அமலாக்கத் துறையா? நில அபகரிப்புத் துறையா..?

-வழக்கறிஞர் கோ பிரவீணா MBBS BL

இப்படியும் நடக்க முடியுமா..? பரம ஏழைகளான இரண்டு விவசாயிகள் அமலாக்கத்துறையின் சட்ட விரோத பணபரிமாற்றத்திற்கான அழைப்பாணையை காண்பித்த போது! களத்தில் இறங்கிய பிறகு தான் அறிந்தேன், தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு நில அபகரிப்பில் பாஜகவினரும், அமலாக்கத்துறையினரும் கைகோர்த்துள்ளனர் என்று!

ராமநாயக்கன்பாளையம் வடக்கு காடு அப்பம் சமுத்திரம் கிராமம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மலைகள் சூழ்ந்த அழகிய கிராமம்  அங்கு தலித் குடும்பத்தை சேர்ந்த முதியோர்களான கண்ணய்யன், கிருஷ்ணன் என்ற சகோதர விவசாயிகளுக்கு 6 1/2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

கடந்த 3 வருடங்களாக இந்த நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் பாஜக வின் சில முக்கிய புள்ளிகள் ஈடுபட்டு வந்துள்ளனர்! இவர்கள் நிலத்தை தர மறுத்ததனால், பயிர் வைக்கவிடாமலும் தடுத்துள்ளனர். வேறு வருமானமில்லாமல் இவர்கள் அரசு தரும் முதியோர் உதவித் தொகை ஆயிரம் ரூபாயைக் கொண்டு கஞ்சி குடித்து வருகின்றனர்.

மலை முகப்பில் இருக்கும் அப்பாவி ஏழை விவசாயிகளின் துண்டு, துநிலத்தை சுற்றியுள்ள பகுதி நிலங்களை அடிமாட்டு விலை கொடுத்து அந்த நிலத்தை அபகரித்து விட்டு ஏழை விவசாயிகளை நில உரிமையில் இருந்து வெளியேற்றுவது தான் பாஜக வினரின் சதி திட்டம்!

இந்த வகையில் ஏற்கனவே 100 க்கும் மேற்பட்ட ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரிப்பு செய்து விட்டனர் ! பாஜகவினரின் இந்த நிலப்பறிப்புக்கெல்லாம் துணையாக இருந்து செயல்படுவது பாஜக வக்கீல் முத்துக்குமார் என்பவரும் குணசேகரன் என்பவரும் ஆகும்.

காலம் காலமாக தங்களுக்கு சொந்தமான தாங்கள் பயிரிட்டு வரும் தங்களது பூர்வீக விவசாய நிலங்கள் தங்கள் சந்ததிக்குச் செல்ல வேண்டுமேயன்றி சந்தைக்கு அல்ல என பிடிவாதமாக விவசாய நிலம் ஆறு ஏக்கரை விற்க மறுத்து விட்டனர் கண்ணய்யன், கிருஷ்ணன் சகோதரர்கள்!

நிலத்தை பயிர் செய்யவிடாமல் விற்க மறுப்பு தெரிவித்ததால் பாஜகவினர் இந்த ஏழை விவசாயிகளை விவசாயம் செய்ய விடாமல் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் தடுத்து நாளொரு மேனியும், பொழுதுதொரு வண்ணமுமாக இம்சித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கண்ணையன் கிருஷ்ணன் சகோதரர்களுக்கு அமலாக்கத் துறையில் இருந்து கருப்பு பண பரிமாற்ற மோசடி மற்றும் கருப்பு பணத்தில் இருந்து சொத்து வாங்கியதாக சென்னை அமலாக்க துறையில் இருந்து சம்மன்ஸ்/ அழைப்பாணை விடுக்கப்பட்டது . ஜுலை 5 ஆம் தேதி 2023 அன்று நேரில் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கண்ணய்யன் கிருஷ்ணன் சகோதரர்கள் ஆஜராக வேண்டும் என்றும் நேரில் ஆஜராகும் போது ஒரிஜினல் சொத்து பத்திரங்கள் இதர நில ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குகள் மற்றும் வருமான வரி தாக்கல் விவரங்கள் என அனைத்து ஆவணங்களுடன் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தவறினால் அமலாக்க துறை  விவசாயிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு சொத்துக்களை, நிலங்களை எவ்வித விளக்கமும் இன்றி பறிமுதல் செய்யும் என்றும் சம்மன் அனுப்பி இருந்தது!

இந்தக் கடுதாசி என்னவென்று புரியாத காரணத்தால் உள்ளுரில் உள்ள வழக்கறிஞர் செல்லத்துரை மற்றும் கம்யூனிஸ்ட் தோழர் கண்ணன் ஆகியோரிடம் கொண்டு சென்று காட்டியுள்ளனர். அவர்கள் விவரம் சொல்லித் தான் தெரிந்து கொண்டனர். ஏற்கனவே உயிருக்கு கொலை மிரட்டல் இருந்த நிலையில், அமலாக்கத்துறை அழைப்பாணையை கண்டு அதிர்ச்சி அடைந்த கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் சகோதரர்களை சாந்தப்படுத்தி என்னிடம் அழைத்து வந்தனர்.

வழக்கறிஞரான நான் அமலாக்கத்துறை அழைப்பாணைக்கு ஆஜராக வேண்டி இருந்த நாளான ஜுலை மாதம் 5 ஆம் தேதி 2023 அன்று காலை சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரி ரித்தேஷ் குமார் அவர்கள் முன்பு ஏழை விவசாயிகள் கண்ணய்யன் கிருஷ்ணன் சகோதரர்களை ஆஜர் படுத்தினேன்.

அப்போது அமலாக்கத்துறை உயர் அதிகாரி ரித்தேஷ் குமார்…. ”வழக்கறிஞராகிய நீங்க உள்ளே வரக்கூடாது. குற்றம் சாட்டப்பட்டு உள்ள இரண்டு விவசாயிகளை மட்டும் உள்ளே வாங்க” என்றார்.

அதற்கு அந்த இரண்டு வயதான விவசாயிகளுக்கும் ‘தங்களுக்கு எழுதப் படிக்க தெரியாது’ என்றும், ‘தங்களுக்கு வழக்கறிஞர்  பிரவீணா அவர்களுடைய  உதவி அவசியம் தேவை’ என்றும் வழக்கறிஞர் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும்’ என்று பணிவாக வேண்டுகோள் விடுத்தனர்

இதனை ஏற்க மறுத்த அமலாக்கத்துறை உயர் அதிகாரி ரித்தேஷ்குமார் மற்றும் இதர அதிகாரிகள் செக்யூரிட்டி அதிகாரிகளை அனுப்பி, ‘குற்றச்சாட்டு பட்டுள்ள இருவர் மட்டும் கட்டாயம் உள்ளே ஆஜராக வேண்டும்’ என்று நிர்பந்தப்படுத்தினர் … வழக்கறிஞர் பிரவீனா  உள்ளே வரக்கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்

இதனால் அதிர்ச்சி அடைந்த நான்,  ”அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத விவசாயிகளுக்கு வழக்கறிஞர் உதவியுடன் ஆஜராவதற்கு சட்டப்படி உரிமை உள்ளது. விவசாயிகளின் உரிமையை அமலாக்கத்துறை மறுக்கக்கூடாது” என்று எடுத்துச் சொன்னேன்.

இதனால், கோபம் அடைந்த அமலாக்கத்துறை அதிகாரி. ”இந்த அட்வகேட் லேடியை  முதல்ல வெளியே அனுப்புங்க..கெட் அவுட்” என மிரட்டல் தொனியில் குரலை உயர்த்தினார்.

”வி டோண்ட் அலோவுட் அட்வகேட். நாங்கள் அமலாக்கத்துறை! அமலாக்கத்துறைக்கு எல்லை இல்லா அதிகாரம் உள்ளது.  அமலாக்கத்துறை எடுப்பது தான் முடிவு” என்று தெரிவித்தனர்

ஏழை விவசாயியிடம் இருந்து நிலத்தை அபகரிக்கும் சுய நல அரசியல்வாதிகளுக்கு அதரவாக அரசு அதிகாரத்தை சட்டத்திற்கு புறம்பாக அமலாக்க துறை பயன்படுத்த முயற்சிக்கிறது என்பட்து எனக்கு அப்போது தான் தெளிவாக புரிய வந்தது. இந்த பாமர விவசாயிகளிடம் உள்ள அனைத்து நில ஆவணங்களையும் பறித்து வைத்துக் கொண்டு அனுப்புவது தான் அவர்கள் திட்டமாக இருந்தது.

எனவே, ஏழை விவசாயிகளுக்கு சட்டப் பாதுகாப்புக்கு வந்துள்ள வழக்கறிஞரான என்னை அனுமதிக்காததால நான் தமிழக காவல்துறை க்கு புகார் தெரிவித்து, காவல்துறையை அழைக்க வேண்டி இருக்கும் என்று தெரிவித்தேன்.

அதற்கு அங்கு இருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் நக்கலாக சிரித்துக் கொண்டே  நீங்கள் காவல்துறையை அழைக்க வேண்டும் என்றால் கூப்பிடுங்கள் ! அமலாக்கத்துறை அதிகாரம் என்ன என்பதை நாங்கள் காண்பிக்கிறோம் என்று பேசினர்.

நான் உடனடியாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். அப்பாவி ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க சாஸ்த்திரி பவனில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மிரட்டுகின்றனர். எனவே, உடனடியாக நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வந்து அவர்களை மீட்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தேன்.

நுங்கம்பாக்கம் காவல்துறையினர் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து உடனே சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்! அவர்களும் இந்த ஏழை,பாளைகளிடமா அமலாக்கத்துறை பணமோசடி சட்டத்தை பிரயோகிக்கிறது..என துணுக்குற்றவர்களாக இவர்களை விசாரணைக்கு அழைத்த நோக்கம் குறித்து விவரம் கேட்டனர். நான் அனைத்தையும் சொன்னேன்.

அதைத் தொடர்ந்து ஏழை விவசாயிகளுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. அதனால், வழக்கறிஞருடன் ஆஜராக சட்டத்தில் உள்ள உரிமையை நீங்க மறுக்கக் கூடாது. என அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டு கொண்டனர் .

அதற்கு தமிழகத் துறை அதிகாரிகள் கடுமையாக மறுப்பு தெரிவித்ததோடு நீங்கள் உங்கள் முதலமைச்சர் ஸ்டாலினை கூட கூப்பிடுங்கள் …எங்களுக்கு கவலை இல்லை … அமலாக்கத் துறைக்கு வானளாவிய அதிகாரங்கள் உள்ளன என்று அதிகார தோரணையில் மிரட்டினர்.

 

இவை அனைத்தும் சென்னை சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தின் சிசிடிவி கேமராக்களில் பதிவு ஆகி உள்ளது.

அதற்குப் பிறகும் அமலாக்க துறையினர் ஏழை விவசாயிகளை பார்த்து வழக்கறிஞர் இல்லாமல் நீங்கள் உள்ளே வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தினர்

ஆனால், ஏழை விவசாயிகள் அமலாக்கத் துறையினர் கொடுத்த அழைப்பாணையை மிகவும் மதித்து கடன் வாங்கி பணம் செலவு செய்து சென்னை அமலாக்கத் துறைக்கு வந்து வழக்கறிஞரோடு ஆஜராகியும்,  அதிகாரிகளிடம் உண்மையும், நேர்மையும் இல்லாத காரணத்தால் ஏழை விவசாயிகளுக்கு எழுதப் படிக்க தெரியாத நிலையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு  வழக்கறிஞரை விரட்டுவதிலேயே குறியாக இருந்தனர்.

கடைசியில்  பிரவீணா  அம்மா மூலமாக  மட்டுமே நாங்க விசாரணைக்கு உடன்பட முடியும். வாக்குமூலமோ, கை ரேகை வைப்பதோ எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் தனியாக அமலாக்க துறை அலுவலகத்திற்குள் வர முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.

அதன் பிறகு சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு ஏழை விவசாயிகளை நான் ( டிசம்பர் 17) அழைத்து சென்றேன். டிஜிபி அலுவலகத்தில் போலீஸ் உயர் அதிகாரிகளிடம் அமலாக்கத் துறையினர் எவ்வித உண்மை காரணங்களும் இன்றி, ஏழை விவசாயிகளின் நிலத்தை அபகரிப்பு செய்யும் சட்டத்திற்கு புறம்பான உள் நோக்கத்தை விவரமாக எழுத்து மூலமாக தெரிவித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ரித்தேஷ் குமார் மற்றும் இதர அதிகாரிகள் அனைவர் மீதும் புகாரை பதிவு செய்து எஃப் ஐ ஆர் பதிவு செய்யும்படி வலியுறுத்தி புகார் வழங்கி வந்தேன். தற்போது வரை தமிழக காவல்துறை ஏழை விவசாயிகளை காக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை !

தமிழகத்தில் இது போல இன்னும் எத்தனையெத்தனை இடங்களில் இது போன்ற அத்துமீறல்கள் நடக்கின்றனவோ..தெரியவில்லை. மொத்தத்தில் இந்த மண்ணின் பூர்வீக குடிகளிடம் இருந்து ஆங்காங்கே இது போன்ற அரசியல்வாதிகள், அதிகாரிகள் கூட்டணி அமைத்து நிலங்களை படிப்படியாக அபகரித்து வருகின்றனர் என்பது மட்டும் தெளிவு. நாம் விழித்துக் கொள்ளவில்லை என்றால், சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்படுவோம்.

கட்டுரை; வழக்கறிஞர் கோ பிரவீணா, MBBS, BL

தலைவர்,

ஆல் இண்டியா தலித் சமாஜ்,

தமிழ் முன்னேற்ற கழகம்.

[email protected]

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time