விவசாயிகள் பெருமளவில் கடனை திருப்பிச் செலுத்துகிறார்கள் – வங்கி ஊழியர் சங்கத்தலைவர் சி. எச். வெங்கடாச்சலம்

-பீட்டர் துரைராஜ்

வங்கிகளில் வேலைநிறுத்தம் நடைபெறுவது வழக்கம்தான்; ஆனால் இந்த முறை வித்தியாசமான காரணத்திற்காக நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் உள்ள ஒரு இலட்சம் வங்கிக் கிளைகளில், காலியாக உள்ள ஒன்றரை இலட்சம் பணியிடங்களை நிரப்பக்கோரி அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது என்கிறார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவரான சி.எச். வெங்கடாச்சலம்.

கேள்வி : தமிழக அரசு வெள்ள நிவாரணத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் !

பதில் : வெள்ளத்தால் சில வங்கிகள் கூட செயலிழந்து விட்டன. பேரிடர் காலங்களில், நிலைகுலைந்துபோன மக்களுக்கு உடனடியாக நிவாரணம் தேவை என்ற சூழல்களில் பணத்தை ரொக்கமாகத் தருவது தவறல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டரில் உணவுப் பொட்டலங்களை வீசி எறிவார்கள். அவர்களிடம் போய் ஏன் மரியாதையாக கையில் உணவைத் தந்தால் என்ன என்று யாரும் கேட்பதில்லை. அதுபோலத்தான் பேரிடர் காலங்களில் கட்டுப்பாடுகள் தேவையற்றவை. சாதாரண மக்களுக்கு ‘ஜந்தன் யோஜனா’ என்று சொல்லக்கூடிய வங்கிக் கணக்குகள் ஐம்பது கோடி பேருக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 99 சதம் ஜந்தன் யோஜனா கணக்குகளை ஆரம்பித்தது பொதுத்துறை வங்கிகள்தான். ஒரு சதம் கணக்குகள்தான் தனியார் வங்கிகளில் ஆரம்பிக்கப்பட்டன. அப்படியானால் சாதாரண மக்களுக்கு யார் சேவை செய்கிறார்கள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்ட கணக்குகளில் குறைந்த பட்ச இருப்பு இல்லையென்று வங்கிகள் அபராதத்தொகை போடுகின்றன. அபராதத்தொகையைத் தொடர்ந்து போட்டு பணம் காலியானதும் வங்கிக் கணக்கை வங்கிகள் இரத்து செய்துவிடுகின்றன. இது கூடாது எனச் சொல்கிறோம். வங்கிக் கணக்கு என்பது ஓர் ‘அடிப்படை உரிமையாக’ வேண்டும் என்று நாங்கள் வெகு ஆண்டுகளாக கூறி வருகிறோம். ஒன்றிய அரசின் எல்லா திட்டங்களுக்கும் நிதி வங்கிக் கணக்கில்தான் போடப்படுகிறது.

கேள்வி: எந்த மாநிலத்தில் வங்கிகள் சிறப்பாக செயல்படுவதாக நினைக்கிறீர்கள் ?

பதில்: அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியில்தான் ஒட்டுமொத்த ஒன்றிய அரசின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. ஒருசில மாநிலங்கள் நன்கு வளர்ச்சி அடைந்திருப்பதும், மற்ற மாநிலங்கள் பின்தங்கி இருப்பதும் நல்லதல்ல. பின்தங்கிய மாநிலங்களுக்கு கூடுதல் கடன் திட்டங்களை தந்தால் சீரான வளர்ச்சி இருக்கும். ஒரிசா, ஜார்கண்ட், பீகார், மத்தியப் பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் கொடுக்கப்படும் கடன், அங்குள்ள வங்கிகளின் வைப்புத்தொகையை விட குறைவு. இது நல்லதல்ல. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்களில் வைப்புத் தொகையை விட கடன் அதிகமாகத் தருகிறார்கள். தமிழ்நாட்டில் நூறு கோடி வைப்புத்தொகை இருந்தால், 110 கோடி கடனாகத் தருகிறார்கள். ஆனால் பின்தங்கிய மாநிலங்களுக்கு நூறு கோடி வைப்புத்தொகை இருந்தால் 30 கோடி, 40 கோடிதான் கடனாகத் தருகிறார்கள். இதனை அதிகரிக்கச் செய்ய வேண்டும். இதனை கடன் – வைப்பு விகிதம் (Credit Deposit Ratio) என்று கூறுவார்கள். இதற்கு ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் ஆவன செய்ய வேண்டும். மத்தியப் பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒரிசா மாநிலங்களில் கனிமவளம் அதிகம். ஆனால் தொழிற்சாலைகள் குறைவு. மலைவாழ் மக்களும் அதிகமாக உள்ளனர். எனவே இது போன்ற பகுதிகளில் வங்கித்துறை சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயமுத்தூர் போன்ற நகரங்களில் வங்கிச் சேவை நன்றாக உள்ளது. கிராமப்புற சேவையை அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் சுயவேலைப்பு, குடிசைத் தொழில், விவசாயம், சிறுதொழில் போன்றவை சிறக்கும்.

கேள்வி : விவசாயிகள் கடன் பற்றி ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா !

பதில் : விவசாயம், சிறுதொழில், தனிநபர் கடன், பெருநிறுவனங்களுக்கு என வங்கிகள் பலவகையான கடன்களை வழங்குகின்றன. மழை, தரிசுநிலம், மின்சார வசதி என பல நியாயமான இடர்பாடுகள் விவசாயிகளுக்கு உள்ளன. ஆனால் பெருமளவில் விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்திவிடுகிறார்கள். பெருமுதலாளிகள் வாராக்கடன் என்ற பெயரில் வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்துவதில்லை. பெரிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் அங்கு உருவாகும் வேலைவாய்ப்பு குறைவு. சிறுதொழில் நிறுவனங்கள் பெருமளவில் வேலைவாய்ப்பைத் தருபவை. பெரிய தொழில்களை சார்ந்து இருப்பவை. இதற்குச் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும். கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் வேலை கிடைத்தால் ஏன் செலுத்தாமல் இருக்கப்போகிறார்கள் ?

கேள்வி: வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக்கோரி வேலை நிறுத்தம் செய்ய அறிவிப்பு கொடுத்து இருக்கிறீர்களே !

பதில்: இந்தியாவில் படித்த இளைஞர்கள் அதிகம் பேர் உள்ளனர். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நன்றாக உள்ளது என்று சொன்னால், சராசரி மக்களின் வளர்ச்சியும் நன்றாக இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக வேண்டும். வருமானம் அதிகரிக்க அதிகரிக்க விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும். 4 சதம் ஜிடிபி அதிகரிக்கிறது என்று சொன்னால் அதில் ஐம்பது சதவீதம் அதாவது 2 சதம் வேலைவாய்ப்பு உருவாக வேண்டும். டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி என்று பேசுகிறார்கள்; ஆனால் வேலைவாய்ப்பு உருவாகிறதா ! வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வேலையை தனியார் செய்வதில்லை.

இந்தியாவில் 15 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. ஒரு இலட்சம் வங்கிக் கிளைகள் உள்ளன. 15,000 மக்களுக்கு ஒரு கிளை வீதம் உள்ளது. 1970 களில் இருந்து 2000 வரை ஆண்டுக்கு 60,000 ஆட்களை வங்கிகள் நியமனம் செய்து வந்தன. ஆனால் இப்போது வருடத்திற்கு 5000 பேர் மட்டுமே நியமனம் செய்யப்படுகிறார்கள். இதில் எழுத்தர், கடைநிலை ஊழியர் என 1,50,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப வலியுறுத்தி வேலைநிறுத்த அறிவிப்புக் கொடுத்தோம். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து மோடி ஆட்சிக்கு வந்தார். மத்திய தொழிலாளர் ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பத்து ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை இருவர் செய்கிறார். இதனால் சேவையில் குறைபாடு ஏற்படுகிறது. மக்களிடம் அதிருப்தி ஏற்படுகிறது. இதனைக் காரணம் காட்டி வங்கிகளை தனியாருக்கு கொடுக்கலாம் எனப் பேசுகிறார்கள். நிரந்தர ஊழியர் செய்ய வேண்டிய வேலைகளை, குறைவான சம்பளத்திற்கு ஒப்பந்த முறையில் வாங்குகிறார்கள் இதனை எதிர்த்துதான் வேலைநிறுத்தம். எங்களால் செய்யமுடியாத தகவல் தொழில்நுட்ப பணி போன்ற வேலைகளை தனியாருக்கு கொடுப்பதில் தவறில்லை. ஆனால் நிரந்தரமாக, சாதாரணமாக, அன்றாடம் செய்யப்படும் வேலைகளை வங்கி ஊழியர்கள்தான் செய்ய வேண்டும் என்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ள வைத்துள்ளோம். ஒரு கிளைக்கு எத்தனை பணியிடங்கள் என்பதற்கான சூத்திரம் குறித்து பேசி வருகிறோம். கிளையில் இருக்கும் வைப்புத்தொகை, கடன் தொகை, அன்றாடம் வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை, வாடிக்கையாளர் எடுத்துக்கொள்ளும் சராசரி நேரம் இவைகளின் அடிப்படையில் பணிநியமனம் குறித்துப் பேசி வருகிறோம். நகரங்களில் வாடிக்கையாளர் எடுத்துக்கொள்ளும் நேரம் குறைவு. ஆனால் கிராமங்களில் அவர்களுக்குத் திட்டங்களை விளக்க வேண்டும். சாதாரண மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். எனவே அங்கு சராசரி நேரம் அதிகம். பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜனவரி 19, 20 வேலைநிறுத்தம், பேச்சுவார்த்தையைப் பொறுத்து அமையும்.

கேள்வி : வைப்புத்தொகைகளுக்கு வட்டியை அதிகரிக்க வேண்டும் என்று கோரி வருகிறீர்களே என்ன காரணம் !

பதில் : மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு, வேலைவாய்ப்பு அதிகரிக்க, தொழில் உருவாக மூலதனம் தேவை. வரி, வெளிநாட்டு, உள்நாட்டுக் கடன் மூலமாக அரசு மூலதனத்தை திரட்டுகிறது. இதில் மக்களின் சேமிப்பு பெருமளவில் உள்ளது. ஏற்கனவே கடனுக்கான வட்டி 13 சதமாக இருந்தது. பின்னர் 12,11, என படிப்படியாக குறைந்து இப்போது ஆறு சதம் வட்டியை வங்கித் தருகிறது. வட்டி குறைவதால் மக்கள் அதிக வட்டி என்ற விளம்பரத்தை நம்பி தனியாரிடம் பணம் முதலீடு செய்து ஏமாறுகிறார்கள். இது நல்லதல்ல. மக்களின் சேமிப்பிற்கு வட்டியை உயர்த்தினால் அவர்கள் பணம் பாதுகாப்பாகவும் இருக்கும். வங்கிகளில் சேமிப்பும் அதிகரிக்கும். அது நாட்டு வளர்ச்சிக்கும் பயன்படும். செலவைக் குறைப்பது என்ற பெயரில் வட்டி வீதத்தை குறைப்பதை எதிர்க்கிறோம். பற்றாக்குறை பட்ஜெட்டை கூட ஏற்றுக்கொள்ளலாம். வரவைவிட செலவு அதிகரித்தால் தவறில்லை. இதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். சேமிப்புக் கணக்கிற்கும் வட்டியை அதிகரிக்க வேண்டும்.

Venkatesan
சி. எச். வெங்கடாச்சலம்

(வங்கி ஊழியர் சங்கத்தலைவர்)

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time