வீரிய விஜயகாந்தும், விரோத ஊடகங்களும்!

-சாவித்திரி கண்ணன்

விஜயகாந்துக்கும், ஊடகங்களுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமே! ஸ்டார் நடிகராகவோ, முக்கிய அரசியல்வாதியாகவோ  அவர் கொண்டாடப்பட்டதில்லை! உயிரோடு இருந்த போது ஊடகங்களிடம் அதிகம் அவமானப்பட்ட விஜயகாந்த், இறந்த பிறகு அதே ஊடகங்களால் அடைந்த முக்கியத்துவத்தை சற்று அலசுவோம்;

விஜயகாந்த் இறந்த பிறகு அவர் மீது மக்கள் மனதின் ஆழத்தில் புதைந்திருந்த ஒரு ஈர்ப்பும், அன்பும் பீறிட்டு வெளிப்பட்டது! அதைக் கண்ட ஊடகங்கள் அவரை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி இரண்டு நாட்களாக இடையறாது கவரேஜ் செய்துவிட்டனர்! அவர் இறந்தது முதல் உடல் அடக்கம் செய்யும் வரை ஊடகங்களின் பார்வை சற்றும் விலகாமல் அவரது இறந்த உடலை பின் தொடர்ந்து புகழ்ந்த வண்ணம் இருந்தன!

1978 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிக்க வந்தார்! அப்போது அவரது தோற்றம் மதுரைப் பக்கமுள்ள ஒரு சாதாரண கிராமத்து இளைஞரின் தோற்றம். தமிழ் நிலத்திற்கேயான கருத்த தோற்றம் கொண்ட அவரை தூக்கிவிட எந்த ஊடகங்களுமே தயாராக இல்லை. புகழ் பெற்றவர்களாக இருந்த ஸ்ரீதர், பாலச்சந்தர், மகேந்திரன், பிறகு வந்த ஷங்கர் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கடைசி வரை அமையவில்லை. மேலும் தேவர் பிலிம்ஸ், பாலாஜியின் சுஜாதா சினீ ஆர்ட்ஸ், ஆர்.எம்.வியின் சத்யா மூவீஸ் போன்ற புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனங்களின் கவனம் அவர் மீது விழவில்லை.

விஜயகாந்தின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட இயக்குனர்கள் என்றால், இயக்குனர் கே.விஜயன், எஸ்.ஏ.சந்திரசேகர், இராம நாராயணன், சுந்தரராஜன் போன்றோரே! அவருக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது அவரது உற்ற நண்பர் இராவுத்தரே!

விஜயகாந்த் பற்றி ஆரம்ப காலத்தில் ஊடகங்கள் சற்று நெகடிவ்வாகவே எழுதின! ஆனால், அதை பொருட்படுத்தாமல் அவர் தன் கலைப் பயணத்தை தொடர்ந்தார்! அவர் திரைப்பட கல்வி முடித்து வெளியான இளைஞர்களுக்கு இயக்குனர் வாய்ப்பளித்து நடித்தார். உதவி இயக்குனர்களை இயக்குனர்களாக்கி அழகு பார்த்தார்! அந்த வகையில் வந்தவர்களே ஆபாவாணனும், ஆர்.கே.செல்வமணியும்!

ரஜினிகாந்துக்கும், கமலஹாசனுக்கும், கார்த்திக்கிற்கும் கிடைத்த நல்ல ஓபனிங் மற்றும் வரவேற்புகள் விஜயகாந்திற்கு கிடைக்கவில்லை! ரஜினி, கமல் படங்கள் வெளி வருவதற்கு முன்பும், பின்பும் ஊடகங்கள் தரும் அதீத முக்கியத்துவங்கள் விஜயகாந்த் படத்திற்கு கிடைக்காது! மொத்தத்தில் அவரது படங்களை ஊடகங்கள் ஒரு பேசுபடு பொருளாக்க அதிக ஆர்வம் காட்டாது. ஆனால், அதை உடைக்கும் வண்ணம் அவர்களை பேச வைக்கும் வெற்றிப் படங்கள் சிலவற்றை அவர் தந்தார்! அதில் சிவப்பு மல்லி, வைதேகி காத்திருந்தாள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, சின்னக் கவுண்டர், சேதுபதி ஐ.பி.எஸ், ரமணா.. போன்றவை குறிப்பிடத்தக்கன. இதன் பிறகு தான் ஊடகங்கள் தவிர்க்க முடியாமல் விஜயகாந்த்திற்கு முக்கியத்துவம் தந்தன!

விஜயகாந்திடம் இருந்த தமிழ் பற்றும், ஈழப் போராட்ட ஆதரவும் தமிழகத்தின் ஊடகத்தில் இருந்த இந்திய மேலாதிக்க மற்றும் பிராமணப் பார்வைக்கு எதிராக இருந்தது அவரது முக்கியத்துவம் குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணமாகும். அது மட்டுமின்றி, அவர் தனது திராவிட இயக்கப் பற்றையும், கருணாநிதி மீதான மதிப்பையும் மறைக்கவில்லை. தன் பட விழாக்கள் பலவற்றுக்கு கலைஞரை அழைத்து  நடத்தியுள்ளார். கலைஞர் அவருக்கு ‘புரட்சிக் கலைஞர்’ என பட்டம் சூட்டினார். இவை சமூகத் தளத்தில் மிக நுட்பமாக செயல்படும் ‘பார்ப்பன லாபி’க்கு உகந்ததல்ல! அவர்கள் தயவின்றி, அதீத புகழ் வெளிச்சம் கிடைப்பது அரிது! சாதாரணமான, மேம்போக்கான பார்வை கொண்டவர்களுக்கு நான் குறிப்பிடக் கூடியவற்றை புரிந்து கொள்வது சற்றே கடினமாகும்!

அவர் அரசியலுக்கு வந்த பிறகும் கூட, அவரை லேசில் ஊடகங்கள் ஏற்கவில்லை. அதுவும் அவர் ஜெயலலிதாவை எதிர்க்க ஆரம்பித்தவுடன் ஊடகங்கள் அவரை கடுமையாக எதிர்கொண்டன! பதிலுக்கு அவரும் கடுமையாக எதிர் கொண்டார். பக்குவமாகவோ, தந்திரமாகவோ ஊடகங்களை கையாளாகமல் நேர்பட பொங்கி வெடித்தார்! ஜெயலலிதாவிடம் பம்மி பதுங்கும் ஊடகங்கள் விஜயகாந்திடம் மட்டும் கூர் தீட்டிய கத்தி கொண்டு கிழித்துப் பார்த்தன! பதிலுக்கு அவரும் நேர்படவே ”போங்கடா, நீங்களும் உங்க மீடியாவும் தூ.. ” என்றே துப்பிக் கடந்தார்.

இதற்குப் பிறகு அவர் மீது அதிகத் தாக்குதல்களை ஊடகங்கள் செய்த போது, அவற்றை அவர் துளியும் சட்டை செய்யவில்லை. அவருக்கு வாசிப்பு பழக்கம் இல்லாதது ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது. அவரது கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை பணம் கொடுத்து ஜெயலலிதா தூக்கினார். அப்போது ஊடகங்கள் ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை. விலை போனவர்களின் குற்றச்சாட்டிற்கு தான் முக்கியத்துவம் தந்தன.

2016 ஆம் ஆண்டு அவர் மக்கள் நலக் கூட்டணி கண்ட போது அவரை ரொம்பவே பங்கப்படுத்தின ஊடகங்கள்!

இப்படி காலமெல்லாம் ஊடகங்களால் காயப்பட்டவர் தான் விஜயகாந்த். உயிரோடு இருந்த விஜயகாந்தை உதாசீனப்படுத்திய ஊடகங்கள் மக்களிடம் இருந்து எழுந்த மகோன்னத அனுதாபங்களைக் கண்டு உடனே தங்கள் டியூனை மாற்றிக் கொண்டு தானும் சேர்ந்து உணர்ச்சி வெள்ளத்தை கரைபுரளச் செய்து நல்ல டி.ஆர்.பி.ரேட்டிங் செய்து காசு பார்த்துவிட்டன! அவ்வளவு தான்! இனி இத்தோடு விஜயகாந்தை மறந்துவிடுவார்கள்!

உயிரோடு இருந்த விஜயகாந்தை விட, இறந்த விஜயகாந்தே ஊடகங்களுக்கு உவப்பானவராக இருந்தார் என்பதே செய்தியாகும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time