மழை வெள்ளத்தின்  இருவேறு கதைகள், களங்கள்!

-அண்ணாமலை சுகுமாரன் 

இயற்கை தருகிறது பாடம்! அதை கற்க மறந்ததால் தேடுகிறோம் ஓடம்! வரமான மழையை ஏன் சாபமாக்கி கொள்ள வேண்டும். நாம் கற்க தவறியமை என்ன? கற்க வேண்டியவை என்ன? பெற்ற வலிகள் என்னென்ன..? வரப் போகும் காலங்களை எதிர்கொள்ள என்ன திட்டம்..? ஒரு அலசல்;

பருவமழை மீண்டும் அதன் கோர உருவப் படத்தை தமிழ் நாட்டில் வரைந்து வருகிறது.

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில், தீவிர மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால், வட தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இப்போதுதான் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்பி , பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ 6,000 நிவாரணம் கொடுக்கத் தொடங்கிய பொழுதிலே தமிழ்நாட்டின் தெற்கே ஒரு மழைவெள்ளம். அங்கேயே சென்னையில் பெய்த 40-45 செ மி புறந்தள்ளி, 96 செ.மி மழையைக் காட்டி மிரட்டியது.

சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை தென் தமிழ்நாட்டில் பதிவான மழைப்பொழிவுடன் ஒப்பிடும்போது மிரட்சி அளிக்கிறது .இந்த உயர்வு இப்படியே போனால் எப்படி அதை எதிர் கொள்ளப் போகிறோம் என்ற மீளா கவலை சூழ்கிறது .

இந்த தனித்துவமான துயரங்களை வடிவமைத்த வானிலை அதிசயங்கள் மற்றும் புவியியல் வினோதங்களை நாம் இணைத்தே நோக்க வேண்டும்.

ஒருபெரிய  நகரத்தை சதுப்பு நிலமாக மாற்ற சதி செய்த காரணிகளை ஆராய்ந்து, மற்றொன்றை முன்னோடியில்லாத வகையில் உருவான  வெள்ளத்தால் விளைந்த விளைவுகளை உற்று நோக்கவேண்டும்  .

பருவநிலை மாற்றத்தால் உலகம் சீர்குலைந்துள்ளது. மேலும் புவி வெப்பமடைதல் உலகின் வறண்ட பகுதிகளில் சிலவற்றில் மழைப்பொழிவை அதிகரித்ததாக கருதப்படுகிறது. இந்த தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகள் சமூகத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால்-எடுத்துக்காட்டாக, பேரழிவு தரும் வெள்ள நிகழ்வுகளைத் தூண்டுவதன் மூலம்-இந்த சம்பவங்களுக்கு களம் அமைக்கும் வளிமண்டல நிலைமைகளைப் புரிந்துகொள்வது முக்கியம் ஆகிறது. எந்த வளர்ச்சியடைந்த நாட்டிலும் இயற்கையின் சீற்றத்திற்கு தக்க தீர்வு இல்லை.

தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களில் பேய் மழை பெய்தபோது ஆஸ்திரேலியாவும் தீவிர மழை வெள்ளத்தில் தத்தளித்தது .

இத்தகைய அனுபவங்கள்  மூலம் கிடைப்பது ஒரு கணக்கெடுப்பு ஒரு மூல எண்களுக்கு மட்டுமில்லாது அப்பால், அந்த மழையால் உயர்ந்து வந்த  வெள்ள நீரில் மறைந்திருக்கும் அனுபவ கதைகளை நாம் கண்டுபிடிப்போம். அதுதான் அறிவுடையோர் செய்யும் செயல் ஆகும் .நடந்த நிகழ்வுகளில் இருந்து அது தரும். அது சொல்ல முயன்ற செய்தியை புரிந்து கொள்ள வேண்டும் .

நகர்ப்புற நிலப்பரப்புகளின் பாதிப்பை சென்னையின் மூலமாகவும் , கிராமப்புற சமூகங்களின் பின்னடைவை தென் தமிழ்நாட்டு மழை வெள்ளத்தின் மூலமும் முற்றிலும் அறிய ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. புயலின் பின் விளைவுகளை எதிர் கொள்ளும் போது ஒவ்வொருவரும் வடக்கும், தெற்கும்  எதிர்கொள்ளும் சவால்களை வேறுபடுத்திக் காண்போம்.

இந்த நிகழ்வுகளை வடிவமைப்பதில் உள்கட்டமைப்பு, தயார்நிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் பங்கை சேர்ந்தே  பகுப்பாய்வு செய்யவேண்டும்.

இனி வரும் பருவமழையின் கணிக்க முடியாத கோபத்தை எதிர்கொள்ள நம்மை சிறந்த முறையில் சித்தப் படுத்தக்கூடிய நுண்ணறிவுகளைப் பெறலாம் என்ற நம்பிக்கையில், இந்த அனுபவங்களை நாம் தொகுக்க வேண்டும்.

இவைகள்  வெறும் தகவல் அளிப்பது மட்டுமல்லாமல், நமது உணர்வுகளுக்கு சவால் விடுவதற்கும், இயற்கையின் கோபம் நம்மை தயாராக இல்லாதபோது வந்தாலும், ஆனால் நெகிழ்திறன் மற்றும் தயாராகக் காணும் எதிர்காலத்தை உருவாக்க ஊக்குவிப்பதற்கும் உறுதியளிக்கும் ஒரு நிகழ்வாக இதை மாற்றிக் கொள்வோம்.

சென்னையில் மழை நீரை தேக்கி வைக்க நம்மிடம் போதுமான கொள்ளளவு கொண்ட நீர்நிலைகள் இல்லை. இப்போது இருப்பதெல்லாம் பழைய சென்னையை மனதில் கொண்டு ஏற்படுத்திய சாதாரண கொள்ளளவு கொண்ட நீர் நிலைகள் தான். புதிதாக பெரிய செம்பரபக்கம் போன்ற ஏரிகளை இப்போது நிறுவ இடம் இல்லாது இருந்தாலும், அவசியமான இடங்களில் சிறிய நீர் நிலைகள் அமைக்கலாம்.

மழை நீர் சேகரிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2018ல் உத்தரவிட்டது. கடந்த 2001-ம் ஆண்டு  கட்டாய மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்து போதிலும் அதை அரசு அதற்கு பிறகு கறாராக அமல்படுத்தவில்லை. இச்சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டிடங்களும் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால், மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதெல்லாம் வெறும் காகிதத்தோடு போய்விட்டது. நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டதன் விளைவைத் தான் சமீபத்தில் அனுபவித்தோம்.

மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் மேம்பாட்டுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்த சில நுண்ணறிவுகளை பெற இயலும்.

கூரை மேல் மழைநீர் சேகரிப்பு; ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயமாக ஒரு மழை நீர் சேமிப்புத் திட்டத்தை நிறுவ வலியுறுத்தலாம்.

தோட்டங்களின் நீர்ப்பாசனம், கழிப்பறை சுத்தம் செய்தல் மற்றும் சுத்தம் செய்தல் போன்ற குடிக்க முடியாத பயன்பாடுகளில் மறுபயன்பாட்டிற்காக கூரைகளில் இருந்து மழைநீரை சேகரித்து சேமிப்பதற்கான அமைப்புகளை நிறுவுதல்.

மேற்பரப்பு ஓட்ட மழை நீர்  அறுவடைசதுப்பு நிலங்கள், அகழிகள் மற்றும் ஊடுருவல் குழிகளை உருவாக்கி, நடைபாதை மேற்பரப்புகளிலிருந்து மழைநீரைப் பிடித்து தரையில் ஊடுருவி, நிலத்தடி நீர் இருப்புக்களை நிரப்புகிறது.


பசுமை உள்கட்டமைப்பு;
மரங்கள் மற்றும் தாவரங்களை நடவு செய்தல்ஃ காடுகள் மற்றும் இயற்கை நிலப்பரப்புகள் கடற்பாசிகள் போல செயல்படுகின்றன, மழைநீரை உறிஞ்சி சேமித்து வைக்கின்றன, ஓட்டத்தை குறைத்து நிலத்தடி நீரை நிரப்புகின்றன.

ஈர நிலங்கள் மற்றும் பசுமை இடங்களை உருவாக்குதல்;

ஈரநிலங்களை மீட்டெடுப்பது மற்றும் நகர்ப்புறங்களில் பசுமை இடங்களை இணைப்பது ஊடுருவல் மற்றும் நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்துகிறது.

சேமிப்பு வசதிகள்;
நிலத்தடி ஏரிகள் மற்றும் நீர்த்தேக்கங்களைக் கட்டுதல். மழைநீரை எதிர்கால பயன்பாட்டிற்காக தொட்டிகள் மற்றும் நிலத்தடிகளில் சேமித்து வைப்பது வறண்ட காலங்களில் அதைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

பாரம்பரிய நீர் கட்டமைப்புகளை புதுப்பித்தல்; ஏரிகள் குளங்கள் போன்ற பழமையான நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை மீட்டெடுப்பது மற்றும் பயன்படுத்துவது நிலத்தடி நீர் சேமிப்பை கணிசமாக மேம்படுத்தும்.

கொள்கை மற்றும் செயல்படுத்தல்;
ஊக்கத் தொகை மற்றும் ஒழுங்குமுறைகள் மூலம் மழைநீர் சேகரிப்பை ஊக்குவித்தல்; மானியங்கள், வரிவிலக்குகள் மற்றும் கட்டாய ஒழுங்குமுறைகள் மூலம் மழைநீர் சேகரிப்பை மேற்கொள்ள தனிநபர்களையும், நிறுவனங்களையும் அரசாங்கம் ஊக்குவிக்கலாம்.
பொது உள்கட்டமைப்பில் முதலீடு செய்தல்;

நீர் வழிந்து ஓடி வரும் தாழ்வான பகுதிகளை கண்டடைந்து இது போன்ற பண்ணைக் குட்டைகள் அமைக்கலாம்.

சமூகங்களில் பெரிய அளவிலான மழைநீர் சேகரிப்பு மற்றும் சேமிப்பு வசதிகளைக் கட்டுவதற்கு நிதியளிப்பது குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகிறது. இந்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வதன் மூலம், மழைநீர் வீணாவதை கணிசமாகக் குறைத்து, இப்பகுதியில் நிலையான நீர் மேலாண்மைக்கு பங்களிக்க முடியும்.

தென் தமிழ்நாட்டில் மழைநீர் சேமிப்பு மற்றும் நிலத்தடி நீர் அளவை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை ஆராய்வதற்கான ஒரு நல்ல தொடக்க புள்ளியை இந்த மழை வெள்ளம் அளிக்கும்

தென் தமிழ்நாட்டின் நான்கு மாவட்டங்களில் (திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி) சமீபத்தில் பெய்த கனமழையால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினத்தில் வெறும் 24 மணி நேரத்தில் 96 சென்டிமீட்டர் மழை பெய்தது! இந்த சாதனைபடைத்த மழை அளவு   நகரத்தின் வருடாந்திர சராசரி மழையை விட அதிகமாக இருந்தது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவுகளின் விவரங்களை கணக்கில் எடுத்துப் பார்த்தால், சில பகுதிகள் ஒரே நாளில் வருடாந்திர மழையைப் பெறுகின்றன… என்பதை அறிய முடிகிறது.

எனவே, குறுகிய காலத்தில், ஒரு வருட மழை பொழியும் சூழலுக்கு, நமது இயற்கை  சூழலை மதிக்காத செயல்கள் மூலம் இயற்கையின் சீற்றத்திற்கு ஆளானோம் .இப்போது நமக்குள்ள ஒரே வழி இதில் இருந்து கிடைக்கும் பாடம் தான்.

ஆற்றோரப் படுகைகளில் ஏராளமான மணல் குவாரிகளை அமைத்து ஆற்றுப் படுகைகளை பள்ளத்தாக்குகளாக்கியதன் பலனை இந்த மழை நமக்கு காண்பித்துள்ளது. எனவே, இதில் உறுதியான சூழலியல் பாதுகாப்பு நிலைபாட்டை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

மழையை கண்டு மிரளாமல் அது இறை தந்த கொடை என்று நினைக்கவேண்டும்.மெல்ல மெல்ல பெய்வது இப்போது ஒரே நாளில் பெய்து ஓய்கிறது. இந்த மழை நீரை முடிந்த அளவிற்கு சேமிக்க வழிகள் காணவேண்டும்.

தென்மாவட்டங்களில் பெரும்பாலான ஊர்களில் , கிராமங்களில் ஒரு கோயிலாவது நிச்சயம் இருக்கும். அத்தனை கோயிலிலும் ஒரு குளம் அவசியம் தேவை. குளம் இல்லாத ஊர்களில் கோயில் குளங்களை புதிதாக நிறுவலாம் .100 நாள்;வேலைத் திட்டத்தை இதற்கு  பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகைய கோயில்களில் குளம் நிறுவ கோயிலை சுற்றிய நிலம் பயன்படும் எனவே இடம் இல்லை என்ற குறை நீங்கும். பெய்யும் மழை வெள்ளம் தேங்க ஊருக்கு ஒரு குளம், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மழை நீர்தொட்டி அவசியம் தேவை.

இதன் மூலம் நிலத்தடி நீர்பெருகும் , நீருக்கு யாரிடமும் கையேந்த வேண்டிய நிலை வராது. ஒவ்வொரு விவசாய நிலத்திலும் மழை நீர் தேங்க ஒரு கிணறு அவசியம் வெட்டிக்கொள்ள அரசு நிதி உதவி செய்ய வேண்டும். இதன் மூலம் பெரிய நீர் நிலை அமைக்க நிலம் தேடும் கடின பணி இல்லாது போகும்.

மழை பற்றிய முன்னறிவுப்புகள் இப்போதெல்லாம் சரியாகவே பலிக்கிறது .முன்பு போல அதை வைத்து நகைச் சுவை இப்போது செய்ய இயலாது. ஆனால், கிடைக்கும் முன்னறிவிப்பை மக்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

இனி மழைபெய்தால் தீவிரமாக இரண்டு நாள் அடை மழை பெய்யும் என்று தெரிந்துவிட்டது.

எனவே, இனியாகிலும் மக்கள் , மின்சாரம் இல்லாத போது உபயோகிக்க மெழுகு வர்த்திகள் வாங்கி  வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் குழந்தைகள் இருந்தால் சில பாக்கெட்டு பால் அதிகம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். குடிநீர் கேன் அதிகமாக ஒன்று வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். உலர் உணவுப் பொருள்கள் , பிரட் , பிஸ்கேட் , பழங்கள் , கூட கொஞ்சம் அரிசி இவைகள் கைவசம் இருந்தால் , அடாது மழையிலும் அரசு உதவி வரும் வரை சமாளிக்கலாம் .

எனவே மழைக்கு மக்களும் சற்று எதிர்கொள்ள தயாராக வேண்டும் .

மழையை கண்டு மிரளாமல் , அதை போற்றுவோம் !

மாமழை போற்றுதும் ! மாமழை போற்றுதும்

கட்டுரையாளர்; அண்ணாமலை சுகுமாரன் 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time