தோற்று விட்டனவா நம் அரசியல் கட்சிகள்… ?

-க. பழனித்துரை

எது நம் தேசத் தலைவர்கள் காண விரும்பிய இந்தியா ? அந்த மகா கனவு என்னவென்பதை நாம் அறிந்திருக்கிறோமா? இன்று நாம் கண்டுள்ள வளர்ச்சி என்பது உண்மையான வளர்ச்சியா..?  எத்தனை பெரும் வீழ்ச்சியில் நம் சமூகம்..!  அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு வருகின்றனவே..?

என் நண்பர் ஒருவர் இந்திய தேசிய காங்கிரஸ் லாகூர் மாநாட்டில் 1929ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை புலனத்தில் அனுப்பி வைத்து, ”இதை ஆழ்ந்து படியுங்கள்” என்று வேண்டினார். அது மிகப் பெரிய விரிவான தீர்மானம். ‘இந்தியா ஏன் பூரண சுயராஜ்யம் அடைய வேண்டும்’ என்பதற்கான காரணங்களை விளக்கி, வரையப்பட்ட தீர்மானம்.

இந்தத் தீர்மானத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்படியெல்லாம் இந்திய மக்களைச் சுரண்டி ஆதிக்கம் செலுத்தி மக்களை வாட்டி, வதைக்கிறது என்பது விளக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களிடம் வரி என்ற பெயரில் எப்படியெல்லாம் சுரண்டுகின்றார்கள், என்பதை படம் பிடித்துக் காட்டும் தீர்மானம். அது மட்டுமல்ல, இந்திய சமூகத்தில் இருந்த கல்வி, கலாச்சாரம், ஆன்மீகம் என அனைத்தையும் வெள்ளைய அரசாங்கம் அழித்தது. எனவே, இனிமேலும் வெள்ளையர்களை இந்திய நாட்டில் அனுமதிப்பது நியதியற்றது நியாயமற்றது. ‘இந்திய சமூகம் பூரண விடுதலையடைய வேண்டியது காலத்தின் கட்டாயம்’ என்ற பொருள்பட வடிவமைக்கப்பட்ட வார்த்தைகளும், வாசகங்களும் அடங்கியது தான் அந்தத் தீர்மானம். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தீர்மானம் என்றே கூற வேண்டும். படிப்பவர் மனதில் ரௌத்திரத்தை உருவாக்கும் ஆற்றல் கொண்ட தீர்மானம் அது. லாகூர் தீர்மானம் நள்ளிரவில் இந்திய தேசிய காங்கிரஸால் ஏற்கப்பட்ட தீர்மானம்.

அந்தத் தீர்மானத்தை இவர் ஏன் தற்போது எனக்கு அனுப்பினார் என்பதை அசைபோட மீண்டும், மீண்டும் அந்தத் தீர்மானத்தைப் படித்தேன். அந்தத் தீர்மானத்தில் அழுத்தமாக ஒரு கருத்து பதியப்பட்டிருந்ததை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அரசாங்கம் என பிரகடனப்படுத்தும் எந்த ஒரு அமைப்பும் அல்லது நிறுவனமும் அங்கு வாழும் மக்களின் உரிமைகளைப் பறித்தும், அவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்தியும், அடிமைப்படுத்தியும் அவர்களைச் சுரண்டியும் வாழ்ந்தால் அந்த நாட்டில் வாழும் மக்களுக்கு அதை மாற்றி அமைக்கும் உரிமை உண்டு அல்லது அந்த அரசை அழிக்கும் உரிமையும் உண்டு’ என்று அந்தத் தீர்மானம் விளக்குகின்றது.

வெள்ளைய அரசாங்கம் இந்திய மக்களின் உரிமைகளை மட்டும் பறிக்கவில்லை, அவர்களை அடிமைப்படுத்தி, சுரண்டியது. அது மட்டுமல்ல, இந்திய மண்ணுக்கான அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் அனைத்தையும் சிதைத்தது என்பதுதான் அந்த தீர்மானத்தின் சாரம். எனவே, ‘இந்திய மக்கள் வெள்ளைய அரசுடன் இருந்த உறவை முறித்துக் கொண்டு, பூரண சுதந்திரம் அடைய வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்பதைப் பிரகடனப்படுத்தி விட்டனர்.

காங்கிரஸ் இயக்கம் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்துவிட்டது. ஆனால், இந்தியா இன்னும் பொருளாதார, சமூக சுதந்திரம் பெற வேண்டியுள்ளது. அத்துடன் ஒழுக்கத்திற்கான சுதந்திரமும் அடைய வேண்டியுள்ளது.

இந்த சுதந்திரங்கள் பெறுவது என்பது அரசியல் சுதந்திரத்தை விடக் கடுமையானது. மகாத்மா காந்தி கூறிய கருத்தை இந்தத் தீர்மானத்துடன் இணைத்துப் பார்ப்பது பிரச்சினையை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கும். காரணம், ”வெள்ளையர்களை விரட்டுவது நம் மக்களின் ஒற்றுமையால் கைகூடியது. தற்போது நம்மை நாம் நெறிப்படுத்திக் கொள்ள  சுதந்திரத்தைப் பெறப் போராடியதை விட கடினமாக போராட வேண்டும்..” என்று காந்தி ஜனவரி 27ஆம் தேதி 1948ல் குறிப்பிடுகிறார்.

மேற்குறிப்பிட்டவைகளையெல்லாம் ஆழ்ந்து அசைபோடும்போது, நமக்கு ஒன்று புலப்படுகின்றது. சுதந்திரத்திற்குப் பிறகு நாம் செய்ய வேண்டியவைகளை நாம் செய்தோமா..? என்ற கேள்வி எழுகிறது. வெள்ளையர்களை விரட்டியது முக்கியமல்ல, வெள்ளையர்களை எதற்காக விரட்டினோமோ அவைகள் அனைத்தும் நம் நாட்டில் நடந்ததா?

அரசின் ஆளுகையையும், நிர்வாகத்தையும் தேர்தல் மூலம் பிடிக்கும் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் நமக்குத் தரும் பாடம் என்ன? என்பதை சற்று கூர்ந்து கவனித்தால், நாம் எங்கு தவறினோம் என்பது புலப்பட்டு விடும்.

நம் அரசாங்கம் நம் மக்களை எப்படி நடத்துகிறது? அதிகாரத்தை தேர்தலின் மூலம் பெற்று பதவிக்கு வந்தவுடன் ஆளும் கட்சி மக்களை எப்படி நடத்துகின்றது? மக்களிடமிருந்து தேர்தல் மூலம் பெற்ற அதிகாரத்தை வைத்து பெரும்பான்மை ஏழை மக்களை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே போராட வைத்துவிட்டு ஒரு குறிப்பிட்ட வர்க்கம் செல்வ வளத்தில் கொழிப்பதும், அதைக் கேள்வி கேட்டால் அரசை வைத்து அச்சமூட்டுவதும் வாடிக்கையாகிவிட்டன.

வெள்ளையர்கள் இருந்த இடத்தில் வேறு ஒரு கூட்டம் வந்து அமர்ந்து, வெள்ளையர்கள் அடித்த கொள்ளையைவிட பன்மடங்கு அதிகமாக மக்களைச் சுரண்டுகின்றது. இந்தச் சூழல் நமக்குக் கூறும் ஒரே அறிவுரை, ‘மீண்டும் ஒரு விடுதலைப் போராட்டம் வரவேண்டும்’ என்பதுதான்.

இந்த நேரத்தில் ஒரு சிறிய நூல் என் வாசிப்புக்குக் கிடைத்தது. அந்த நூலின் தலைப்பு வந்தே மாதரம். இது ஒரு மாத இதழ். அந்த மாத இதழ் “வந்தே மாதரம்” என்ற சிறப்புத் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் இந்த இதழை ஏன் இந்தத் தலைப்பில் தயாரித்தார்கள் என்ற கேள்வியுடன் இதழுக்குள் நுழைந்தேன். இது சுதந்திரப் போராட்ட காலத்தில் தினசரிப் பத்திரிக்கையில் வெளிவந்த பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு!

இதைப்படிக்க ஆரம்பித்தபோது எனக்கு முதலில் தோன்றிய கருத்து நாம் இன்று வாழும் இந்தியாவையா நம் தேசத்தின் தலைவர்கள் உருவாக்க எண்ணினார்கள் என்பது தான். காரணம், சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்தால் எப்படிப்பட்ட இந்தியாவாக மாறவேண்டும் என்று மக்களிடம் ஒரு கனவுத் திட்டத்தை உருவாக்கினார்கள் என்பது அந்தக் கட்டுரைகளில் வெளிப்பட்டது. அது, மகாக் கனவு. லாகூரில் இயற்றிய தீர்மானத்தின் சாரமும், ‘வந்தே மாதரம்’ என்ற செய்தித் தாளில் வந்த கட்டுரைகளின் சாரமும் ஒரே கருத்தைத்தான் முன் வைக்கிறது. ‘எங்களை அடிமைப்படுத்தி, எங்களைச் சுரண்டி, எங்களின் கலாச்சாரத்தை, ஆன்மீகத்தை, அறிவுத் தளத்தை ஒழித்த உங்களை வீட்டுக்கு அனுப்புவது எங்களின் உரிமை’ என்று வீர முழக்க மிட்டது தான்.

நாடு சுதந்திரம் அடைந்ததும் இங்கு அந்நியர்களால் சுரண்டப்பட்டும், அடிமைப்படுத்தப்பட்டும் கிடந்த மக்களை இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பில் அடைத்து வைத்து மேய்ப்பது அல்ல விடுதலையின் குறிக்கோள். இந்திய மக்கள் முழுச் சுதந்திரம் பெற்று, அரசியலில், பொருளாதாரத்தில், சமூகத்தில், கலாச்சாரத்தில், ஆன்மீகத்தில் ஏற்றமும் சமத்துவமும் பெற்று ஓர் உன்னத வாழ்க்கையை மக்களாகவே கட்டமைத்துக் கொள்ள வழிவகை செய்வது தான் அரசாங்கத்தின் கடமையாக விளக்கியிருந்தார்கள் நம் தேசத் தலைவர்கள். சுதந்திர நாட்டில் மக்களை அனைத்துச் செயல்பாடுகளிலும் பங்கேற்பாளர்களாகவும், பங்குதாரர்களாகவும் மாற்றி இயங்க வைப்பது தான்  நம் தலைவர்கள் காண விரும்பிய இந்தியாவின் குறிக்கோளாக இருந்தது.

இந்த அடிப்படையில்தான் அண்ணல் காந்தி ஏழை விவசாயிகளையும், பெண்களையும் உழைக்கும் மக்களையும் போராட்ட களத்திற்குக் கொண்டு வந்து அவர்களின் அச்சத்தைப் போக்கி, போராட வைத்தார். இவை அனைத்தும் அந்த சிறிய இதழிலும், லாகூர் தீர்மானத்திலும் எனக்கு புரிந்த செய்திகள்.

இவற்றை வைத்துக் கொண்டு, இன்று நாம் வாழும் இந்தியா எப்படி இருக்கின்றது..? என்று சீர் தூக்கிப் பார்க்கும் போது, எனக்குத் தெரிவது இரண்டு இந்தியா;

மும்பையின் மத்திய பகுதியின் பளபளக்கும் கண்ணாடி கட்டிடமும், பல அடுக்குமாடிகள் கொண்ட வானுயர்ந்த கட்டிடங்களும்! சோற்றுக்கு அரசை எதிர்பார்க்கும் குழந்தைகள்! (உள்படம்)

# இந்திய மக்களை ஒரு சாரார் சுரண்டி வாழ அரசு துணை போவதும், அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகார அரசியல் செய்வதும், நம்மை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்ற சிந்தனையில் அளவற்ற ஊழல் செய்து கட்சிக்கும் தங்களுக்கும் பெரு நிதி பார்ப்பது ஒரு இந்தியா.

#  பெரும்பான்மையாக இருக்கும் ஏழைமக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கே அன்றாடம் அரசை எதிர்பார்த்து பயனாளியாகவும், அரசுக்கு மனுச் செய்யும் மனுதாரராகவும் வாழும் சூழல் கொண்ட இந்தியா மற்றொன்று!

இந்தப் பின்னணியில் உலகை வியக்க வைக்கும் அளவுக்கு இந்தியாவில் பொருளாதாரம் வளர்கிறது. பொருளாதார வளர்ச்சிக்கான வலுவான கட்டமைப்புக்கள் தொடர்ந்து உருவாக்கப்படுகின்றன. விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொழில்சாலைகள், வணிக நிறுவனங்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தொழில்நுட்பம் விஞ்ஞானம்.. என அனைத்திலும் உலகம் வியக்கும் வளர்ச்சி தான்.

உணவுப் பஞ்சம் என்ற நிலையை மாற்றி, நம் நாட்டு 142 கோடி மக்களின் பசி போக்கிய பிறகு, உலகுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு விவசாய உற்பத்தியை அதிகரித்து சாதனை படைத்தனர் நம் விவசாயிகள்!

அதே சமயம் 84% எழுதப் படிக்கத் தெரிந்த மக்களை உருவாக்கியதும் நம் சாதனைதான். 80 கோடி மக்களை தங்களின் அடைப்படைத் தேவைக்கு அரசின்  விலையில்லா அரிசி, கோதுமையை நம்பி இருக்க வைத்துள்ளோமே… இதை என்னென்று கூறுவது?

74%  இந்திய மக்கள் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் வாழ்கிறார்கள் என்று ஐ.நா. அறிக்கை கூறுவதை எப்படிப் பார்ப்பது?

50%க்கு மேலான ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள், வயதுக்குத் தக்க வளர்ச்சி இல்லாமல் இருப்பதும், ரத்தசோகை பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்கள், உடல் நலிந்த தாய்மார்கள் பல்கி இருப்பதும் எதைக் காட்டுகிறது நமக்கு…?

அடிப்படை வசதிகளற்ற நிலையில் அரசு பள்ளிகள்! ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனால், இரண்டாம் வகுப்பு பாடமே  எழுத, படிக்க முடியவில்லை! உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு கணக்குப் போடத் தெரியவில்லை. இது தான் இந்தியாவில் உள்ள எளிய குடும்பத்து பிள்ளைகளின் தற்போதைய நிலை!

இன்று கல்வி என்பது பணம் சம்பாதிக்கும் கருவி, சமூக அந்தஸ்து தரும் கருவி என்று சமூகம் பார்க்கிறது. அதன் விளைவு கல்வியை பயிற்சி நிலையங்களில் தேடி அலைந்து, பெரும் பொருள் செலவுடன் பயிற்சி பெற்று போட்டித் தேர்வு எழுதி, மருத்துவம், பொறியியல் என்று அலைந்து இடம் பிடித்தவர்களில் 16,000 பேர் படிப்பைத் தொடர முடியாமல் வெளியேறியுள்ளனர் என்பது எதைக் காட்டுகிறது..?

வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையை அழித்து இயற்கைப் பேரிடருக்கு வழி செய்த செயல், சுதந்திர நாட்டில் தானே நடந்துள்ளது. 3% பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட எல்லாக் குடும்பங்களுக்கும் தேவையான எல்லா அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து மதிக்கத்தக்க மானுட வாழ்வை மரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டிருக்கிறது! இது போன்ற நிலைமையை பல நாடுகளில் பார்த்த பிறகும் ,8% பொருளாதார வளர்ச்சி கொண்ட நாட்டில் 50% மக்களுக்குக் கூட  அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லையே…!

அதே நேரத்தில் ஊழல் என்பது மட்டும் நூற்றுக்கணக்கான கோடிகள், ஆயிரக்கணக்கான கோடிகள்..என  தாண்டவமாடுகிறதே. …!

அதிகாரத்தில் இருப்போருக்கு முறையில்லாமல் வந்து குவியும் நிதி எல்லைகளைத் தாண்டிவிட்டதே….!

எந்தக் குற்ற உணர்வும், கூச்சமும் இன்றி அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் குவிக்கும் அதிகார வர்க்கத்தை இன்றைய சூழலில் எப்படிப் பார்ப்பது…?

இந்த இந்தியாவை உருவாக்கவா வ.உ.சி செக்கிழுத்தார்?

இதற்காகவா பகத்சிங் தூக்குக்கயிறை முத்தமிட்டான்?

எவ்வளவு தியாகம் செய்து இந்தியாவை விடுவித்தனர் நம் தியாகத் தலைவர்கள்?

நாட்டையும், நாட்டு மக்களையும் பெரிதெனப் பாவித்தனர் அன்றைய தலைவர்கள். இன்று தன்னையும், தன் குடும்பத்தையும், தன் கட்சிக்காரர்களையும் வளர்ப்பதில் முனைப்பாக இருக்கின்றன  பெரும்பாலான அரசியல் கட்சிகள்.

ஒரு காலத்தில் சமூக மாற்றத்திற்கு வித்திட்ட நடுத்தர வர்க்கம் இன்று சுகபோக வாழ்க்கை அனுபவிக்க கிடைத்த வாய்ப்புக்களை பயன்படுத்தி சொகுசு வாழ்க்கைக்குச் சென்று விட்டது என்பது ஒரு பெரும் சோகம். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சமூகம் மேம்பட வேண்டும் என்று சமூக அக்கறையுடன் களத்தில் இருந்து பணியாற்றிக் கொண்டுள்ளதையும் நான் பரவலாக பார்க்கிறேன். இந்த குட்டி மகாத்மாக்களுக்கு களுக்கு ஊடக வெளிச்சம் கிடைப்பதில்லை. அவர்கள் செய்கின்ற பணிகள் தான் தியாகப் பணிகள். அவர்கள்தான் சமூகம் சந்திக்கின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கொண்டு வருகின்றனர்.

இந்தப் பணிகளைச் செய்ய வேண்டிய அரசியல் கட்சிகளோ, மக்களுடன் களத்தில் இறங்கி, களப் பணியாற்றி மக்கள் அரசியல் செய்வதிலிருந்து விலகிவிட்டன! இவை தேர்தல் அரசியலுடன் தங்கள் பணிகளை நிறுத்திக் கொண்டு விட்டன. களத்தில் இருக்கும் சில கட்சிகளும் தன்னை சுருக்கிக் கொண்டுவிட்டன. சில கட்சிகளோ கட்சி அரசியலுக்குள் தங்களைத் தாங்களே சுருக்கி செயல்பட்டுக் கொண்டுள்ளன. மொத்தத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுள்ளன!

இதன் விளைவாக களம் காலியாகவே இருக்கின்றது. இந்த களத்தைப் பயன்படுத்தி ஒரு புது அரசியலை கட்ட நல்ல வாய்ப்பு இருப்பதை யார் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தான் கேள்வி. இன்றைய களத்தில் இருக்கும் புதுயுக இளைஞர்கள் இணைந்தால், இன்றைய கட்சி அரசியலுக்கு மாற்றாக ஒரு மக்கள் அரசியலை, மேம்பாட்டு அரசியலை முன்னெடுக்க முடியும். அவர்கள் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம். அதற்கான நேரம் வந்துவிட்டது.

கட்டுரையாளர்; க. பழனித்துரை

பேராசிரியர், முனைவர்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time