ஸ்டெர்லைட் ஆலையோடு கைகோர்க்கிறதா திமுக அரசு?

-ச.அருணாசலம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வில் அருணா ஜெகதீசன் அறிக்கையை கிடப்பில் போட்டு, கொலைகார குற்றவாளிகளை 19 மாதங்களாக கமுக்கமாக காப்பாற்றி வருகிறது ஸ்டாலின் அரசு! நீதிமன்றமே திமுக அரசை கேள்வி கேட்டும் பலனில்லை. இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கும் முயற்சி நடக்கிறது..!

சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்த மக்கள் போராட்டத்தின் நூறாவது நாளான 2018ம் ஆண்டு மே 22ல் நடந்த அமைதிப் பேரணியில் பேரணியில்  மக்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி 15 பேர்களை கொன்றனர் காவலர்கள்.

இந்தப்படுகொலை ஏற்படுத்திய அதிர்வலைகளை கண்ணுற்ற தேசீய மனித உரிமை ஆணையம் NHRC தானாக முன்வந்து துப்பாக்கி சூடு பற்றி  விசாரணையை துவக்கியது.

அன்று எதிர் கட்சி தலைவராக இருந்த மு.க. ஸ்டாலின் துரிதமான விசாரணை வேண்டும், உடனடியாக டி ஜி பி உட்பட பொறுப்பில் இருக்கும் அனைத்து காவல் அதிகாரிகளும் இடை நீக்கம் செய்யப்பட்டு , கைது செய்யப்பட வேண்டும், உயிரிழந்தவர்களுக்கு உரிய சன்மானம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பினார்.

அன்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி  துப்பாக்கி சூடு பற்றி தனக்கு ஏதும் தெரியாது என நாடகமாடினார். ஆனால், அன்றிருந்த தமிழக கொந்தளிப்பு சூழலை புரிந்து கொண்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார்.

ஆனால், தமிழகத்தை பிடித்த சாபக்கேடோ என்னவோ எந்தக்கட்சியினரும் ஆட்சியிலிருந்தால் ஒரு பேச்சு , எதிர வரிசையில் இருந்தால் ஒரு பேச்சு என்ற இரட்டை நிலையை  இயல்பாக கொண்டுள்ளனர் என்பது அதைவிட வேதனை.

இதற்கிடையில் தேசீய மனித உரிமை ஆணையம் NHRC  கூச்ச நாச்சம் ஏதுமின்றி, எந்தவித விசாரணையுமின்றி, இழப்பீடுகள் உயிரிழந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, காவல்துறை வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் எனக்கூறி  பொறுப்பை தட்டிக் கழிக்கும் விதமாக ‘தனது விசாரணையை ‘முடித்துக்கொண்டது!

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் உயர்நீதி மன்றம் மொத்த துப்பாக்கி சூடு வழக்கையும் சி பி ஐ நான்கு மாதங்களுக்குள் விசாரித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

தமிழக காவல்துறைக்கு சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என நிரூபிக்கும் வகையில் , பல மாதங்கள் கழித்து இரண்டு குற்றபத்திரிக்கைகளை (FIR) தாக்கல் செய்தது, சி.பி. ஐ., ஒரு கூடுதல் குற்ற பத்திரிக்கையும் சில மாதங்கள் கழித்து தாக்கல் செய்துள்ளது. மொத்தத்தில் 71  பொது மக்களை குற்றவாளிகளாக இதில் இணைத்துள்ளது.

எந்த ஒரு அரசு அதிகாரியோ, காவல்துறை அதிகாரிகளோ , காவலர்களோ குற்றவாளிகளாக இணைக்கப்படவில்லை . கடுமையான கண்டனங்களுக்கு மத்தியில் சி பி ஐ ஒரே ஒரு இன்ஸ்பெக்டரான திருமலை  மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் குற்றவியல் நீ பரிபாலனம் – Criminal Justice Delivery system- மங்கி மறைந்து கொண்டிருக்கையில் , ஒரு சிறு நம்பிக்கை ஒளியாக அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் அறிக்கை அமைந்துள்ளது நமக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

2022ம் ஆண்டு மே மாதம் அருணா ஜெகதீசன் ஆணையம் நேர்மையாக விசாரித்து தனது 3,000 பக்க அறிக்கையை தமிழக அரசிடம்- முதல்வர் ஸ்டாலினிடம்- சமர்ப்பித்தது. ஆனால், இந்த அறிக்கை பற்றியோ, அதன் பரிந்துரைகள் பற்றியோ தமிழக அரசு மூச்சுவிடவில்லை பல மாதங்களாக!

ஆணையத்தின் பரிந்துரைகள் சில பத்திரிக்கைகளில் அதிகாரபூர்வமற்ற முறையில் கசிந்த நிலையில், ஆணையத்தின் அறிக்கை ஆறு மாதங்களுக்குள் அவையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதியின் உறுத்துதலால் தி மு க அரசு அக்டோபர் மாதத்தில் சட்டசபையில் தாக்கல் செய்தது .

அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை, இந்த துப்பாக்கி சூட்டிற்கு காரணம் , உளவுத்துறையின் தோல்வியினாலோ,கட்டுக்கடங்காத மக்கள் கூடியதாலோ ஏற்பட்டதல்ல. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடியடி, கண்ணீர் புகை வீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் எதுவும் நடைபெறவில்லை. போலீசார் யாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை. ஆகவே, இந்த கொடிய துப்பாக்கி சூடு அதிகாரிகளின் அதிகார அத்துமீறலினால் ஏற்பட்ட விளைவாகும்.

இச்செயல் தூண்டப்படாத அத்துமீறல் ( Unprovoked assault) என கண்டித்துள்ளது ஆணையம். சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரில் ஆறு பேருக்கு துப்பாக்கி குண்டுகள் பின் தலையிலும், முதுகிலும், பின் கழுத்திலும் ஊடுருவி முன்புறமாக வந்துள்ளது. அமைதியாக நடந்து சென்ற மக்கள் மீது காவலர்கள் ஒளிந்து கொண்டு சுட்டுள்ளனர். மேலும் அத்து மீறலில் ஈடுபட்ட 17 காவல்துறை அதிகாரிகளை அடையாளங்காட்டி, கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதற்கு இந்த 17 நபர்களும் மொத்தமாகவும், தனித்தனியாகவும் பொறுப்பானவர்கள் . இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அந்த அதிகாரிகள் சைலேஷ் குமார் யாதவ் IPS (ஐ. ஜி), கபில் குமார் சி. சரத்கார்  IPS ( டி ஐ ஜி) பி. மகேந்திரன், எஸ். பி. லிங்கதிருமாறன் டி. எஸ். பி. இன்ஸ்பெக்டர்கள் திருமலை, ஹரிகரன், பார்த்திபன்,எஸ் ஐ சொர்ணமணி மற்றும் ரென்னஸ், காவலர்கள் ராஜா, தாண்டவமூர்த்தி, சங்கர், சுடலைக்கண்ணு, சத்தீஷ் குமார் மற்றும் எம். கண்ணன், மதிவாணன், தலைமைக் காவலர் ஏ. ராஜா ஆகிய பதினேழு நபர்கள் மீது அவர்களுடைய கடமை தவறிய அத்துமீறலுக்காக துறை ரீதியாகவும், கிரிமினல் நடைமுறையிலும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இதுதவிர, அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த எம். வெங்கடேஷ் ஸ்டெர்லைட் போராட்டத்தை கையாளுவதில் தொடக்கம் முதலே அலட்சியம் காட்டியுள்ளார். இவரோடு துணை தாசில்தார்களான சேகர், சந்திரன் மற்றும் கண்ணன் ஆகியோரும் கடமை தவறியவர்களாகவர்.

ஆளுகின்ற தி மு க அரசோ, முதல்வர் ஸ்டாலினோ அன்று என்ன குதி குதித்தார்கள் ? இன்று ஆணைய அறிக்கைக்கு பின்னரும்- அதை தாமதப்படுத்திய பிறகும் – குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்ன வழக்கு அவர்கள் மீது தொடுத்தார்கள்?

இந்த கேள்விகளை நாம் மட்டும் கேட்கவில்லை. 17 வயது மகளை (ஸ்னோலின்) பறிகொடுத்த தாயார் வனிதா கேட்கிறார் . அரசின் அத்துமீறலினால் கொல்லப்பட்ட என் மகளுக்கு நீதி வழங்க வேண்டியது அரசின் கடமை இல்லையா? அன்று அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என குரல் கொடுத்த ஸ்டாலின் இன்று முதல்வரானவுடன் எந்தவித நடவடிக்கையும் ஏன் எடுக்க தயங்குகிறார்? என வினவுகிறார்.

பீப்பிள்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகளுக்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான  ஹென்றி திபேன் தி முக அரசின் கள்ள மௌனத்தை கேள்வி கேட்கிறார்? உயர்நீதி மன்றத்தில் ‘ ஏன் நடவடிக்கை ஏதுமில்லை’ என வழக்கும் தொடுத்துள்ளார். நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் சமாளிக்க முடியாமல் திணறுகிறார்.

தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் இந்த வழக்கை “முறையாக ” விசாரணை செய்ய வேண்டும் என்றும், அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றஞ்சாட்டிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை அடங்கிய ஹென்றி திபேனின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதி மன்றம்- நீதிபதி திருமதி. நிஷா பானு மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வு- ஏன் தமிழக அரசு குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என நவம்பர் 3 மற்றும் 4 தேதிகளில் கடுமையாக சாடி உள்ளனர்.

மீண்டும் நவம்பர் 18ல் வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற அமர்வு ”சில அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளோம் சிலரை இடை நீக்கம் செய்துள்ளோம்” என்ற தமிழக அரசின் மழுப்பலான பதிலை கேட்டு பதிலைக் கேட்டு துணுக்குற்றது. சி. பி. ஐ ஏன் ஒரே ஒரு நபர் மீது மட்டும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் சுட்டிக்காட்டிய நபர்களை ஏன் தொடவில்லை என கேள்விகளை எழுப்பியது.

டிசம்பர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆக, உயர் நீதிமன்றம் கடுமை காட்டி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என நிர்பந்தித்த நிலையில், சி.பி.ஐயும் கோர்ட்டுக்கு பயந்து  உரிய நடவடிக்கைகளுக்கு பரிந்துரைத்த பிறகும், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கடந்த 19 மாதங்களாக  கள்ளமெளனம் சாதிக்கிறது என்பது தான் கொடுமை!

இந்த நிலையில் ஆலையின் ஒரு பகுதியை திறந்து உற்பத்தியைத் தொடங்க ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தை நாடியதில் உச்ச நீதிமன்றமும் இதில் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலியுடன் பேசி முடிவெடுக்க பணித்துள்ளது. போகிற போக்கை பார்த்தால், ‘ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க வாய்ப்பு ஏற்படலாம்.. ‘ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. இவை யாவும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இன்றைய திமுக அரசு மக்களோடு நிற்கவில்லை என்பதும், மெளனமாக ஒத்துழைப்பு நல்குகிறது என்பதையும் தெளிவாக்குகிறது.

மதுரையிலுள்ள முதன்மை குற்றவியல் நீதிபதி சி ஜே எம். சி பி ஐ ன் குற்ற பத்திரிக்கையை நிராகரித்துள்ளார் . முழுமையாக விசாரித்து ஆணைய அறிக்கையை உள்வாங்கி மனுதாரரின் குற்றச்சாட்டுகளை  ஆறு மாதங்களுக்குள் சிபிஐ மீண்டும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாடல் பேசும் நரேந்திர மோடியின் தன்னிலை பற்றிய தற் பாதுகாப்பும் , திராவிட மாடல் பேசும் திமுக வின் தற்பாதுகாப்பும் இங்கு ஒரே புள்ளியில் இணைவதை நம்மால் உணர முடிகிறது.ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பாஜக, அதிமுக,திமுக மூன்றும் ஒரே அணியில் தான் உள்ளனர் எனப்தே யதார்த்தமாக உள்ளது.

செந்தில் பாலாஜிக்காக சி.பி ஐயும், இ .டி.யையும் ஒரு கை பார்க்க களமிறங்கிய தி. மு.க, தூத்துக்குடி வழக்கில் சோரம்போயுள்ள சி. பி. ஐ. யையும், தேசீய மனித உரிமை ஆணையத்தையும் தோலுரிக்க தயங்குவது ஏன்?

சென்னை உயர்நீதி மன்றம் , 13 உயிர்களை காவு கொண்ட துப்பாக்கி சூட்டிற்கு காரணமானவர்களை, அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளப்படுத்திய குற்றவாளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காதது ஏன் என கண்டித்துள்ளது.ஆனால், இன்றைய தமிழக அரசின் காவல்துறையோ உரிமைக்காக போராடிய மக்கள் 71 பேரை குற்றவாளிகளாக சித்தரித்துவிட்டு, அதிகாரிகளை காப்பாற்றுகிறது. நீதி நிலை நாட்டப்படும் என நம்பி திமுகவை ஆட்சிக் கட்டிலில் ஏற்றிய மக்களுக்கு ஸ்டாலின் அநீதியை பரிசளித்துள்ளார்.

அன்று ‘கொடியன்குளம்’  வன்முறையில் கலைஞர் கருணாநிதி என்ன நிலை எடுத்தாரோ.., அதே போன்ற இரட்டை நிலையை தான் அவரது தனயனான ஸ்டாலின் தலைமையிலான தி மு க அரசு கையாளுகிறது!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time