பெருந்துயர் காலத் துன்பங்களும், மனித நேயமும்!

-பீட்டர் துரைராஜ்

போபால் விஷவாயு கசிவில் யூனியன் கார்பைடு நிறுவனம் சுமார் 4,000 பேரை பலி வாங்கி, சுமார் ஆறு லட்சம் மக்களை பாதித்தது. மக்கள் பட்ட அவஸ்த்தைகள், அந்த ஆலையின் அலட்சியம், இரயில்வே ஊழியர் குலாம் தஸ்தகீர் போன்றோர் உயிரைப் பணயம் வைத்து  மக்களைக் காப்பாற்றியது..  உண்மைக்கு நெருக்கமான புனைவு;

இதுபோன்ற கதைகளை எடுக்கும்போது உண்மைக்கு மாறாமல் எடுக்க வேண்டும். அதே சமயம் தெரிந்த முடிவு தான் என்பதால் சுவாரசியம் குன்றாமலும் எடுக்க வேண்டும். இதில் பிழை ஏற்பட்டால், நோக்கம் நல்லதாக இருந்தாலும் படம் தோல்வி அடைந்து விடும். இது அத்தகைய நிலையை எட்டவில்லை. தொடர்ந்து அனைவராலும் பார்க்கப்பட்டு வருகிறது. விமர்சன ரீதியிலும் நன்றாக மதிப்பிடப்பட்டு வருகிறது.

ரயில் பயணிகளை ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஒரு திருடன், போபால் இரயில் நிலைய பணப்பெட்டியை காலிசெய்து ஒரேயடியாக வாழ்க்கையில் செட்டிலாகி விட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்புப் பாதை காவலர் உடையில் போபால் ரயில் நிலையத்திற்கு வருகிறான். போபால் நிலையமானது மற்ற நிலையங்களில் தகவல் தொடர்புகளில் துண்டிக்கப்பட்டு விட்டது என்பதால் தனது உதவியாளரை கடிந்துகொள்ளுகிறார் நிலைய மேலாளரான இப்திகார் சித்திகி.

பொதுமக்களின் பாதுகாப்பை பெரிதாக நினைக்கும் ஒரு ஊழியரைப் பற்றிய சித்திரம் நமக்கு கிடைக்கிறது. அந்த நிலையத்தில் செருப்புகளுக்கு மெருகேற்றும் வேலையைச் செய்யும் அனாதைகளான இரண்டு சிறுவர்களையும் நாம் பார்க்கிறோம்.

அதே சமயம் போபால் ஆலையில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரியாக இல்லையென்று (உண்மையைச்) சொன்னதற்காக  அதன் ஊழியர், நிர்வாக அதிகாரியால் தண்டிக்கப்படுகிறார். இப்படி முதல் அத்தியாயம் பூர்வாங்க நிலைமைகளை விவரிக்கிறது. இவர்கள் உயிரோடு இருப்பார்களா அல்லது மரிப்பார்களா என்பது போகப்போக தெரிய வரும்.

இரண்டாவது அத்தியாயத்தில் நமக்குத் தெரிந்த  நட்சத்திரங்களான மாதவனும், ஜூஹி சாவ்லாவும் வருகிறார்கள். அருகில் உள்ள இரயில் நிலையத்தின் அதிகாரியாக மாதவன் நடித்துள்ளார். பாதிப்புக்குள்ளானவர்களை மீட்க தன் ஆளுகைக்குள் இருக்கும் ஊழியர்களைத் திரட்டி, நம்பிக்கை கொடுத்து, குழுவாக அழைத்துச் சென்று உதவ வேண்டும். இதனை இவர் சிறப்பாகச் செய்துள்ளார். போபால் நிலையம் ஏற்கனவே விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரோடு இருப்பவர்களை அங்கு அனுப்பி மேலும் ஏற்படக்கூடிய உயிரிழைப்புகளை  தவிர்க்க நினைக்கிறது நிர்வாகம். அந்த முடிவை அமலாக்க வேண்டிய அதிகாரியான ராஜேஸ்வரி (ஜூஹி சாவ்லா), தனது கீழ் நிலை அலுவலரான ரத்தி பாண்டேவை (மாதவன்) நிர்வாக உத்தரவை மீறி  செயல்பட, கண்டும் காணாமல் அனுமதி அளிக்கிறாள்.

மாதவன், ஜூஹி சாவ்லா இருவரும் திரையில் வரும் நேரம் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்களின் இருப்பு இந்தக் கதைக்கு கூடுதல் சுவாரசியத்தைத் தருகிறது. இந்திய அளவில் பார்க்கப்படுவதால் திரை நட்சத்திரங்களை வேறுபட்ட மாநிலங்களில் இருந்து நடிக்க வைக்கிறார்கள் போலும். கதையின் உண்மையான நாயகன் என்றால் நிலைய மேலாளராக நடிக்கும் கே.கே.மேனோன்தான்.

நெட்பிளிக்சில் தற்போது இந்தித் தொடரான இரயில்வே மென் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கிலும் இருக்கிறது. இதில் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள். மாதவன், ஜூஹி சாவ்லா, மறைந்த இர்பான் கான் மகனான பப்ளி கான், கே. கே. மேனோன் ஆகியோர் நடித்த இந்த தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உண்மைக்கு நெருக்கமான ஒன்றாக இதனை காட்சிப்படுத்தியுள்ளார் அதன் இயக்குநரான ஷிவ் ராவலி.

பூச்சிக் கொல்லி நிறுவனம் எப்படி மக்களை துச்சமாக நினைத்தது என்பதை இடையிடையே சிறு, சிறு காட்சிகளாக தொடர்ந்து காட்டி வருகிறார்கள். அதனால், ஆவணத் தன்மை இருப்பதாக தெரியவில்லை. போதிய பயற்சி அளிக்காதவர்களை ஆலை நிர்வாகம் பணியமர்த்தி இருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உரிய கவனம் அளிக்கவில்லை.ஏற்கனவே விஷவாயு கசிந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளபோதிலும் அதனைச் சரிசெய்ய எந்த முயற்சியும் செய்யவில்லை.

சுற்றுச்சூழல் கேடுகளை தெரிந்தே தான், இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில்  அமெரிக்க நிறுவனம் இந்த ஆலையை நிறுவியுள்ளது. மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுவ வேண்டும் என்ற எச்சரிக்கை கூட மீறப்பட்டிருக்கிறது. விஷவாயு பாதித்தால் அதனை எந்த மருந்து கொடுத்து சரிசெய்வது என்ற விபரம் யாருக்கும் தெரியாது.

மயக்கம் அடைந்துள்ளதைப் பற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்கின்ற விவரங்களுக்கு உண்மை நிலவரத்தை ஆலை நிர்வாகி சொல்லவில்லை. உயிரிழப்புகளை தவிர்க்க மருந்து கொடுக்க முன்வந்த விஞ்ஞானியையும் தடை செய்து திருப்பி அனுப்புகிறது அரசும், ஆலை நிர்வாகமும். ஆய்வகச் சோதனையில் இப்படி விபத்து ஏற்படலாம் என கண்டறிந்த விஞ்ஞானியின் கருத்தை ஆலை மதிக்கவில்லை.

ஆலை நடக்க வேண்டும் என்பதைத் தவிர யூனியன் கார்பைடு நிறுவனம் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. நமது ஆட்சியாளர்களும், அவை  குறித்து  பரிசீலிக்காமல்.  ஆயிரக்கணக்கான மக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்திருக்கிறார்கள்.உலக அளவில் மிகப் பெரிய பேரழிவு நடந்த டிசம்பர் மூன்றாம் நாளை நினைவு நாளாக பாதிக்கப்பட்டவர்களும், சுற்றுச் சூழல் இயக்கத்தினரும் இன்றும் கடைபிடித்து வருகிறார்கள்.

அந்த ஆலையில் விஷவாயுவிற்கு ஏற்கனவே தன் சகோதரனைப் பறிகொடுத்த ஒரு இளைஞன் இரயில் நிலையத்தில் ஓட்டுநராக இருக்கிறான். லன்ச் பாக்ஸ், ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற படங்களில் நடித்த புகழ்பெற்ற நடிகரான மறைந்த இர்பான் ஹமீதின் மகன் பப்ளிகான் ஓட்டுநராக நடித்துள்ளார். மாசற்ற அந்த முகம் தொடர் முடிந்தாலும் நம் நினைவில் நிற்கிறது.

விஷவாயு குறித்து, நிலைய மேலாளர் இப்திகார் சித்திகிற்கு தெரியவருகிறது. மற்ற இரயில் நிலையங்களோடு தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில்,  இட்டார்சியில் இருந்து ஆயிரம் பேரோடு வந்து கொண்டிருக்கும் இரயிலை அங்கு நிற்காமல் அனுப்பி பயணிகளைக் காப்பாற்ற வேண்டும். அந்த நிலையத்தில் இருப்பவர்களை பாதுகாத்து, அங்குள்ள சரக்கு இரயில் மூலமாக  வெளியேற்ற வேண்டும். கதை தொய்வின்றி விறுவிறுப்பாகச் செல்கிறது.

இட்டார்சியில் இருந்து வரும் இரயிலில், இந்திரா காந்தி படுகொலையினால் உயிருக்குப் பயந்த ஒரு சீக்கியக் குடும்பம் அடையாளத்தை மாற்றி தப்பி வருவதும், அவர்களை வேட்டையாடும் பொறுக்கிகளை எதிர்க்கும் இரயில் ஊழியரும் இக்கதையில் வருகிறார்கள். அதனால் இரயில் தாமதமாக வருகிறது.


ஏற்கனவே நடந்த விஷவாயு மரணம் குறித்து தெரிந்த ஒரு பத்திரிகையாளர் இதுதொடர்பான விவரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கான தகவல்களை ரகசியமாகத் தரும் ஊழியர்களும் இதில் வருகிறார்கள். மக்களை ஏமாற்றி கொள்ளையிடும் திருடனுக்கு உள்ள அறவுணர்ச்சி கூட யூனியன் கார்பைடு நிறுவனத்திற்கு இல்லையோ !

குறைவான நேரத்தில், ஒரு நெடுங்கதை நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டவை யாவுமே இன்றைக்கும் இந்தியாவின் பல பகுதிகளில் நடந்து வருவதை – குறிப்பாக தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை – நினைவுபடுத்துவது தான் இந்த தொடரின் ஈர்ப்புக்கு காரணமாகிறது!

விமர்சனம்;  பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time