பள்ளிகளில் நடத்தப்பட்ட கள ஆய்வுகள் பல இன்னுமா தீண்டாமை? இப்படியுமா நடக்கின்றன..? என நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன! இவற்றின் பின்னணி என்ன? இதை தடுப்பது எப்படி? அரசிடம் அளிக்கப்பட்ட அறிக்கைப்படி நடவடிக்கை இல்லை எனில், பொதுவெளியில் பகிரங்கப்படுத்துவோம்; தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிவிப்பு.
250 தன்னார்வ கள ஆய்வாளர்களுக்கு பயிற்சி கொடுத்து தமிழகம் முழுவதும் கள ஆய்வு செய்ய அனுப்பினோம். அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக இந்த ஆய்வை மேற்கொண்டு முடித்தனர். 36 மாவட்டங்களில், 441 பள்ளிகளில் ஆய்வுகள் செய்துள்ளனர். 644 மாணவர்களைசந்தித்து விரிவாக பேசியுள்ளனர். அவர்களிடம் 78 கேள்விகள் கேட்டு பெற்ற பதில்கள் அதிர்ச்சியும், வேதனையையும் ஏற்படுத்துகிறது என தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்கள் இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர்!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், மாநிலத் தலைவர் தா. செல்லக்கண்ணு மற்றும் முன்னணி நிர்வாகிகள் சென்னையில் இன்று கூட்டாக பேட்டி அளித்து, ஆய்வு அறிக்கையையும் வெளியிட்டனர். அதன் விவரங்கள்;
” சமூக நீதிக்கான பாரம்பரியம் கொண்டது நமது மாநிலம்.அந்த நிலை வேகமாக மாறி வருவதை வருத்தத்துடன் பதிவு செய்கிறோம்.
சாதிய மேலாதிக்கம் கொண்ட இந்துத்துவா ஊடுருவல்கள், சாதிய ஆதிக்க சக்திகளின் செயல்பாடுகள், மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்து வருவதை ஆய்வின் மூலம் உணர முடிந்தது. சாதிக்கென்று நிறத்தை கட்டமைத்து கயிறு ,பொட்டு ,டாலர், செயின் ,கடுக்கன், தொப்பி, என 38 வகை அடையாளங்களுடன் பள்ளிகளுக்கு வருவதும், சாதி அடையாளத்துடன் தலைவர்கள் படத்தை பஸ் பாசுக்குள் வைத்து வருவதும் டீ சர்ட், பனியன்களில் சாதி அடையாளத்தை காட்டுவதுமான செயல்பாடுகளும் இந்த ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
கள ஆய்வின்போது,பட்டியல் சமூக மாணவனை தாக்கிய வேறு சமூக மாணவனை அணுகி எதற்காக அடித்தாய் என்று கேட்டபோது,
” நாங்கள் விளையாடும் இடத்திற்கு வந்தான். அவனை அடிக்கணும் போல தோன்றியது, அடித்தேன்” என்ற பதில் உடனே வந்தது.
இன்றைக்கு பள்ளிகளில் சாதிய பாகுபாடுகள் பரவலாக உள்ளன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பட்டியலின மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்ததன் விளைவுதான் எங்கள் கள ஆய்வு.
வகுப்பறை, இருக்கைகள், நூலகம், கழிப்பறை,விளையாட்டு மைதானம், போட்டிகள், தேர்வுகள், பாலியல் தொல்லை, சக மாணவர் மற்றும் ஆசிரியர் உறவு, உரையாடல்கள், ஏச்சுக்கள், கிண்டல்கள் உள்ளிட்டவற்றை கேட்டறியும் வண்ணம் கேள்விகளை கட்டமைத்தோம்.
இந்த ஆய்வில், சக மாணவர்களிடம் சாதிய உணர்வு வெளிப்படுத்தும் மாணவர்கள் உள்ள 23 பள்ளிகளை கண்டுபிடித்தோம்.

சாதிய ரீதியாக மாணவர் குழுக்கள் செயல்படும் 10 பள்ளிகளை அடையாளம் கண்டுள்ளோம்.
கழிப்பிடங்களை சுத்தம் செய்ய தலித் மாணவர்களை பயன்படுத்தும் 15 பள்ளிகள் பற்றிய விவரம் கிடைத்துள்ளது.
இது தவிர, சத்துணவுக்கு சாதிவாரியாக தனி வரிசை அமைத்துள்ள பள்ளிகள் 6 உள்ளது தெரிய வந்தது.
முதல் இரண்டு இடங்களில் மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் பெயர் விவரத்தை பத்திரிகை செய்தியாக்கி விளம்பரப்படுத்தி வந்த ஒரு பள்ளி நிர்வாகம் முதல் இரண்டு இடங்களை தலித் மாணவர்கள் பெற்ற காரணத்தால் அந்த சமயத்தில் மட்டும் வாய்மூடி அமைதி காத்திருக்கிறது. இந்த செயல் அந்த மாணவர்கள் மனதை எப்படி பாதிக்க வைத்திருக்கும்.
அது பற்றிய விவரத்தையும் ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளோம்.
ஐந்து பள்ளிகளில் ஆசிரியரே மாணவர்களை சாதிய ரீதியாக பாகுபடுத்தி வந்திருக்கிறார். மூன்று பள்ளிகளில் ஆசிரியர்களுக்குள்ளேயே சாதியப் பாகு பாடுகள் இருக்கின்றன.! 3 பள்ளிகளின் சுவர்களிலேயே சாதியின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்கள்.
இப்படி ,பள்ளிகளில் சாதிய பாகுபாடுகள் நிகழ்ந்து வருவது தொடர்பான பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
இந்தப் பள்ளிகள் குறித்த முழு விவரமும் எங்கள் கைகளில் உள்ளது. குற்றம் புரிந்த ஆசிரியர்கள் விவரத்தையும் வைத்துள்ளோம்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த கையோடு இந்த விவரங்கள் அனைத்தையும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.

தமிழ்நாட்டில் தீண்டாமை ஒழிய வேண்டும், சாதிய பாகுபாடுகள் அகல வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கம். அந்த அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் பெயர்களை இப்போது வெளியிடாமல் அரசின் பார்வைக்கு கொண்டு செல்கிறோம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.
ஒரு மாதத்திற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த விவரத்தை பொது வெளியில் அம்பலப்படுத்துவோம்.
கடந்த காலங்களில் , நாங்கள் கள ஆய்வு முடிவுகளை வெளியிட்டபோது தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறது.
அது போன்றதொரு நடவடிக்கை இப்போதும் இருக்கும் என்று நம்புகிறோம்.
குற்றங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வது ஒரு புறம் என்பது போல, வருங்காலங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் தமிழக அரசிடம் தெரிவிக்கிறோம்.
# பள்ளிகளில் சாதிய பாகுபாடுகளை அகற்ற “வழிகாட்டல் ஆவணத்தை” அரசு வெளியிட வேண்டும்.
# சமூக நீதிக்கு என்று ஒரு தனி கட்டமைப்பை ஏற்படுத்தி இதன் நிர்வாகப் பொறுப்பாளராக ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும்.
# ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு உளவியல் சார்ந்த வகுப்புகளை எடுக்க வேண்டும்.
# நடைமுறையில் உள்ள “மாணவர் மனசு”என்று புகார் பெட்டியை பெயரளவுக்கு இல்லாமல் திறன்மிக்க முறையில் செயல்படுத்த வேண்டும்.
# மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ,தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கூட்டத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளை களைவது குறித்தான விவாதங்கள் முதலில் நடத்தப்பட வேண்டும்.
# சாதி சான்றிதழில் சாதிகுறித்த அனைத்து விவரங்களையும் கல்வி நிலைய அலுவலகத்தில் மட்டும் வைக்க வேண்டும். அந்த விவரங்கள் பொது வெளியில் வைக்கப்படுவதும், வகுப்பறை வரை தொடர்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.
# கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்கும் முறையும், அலுவலகத்துடன் நிறைவடைய வேண்டும். சக மாணவர் மத்தியில் தலித் மாணவர்கள் தனியாகவும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தனியாகவும் நிற்க வைத்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யும் நடைமுறையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.
# சாதி குறித்தான பார்வையை அறிவியல் பார்வையோடு தொடர்புபடுத்தி, இந்த கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும்.
# பள்ளிகளில் சாதிய ரீதியாக ஊர் விழாக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது நிறுத்தப்பட வேண்டும்.
பதின் பருவத்தில் இயல்பாக ஏற்படும் சீண்டலுக்கான உந்துதல் சாதிச் சீண்டலாக மடைமாற்றம் ஆகிவருவது வேதனை அளிக்கிறது. தேர்தல்களின் வக்கு வங்கி அரசியலும் சமூகம், குடும்பம் என ஊடுருவி பள்ளிகள் வரை நீள்கின்றன! தமிழக அரசு இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உரிய திட்டங்கள் வகுத்து செயல்பட வேண்டும்.
Also read
சாதிய பாகுபாடுகளை களைவதற்காக,சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்துள்ள தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது. எங்களுடைய கள ஆய்வு அறிக்கையை அவரிடமும் வழங்க உள்ளோம். அவர் தமிழக அரசிடம் அளிக்க உள்ள விரிவான பரிந்துரை அறிக்கைக்கு எங்களுடைய கள ஆய்வு மிகவும் உறு துணையாக இருக்கும் என்று நம்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இன்று வெளியிட்ட கள ஆய்வறிக்கை மொத்தம் 14 பக்கங்களைக் கொண்டிருந்தது.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகள் ஒழிப்புக்காக களப்பணி ஆற்றிக் கொண்டிருக்கும் முன்னணி நிர்வாகிகள் சாமிநாதன், சுகந்தி, அரவிந்தசாமி, கிருஷ்ணவேணி ஆகியோரும் உடன் இருந்தனர்.
செய்தி ஆக்கம்; ம.வி.ராசதுரை
“caste” is spelt as “cased” in the title itself. I can take this as an indicator of the quality of your work!