மாற்று அரசியலாக எழுந்து, ஏமாற்று அரசியலில் பலியானார்!

-சாவித்திரி கண்ணன்

எம்.ஜி.ஆரை முன்மாதிரியாகக் கொண்டு சினிமாவிலும், அரசியலும் ஈடுபட்ட விஜயகாந்த் சினிமாவில் மகத்தான வெற்றியும், அரசியலில் ஒரளவு வெற்றியும் பெற்றார்! சினிமாவில் அவர் தொட்ட உச்சமும், அரசியலில் அவர் தொட முடியாமல் போன உச்சத்தையும் ஆய்ந்து விவாதிப்பதே இந்த கட்டுரை;

சினிமாவில் அவர் தொட்ட உச்சம் என்பது வியக்கதக்க ஒன்றாகும். தமிழகத்தின் பிரபல இயக்குனர்களாக அறியப்பட்ட பாலச்சந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன், மணிரத்தினம் ஆகிய அனைவராலும் ஒருங்கே தவிர்க்கப்பட்ட விஜயகாந்த், தானே பல புதிய இயக்குனர்களை திரையில் அறிமுகப்படுத்தி, தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டவர்.

அது மட்டுமின்றி, கமலஹாசன், ரஜினிகாந்த் என்ற இரு பெரிய இமயங்களுக்கு இடையில் தனக்கென்று ஒரு ராஜபாட்டையை உருவாக்கி வீரநடை போட்டவர். கமலஹாசனையும், ரஜினிகாந்த்தையும் பட்டை தீட்ட மிகப் புகழ் பெற்ற இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஊடகவியலாளர்கள்  அணிவகுத்த நிலையில், அப்படியான வாய்ப்புகளின்றி சாதாரண இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் துணையுடன் இயங்கி முன்னணிக்கு வந்ததில் தான் விஜயகாந்தின் முக்கியத்துவம் இருக்கிறது. அந்த வெற்றியின் முக்கிய காரணம், அவரை எளிய மனிதர்கள் தங்களில் ஒருவராக அடையாளம் கண்டனர்.

எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப் பிறகு, தான் சார்ந்த கலைக் குடும்பத்தின் நன்மைக்காக களத்தில் பாடுபட்டவர் விஜயகாந்த் தான். ரஜினியும், கமலும் தங்கள் வளர்ச்சியைத் தவிர, வேறொன்றிலும் அக்கறை எடுத்துக் கொள்ளாத போது, நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்ததோடு, அடித்தளத்தில் நலிந்த நிலையில் உள்ள கலைஞர்கள் வாழ்க்கையில் அக்கறை கொண்டு இயங்கியதில் தான் அவர் ‘கேப்டன்’ என்ற அடைமொழிக்கு பொருந்தியவரானார். தான தர்மங்கள் செய்ததில் அவர் உண்மையிலேயே கலைவாணர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாரிசாகத் திகழ்ந்தார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இவர் வாழ்ந்த காலகட்டத்தில் வேறெந்த நடிகரும் இவர் அளவுக்கு பரோபகாரங்கள் செய்ததில்லை.

விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை;

விஜயகாந்த்தின் அரசியல் ஈடுபாடு என்பது அவரது மாணவப் பருவத்திலேயே உருவானது என்பது அவர் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதில் உணர முடிகிறது. அந்த வகையில் இளம் வயத்தில் அவருக்கு திராவிட இயக்கங்களின் மீது ஈர்ப்பும், தமிழ் பற்றும் இருந்துள்ளது என்பதற்கு ஏராளமான சம்பவங்கள் சான்றாகும். சினிமாவில் வெற்றி பெற்று வந்த போதே,  அவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தாலும், அதில் ஈடுபடத்தக்க நிலையில், ஒரு வலுவான நடிகரை உள்வாங்கி கொள்ளத்தக்க நிலையில் திமுக இல்லை.

ஆகவே, அண்ணா தலைமையிலான திமுகவில் எம்.ஜி.ஆருக்கு கிடைத்த வரவேற்பும், அரசியல் பயிற்சியும் விஜயகாந்திற்கு கிடைக்கதக்க நிலையில் அவர் காலத்து திமுக இல்லை. ஆகவே, ஜனநாயகத் தன்மையற்ற  அரசியல் கட்சிக்குள் நுழையாமல் தவிர்த்து விட்டார். ஆரம்பகாலத்தில் கருணாநிதி மீதிருந்த அதீத பற்று, காலப்போக்கில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் ஒரு போதும் இணைய முடியாத நிலைக்கு அவரைத் தள்ளியது. திராவிட இயக்க ஈர்ப்பால் அரசியல் ஆர்வம் பெற்றவரால் அவரது மரணம் வரை திமுகவுடன் அரசியலில் கைகோர்க்க முடியவில்லை.

அவர் அரசியல் கட்சி தொடங்கிய 2005 ஆம் ஆண்டு தமிழக அரசியலில் கருணாநிதி மீதும், ஜெயலலிதா மீதும் மக்கள் நம்பிக்கை இழந்திருந்த காலம்! கட்சி தொடங்கி ஒரே ஆண்டுக்குள் சந்திக்க நேர்ந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலிலேயே அவரது கட்சி 8 சதவிகித வாக்கு வங்கியை பெற்றதே இதற்கு சாட்சி. அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலிலும் தேமுதிக 10 சதவிகித வாக்கு வங்கியை நோக்கி நகர்ந்தது!

ஆனாலும், விஜயகாந்தை தொடர்ந்து அவதானித்து வந்த நிலையில், அவரிடம் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான செயல்திட்டம் எதுவும் அறவே இல்லை என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே நான் எழுதி வந்தேன். கட்சியின் பெயரிலே குழப்பம். தேசியமா? திராவிடமா ? முற்போக்கா? என்பதில் தெளிவில்லை. தேசியம் என்றால், அதற்கு காங்கிரஸ், பாஜக என ஏற்கனவே கட்சிகள் உள்ளன! திராவிடம் என்றல், அதற்கு ஏற்கனவே திமுக, அதிமுக என்ற வலுவான கட்சிகள் உள்ளன! முற்போக்கு என்றால், அதற்கு இடதுசாரிகள் ஏற்கனவே உள்ளனர். இந்த வகையில் தான் தொடங்கியுள்ள கட்சியின் அடையாளம் என்ன? என்பதையே அவரால் தெளிவாக தீர்மானிக்க முடியவில்லை. இதனால், மக்களுக்கும், ‘இருக்கின்ற அரசியலுக்கு மாற்றான கட்சி இது’ என தீர்மானிக்க முடியவில்லை.

ஆயினும் கூட, ‘திமுக, அதிமுக இரண்டுக்கும் மாற்றாக ஒரு புதிய அரசியல் சக்தி வரவேண்டும்’ என்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள் மெல்ல,மெல்ல தேமுதிகவை நோக்கி வந்து கொண்டிருந்த நிலையில், தனித்து போட்டியிட்டால் வெல்ல முடியாது என்ற நிலையில் இருந்த அதிமுகவை அரியணையில் ஏற்றும் நோக்கத்தில் அதிமுக- தேமுதிக கூட்டணிக்கு அடித்தளமிட்டார் பத்திரிகையாளர் சோ.

முதலில், ”இது எனக்கு சரிப்படாது” என நிராகரித்த விஜயகாந்தை மெல்ல, மெல்ல கரைத்து இரு தரப்பிலும் இடையறாது பேச்சுவார்த்தை நடத்தி, சம்மதிக்க வைத்தார் சோ. இந்த தேர்தலில் (2011) தேமுதிகவிற்கு 29 எம்.எல்.ஏ.சீட்டுகள் கிடைத்த போதிலும், அந்த கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்ததனால், தன் வாக்கு வங்கியில் ஒன்றரை சதவிகிதம் இழந்திருந்தது என்பதை அவர் கவனத்தில் கொள்ளத் தவறிவிட்டார்!

அதன் பிறகு 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜகவையும், பாமகவையும் கொண்ட ஒரு அணியை தமிழருவி மணியன் கட்டி எழுப்பிய போது, அதில் இணைந்ததில் அவரது வாக்கு வங்கி இன்னும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது.

2016 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்திருந்தால் முன்பு போல கணிசமான எம்.எல்.ஏக்களை பெறக் கூடிய வாய்ப்பு இருந்த நிலையில் கம்யூனிஸ்டுகள், மதிமுக, தமக..போன்ற சிறிய கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஏற்படுத்திய போது, தேமுதிகவின் வாக்குவங்கி இரண்டரை சதவிகிதமாக சரிந்தது. அதன் பிறகு முற்போக்கு தோற்றத்தை கழட்டி எறிந்துவிட்டு, பாஜகவுடன் நிரந்தரமாக தோழமை கொண்டது அவரது கட்சி. 2011 ஆம் ஆண்டிலேயே அவர் சிறிய கட்சிகளை அரவணைத்து தேர்தல் களம் கண்டிருந்தால், கணிசமான முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து 2016 ல் ஆட்சிக்கே வந்திருக்கலாம்.

சினிமா பிரபலமும், துணிச்சலும் மட்டுமே அரசியலுக்கு போதாது. எதற்காக கட்சி? என்ன கொள்கை? என்பதில் ஒரு தெளிவு வேண்டும். அது விஜயகாந்திடம் இல்லாததால், இன்னொரு திமுக, அதிமுக போலவே தேமுதிகவும் இருக்கும் எனும் போது, தேமுதிகவுக்கான தேவை இல்லாமல் போய்விட்டது. மாற்று அரசியலுக்கான கட்சியாக பார்க்கப்பட்ட தேமுதிக ஏமாற்று அரசியலுக்குள் தன்னை நுழைத்துக் கொண்டது!

சட்டமன்ற எதிர்கட்சி அந்தஸ்த்து கிடைத்த போது, கேபினெட் அமைச்சருக்கான அங்கீகாரம், அரசாங்க முத்திரை பதித்த கார் ஆகியவற்றில் பவனி வந்த போது அதிகார அரசியலுக்கு பலியாகிவிட்டார். தன் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆறுபேரை ஜெயலலிதா தூக்கிய போது இவர் கோர்ட்டுக்கு போய் ஓடுகாலிகளின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்க செய்திருக்க வேண்டும். அந்த துணிச்சலான நடவடிக்கையை அவர் தவிர்த்து, தன்னுடைய எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து பறி போகக் கூடாது என அமைதி காத்தார். சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்த்து போனால் என்ன? மக்கள் மன்றத்தின் அங்கீகாரமே எனக்கு முக்கியம் என இயங்கி இருந்தால் கூட அவர் வளர்ச்சி மேல் நோக்கி சென்று இருக்க கூடும்.

தனிநபர் துதி, கட்சிக்குள் ஜனநாயக மறுப்பு, ஜெயலலிதா போல ஒன்மேன் ஷோ, கருணாநிதி போல குடும்ப அரசியல், கட்சி பதவிகளுக்கே அவர் மனைவி கட்சிகாரர்களிடம் பணம் பெற்ற அவலம் என அதிமுக, திமுகவில் உள்ள அனைத்து சீர்கேடுகளும் தேமுதிகவில் அரங்கேறின.  கட்சி நிர்வாகிகளை விஜயகாந்த் குடும்பத்தினர் கையாண்ட விதம், அவரை கட்சி நிர்வாகிகளிடம் இருந்து தனிமைப்படுத்தியது. மாற்றத்தை விரும்பும் அறிவார்ந்த இளம் தலைமுறைக்கு அங்கு இடமில்லாமல் போனது. இவை தாம் தேமுதிக தேய்பிறையானதற்கு முக்கிய காரணங்களாகிவிட்டன!

வருங்காலத்தில் அரசியலுக்கு வரத் துடிக்கும் நடிகர்களுக்கு விஜயகாந்தின் அரசியல் எழுச்சியும், தோல்வியும் ஒரு பாடமாக அமையட்டும். போதுமான அரசியல் பயிற்சியோ, கொள்கை, சித்தாந்தமோ எதுவுமின்றி, சினிமா பின்புலத்தில் இருந்து வருபவர்களை நம்பக் கூடாது என்பதை சமூகத்திற்கான பாடமாகவும் விஜயகாந்த் விட்டுச் சென்றுள்ளார்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time