மாதிரிப் பள்ளிகள் என்பதாக மோடியின் (பிரதமர் ஸ்ரீ பள்ளிகள்) கல்வித் திட்டத்தை தமிழக அரசு செயற்படுத்துகிறது! தேசிய கல்விக் கொள்கையின் அம்சமாக அரசுப் பள்ளி மாணவர்களை பிரித்தாளும் சூழ்ச்சியே இது! அரசு பள்ளி மாணவர்களிடையே பாரதூரமான ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகிறார்கள்..!
மாதிரி பள்ளிகள் திட்டத்தை கடந்த ஆண்டு 2022 செப்டம்பர் மாதம் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஊடக செய்தியாக வெளியிட்டார். இந்தியாவில் தற்போது மாதிரி பள்ளிகள் என்பதாக 6,000 பள்ளிகள் ‘பிஎம் ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா’ (PMSHRI) திட்டத்தின் கீழ் நடைபெறுகின்றன!
இதை ‘பிரதமர் மோடியின் கல்வித் திட்டம்’ என அறிவித்தால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால், நமது தமிழக முதல்வர் டெல்லியைப் போல மாதிரிப் பள்ளிகளை உருவாக்கப் போவதாகக் கூறி, டெல்லி சென்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்து பிறகு அவரையே அழைத்து செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தன்று இந்த திட்டத்தை தொடங்கியதாக உணர முடிகிறது.
சமச்சீர் கல்வியை 2010 இல் அறிமுகப்படுத்தியது திமுக அரசு தான். 2006 இல் சட்ட மன்றத் தேர்தல் அறிக்கையில் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர் கல்வி கொண்டு வர திமுக அறிவித்திருந்தது . தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து முனைவர் எஸ்.முத்துக்குமரன் கமிட்டி ஆய்வறிக்கையின் அடிப்படையில் 2010 இல் தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக் கல்வி முறைச் சட்டம் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது.
2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வியானது மாநில அரசுக் கல்வி , மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என 4 வகையான கல்வி அமைப்புகளால் மாணவர்களிடையே உருவாகும் ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்க்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் , அந்த அடிப்படை நோக்கத்தையே சிதைப்பதாக இருக்கிறது இந்த மாதிரிப் பள்ளிகள் என்ற கருத்துரு! அரசுப் பள்ளி மாணவர்களிடமே ஏற்றத் தாழ்வுகளை விதைப்பதாக உருவாகி வருகின்றன, மாதிரிப் பள்ளிகள் .
மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என ஆரம்பித்து அங்கு 9-12 வகுப்புகள் பயிலும் மாணவர்களில் மிகச் சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து பல லட்சங்களில் செலவு செய்து, உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாதிரிப் பள்ளிகள் இயங்குகின்றன.
ஏற்கனவே நமது மாநிலத்தில் பல்வேறு இடங்களில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை மாநிலத் தலைமையிடத்திலிருந்து EMIS போர்ட்டல் வழியாகத் தேர்வு செய்து மாதிரிப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.
இட ஒதுக்கீட்டு முறையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு , வகுப்பிற்கு 40 மாணவர்கள் என்று வரையறை செய்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமித்து, திட்டமிடலுடன் மாதிரிப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் அரசுப் பள்ளிகளில் உள்ள சிறந்த ஆசிரியர்களை தூக்கி மாதிரிப் பள்ளிகளுக்கு போட்டுவிடுகின்றனர். அதே போல நன்றாகப் படிக்கும் மாணவர்களை எங்கிங்கிருந்தோ தூக்கி வந்து மாதிரி பள்ளியில் படிக்க நிர்பந்திக்கிறார்கள்!
ஒரு வகையில் பார்த்தால் மாதிரிப் பள்ளிகள் என்பவை பொதுப் பள்ளி அமைப்பையும், அருகமைப் பள்ளி முறையையும் நலிவடையச் செய்யும் மாற்று முறையாகவும் உருவாகி வருகிறது. சமூகத்தில் கல்வி குறித்த உரையாடல் நிகழ்த்தும் கல்வியாளர்கள் பொதுப் பள்ளி முறையையும், அருகமைப் பள்ளி முறையையும் தான் முன்வைக்கின்றனர். ஆனால், சமூக மாற்றத்திற்கு உதவும் அந்த இந்த அருகமைப் பள்ளி பொதுப்பள்ளி தத்துவத்தையே சிதைக்கும் வேலையைத் தான் மாதிரிப் பள்ளிகள் உருவாக்குகின்றன.
காலியான அந்த பணி இடத்திற்கு புதிய ஆசிரியர் நியமனமும் தாமதமாகி படிப்பே சீர்குலைகிறது. மிகச் சிறந்த ஆசிரியர்கள் பரவலாக அங்குமிங்கும் கற்பிக்கும் நிலைமையை மாற்றி, ”சிறந்த ஆசிரியரா? அவரை தூக்கி உடனே மாதிரி பள்ளிக்கு போடு” என்றால், ‘மற்ற மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் ஏற்படும் இழப்புகள் பொருட்டல்ல’ என்றாகிவிடுகிறது.
இதனால், ஏற்படும் காலி பணியிடத்தில் பள்ளி மேலாண்மைக் குழுவின் வழியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் போக்கு நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இது ஏற்புடையதா ? சமச்சீர் கல்விக்கு இது தான் பொருளா? என்பதை அரசு சிந்திக்க வேண்டும். முதல்வர் பேசுவது சமூக நீதி, சமத்துவம்! ஆனால், நடைமுறையோ தலைகீழாக உள்ளது.
இந்த மாதிரிப் பள்ளி மாணவர்களை நாட்டின் முதன்மை உயர் கல்வி நிலையங்களான அரசு மருத்துவ கல்லூரிகள், உயர்தர பொறியியல் கல்லூரிகள், ஐஐடி , என் ஐ எப்டிஎன்எல்யு போன்ற கல்வி நிலையங்களுக்கு அனுப்பும் விதமாக கல்வி பயின்றிட NEET, JEE, CLAT, NIFT போன்ற நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற, சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு தயார் படுத்துகிறார்கள்! இதற்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் வகையில், மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 225 மாணவர்கள் இந்தஆண்டு இத் திட்டத்தில் உயர்கல்வி பயில சேர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. பல லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் தேர்வு எழுதும் அரசுப் பள்ளிகளிலிருந்து வெறும் 225 மாணவர்கள் மட்டுமே, இந்த அரிய உயர் கல்வி வாய்ப்பைப் பெறுகின்றனர் என்றால், கல்வியின் சமூகப் பார்வை எப்படி இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
ஏறக்குறைய 38,000 அரசுப் பள்ளிகள் உள்ள தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒன்று என 38 பள்ளிகளை மட்டுமே மாதிரிப் பள்ளிகளாக மாற்றுவதும், அங்குள்ள குழந்தைகளுக்கு மட்டும் வாய்ப்புகளை உருவாக்குவதும், சம வாய்ப்பு என்ற சொல்லுக்கான பொருளாக இல்லை என்பதை ஏன் அரசு உணர வில்லை…?
எல்லாவற்றிலும் வேறுபாடு, மாணவர் எண்ணிக்கை, உணவு, வகுப்பறை வசதிகள், தேர்வு முறை, கல்வி இணைச் செயல்பாடுகளை வழங்குதல் என எல்லாவற்றிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும், மாதிரிப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இடையே, மலைக்கும் மடுவுக்கும் இடையே உள்ள வேறுபாடு எனில், தமிழ்நாடு அரசு சமச்சீர் கல்வியை வழங்குகிறது என எப்படி நாம் கூற முடியும் ?
ஏற்கனவே, மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 இன் பல கூறுகளை வேறு வேறு பெயர்களில் தமிழ்நாடு அரசு நடைமுறைப் படுத்தி வருகிறது.
இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன், இணைய வழிக் கல்வி, போட்டித் தேர்வுகள், எமிஸ் முறை என சகலமும் பாஜக அரசின் சனாதனக் கல்வி திட்டத்தை வெவ்வேறு பெயர்களில் அமல்படுத்தப்படும் வழிமுறைகளே! இதனால், சமூக, அரசியல் தளங்களில் எதிர்ப்புகள் வலுப்பதும் நடக்கிறது. இவை யாவுமே மிகப் பெரிய ஏற்றத் தாழ்வுகளை கல்வி அமைப்பில் உருவாக்கும் சம வாய்ப்பற்ற செயல் திட்டங்களாகும்.
ஒருபுறம், உயர்தர பள்ளிக் கட்டிடங்கள், ஹைடெக் லேப் , ஸ்மார்ட் கிளாஸ் ரூம், அழகான அமர்வு நாற்காலிகள், பெஞ்சுகள், நவீன கணினிகள், அதிநவீன அறிவியல் ஆய்வகங்கள், ஒருங்கிணைந்த நூலகம், சோலார் விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள், வகுப்பறையில் கண்ணாடி இழைகளாலான கரும்பலகைகள், நவீன வசதியுடன் விளையாட்டுத் திடல், நுண்கலைத் திறன்களை வளர்ப்பதற்கான வசதிகள், கலை, இலக்கியம் என்று அனைத்தும் சேர்ந்த ஒரு முழுமையான கல்வியை வழங்கும் உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட மாதிரிப் பள்ளிகள்!
மறுபுறமோ.., பாழடைந்த கட்டிடங்கள், மரத்தடி வகுப்பறைகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை , வகுப்பறைகள் போதாமை, ஒரு வகுப்பில் 60 / 70 எண்ணிக்கையில் மாணவர்கள், எல்லாக் குழந்தைகளுக்கும் காலை உணவு இல்லாமை, தற்காலிக ஆசிரியர்கள் வைத்து சமாளிப்பது, கழிப்பறை வசதி கூட இல்லாமை , துப்புரவுப் பணியாளர் நியமனம் இல்லாத அவலமான சுகாதாரச் சூழல்… உள்ளிட்ட பல பிரச்சனைகள் கொண்ட சாதாரண அரசுப் பள்ளிகள்!
ஒருபக்கம், அரசுப் பள்ளிகளுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய மறுக்கிறார்கள்! ஆனால், மறுபுறம் மாத வாடகை 4 லட்ச ரூபாய் தந்து தனியார் கல்லூரி வளாகத்தில் எல்லா வசதிகளுடன் கூடிய மாதிரிப் பள்ளிகளை செயல்படுத்துகிறார்கள். இது அரசு பள்ளிகளை படிப்படியாக செயலிழக்க வைப்பதாகும். 11 கோடி மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளை முற்றிலும் அலட்சியப்படுத்திவிட்டு, அதில் வெறும் 30,000 மாணவர்களுக்கு மட்டும் உயர்கல்வித் தரத்தில் கல்வி வழங்குவது என்பது என்ன மாதிரியான அணுகுமுறை? ‘ஆயிரத்தில் ஒருவர் படித்து முன்னேறினால் போதும்’ என்பது தானே சனாதனக் கொள்கை. ஆயிரம் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு கோடியில் செலவு செய்வதும், மற்ற 999 பள்ளிகளை மாற்றாந்தாய் குழந்தையாய் பாவிப்பதும் சமச்சீர் கல்வியா ?
Also read
ஆகவே, நமது மாநில அரசு எல்லோருக்கும் எல்லாம் , சம வாய்ப்பு என்ற தனது கொள்கையை நிலைநாட்டும் வகையில் எல்லாப் பள்ளிகளுக்கும் தரமான கல்வியை உறுதி செய்யும் பணியை முன்னெடுத்து, இந்த மாதிரிப் பள்ளிகளை கைவிட வேண்டும் . மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கம் நடந்து இன்னும் வெளிவராத சூழலில், மத்திய அரசின் எல்லாத் திட்டங்களையும் செயல்படுத்துவது அடித்தட்டு மக்களுக்கு செய்யும் துரோகமே அன்றி, வேறில்லை.
அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் சமமான கல்வி வாய்ப்பு வேண்டும். ‘நன்றாகப் படிப்பவர்கள் மட்டும் படித்து முன்னேறி, உயர் நிலைக்கு வந்தால் போதும்’ என்பது நியாயமல்ல. ஏனென்றால், அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் இடத்தில் தான் பின் தங்கிய மாணவர்கள் கூட திடீரென பிரகாசிப்பார்கள்! குழந்தைகளுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல் சரியான சூழல்கள் வாய்க்கும் போது, சற்றென வெளிவரும். ‘இவர்களுக்கெல்லாம் சரியாக படிப்பு வராது’ என நாம் முன்கூட்டியே தீர்மானித்து வாய்ப்புகளையே மறுக்கக் கூடாது! ஒரு சிலருக்கு மாத்திரமான ‘மாதிரிப் பள்ளிகள்’ ஏன்? அனைவருக்குமான ‘ஒரே மாதிரிப் பள்ளியை’ சாத்தியப்படுத்துங்கள்.
இன்று ஜனவரி-3
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் புலேவின் பிறந்த தினம்!
கட்டுரையாளர்; சு.உமாமகேஸ்வரி
கல்வி செயற்பாட்டாளர்.
வேலை வாய்ப்புடன் இணைக்கப்பட்ட கல்வித்திட்டம்
ஆண்டுக்கு ஆண்டு கற்றவர்கள் எண்ணிக்கை
வேலை பெற்றவர்கள் எண்ணிக்கை சமன்படுத்தும் திட்டம்
மனிதவள மேம்பாடு
மற்றும் பயன்பாட்டை சமன் செய்யும் திட்டம்:
ஃ 15 வயது வரை பத்தாம் வகுப்பு வரை
அனைவருக்குமான பொது அறிவு பள்ளிக்கல்வி.,
ஃ 16 முதல் 20 வயது வரை
வேலை சார்ந்த துறை வாரியான கல்லூரி பட்டப்படிப்பு .
ஃ 20 வயதுக்கு மேல் 25 வரை கல்லூரி பட்டப்படிப்பு அடிப்படையில் மேல்படிப்பு
ஆராய்ச்சிக் கல்வி திட்டம்.
ஃ ஒரு மாணவர் எந்த பாடத்தில் கவனம் அதிகம் செலுத்துகிறாரோ அந்த பாடம் சம்பந்தமான கல்வியில் அவர் முன்னேறுவார் என்ற அடிப்படை அறிவு அறிந்து அதற்கு தக்கவாறான கல்வி சூழலை மாணவருக்கு உருவாக்கும் கல்வி திட்டம்.
ஃ 15 வயது வரை – பத்தாம் வகுப்பு பள்ளிக்கூட கல்வி வரை கல்வி பற்றி மனச்சோர்வு, தேர்வு பயம் இல்லாத, கற்றல் உற்சாக மூட்டும் மொழி, கணக்கு, மற்றும் அனைத்துப் பாடங்களிலும் உலகளாவிய பொதுஅறிவு பெறும் கல்வித்திட்டம்.
ஃ மேற்கொண்டு பட்டப்படிப்பு படிக்கு ஆர்வம் இல்லாதவர்களுக்கு அந்த அளவிலே உரிய வேலை வாய்ப்பு வழங்குதல்.
ஃ பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் கல்லூரி படிப்பு படிக்க விரும்புபவர் அனைவருக்கும் தகுதி மற்றும் சமூகநீதி அடிப்படையில் அவரவர் விருப்பப்படி நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்பு எண்ணிக்கைக்கு உட்பட்டு வேலைவாய்ப்பை உறுதிசெய்யும்
ஐந்து ஆண்டு – இருபது வயது வரை
வேலைவாய்ப்பு பட்டப்படிப்பு;
( மருத்துவம், சட்டம், நிர்வாகம், வணிகம், பொறியியல் போன்று வேலைவாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்பு) (கழிவகற்றும் தூய்மைப் பணி, பொறியியல் சார்ந்த படிப்பு) (ஒவ்வொரு வேலை வாய்ப்புக்கும் உரிய பட்டப்படிப்பு நிர்ணயம் செய்தல் எல்லா பட்டப் படிப்புக்கு உரிய வேலைகளுக்கு ஒரே சம்பள விகிதம் நிர்ணயம் செய்தல்) (உயர்வு தாழ்வு போட்டியில்லாத வேலைவாய்ப்பு முறை);
ஃ பட்டப்படிப்பு முடிந்தவுடன் அவர்கள் விருப்பப்படி தகுதி மற்றும் சமூகநீதி அடிப்படையில் உதவித்தொகையுடன் கூடிய ஆராய்ச்சி படிப்புக்கு அனுப்புதல். ஆராய்ச்சி முடிக்க இயலாதவர்களை பட்டப்படிப்புக்குரிய வேலை வாய்ப்பை வழங்குதல்.
ஃ மனிதவள பயன்பாட்டிற்கு உரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சி மூலமாக கண்டுபிடிக்கும் மனித வளத்திற்கு மட்டும் திறமையின் அடிப்படையில் திறமையை ஈடுசெய்யும், மதிப்பளிக்கும் ஊதிய முறை.
ஃ பட்ட படிப்பு முடித்த வேலை வாய்ப்புகளுக்கு ஒரே விகித ஊதிய முறை; பத்தாம் வகுப்பு வரை படித்து வேலை செய்பவர்களுக்கு ஒரே ஊதிய முறை என்ற அளவிலே ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
ஃ கல்வி நிறுவனங்கள் பள்ளிக்கல்வி கல்லூரி கல்வி ஆராய்ச்சியை கல்வி நிலையங்கள் எதுவாயினும் அரசாங்கம் மட்டுமே நடத்த வேண்டும்.
எந்த இடத்திலும் தனியா அல்லது சிறப்பு கல்வி நிறுவனங்கள் அனுமதித்தல் கூடாது.
கல்வி நிறுவனங்கள் அளிக்கும் மதிப்பெண்கள் மற்றும் சமூக நீதி அடிப்படையில் உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழங்குதல்
இதுவே சமத்துவ சமூக நீதி அடிப்படையிலான கல்வி வேலைவாய்ப்பு சமன்பாட்டு திட்டமாகும். இது நிறைவேறினால் உண்மையானமக்களாட்சி மலர்ந்ததாகக் கொள்ளலாம்.
“கற்றவர் அனைவரும் உரியகாலத்தில் வேலைவாய்ப்பு பெற்றவராயின் இல்லை பிரச்சனை”
You have done a great job
சிறப்பான பதிவு.
சிறப்பான கட்டுரை. தமிழ் நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை மறைமுகப் பெயரில் அமுல்படுத்துவது. அண்மைப்பள்ளி ,அருகமைப்பள்ளி முறை தேவை.
ஆரம்பக் கல்வியில் குழந்தைகள் இடைநிற்றல் இன்றும் உள்ளது. இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே.
வாய் சொல் வீரனாக , நடப்பது யாது என அறிந்தும் அறியாதது போல் மவுனம் சாதிக்கும் முதல்வர் தான் இன்றைய முதல்வர்.
சனாதனம் வெற்று கூச்சல் மூலம் ஒழித்து விட முடியது. அப்படி வெற்று கூச்சல்கள் தான் இவர்களின் செயல் எனும் போது இப்படிபட்ட செயல்கள்தான் நடக்கும்.
மேலும் மேலும் சம்பாதிக்க வேண்டும், தன் தவறை எவரும் கண்காணிக்கும் மத்திய அரசுக்கு விசுவாச செயல் தான் இன்றைய வாய் சொல் வீரர்களின் ஆட்சி.
மாதிரி பள்ளிகளால் பயம் பெற போவது என ஒரு வகை வகுப்பினர் தான்.
மாதிரி பள்ளி வாயிலாக ஓட்டு மொத்த கல்வி முறையும் வரும் காலத்தில் மத்திய அரசு கட்டுபாட்டுக்கு போகலாம்
இனியவது விழித்து கொள்ளுமா மாநில அரசு???
In nutshell, DMK is more danger than BJP…..