41 உயிர்களை காப்பாற்றியதற்கு விரக்தி தான் பரிசா?

-சாவித்திரி கண்ணன்

உத்திரகாண்ட்  சுரங்க விபத்தில் சிக்குண்ட 41 தொழிலாளர்களை 17 நாட்கள் பலவித மீட்புபணியும் தோற்ற நிலையில், எலிவலை தொழிலாளர்கள் காப்பாற்றினார்கள்! 12,500 கோடிகள் பெறுமான சுரங்கத்தில் 41 உயிர்களை காப்பாற்றிய எளிய தொழிலாளர்களுக்கு விரக்தியை பரிசளித்துள்ளார் பாஜக முதல்வர் புஷ்கர்சிங் தாமி!

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலை சுரங்கப் பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த நவம்பர் 12-ம் தேதி வழக்கம் போல் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், திடீரென எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மலைச்சரிவால் மண் குவிந்து சில்க்யாரா சுரங்கத்தின் நுழைவு வாயிலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கினர்.

இயற்கையை சீரழித்து, சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த சுரங்கத்தை தவிர்க்க வேண்டும் என சுற்றுச் சூழல் நிபுணர்களின் வேண்டுகோளை நிராகரித்து, கட்டப்பட்டு வந்தது இந்தச் சுரங்கம். இதற்கு முன்பே சுமார் 20 முறைகள் இந்த சுரங்கம் சரிந்துள்ளது என்று கூறப்படும் நிலையில் அந்த நிகழ்வுகளில் உயிரிழப்புகள் நடந்தனவா..? என்ற கேள்விக்கு அதிகாரிகள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இந்த சம்பவத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர் என்ற நிலையில் இந்த சம்பவம் பெரிய அளவில் வெளி உலகிற்கு தெரிய வந்துவிட்டது என சூழலியல் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி 2 வாரத்துக்கு மேலாக நீடித்தது. வெளி நாடுகள் பலவற்றில் உதவி கோரப்பட்டது. தொழிலாளர்களுக்கு உணவு, ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் மூலமாக அனுப்பட்டு வந்தது. அமெரிக்காவில் இருந்து தருவிக்கப்பட்ட “ஆகர்” எனப்படும் துளையிடும் எந்திரத்தின் மூலம் அதிக செலவில் மீட்பு முயற்சிகள் நடந்தன! அடுத்தடுத்து ஏற்பட்ட பிரச்சினைகள், இடிபாடுகளின் இடையூறுகளால் துளையிடும் பணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்தது. இடிபாடுகள் இடையே சிக்கிய “ஆகர்” எந்திரத்தின் பிளேடுகளை வெட்டி எடுக்க்கும் நடவடிக்கைகளும் சிரமத்தை தந்தன!

 

பிளான் ‘பி’ நடவடிக்கையாக, சுரங்கப்பாதையின் மேலிருந்து செங்குத்தாக துளையிடும் பணி நாமக்கல் நிறுவனத்தின் துணையோடு நடத்தப்பட்டது. மொத்தம் 86 மீட்டர் தூரத்துக்கு துளையிட வேண்டிய நிலையில் 31 மீட்டருக்கு துளையிட்டு இந்த துளை மூலம் 1.2 மீட்டர் விட்டம் கொண்ட குழாய்கள் செலுத்தப்பட்டு, அதன் வழியே தொழிலாளர்கள் மீட்கப்படும் முயற்சியும் பெரும் பின்னடவை சந்தித்தது. ஆக, நாமக்கலைச் சேர்ந்த போர்வெல் நிறுவனத்தின் துணையோடு செங்குத்தாக பள்ளம் தோண்டி மீட்கும் இந்த முயற்சியும் பலிக்கவில்லை.

ஒட்டுமொத்த இந்தியாவே நம்பிக்கை இழந்த தருணத்தில்,

நவீன இயந்திரங்கள், உயர் தொழில் நுட்பங்கள் எல்லாம் தோற்ற நிலையில்,

பல கோடி செலவுகளும், பல நூறு தொழிலாளர்களும், நிபுணர்களும் களம் கண்டும் வெற்றி பெற இயலாத நிலையில்,

‘கடைசி முயற்சியாக, இந்த எளிய பாமரத் தொழிலாளர்களையும் இறக்கி பார்ப்போமே..’ என்ற மன நிலையில் தான் இந்தத் தொழிலாளர்கள் அழைக்கப்பட்டனர்.

சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட 12 சிறப்பு தொழிலாளர்கள்  மெலிந்த தேகம், உயரம் குறைவான கொண்டிருந்தனர். இவர்கள் சமதளம், மலைப்பகுதியில் எளிவலை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் கைதேர்ந்தவர்கள் என்பதால் இவர்களை ‘எலி வளை’ தொழிலாளர்கள் என்று அடைமொழியியிட்டு மக்கள் அழைப்பார்கள்!

ராக்வெல் என்ற நிறுவனத்தில் ஒப்பந்தக் கூலிகளாக பணியாற்றி வந்தனர் இந்த தொழிலாளிகள்! ஏற்கெனவே இயந்திரம் மூலம் பொருத்தப்பட்ட 47 மீட்டர் இரும்பு குழாயில் சரிந்து விழுந்திருந்த மண் குவியல்களிடையே ஒரே நேரத்தில் இருவர், இருவராக தீரத்துடன் நுழைந்து, சிறிய ரக கருவிகளால் சுரங்கத்தை தொடர்ந்து இடையறாது பக்குவமாகத் தோண்டி,  24 மணி நேரத்திற்குள் உயிருக்கு போராடியவர்களை மீட்டனர்.

திங்கள்கிழமை இரவு பணியைத் தொடங்கி, அடுத்த நாளுக்குள் சிறு கைக்கருவிகளால் 13 மீட்டர் தொலைவையும் தோண்டி, குழாய்களை பொருத்தி, அதில் மெல்ல, மெல்ல ஊர்ந்து  சென்று 41 தொழிலாளர்களையும் சேதாரமில்லாமல் காப்பாற்றிக் கொடுத்தனர்! இந்த எளிய தொழிலாளர்களின் சாதனையை இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளே வியந்து பாராட்டின. இவர்களுக்கு பாராட்டுகள் குவிந்தன!

முதல்வர் புஷ்கர் சிங் தாமி காப்பாற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ ஒரு லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என  அறிவித்தபடி தந்தார். ஆனால், காப்பாற்றிய எளிய எலிவலை தொழிலாளர்களுக்கு எந்த வெகுமதியும் அறிவிக்கவில்லை.

அதே சமயம், ”இவர்களுக்கு பெரிய அளவில் வெகுமதி தரப்படும்” என பலதரப்பிலும் தொடர்ந்து பேசப்பட்டு வந்தது! இந்தச் சூழலில் ஏறத்தாழ 24 நாட்களுக்கு பிறகு இந்த தொழிலாளர்களுக்கு தலா 50,000 ரூபாய்க்கான காசோலையை வெகுமதியாக தந்துள்ளார் உத்திரகண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி.

சாதனை தொழிலாளர்களுக்கு ரூ 50,000 காசோலை வழங்கும் முதல்வர் புஷ்கர்சிங் தாமி

 

இந்த வெகுமதி தொழிலாளர்களை மகிழ்ச்சிப்படுத்தவில்லை. அந்த தொழிலாளர்கள் நிருபர்களிடம் பேசியபோது, நாங்கள் அன்று கதாநாயகர்களாக கொண்டாடப்பட்டோம். எங்கள் குடும்பத்தினரின் அச்சத்தையும், கவலையையும்  மீறியே நாங்கள் இந்தச் செயலில் ஈடுபட்டோம்.  எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

வறுமையின் பிடியில் உழலும் எங்களுக்கு இந்த சம்பவத்தின் மூலம் ஒரு நிரந்தர விடிவு காலம் மலரும் என காத்திருந்தோம். எங்கள் திறமை, உழைக்கும் ஆற்றல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசாங்கத்தில் நிரந்தரப் பணியை எதிர்பார்த்தோம். ஆனால், முதல்வரோ ரூபாய் ஐம்பதாயிரம் தந்து எங்களை தவிர்க்க விரும்புவதாகத் தெரிகிறது! கொடுக்கப்பட்ட வெகுமதியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை.

ஆகவே, இந்த காசோலையை நாங்கள் யாரும் பணம் ஆக்கப் போவதில்லை. நாங்கள் முதல்வரிடம் கேட்டது வேலை தான். அது இல்லை என்றால், எங்கள் குடிசைக்கு மாற்றாக ஒரு சிறிய வீடு. ”இது ஒன்றும் பெரிதல்ல, தந்தால் போச்சு” என வாக்குறுதி தந்துவிட்டு, தற்போது ரூ 50,000 தரப்பட்டுள்ளதானது அதிர்ச்சியும், கவலையும் தருகிறது. வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால், காசோலையை திருப்பித் தந்துவிட்டு அமைதியாக எங்கள் பாதையில் போய்விடுவோம். இதை முதல்வரிடமும் காசோலை தந்த போதே தெரிவித்துவிட்டோம்” என்றனர்.

நுனி நாக்கு ஆங்கிலமும், பெரிய பட்டங்களும், பதவிகளும் பின்னணியும் கொண்ட பெரிய,பெரிய நிபுணர்களுக்கும், மீட்பு நிறுவனங்களுக்கும்  இந்த மீட்பு பணியைச் செய்ய கோடிக் கோடியாய் கொட்டிக் கொடுக்கப்பட்டது. அவை யாவும் பலனற்றுத் தான் போயிற்று!  அதே சமயம் அவர்களால் நிகழ்த்த முடியாத சாதனையை சாத்தியப்படுத்திய எளிய தொழிலாளர்களுக்கு சிறிய வெகுமதிகள் தந்து ஏமாற்றமே கிடைத்துள்ளது.

12,500 கோடிகள் செலவில் கட்டப்படும் சுரங்கத்தில் ஏற்பட்ட உலகை ஈர்த்த ஒரு பெரிய விபத்தில் 41 உயிர்களை காப்பாற்றி, அரசுக்கு ஏற்படவிருந்த கெட்ட பெயரை துடைத்து, நற்பெயரை பெற்றுத் தந்த இந்த தொழிலாளர்களுக்கு இப்படி ஒரு விரக்தியை பரிசளித்துள்ள பாஜக முதல்வர் புஷ்கர்சிங் தாமியின் மனம் இளகுமா..? என பொறுத்திருந்து பார்ப்போம்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time