உழைப்பைத் தவிர தருவதற்கு ஏதுமற்ற உழைப்பாளிகள் எப்படியெல்லாம் சக்திக்கு மீறி வேலை வாங்கப்பட்டு உருக்குலைந்தார்கள்! ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டல்கள், ஆபத்தான வேலைகளை செய்து மரணித்த குழந்தைகள்.. என கடந்து வந்த பாதை நெஞ்சை உலுக்குகிறது..! பெற்ற உரிமைகளை இழப்போமா..?
இன்றைய இந்தியாவில் மீண்டும் நேரங்காலமற்று தொழிலாளர்களை வேலை வாங்கும் முயற்சிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில், உழைப்பாளி வர்க்கம் என்ன செய்வதென்று தவித்துக் கொண்டுள்ளது. வரலாற்றில் பல இழப்புகளை சந்தித்து நாம் பெற்ற உரிமைகளையும், சட்ட பாதுகாப்பையும் தவறவிடப் போகிறோமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் சென்னையில்தான் 1923 ல் முதலில் மேதினப் பேரணி நடைபெற்றது. தமிழக அரசுதான் 1967 ல் முதலில் தொழிலாளர் தினமான மே ஒன்றாம் நாள் விடுமுறை அறிவித்து, அரசு விழாவாக கொண்டாடியது. இப்படிப்பட்ட பாரம்பரியம் கொண்ட தமிழ்மண்ணில்தான் நாளொன்றுக்கு எட்டுமணி நேரத்திற்கும் அதிகமாக வேலை வாங்கலாம் என்ற சட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியது. அதனை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எழுச்சியைக் கண்டு, அந்த சட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில் தோழர். அ.பாக்கியம் ‘வேலை நாள் ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற நூலை எழுதியிருக்கிறார். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியைத் தொடர்ந்து, தொழிற்சாலைகள் உருவான காலங்களில், வேலைநேர வரையறையின்றி வேலை வாங்கிய காலமெல்லாம் உண்டு. இதனை எதிர்த்து தொழிலாளர்கள் எப்படியெல்லாம் போராடியிருக்கிறார்கள். தொழிலாளர்களின் விடிவெள்ளியாக இருந்த காரல் மார்க்ஸ் இதனை எப்படி பார்த்தார். அவர் கொடுத்த தத்துவ விளக்கம் உலகை எப்படி திரும்பிப் போட்டது என்பதை இந்த நூல் அழகாக விவரிக்கிறது.
குறைந்த பட்ச ஊதியம், ஆண்டுக்கணக்கில் ஒப்பந்த வேலை, ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், பணித்தளங்களில் பாலியல் சீண்டல், மகப்பேறு வசதி, ஆலை விபத்து, வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் ஈட்டுறுதி, நீதிமன்ற தலையீடுகள் என பல பிரச்சினைகள் தொழிலாளர்களுக்கு உள்ளன. நாளிதழ்களில் தற்போது தொழிலாளர்களின் சந்திக்கும் அவலங்கள் குறித்து செய்திகள் வருவதில்லை.
கட்டட வேலை, மூட்டை தூக்கும் வேலை, வாட்ச்மேன் வேலை செய்வோர் நிலைமை இன்னும் மோசம். ஆலை நிர்வாகங்கள் தரும் செய்திகள்தான் பொதுவெளியில் வருகின்றன. கொரோனா கால ஆலைமூடலால், பொதுமுடக்கத்தால் தொழிலாளர்களின் தற்கொலைகள் பற்றிய செய்திகள் வெளிவரவில்லை. புலம் பெயர்ந்த தொழிலாளர் பற்றி கேட்கவே வேண்டாம். இந்த நிலையில் தொழிலாளர் இயக்கங்களே தங்களின் வாழ்நிலை நிலைகுறித்து எழுத வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட தேவையின் விளைவாக வந்ததுதான் தோழர். அ.பாக்கியம் எழுதியுள்ள ‘வேலைநாள் ஒரு வரலாற்றுப் பார்வை’ என்ற நூல்.
14 ஆம் நூற்றாண்டில் பிளேக் நோயால் மக்கள் கொத்துகொத்தாக மடிந்த நிலையில் (கறுப்பு மரணம்) வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை. எனவே 60 வயதுக்கு உட்பட்ட அனைவரும் கட்டாயமாக வேலை செய்ய வேண்டும்; முன்பிருந்த ஊதியத்தைவிட அதிகமாக கேட்கக் கூடாது, வேலையைவிட்டு வேறு இடங்களுக்கு சென்றால் கைது செய்யப்படுவார்கள் என்று இங்கிலாந்து நாட்டில் முதலில் சட்டம் (1351)வந்தது. அதாவது உலகத்தில் உருவான முதல் தொழிலாளர் சட்டமே முதலாளிகளுக்கு ஆள் சேர்க்கும் நோக்கோடுதான் பாராளுமன்றத்தால் கொண்டுவரப்பட்டது. பண்ணைநிலங்களில் வேலை செய்யமுடியாமல் வெளியேறுபவர்களை தடுக்கும் நோக்கோடு ‘வழிப்பறி & பிச்சைக்காரர்கள் சட்டம்’ 1494 ல் வந்தது என்று வரலாற்று பார்வையோடு பதிவாகியுள்ளது. அரசாங்கம் சட்டம் மூலம் தங்களை கட்டுப்படுத்த முடியும் என்பதை தெரிந்துகொண்ட தொழிலாளிகள், தங்களுக்கான கோரிக்கைகளை அடைவதற்காகவதற்காக, படிப்படியாக அதே சட்டங்களை தங்களுக்கு ஆதரவாக மாற்றிய கதைகளும் விவரிக்கபடுகிறது..!
இதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, காரல் மார்க்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்டு அறிக்கை (1848) வேலை நேரத்தை எட்டு மணிநேரமாக ஆக்குவதற்கான போராட்டங்களை விரைவுபடுத்தியது. இந்த நூலின் ஆரம்ப பக்கங்களில் காரல் மார்க்சின் கருத்துகளை குறிப்பிட்டு முதலாளிகள் எப்படி தொழிலாளர்களின் உழைப்புகளை திருடி வருகிறார்கள் என விவரிக்கப்படுகிறது. கார்வி வேலை முறை என்பதன் மூலம் நிலப்பிரபுக்கள் எப்படி கட்டாய உழைப்பு வாங்கினார்கள் என விவரிக்கப்படுகிறது. தெலுங்கானா, தஞ்சை பகுதிகளில் ‘வெட்டி வேலை’ மூலம் இலவசமாக உழைப்பு நிர்பந்திக்கப்பட்டதை பதிவு செய்துள்ளார்.
ஆலை புகைபோக்கியை சுத்தம் செய்யும் சிறார்கள் (chimney sweepers) குறித்த பகுதி நம்மை கண்ணீர் சிந்த வைக்கும். ஆறு வயது குழந்தையை தொழிலாளி என்று சட்டமே கூறியதை என்னென்பது? ஏழைக் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் கொடுமை நடந்தது. இத்தகைய சுரண்டல்களுக்கு திருச்சபையும் ஆதரவாக இருந்திருக்கிறது என்பதெல்லாம் நெஞ்சை ரணமாக்குகிறது.
இந்த நூலில் 13 அத்தியாயங்கள் உள்ளன. ஆசிரியர் தனது நோக்கத்தில் இருந்து சிறிதும் விலகாமல், வேலை நேரம் குறித்த பல தகவல்களை தருகிறார். நாளொன்றுக்கு 15 மணிநேரமாக இருந்த நிலை எப்படி படிப்படியாக குறைந்தது. வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் எப்படியெல்லாம் தொழிலாளர் சட்டங்கள் உருவாயின என்ற விவரங்களை பல நூல்களை ஆய்வு செய்து தருகிறார்.
பிரெஞ்சுகாரர்கள் ஆட்சி செய்த பாண்டிச்சேரியில் தான் தெற்கு ஆசியாவிலேயே முதன்முதலாக எட்டு மணி நேர வேலை 1937 ல் அமலானது. தற்போது 40 சத நாடுகளில் வாரத்திற்கு 40 மணிநேர வேலை நேரம் என்றும், 44 சத நாடுகளில் வாரத்திற்கு 48 மணிநேர வேலைநேரம் என்று உள்ளது; ஜெர்மனியில் வாரத்திற்கு 26 நேரம் வேலை என்கிறார்.
இப்படி பெற்ற உரிமைகளைப் பறிக்கத் தான், புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் பல பிரிவினரை தொழிலாளர் என்கிற வரையறையில் இருந்தே நீக்க ஒன்றிய அரசு சட்டம் இயற்றியுள்ளது என்கிறார். தொண்டு நிறுவனங்கள், மதம் சார்ந்த கல்வி நிறுவனங்கள், பாதுகாப்பு, ஆராய்ச்சி, அணுசக்தி, அங்கன்வாடி, தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவரும் தொழிலாளர்களாக கருதப்படமாட்டார்கள். நமக்கு உணவுப் பொருட்களை வீட்டிற்கு வந்து தரும் இளைஞர்களை ‘டெலிவரி பார்ட்னர்’ அல்லது ‘கேப்டன்’ என்று அழைப்பதன் நோக்கம், தொழிலாளர்களுக்கு உரிய சட்டப்பூர்வ உரிமைகளைப் பறிப்பதுதான் என்கிறார். தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்கள் உருவாவதை தடுக்கும் நோக்கோடு, வேலைநிறுத்தங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல திருத்தங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ளதை கவனப்படுத்துகிறார்.
Also read
தொழிற்சங்க ஊழியர்களுக்கு வகுப்பு எடுப்பது நூலாசிரியரின் நடவடிக்கைகளில் ஒன்று. அத்தகைய குறிப்புகளை, நூலாக உருவாக்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் தந்திருக்கிறார். வேலை நேரம், வேலை நாள் என்ற எல்லைக்குள் செறிவான பல தகவல்களை, சம்பவங்களை வரலாற்றுத் தொடர்ச்சியோடு தருகிறார் நூலாசிரியர். அனைவரும் படிக்கலாம்.
இதனை பார்வை நூலாகவும் கருதலாம்; வரலாற்று நூலாகவும் கருதலாம்; தொழிற்சங்க ஊழியர்களுக்கான கையேடாகவும் கருதலாம். மெச்சத்தகுந்த ஒரு சமூகப் பணியை அ.பாக்கியம் நிறைவேற்றி இருக்கிறார்.
நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்
நூல்; வேலை நாள் ஒரு வரலாற்றுப் பார்வை
ஆசிரியர்; அ.பாக்கியம்
வெளியீடு; தூவல் பதிப்பகம்,
ஆர்.ஏ.புரம், சென்னை – 28/
கைபேசி; 9486344333
பக்கங்கள்; 160
விலை; ரூ200
Leave a Reply