மனித உயிர்களை மலிவாக கருதும் தேசம்!

-சாவித்திரி கண்ணன்

வடசென்னை முற்றிலும் வாழத் தகுதியற்ற இடமாகிவிட்டது! அங்குள்ள மனிதர்களை அரசும், தனியார் நிறுவனங்களும் ‘வோர்க்கிங் சோர்ஸ்’ ஆகத் தான் பார்க்கிறார்களே அன்றி, மனிதர்களாகப் பார்ப்பதில்லை.  25 ஆபத்தான தொழிற்சாலைகள் அணிவகுக்கும் பகுதி! ஒன்றடுத்து ஒன்றென பல விபத்துக்கள் வாடிக்கையாகிவிட்டதே..!

எத்தனை கோர அனுபவங்கள் கிடைத்தாலும், முன்கூட்டியே செய்ய வேண்டிய அடிப்படையான முன் எச்சரிக்கை ஏற்பாடுகளைக் கூட, எப்போதும் செய்வதில்லை என தனியார் நிறுவனங்கள் பிடிவாதம் செய்கின்றன. அவர்களை கண்காணித்து வழிக்கு கொண்டு வர வேண்டிய அரசின் மாசுக் கட்டுபாடு வாரியமோ, காசு கலெக்‌ஷன் வாரியமாக, ஊழல் முறைகேடுகளில் மூழ்கித் திளைக்கிறது.

இது போன்ற விபத்துகள் நடக்கும் போது மக்களை காப்பாற்றுவதற்கான வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியது, அந்தந்த அலைகளின் அடிப்படை கடமை! ஆனால், இந்த விபத்தின் போது,  ”உங்கள் தொழிலாளர்களை அழைத்து வரும் பேருந்துகளில் மக்களை அழைத்துச் சென்று காப்பாற்றுங்கள்” என கேட்ட போது, கைவிரித்துள்ளனர். ‘விபத்தை கேள்விப்பட்டு அதிகாரிகளோ, ஆட்சியாளர்கள் தரப்பிலோ யாரும் வரவில்லை’ என்பதும் மக்கள் கோபமாக உள்ளது.

கோரமண்டல் உர ஆலையில் இருந்து வெளியேறிய விஷ வாயுக் கசிவால் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷ வாயுவைத் தந்த உரத்தைத் தான் நாம் உண்ணுகின்ற உணவுக்கான உரமாகப் போடுகின்றனர் என்பதை எண்ணிப் பார்த்தால், வேதனை தான் மிஞ்சுகிறது. ஆலைக்கான அமோனியா, எண்ணூர் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள பைப் லைனைப் பயன்படுத்தி, கோரமண்டல் ஆலைக்கு அனுப்பப்படுகிறது. நள்ளிரவில் திடீரென காற்றில் ஒருவித கொடூர நெடி பரவத் தொடங்கியதால் சிலர் மயக்கமடைந்துள்ளனர்.

அமோனியா வேகமாகப் கசியத் தொடங்கியவுடன், பெரியகுப்பம், சின்னக்குப்பம் மற்றும் அருகே உள்ள கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.  ஆண்கள், பெண்கள், முதியோர் , மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் என ஒட்டு மொத்த மக்களும் அலறிப் புடைத்து நள்ளிரவில் ஊரை விட்டு தங்களிடம் இருந்த இரு சக்கர வாகனங்களில் வெளியேறி 8 முதல் 10 கி.மீ. தொலைவு தாண்டி சமுதாயக் கூடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர்.

மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக கோரமண்டல் நிறுவனத்தில் செய்யப்பட்ட சோதனையில், ஆலையின் வளாகத்தில் 400 மைக்ரோ கிராம் இருக்க வேண்டிய அமோனியா 2090 கிராமாக இருந்தது. அதாவது, வழக்கத்தை விட ஐந்து மடங்கு அமோனியா காற்றில் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடல் நீரில் லிட்டருக்கு 5 மி.கி இருக்க வேண்டிய அமோனியா 49 மி.கி என இருந்துள்ளது. இதனால் அந்த கடல் பகுதி முழுக்க வெண்மையாக  மாறியுள்ளது. கடலில் கடுமையான துர் நாற்றம் வீசுவதால்  ஏராளமான மீன்கள் செத்து மிதந்துள்ளன!

”தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே இனி குழாயை பதிக்க வேண்டும்” மாசு கட்டுப்பாடு வாரியம் காலம் கடந்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிபந்தனையை முன்பே விதிக்க வேண்டியவர்கள் தங்களுக்கான கடமையைக் கூட, விபத்துக்கு பிறகு தான் செய்வார்கள் போலும்! பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சுகா மற்றும் ஆகாஷ் ஆகிய தனியார் மருத்துவமனையில் சிகிசைக்கு ‘அட்மிட்’ ஆனார்கள். மற்ற சிலர்  காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்.

அந்தப் பகுதி மக்கள் ”ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்று கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில், சாதாரண காலங்களில் கூட லேசான வாயுக் கசிவு இருப்பதாகவும் அதனால், தங்களுக்கு நுரையீரல் பாதிப்பு, ரத்த கொதிப்பு போன்றவை ஏற்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அமோனியா வாயு கசிவு தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளதாகவும், புது வருட விடுமுறை முடிந்து, ஜனவரி 2-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், எண்ணூரில் உள்ள உர ஆலை செயல்பாடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தான் சி.பி.சி.எல் ஆலையின் பைலைனில் இருந்து கசிந்த எண்ணெய்க் கசிவால் கடலும், சுற்றிலும் வாழும் மக்களும் , அவர் தம் இல்லங்களும் கடுமையாக பாதித்தன! இதில் சோகம் என்னவென்றால், மூன்று மதத்திற்கு முன்பே லேசாக ஆயில் கசிவு ஏற்பட்ட போதே புகார் தந்தும் சி.பி.சி.எல் தொடர்ந்து அலட்சியப்படுத்திவிட்டது. மக்கள் உயிருக்கும், உடமைகளுக்கும் கடுகளவும் மரியாதையை அரசும், இந்த தனியார் நிறுவனங்களும் தருவதே இல்லை. இது போன்ற நேரங்களில் இழப்பீடுகளும் தருவதில்லை.

மற்றொருபுறம் எண்ணூர் அனல் மின் நிலையத்தை சுற்றியுள்ள கழிவெளி பகுதி  தமிழக அரசின் டான்ஜெட்கோ (Tangedco) நிறுவனம் அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றும் சாம்பல் கழிவுகளால், சாம்பல் வனமாக மாறியுள்ளது. வடசென்னையின் பிரதான நீர்வழித்தடமாக உள்ள, கொசஸ்தலை ஆற்றில் சாம்பல் கழிவுகள் கலப்பதால் அப்பகுதி முழுவதும் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் இயற்கையின் வரபிரசாதமாக திகழ்ந்த அலையாத்தி காடுகள் அழிக்கப்பட்ட நிலையில், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொண்டு செல்லவும், சாம்பல் கழிவுகளை வெளியேற்றவும், கொசஸ்தலை நதியையும் எஞ்சியிருக்கும் சதுப்பு நிலத்தையும் பாதுகாக்க அரசு தவறிவிட்டது. இதே போல எண்ணூர் துறைமுகத்தலும் மக்கள் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.

வாழத் தகுதியில்லாத சுற்றுச் சூழலை வளர்ச்சி என்பதன் பெயரால் அனுமதித்து விலை மதிப்பில்லாத இயற்கையையும், மனித உயிர்களையும் தொடர்ந்து அழித்து வருபவர்களை ஆளத் தகுதியில்லாத ஆட்சியாளர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time