பொன்முடி வழக்கின் தீர்ப்பு ஏற்படுத்தும் விளைவுகள்!

-சாவித்திரி கண்ணன்

திராவிட இயக்க சித்தாந்தத்தை கரைத்து குடித்தவர், சமூக நீதி குறித்த உரைவீச்சை மெய் சிலிர்க்க பேசுபவர்! மெத்த படித்தவர், ஒரு ஆசிரியரின் மகனாக எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்! ஆனால், ஆட்சி அதிகாரம் அவரை நிறைவடையவே இயலாத செல்வத் தேடலில் பொருளாதார குற்றவாளியாக்கியது;

செஞ்சி ராமச்சந்திரன் இவரை பட்டைதீட்டி இளம் தலைவராக கட்சித் தலைமைக்கு அடையாளம் காட்டினார்! ஆனால், கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் மாவட்ட திமுகவை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு புதிய இளம் தலைமுறையில் யாரும் மேலேழுந்து வர முடியாமல் குடும்ப அரசியல் செய்து கோலோச்சி வந்தவர் தான் பொன்முடி!

சூர்யா கல்வி குழுமம் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பாலி டெக்குனிக்குகள்…என கல்வியை பெரு வணிகமாகக் கொண்டுள்ள ஒருவரை கல்வித் துறைக்கு அமைச்சராக நியமிப்பதே தார்மீக ரீதியில் மிகத் தவறான அணுகுமுறை!

2006 தொடங்கி 2011 வரையிலான பதவி காலத்திலேயே துணைவேந்தர் பதவி தொடங்கி பேராசிரியர்கள் பணியிடம் வரை அனைத்துக்கும் ‘ரேட்’ நிர்ணயித்து உயர்கல்வித் துறையை உயர்மட்ட லஞ்சத் துறையாக மாற்றிய பொன்முடியையே மீண்டும் அமைச்சராக்கி அழகு பார்த்தாரே ஸ்டாலின்…! கேட்பதற்கே நாதியில்லை என்ற எண்ணம் தானே!

எந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தாலும், அந்தத் துறையில் உச்சபட்ச கொள்ளையை நிகழ்த்துவது பொன்முடியின் வாடிக்கையாக ஆரம்ப காலத்தில் இருந்தே இருக்கிறது! போக்குவரத்து துறைக்கு அமைச்சராக இருந்தார். அதை மேன்மேலும் சுரண்டி வழித்தெடுத்து நஷ்டத்தில் ஆழ்த்தி தன்னை வளப்படுத்திக் கொண்டார். கனிம வள அமைச்சராக இருந்த போது கனிம வளத்தை காப்பாற்றி பாதுகாப்பதை விடுத்து கடைவிரித்து களவாடினார். கல்வித் துறை அமைச்சரான பிறகு அதை கடைத்தேற்ற இயலாத அளவுக்கு கரப்ஷன், கலெக்‌ஷன் துறையாக்கிவிட்டார்!

அதிகார துஷ்பிரயோகம் என்பதை தன் பிறப்புரிமை போல பாவிப்பார்!

அத்துமீறி பொதுச் சொத்தை சூறையாடுவதை குற்றவுணர்வின்றி செய்வார்.

வழக்குகள் எத்தனை வந்தாலும் அவற்றை தகர்த்து தூள் தூளாக்குவார்!

இது வரை அவர் பாதையில் இடையூறுகள் எதுவும் நிரந்தரமாக இருந்ததில்லை.

விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம்..என வட தமிழகமெங்கும் விரிந்து பரந்த சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பி உள்ளார்!

அவர் வாங்கி குவித்துள்ள சொத்துக்களின் எண்ணிக்கை அவருக்கே ஞாபகம் இருக்குமா? என்பது சந்தேகமே!

இது தவிர எண்ணற்ற வியாபார நிறுவனங்கள்..!

இப்படிப்பட்டவர்களுக்கு பொதுச் சேவை குறித்த எண்ணம் எப்படி வரும்? அதற்கு நேரமும் அனுமதிக்காதே!’அரசியல் அதிகாரம்  என்பது சொத்துக்களை வாங்கி குவிப்பதற்கான ‘லைசென்ஸ்’ என்ற புரிதல் தான் இன்றைய அரசியல்வாதிகளுக்கு உள்ளது போலும்!

1990 களில் சைதை ஸ்ரீ நகர் வடக்கு காலனியில் அரசுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை மாமியார் பெயருக்கு மாற்றி, அபகரித்து செய்த விவகாரம் 16 ஆண்டுகளாக கோர்ட்டில் பல கட்ட முன்னேற்றமும், பின்னேற்றமுமாக நகர்ந்தது! ஐ.ஏ.எஸ் அதிகார ராஜரத்தினம் உள்ளிட்ட 90 பேர் வரை சாட்சியம் சொன்ன அந்த வழக்கில் கடைசியாக இதே சென்னை உயர்நீதிமன்றம் அவரை விடுவித்தது!  நீதிபதி ஜெயவேல், ஆவணங்கள், சாட்சிகள் எதையும் கவனத்தில் கொள்ளாமல், ”குற்றச்சாட்டை அரசு தர்ப்பில் சரியாக நிருபிக்கவில்லை” எனக் கூறி விடுவித்த அதிசயமும் நடந்தது. இன்று வரை சைதைவாசிகள், ”இந்த அக்கிரமத்துக்கு தண்டனை இல்லாம போச்சே..” என அங்கலாய்ப்பது வழக்கம்.

2006 முதல் 2011 வரையிலான கால கட்டத்தில், திமுகவின் உயர்கல்வித்துறை அமைச்சராக  பொறுப்பு வகித்த பொன்முடி மீது 2011ஆம் ஆண்டு ஊழல் வழக்கு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை காவல்துறை கண்காணிப்பாளர் கன்னியப்பன் என்பவரால் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக  தொடர்ந்த வழக்கின் தொடர்ச்சி தான் தற்போது பொன்முடிக்கு சிறை தண்டனை பெற்றுத் தந்துள்ளது.

அவ்வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதில் 37 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முக வேலாயுதம் போதுமான ஆதாரங்களை எடுத்து வைக்காமல் சொதப்பினார். ஐந்தாண்டு விசாரணை முடிவில் விழுப்புரம் லஞ்ச ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி  ஏப்ரல் 18-2016  பிறப்பித்துள்ள உத்தரவில், ’’குற்றச்சாட்டுகளை உறுதி செய்யத் தேவையான ஆதாரங்கள் இல்லை’’ என்று தெரிவித்து, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரையும் விடுவித்தார். இதில் தண்டனை வழங்கப்பட்டிருந்தால், அவர் தேர்தலில் நிற்கும் தகுதியை அன்றே இழந்திருப்பார். அதைத் தான் தற்போது மீண்டும் எடுத்து விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

கனிம வளத்துறை மந்திரியாக இருந்த போது தன் மகனுக்கு செம்மண் குவாரியில் மணல் அள்ள அதிகார துஷ்பிரயோகம் செய்தார். இதில் அவரது மகன் அனுமதிக்கப்பட்ட அளவையும் மீறி, 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரி செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக மற்றொரு வழக்கு இழுவையில் உள்ளது.

இது தொடர்பான சொத்து குவிப்பு வழக்கில் பல்லாண்டுகள் ஆட்டம் காண்பித்து, அழகாக தன்னை விடுவித்துக் கொண்டவர் தான் பொன்முடி! அதைத் தான் ஆனந்த் வெங்கடேசன் மீண்டும் தூசு தட்டி எடுத்தார். அந்த வழக்கை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதில் இன்னும் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வராமல் உள்ளது. இந்த வழக்கு 2002 ஆம் ஆண்டு போடப்பட்டதாகும். ஒரு தலைமுறை கடந்து போகும் இவ்வழக்கை எப்படியெப்படி எல்லாம் இழுத்தடிப்பது, சாட்சிகளை பிறழ் சாட்சிகளாக்குவது என்பதில் எல்லாம் சர்வ வல்லமை காட்டி, நீதித் துறையையே நிலைகுலைய வைத்தார் பொன்முடி! ஆனபோதிலும் விழுப்புரம் மாவட்ட மாஜிஸ்திரேட் மிக நேர்மையாக சபலத்திற்கு ஆளாகாமல் வழக்கை கையாண்டார்.

172 சாட்சிகளை விசாரித்து  381 ஆவணங்கள், தரவுகள் எல்லாவற்றையும் சரிபார்த்து தீர்ப்புக்கான தேதியை முடிவெடுக்கும் தருணத்தில், ஆளும் கட்சி என்ற அதிகார பலத்தை முழுவீச்சில் பயன்படுத்தி உயர் நீதிமன்றத்திற்கே அழுத்தம் தந்து – அந்த வழக்கில் தனக்கு தண்டனை உறுதி என்ற சூழலில் – வழக்கை விழுப்புரம் கோர்ட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு மாற்ற வைத்து தனக்கு சாதகமான தீர்ப்பை வாங்கினார்.

இந்த சூழலில் எம்பி, எம்.எல்.ஏக்கள் தொடர்பான ஊழல்களை விசாரிக்கும்  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தானே வலிந்து எடுத்து விசாரிக்கத் துணிந்தார்! நீதிபரிபாலன முறையிலேயே தவறு நடந்துள்ளது என பகிரங்கப்படுத்தி, இந்த வழக்கை கையில் எடுத்தார். அவரை ‘கேரக்டர் அசாசினேஷன்’ செய்ய ஆளும்தரப்பு என்னென்னவோ திட்டங்களை தீட்டிப் பார்த்தது! ஆனால், நேர்மைக்கு இலக்கணமான நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அசரவில்லை.

இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யும் வரை பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்திருப்பது என்பது அதிகார மேல்மட்டத்தில் இருப்பதால் பொன்முடிக்கு கிடைத்த சலுகையாகத் தான் கொள்ள வேண்டியுள்ளது! 21 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்டு கடும் முயற்சிக்கு பிறகு தீர்ப்பை உறுதிபடுத்த முடிந்தாலும் கூட – காலதாமதமாக வேணும் நீதி நிலை நாட்டப்பட்டுள்ளது என்றாலும் கூட – அவர் சிறை செல்லாமல் இருக்க முடிவது என்பது நம் நாட்டு நீதிபரிபாலன முறையில் உள்ள கோளாறாகவே பார்க்க வேண்டியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் நீதியை பாரபட்சமின்றி அணுகும் நீதிபதி இதை எடுத்து விசாரிக்கும்பட்சத்தில் பொன்முடி தண்டனை உறுதியாகும்! அங்கும் அதிகார அழுத்தங்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் தான் இவரது தண்டனை உறுதிப்படும்.

அப்படி பொன்முடி தண்டிக்கப்படும் பட்சத்திலாவது இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் கொஞ்சம் தங்கள் குற்றங்களை, கொள்ளைகளை குறைத்துக் கொள்ள முடிந்தால், அதுவே இந்த தீர்ப்பினால் பொது மக்களுக்கு விளைந்த உண்மையான நன்மையாக இருக்கும். இத்துடன் முன்னாள் அதிமுக அதிகார மையங்களின் வழக்கும் வேகம் பெற்று தீர்ப்புகள் வரட்டும். இந்த ஆட்சியிலேயே பொன்முடியை விஞ்சும் அளவுக்கு ஊழல் செய்பவர்கள் மீதும் வழக்குகள் பாயட்டும். இவை நடப்பதற்கு இது ஆரம்பமாக இருக்கட்டும்.

இந்த வழக்கின் மேல்முறையீட்டில் பொன்முடிக்கு தண்டனை உறுதியாகும் பட்சத்தில், 2024க்கு பிறகு திமுகவின் அரசியலே திசைமாறலாம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time