நடுத்தெருவில் பத்திரிகையாளர்கள்!   – புதிய தொழிலாளர் சட்டத்தால்!

சிவ.மணிமாறன்

பத்திரிகையாளர் என்பது சமூக தளத்தில் ஒரு மரியாதைகுரியக் தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய தொழிலாளர் சட்டங்களிலும் அந்த பார்வை இருந்தது.

நான்காவது தூண், சுதந்திரத்தின் அளவுகோல் என்றெல்லாம் கூறப்படும் ஊடகத்துறையில், அதன் பணியாளர்களான பத்திரிகையாளர்களை புதிய சட்டங்கள் நடுத்தெருவிற்கு இழுத்து வந்து பணிப் பாதுகாப்பின்றி நிறுத்தியிருக்கிறது. ’கடமையைச் செய்வோம், உரிமைகள் பெறுவோம்’ என தலை நிமிர்ந்து வேலை பார்த்து வந்த பத்திரிகையாளர்களை முதலாளிகளின் கருணைக்காக காத்திருக்க வேண்டியவர்களாக்கிவிட்டன, இந்த சட்டங்கள். இது குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்!

உழைக்கும் பத்திரிகையாளர் மற்றும் இதர செய்தித்தாள் ஊழியர்கள் சட்டம் –  1955, உழைக்கும் பத்திரிக்கையாளர்கள்(ஊதிய நிர்ணயம்) சட்டம் – 1958 ஆகிய இரண்டு சட்டங்களும், அடுத்தடுத்து அமைக்கப்பட்ட ஊதியக்குழுக்களும் பத்திரிகையாளர்களுக்கு பெரும் பாதுகாப்பு அரண்களாக இருந்தன. ஆனால்,புதிய தொழிலாளர் சட்டங்கள் அவை அனைத்தையும் தகர்த்துவிட்டன!

அச்சு ஊடகம் (Print Media) மட்டும் இருந்த காலத்தில் இயற்றப்பட்ட இந்தச் சட்டங்கள், காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக(Visual and Digital Media)வளர்ச்சிக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்பட வேண்டும். இவற்றில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பது பத்திரிகையாளர் சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கை.

நடுவண் அரசு புதிதாக கொண்டு வந்திருக்கும் தொழிலாளர் சட்டத்தொகுப்பில் (Labour Code) காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக பத்திரிகையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் தவிர ஊடகங்களில் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கு என தனிப் பிரிவும் இந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தில், ‘உழைக்கும் பத்திரிகையாளர்’ என்பவர் செய்தித்தாள் நிறுவனத்திலோ, மின்னணு அல்லது டிஜிட்டல் ஊடக நிறுவனத்திலோ பத்திரிகையாளராக பணியாற்றுபவர் என வரையறுக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பணியில் அல்லாத முதன்மை ஆசிரியர், செய்தி ஆசிரியர், துணை ஆசிரியர், செய்தியாளர், செய்தி புகைப்பட கலைஞர் உள்ளிட்டோர் உழைக்கும் பத்திரிகையாளர் என வரையறுக்கப்பட்டுள்ளது. இப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கும் புதிய தொழிலாளர் சட்டம், பத்திரிகையாளர்களுக்கு என பாதுகாப்பாக இருந்த சட்டங்களை அகற்றிவிட்டது. அவை புதிய சட்டத்தில் சேர்க்கப்படவும் இல்லை.

அதாவது, பீடித் தொழிலாளர்களின் நிலைமையும் ஆட்டோமொபைல் தொழிலாளர்களின் நிலைமையும் வேறுபட்டது. இரண்டையும் ஒன்றாக எப்படிப் பிணைக்க முடியும். பணிச்சூழலால் மாறுபட்ட தொழிலாளர்களுக்கு, அதற்கேற்ப தனித்தனி சட்டங்கள் இருந்தன. பீடித் தொழிலாளர்களுக்கு தனிச்சட்டம், ஆபத்து நிறைந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு தனிச்சட்டம், பத்திரிக்கையாளர்களுக்கு தனிச்சட்டம் என இருந்தவை எல்லாம் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அனைவரும் தொழிலாளி என்ற வரையறைக்குள் அடைக்கப்படுகின்றனர்.

பத்திரிகையாளர்களின் பணியை மற்ற தொழில்துறை பணிகளைப் போன்று அளவிடமுடியாது. மேலும், பத்திரிகைத் துறைப் பணி பாதுகாப்பற்ற தன்மை கொண்டது. வேலையின்மை, மற்ற துறைகளைவிட இத்துறையில் மிக அதிகமாகும்! எப்போது வேண்டுமானாலும் பணிபறிபோகும் என்ற அச்சத்தில் பத்திரிகையாளர்களை வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன! இந்த சூழலை கவனத்திற்கொண்டே, 1954 ஆம் ஆண்டு பிரஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரை அடிப்படையில் தான் உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் – 1955, உழைக்கும் பத்திரிகையாளர் ஊதியச் சட்டம் – 1958 கொண்டு வரப்பட்டது. பத்திரிகையாளர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதற்கான ஊதியக்குழு அமைக்கப்பட்டது. இந்த ஊதியக்குழு பரிந்துரைக்கும் ஊதிய விகிதம் அடிப்படையில் அனைத்துப் பத்திரிகையாளர்களுக்கும் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்பது சட்டமானது.

குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டுமே ஊதியக்குழு அமைத்து சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் பத்திரிகை துறையும் ஒன்று. இப்படி அமைக்கப்பட்ட ஊதியக்குழு, பத்திரிகையாளர்கள் மற்றும் இதர நாளிதழ் பணியாளர்களின் பணி நிலைக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயித்து பரிந்துரைத்தது. இதுவரை பத்திரிகையாளர்களுக்காக ஆறு ஊதியக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இறுதியாக நீதிபதி குர்பக்ஸ் ராய் மஜீதியா தலைமையில் ஊதியக்குழு அமைக்கப்பட்டது.

 

தற்போது நடுவண் அரசு கொண்டு வந்துள்ள பணிசார் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நெறிமுறைகள் சட்டத்தொகுப்பு–2020 (Occupational Safety, Health and Working Conditions Code – 2020) இந்தச் சட்டம் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு இருந்த பாதுகாப்பு அரண்களை அகற்றிவிட்டது. இனிமேல் ஊதியக்குழு அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதற்கான நெறிமுறைகளும் புதிய சட்டத்தில் இல்லை.

தொழில்துறை உறவுகள் சட்டத்தொகுப்பு- 2020 (Industrial Relations Code – 2020) தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வதை எளிதாக்கி இருக்கிறது. இந்தச் சட்டம் 300 தொழிலாளர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்கள் அரசின் அனுமதி இல்லாமல் பணி நீக்கம் செய்து கொள்ள அனுமதிக்கிறது. ஏற்கனவே 100 தொழிலாளர்கள் வரை பணியாற்றும் நிறுவனங்கள் மட்டுமே பணிநீக்கம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது.

அடுத்து, புதிய சட்டம் ஒப்பந்தப்பணி முறையை ஊக்குவிக்கிறது. வரையறுக்கப்பட்ட கால ஒப்பந்தம் (Fixed -term contract) சட்ட ரீதியான அங்கீகாரத்தை பெற்றிருப்பதன் மூலம் பத்திரிக்கையாளர்களின் பணிப் பாதுகாப்பு கானல் நீராகி விட்டது. நிறுவனங்கள் விரும்பியபடி வேலையில் ‘அமர்த்து பின் துரத்து’ கொள்கையை (Hire and fire policy) எளிதாக பின்பற்ற முடியும். இதனால் பணி நிரந்தரம் என்பது கனவாகி விட்டது.

மஜீதியா ஊதியக்குழு பரிந்துரை அளித்து ஆண்டுகள் பல கடந்தாலும், அதனை நடைமுறைப்படுத்த பத்திரிக்கை நிறுவனங்கள் மறுத்துவரும் சூழல்தான் தற்போதும் உள்ளது. இந்நிலையில் புதிய சட்டம் அவை அனைத்தையும் அகற்றிவிட்டு, ‘அமர்த்து பின் துரத்து’ கொள்கையை முன்னிறுத்துவதால், பணிப் பாதுகாப்புக்காக முதலாளிகளின் கருணையை வேண்டி பத்திரிக்கையாளர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது, அங்கு வேலை இல்லை என்றால்… வேறு நிறுவனத்துக்கு மாறிவிடுவது… என்பதையே இந்தியா போன்ற நாடுகளின் தொழிலாளர்கள் / பத்திரிகையாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஐரோப்பா, அமெரிக்காவைப் போல் சமூகப் பாதுகாப்பு குறித்தோ, முதுமையில் ஓய்வு மற்றும் ஓய்வூதியம் பெறுவது குறித்தோ எந்தப் வாய்ப்பும் இல்லை. சமூகப் பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களும் இங்கு நடை முறையில் இல்லை. தமிழக அரசின் பத்திரிகையாளர் ஓய்வூதியத் திட்டம், ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்கள் எளிதாக ஓய்வூதியம் பெற முடியாத விதிகளையே கொண்டிருக்கிறது. இதில் பலடையும் பத்திரைகையாளர்கள் மிகக் குறைவு!

உரிமைகளுக்காகப் போராடுவதைவிட ஒவ்வொரு பத்திரிகையாளரும்/தொழிலாளியும் ‘தனக்கான தேவை’ ‘தன்னுடைய வளர்ச்சி’ என்ற சிந்தனை மூலம் தன்னை மட்டும் தனிமைப்படுத்தி சாதித்துக்கொள்ளும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மஜீதியா ஊதியக்குழு பரிந்துரை வழங்கி, அதனை அரசாணையாக நடுவண் அரசு வெளியிட்ட பிறகும், பத்திரிகை நிறுவனங்கள் நடைமுறைப்படுத்த முடியாது என அடம்பிடிக்கின்றன. இதற்கு எதிராக சிறு முணுமுணுப்பு கூட பத்திரிகையாளர்களிடம் எழவில்லை. சில சங்கங்கள் மட்டும் குரல் கொடுத்துவிட்டு ஓய்ந்துவிட்டன. அரசாணை வெளியிட்ட அரசும், அதனை செயல்படுத்த எந்த அக்கறையும் காட்டவில்லை. தற்போதைய புதிய சட்டத்தில் அதுவும் பறிபோய்விட்டது.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பெரு நிறுவனங்களிடம் வேலை வாய்ப்புகளை ஒப்படைத்ததுடன், தொழிலாளர்களின் உரிமைகளையும் நிறுவனங்களிடமே அடமானம் வைத்து விட்டு நடுவண் அரசு வேடிக்கை பார்க்கிறது. இனியாவது நாம் விழித்துக் கொள்வோமா?

கட்டுரையாளர் : சிவ.மணிமாறன், கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக அச்சு ஊடகம்,காட்சி ஊடகம் இரண்டிலும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது காட்சி ஊடகப் பத்திரிகையாளர். பாரம்பரிய சிறப்புமிக்க சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) பொருளாளராக செயல்பட்டு வருகிறார்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time