராளுமன்றத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள்! ஆனால், எளியோர் குரலை ஒடுக்காதீர்கள்! அம்பானி, அதானி, டாடா, பிர்லா,வேதாந்தா..இவர்களின் வளர்ச்சியே ஆட்சியின் குறிக்கோள் என்றால், வேலையின்றி பல்கி பெருகி கொந்தளிக்கும் இளைஞர்களுக்கு என்ன தீர்வு?

வேலையின்மைக்கு எதிரான போராட்டங்கள்

இதனால் தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கூட, ”நாட்டில் நிலவும் வேலையற்ற சூழல்கள், விலை ஏற்றம் போன்றவை ஏற்படுத்திய கொந்தளிப்பின் வெளிப்பாடே இந்த சம்பவம்..” எனக் கூறியுள்ளார்.

இதை பாஜக தலைவர்கள் கடுமையாக மறுத்ததோடு, ”ராகுல் காந்தி பகுத்தறிவு இல்லாமல் பேசுகிறார். பாதுகாப்புக்கு நேர்ந்த அச்சுறுத்தலை உணராமல் பேசுகிறார். குற்றவாளிகளை பாதுகாக்கிறார்..” என குற்றம் சாட்டி உள்ளனர்!

ஆக, பாஜக அரசு எப்போதுமே உண்மைகளை ஏற்காது. யதார்தங்களை உணராது. உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாறாக புதிய, புதிய பிரச்சினைகளைத் தான் உருவாக்கும்! பிரச்சினையின் மூலவேர்களை அறிந்து, ஆட்சியாளர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டால் ஒழிய, இதற்கு தீர்வில்லை! அடக்குமுறை சட்டங்கள் ஒரு போதும் பிரச்சினைகளை தீர்வாகாது!

சாவித்திரி கண்ணன்

அறம் இணை இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time