அரசியல் தலைவர்களை முடிக்க, அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் மெல்ல,மெல்ல ஸ்லோ பாய்சன் தருவது அல்லது அவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் பொழுது, அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமலோ அல்லது தவறான சிகிச்சை அளித்தோ முடிப்பது. இந்த வழி முறைகளுக்கும் இந்த மூவரின் சாவுக்கும் என்ன தொடர்பு..?
2016 ல் பிரபல பத்திரிக்கையாளர் NDTV பிரனாயிராய்க்கு விஜயகாந்த் தந்த ஒரு நேர்காணலில்,
”உங்கள் மீது அதிகமாக குடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது”
என்று கேட்கபட்டதற்கு விஜயகாந்த், ”இது ஒரு பழைய குற்றச்சாட்டு. இப்போதெல்லாம் நான் குடிப்பது இல்லை குடிப்பதை நிறுத்தி விட்டேன். ‘நான் குடிக்கின்றேனா என்பதை என் கிட்னி, லிவரை பரிசோதனை செய்துகோங்க.. ‘என்று பலமுறை கூறிவிட்டேன். இப்பொழுது நான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றேன்’’ என்று பதிலளித்தார்.
நன்றாக இருந்த விஜயகாந்த்திற்கு உடல்நிலை எப்படி பாதிக்கப்பட்டது, எங்கு பிரச்சனை ஆரம்பித்தது என்பதை அவருடைய மனைவி பிரேமலதா ஒரு போதும் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.
போன மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டனர். ஆனால், அதை மிகுந்த கோபத்தோடு மறுத்து பிரேமலதா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ‘மருத்துவமனையின் மருத்துவ அறிக்கை பொதுவான ஒன்று’ என்றும், ‘விஜயகாந்த் அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளார்’ என்றும் கூறியிருந்தார். பிறகு சில நாளில் விஜயகாந்த் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்பல்லோவைப் போலவே மியாட் மருத்துவமனை மீதும் பொதுவெளியில் பல சர்சைகளும், விமர்சனங்களும் உள்ளன!
டிசம்பர் 14ஆம் தேதியன்று அவசர அவசரமாக தேமுதிக பொதுக்குழு கூட்டப்பட்டு அங்கு விஜய காந்த்தை சக்கர நாற்காலியில் கொண்டு வந்தார்கள். அவர் நாற்காலியில் இருந்து அடிக்கடி சரிந்தார். கழுத்து கூட சரியாக நிற்கவில்லை. நுரையீரல் பிரச்சினை உள்ள அவருக்கு முகக் கவசம் போட்ட நிலையில், சுவாசிப்பதற்கு மிகுந்த சிரமம் இருந்திருக்கும். இவ்வளவு மோசமான கண்டிஷனில் உள்ள ஒரு நோயாளியை பொதுமேடைக்கு அழைத்து வந்தது கடுமையான விமர்சனம் பெற்றது. அப்போது விஜயகாந்த் முன்னிலையில் பிரேமலதா தேமுதிக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், விஜயகாந்த் தன்னை சுற்றி என்ன நடக்குது என்பதை புரிந்து கொள்ளும் மனநிலையிலோ, உடல் நிலையில இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு, இரண்டே வாரத்தில் விஜயகாந்த் (டிசம்பர் 28) மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மரணம், சசிகலாவின் கணவர் நடராஜன் மரணம், விஜயகாந்த் மரணம் ஆகிய மூன்றுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளதாகத் தெரிகின்றது.
ஜெயலலிதாவை தமிழக அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும், அந்த வெற்றிடத்தில் ஜெயலலிதாவுக்கு மாற்றாக இருக்கக்கூடிய தலைவரையும் தமிழக அரசியல் களத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என மத்திய அதிகார மையத்தில் சிலர் திட்டமிட்டார்களோ, என்னவோ!
அன்றைக்கு கலைஞரும் நோயில் வீழந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு மாற்றாக வரக்கூடிய அரசியல் தலைவர் விஜயகாந்த் மட்டுமே! 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சீர்கேடு அடையத் தொடங்கிய போது அதே காலகட்டத்தில் விஜயகாந்த் உடல்நிலையும் சீர்கெட ஆரம்பித்துவிட்டது என்பதை நாம் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது!
2016 சட்டமன்ற பொது தேர்தலில் பாஜகாவின் உறவை உதறி கம்யூனிஸ்டுகளை உள்ளடக்கிய மூன்றாவது அணிக்கு தலைமை தாங்கிய விஜயகாந்த் மீது மத்திய அதிகார மையம் கோபம் கொண்டிருந்த காலகட்டத்தில் அப்பல்லோவில் ஜெயலலிதா பெற்று வந்தார். அப்போதே பாஜகாவின் கைகளுக்கு போய்விட்டார் ஒ.பி.எஸ். அந்தச் சூழலில், ஒ.பி.எஸ்சை முதல்வராக்க ஒரு நெருக்கடி தரப்பட்டு, ஜெயலிதாவின் அனுமதி பெறாமலே, பெற்றது போல நாடகமாடி ஒ.பி.எஸ் பொறுப்பு முதல்வராக்கப்பட்டார்.
அதாவது, ஜெயலலிதா இலாக்காக்களை பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கி கொடுக்க சிபாரிசு செய்ததாக பொய் கூறி அரசியல் சாசன மோசடியில் ஈடுபட்டு அப்போதைய ஆளுநர் திரு.வித்யாசாகர் ராவ் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் இலாகாக்களை பன்னீர் செல்வத்திற்கு அக்டோபர் 11,2016 அன்று ஒதுக்கி ஆணை பிறப்பித்த போது, அதை எதிர்த்து காட்டமாக அறிக்கை வெளியிட்டவர் விஜயகாந்த் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
விஜயகாந்த்திற்கு என்னதான் உடலில் பிரச்சனை? அவருக்கு என்ன நோய்? என்பது விளங்கப்படாத ஒன்றாகவே இருந்தது. பிரேமலதாவோ, ”விஜயகாந்தின் கட்சியை உடைத்து எம்.எல்.ஏ கள் துரோகம் செய்து போனதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கப்பட்டார்” என்று கூறினர். துணிவு மிக்க மனிதரான விஜயகாந்த், கட்சியை உடைப்பதாலோ, திருமண மண்டபத்தை இடிப்பதாலோ மனம் ஒடிந்து துவண்டு போகக் கூடியவர் அல்ல. உறுதிமிக்கவராகவே அவர் எப்போதும் வெளிப்பட்டு உள்ளார். அவரும் எந்த நேரத்திலும் தான் துரோகத்தால் வீழ்ந்ததாகச் சொல்லவில்லை.
2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக விஷம் வைத்து கொல்வதற்கு முயற்சி நடக்கின்றது என்று ஒரு செய்தி பரவுகிறது. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா சசிகலாவையும் அவருடைய குடும்பத்தாரையும் போயஸ் கார்டனில் இருந்து வெளியேற்றியதும், பின்னர், சசிகலாவை போயஸ் கார்டனுக்கு வரவழைத்ததும் நாம் அறிவோம்.
ஜெயலலிதா இறப்பிலேயே பல மர்மங்கள் இன்னும் அவிழ்க்கப்படாமலேயே உள்ளது. ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையில் உள்ள முரண்பாடுகளையும், குளறுபடிகளையும் சுட்டிக் காட்டுகின்றது. மேலும், அது சம்பந்தமாக சிலர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் அது சிபாரிசு செய்து இருந்தது. ஆனால், எந்த நடவடிக்கையும் இது வரை இல்லை. சிறிய முன்னேற்றம் கூட இல்லை.
ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை படி 2016 செப்டம்பர் 28ஆம் தேதி ஜெயலலிதா உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்ட பின்பு, அவருக்கு செய்த பரிசோதனையில் அவரது இதயத்தில் 11 மில்லி மீட்டர் முதல் 14 மில்லி மீட்டர் வரை ஒரு வெஜிடேஷன் கட்டியும், ஏழு மில்லி மீட்டரில் ஒரு கட்டியும் இருந்ததாக கண்டறியப்படுகிறது. 10 மில்லி மீட்டருக்கு மேல் ஒரு பெரிய கட்டி இதயத்தில் இருந்தால் அதை அறுவை சிகிச்சை மூலம் அப்புறப்படுத்த வேண்டும் அல்லது முடிந்தால் இரண்டு வாரம் முதல் நான்கு வாரத்துக்குள் மருந்தால் குணப்படுத்தலாம். ஆனால், பெரும்பாலும் இப்படிப்பட்ட கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் தான் அப்புறப்படுத்த வேண்டி இருக்கும். ஜெயலலிதா அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யாமல் மருந்து கொடுத்து கட்டியை கரைய வைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
லண்டன் மருத்துவர் டாக்டர் ரிச்சர்ட் பேலே 2016 அக்டோபர் ஒன்றாம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு வந்து ஜெயலலிதாவை பரிசோதித்த பின்பு ஜெயலலிதாவை ஏர் ஆம்புலன்ஸ் மூலம் லண்டன் அழைத்துச் சென்று அங்கு சிறந்த மருத்துவர் சிகிச்சை அளிப்பதற்கு வழி செய்வதாக கூறினார். எனினும், அப்போலோ மருத்துவர்கள் செல்வி ஜெயலலிதா அவர்களை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று மருத்துவ சிகிச்சை அளிப்பதை நிராகரித்து தடுத்து விட்டனர்.
இப்படிப்பட்டஒரு நோயாளிக்கான சிகிச்சை கார்டியோதெராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் தலைமையில் அடங்கிய ஒரு மருத்துவ குழு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது மருத்துவ நடைமுறை விதி. ஆனால், அப்படிப்பட்ட மருத்துவ சிகிச்சை அளிக்க அப்போலோ மருத்துவமனை ஏற்பாடு செய்யவில்லை. மற்றவர்களையும் அனுமதிக்கவில்லை. மேலும், தமிழ்நாடு அரசு சார்பாக நியமிக்கப்பட்ட ஐந்து மருத்துவ நிபுணர்கள் அடங்கிய அரசு மருத்துவ நிபுணர்கள் குழுவைக் கூட, ஜெயலலிதாவை பார்ப்பதற்கோ சிகிச்சை அளிப்பதற்கோ அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதா அவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அவருக்கு மரணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு நோக்கில் அப்போலோ மருத்துவமனை தன்னிச்சையாக செயல்பட்டு இருக்க முடியாது. செல்வி ஜெயலலிதா அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற ஒரு சதி தான் இதற்கு பின்புலமாக இருந்திருக்க வேண்டும். இந்த சதி திட்டத்தை அப்போலோ மருத்துவமனை மூலமாக நிறைவேற்றி இருக்கலாம். ஜெயலலிதாவை தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால், அங்கு ஏற்படும் வெற்றிடத்தை நிரப்பக்கூடியவர்கள் யார் அதிமுகவில்? அப்படிப்பட்ட ஒரு சக்தியாக விளங்கிய சசிகலா முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பு அவரை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் பெங்களூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.
அடுத்ததாக அதிமுக வட்டாரத்தில் அத்தகைய ஒரு சக்தி வாய்ந்த நபர் சசிகலாவின் கணவர் நடராஜன் ஆவார். செல்வி ஜெயலலிதா இறந்த போது நடராஜன்நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தார். சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடி, சூழ்நிலையை நிர்வாகித்து கொண்டிருந்தார். நடராஜனை ஜெயலலிதா இறந்த அன்று ராகுல் காந்தி அவர்களிடம் திருநாவுக்கரசு அறிமுகப்படுத்தினார். பாஜக தலைவர் இலா கணேசனோ நடராஜனை பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிமுகப்படுத்தினார். ஆனால், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நடராஜன் பிப்ரவரி 2017 இல் மூச்சு திணறல் ஏற்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் உடல் தேறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் அடுத்தடுத்து அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு அக்டோபர் 2017 இல் அவருக்கு கிட்னி மற்றும் கல்லீரல் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. தானமாக பெறப்பட்ட கிட்னி மற்றும் கல்லீரலால் உயிர் வாழ்ந்த நடராஜன் 2018 மார்ச்சில் மரணமடைந்தார்.
ஜெயலலிதா இறப்பிற்குப் பின்பு அதிமுகவை கட்டி காக்கக் கூடிய இரண்டு நபர்களில், சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டார். நடராஜன் இறந்து போனார். ஜெயலலிதாவின் வெற்றிடத்தை அதிமுக சாராத ஒரு தலைவர் நிரப்புவார் என்றால், அது விஜயகாந்த் தான்!
Also read
ஆனால், ஜெயலலிதாவுக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்ட அதே காலகட்டத்தில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த விஜயகாந்த்துக்கும் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வெளியில் தெரியாத கண்டு பிடிக்க முடிய ஏதோ ஒரு நோயால், அவர் பாதிக்கப்பட்டு படிப்படியாக உடல்நிலை மோசம் அடைந்து 28 டிசம்பர் 2023 ஆம் அன்று மரணம் அடைந்தார்.
ஜெயலலிதா மரணம், நடராஜன் மரணம், விஜயகாந்த் மரணம் என மூன்று மரணங்களும் இயற்கையாக தான் நடந்ததா? ஏதோ சில அரசியல் காய் நகர்த்தல்கள் இதில் இருக்கலாமோ.. என்ற சந்தேகங்கள் வருகின்றன! இதனால் எங்கேயோ இடிக்கின்றது என்று மட்டும் நம்மால் உணர முடிகிறது. யாரையும் குற்றம் சாட்டுவது நம் நோக்கமல்ல. ஆனால், இப்படியான ஒரு சந்தேகத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை. ஆகவே, வெளிப்படுத்தி உள்ளேன்.
கட்டுரையாளர்; பா.பாலமுருகன், ஐ.ஆர்.எஸ்
கதை அருமையாக இருந்தது. எதற்கும் பிரேம லதா மீது ஒரு கண் வைத்து கொள்ளுங்கள்.
கட்டுரை உண்மை ! உண்மை ஒருநாள் வெளியில் வரும் !
இந்த கருத்தை நான் நண்பர்களுடன் விவாதித்துள்ளேன். ஆனால் அதில் நடராஜன் சேர்க்கப்படவில்லை. காடுவெட்டி குருவின் மரணத்திலும் எனக்கு சந்தேகம் உள்ளது
கட்டுரை அருமை….நிகழ்வுகளின் time line யோசிக்க வைக்கிறது..!
marmam mele marmamaaka ullathu avizhkka mudiyaatha mudichchukal
Natarajan… Good joke…