தொழிலாளர்கள் என்றால், கிள்ளுக் கீரையா?

-சாவித்திரி கண்ணன்

அரசு போக்குவரத்தை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தி, அதிகாரத்திற்கு வந்துள்ள தற்போதைய திமுக அரசு, போக்குவரத்து கழகங்களை சீரழித்து வருகிறது. தொழிலாளர்கள் நலன்கள் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ள சூழலில், தொழிலாளர்கள் மிகப் பெரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

தொழிலாளர்கள்  வேலை நிறுத்தம் ஏன்?

அரசு போக்குவரத்து  கழகங்கள் என்பவை குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு போக்குவரத்து சேவை செய்யத் தான் உருவாக்கப்பட்டன! எந்த தனியார் பேருந்துகளும் செல்ல விரும்பாத தடங்களில் எல்லாம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த வகையில் குக்கிராமங்கள் தொடங்கி, குறைந்த மக்கள் வாழ்கின்ற சிற்றூர் வரை அரசு பேருந்துகள் செல்லும் போது அதிக பயணிகளை எதிர்பார்க்க முடியாத நிலையில் சற்றே நஷ்டம் ஏற்படுவது இயற்கை தான். இழப்பு ஏற்படும் எனத் தெரிந்தே சுமார் 10,000 பேருந்துகள் மலை வாழ் மற்றும் கிராமபுற பகுதிகளில் இயக்கபடுகின்றன! இந்த வகையில் தினமும் இரண்டு கோடி மக்கள் பேருந்துகளில் பயணப்படுகின்றனர். எனவே, வரவுக்கும்,செலவுக்குமான இடைவெளியை இட்டு நிரப்ப வேண்டிய கடமை நமது அரசுக்கு இருக்கிறது.

மக்களுக்கு போக்குவரத்து வசதியை குறைந்த செலவில் தருவது என்பது வேலை வாய்ப்புகள், பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, மருத்துவ உதவி போன்றவை சம்பந்தப்பட்டதாகும். மாணவர்களுக்கு இலவச பாஸ், ஊனமுற்றோருக்கு சலுகை, முதியோருக்கு இலவச பயணம், பெண்கள் இலவச பயணம் என தேர்தல் வாக்குறுதிகளை அரசு போக்குவரத்து கழகங்களை மையப்படுத்தி அறிவித்து ஆட்சிக்கு வரும் கட்சிகள் வரவுக்கும் செலவுக்கும்  உள்ள பற்றாக்குறையை  பொறுப்பேற்க வேண்டும். நஷ்டத்தை ஊதிய குறைப்பு செய்வதன் மூலமோ, பென்ஷன் பணத்தை நிறுத்தி வைத்தோ தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கக் கூடாது!

ஊழியர்களின் வருங்காலத் தேவையை முன்னீட்டு, அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியான சுமார் 13,000 கோடியை அவர்களுக்கு உரிய காலத்தில் தராமல் பல்லாண்டுகளாக இழுத்தடித்து வருகின்றனர்! இதனால் ஓய்வு பெற்ற, மரணமடைந்த ஊழியர்களின் ஓய்வு கால மற்றும் பணிக்கால பணபலன்கள் மிகவும் காலம் தாழ்த்தப்படுகின்றன.

சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தான் ஓய்வூதியர்களுக்கு பல்லாண்டு காலமாக அகவிலைப்படியை நிறுத்தி வைத்தனர்…என்றால், இந்த ஆட்சியிலும் அந்த அவலம் தொடர்கிறது. நியாயப்படி ஊதிய உயர்வு ஒப்பந்தங்களின் போது ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் படி குறைந்தபட்ச ஓய்வூதியம்  ரூ 7850/- மாற்றி அமைக்க வேண்டும் என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினசரி வண்டிகள் ஓடுகின்றன எனும் போது, அவற்றை இயக்க ஒப்பந்த முறையில் தொழிலாளர்கள் நியமனம் ஏன்? குறைந்த ஊதியத்தை கொடுக்கவே உரிமைகளற்ற ஒப்பந்த கூலிகளாக தொழிலாளர்கள் வேலை வாங்கப்படுகின்றனர்! இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

இதைத் தவிர காலி பணியிடங்கள் ஏராளமானவை நிரப்பப்படாததால் போக்குவரத்து கழகங்கள் பணியாளர்கள் பற்றாக்குறையால் திணறுகின்றன. இதனால் ஓடிக் கொண்டிருந்த 4,000 பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைக்கப்பட்டுள்ளன.!

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு புதிய ஊதிய ஒப்பந்தம் 2023 செப்டம்பர் 1 முதல் உருவாக வேண்டும்.

ஓய்வூதியம் என்பது வயதான காலத்தில் வாழ்க்கையின் ஆதராமாக திகழ்வதாகும். அந்த பழைய ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுவிட்டது. 2003-ம் ஆண்டிற்கு பின்னர் பணிகள் சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் அல்லறுகின்றன. எனவே, அவர்களை பழைய ஓய்வூதிய  திட்டத்தில் இணைத்திட வேண்டும்.

சமீப காலமாக  ஓட்டுனர் நடத்துனர்கள் மீது சமூக விரோதிகள் தாக்கப்படும் சம்பவங்கள்  தொடர்கதையாக உள்ளன. யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் ஓட்டுனர், நடத்துனர்களை தாக்கிக் செல்லக் கூடிய நிலையில் சூழல்கள் உள்ளன! எனவே, அரசு மற்றும் காவல்துறை இதில் உறுதியான நடவடிக்கை மேற்கொண்டு  உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்.

மேற்சொன்ன கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு 19-12-2023 வேலை நிறுத்த அறிவிப்பு வழங்கி உள்ளது.

டிசம்பர் 4, 5 தேதிகளில், தமிழகம் முழுவதும் உள்ள பணிமனைகளில் ஓய்வூதியர் தொழிலாளர் சங்கமம் நிகழ்வு நடைபெற்றது.  அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 30, 31 ஜனவரி 2 ஆகிய தேதிகளில் மக்கள் சந்திப்பு இயக்கமும் நடைபெறும் என அறிவித்துள்ளனர். அரசுக்கும் நிர்வாகங்களுக்கும்   கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் மீது பேச்சுவார்த்தை நடத்தி  எவ்வித தீர்வும் காண முன்வராத நிலையில் 05-01-2024 அன்றோ அதற்குப் பின்னரோ வேலை நிறுத்தம் மேற்கொள்வது  என முடிவு செய்துள்ளனர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time