பாசாங்கு நாடகங்கள்..! பரிதவிக்கும் கூட்டணி கட்சிகள்!

வெறும் பிரச்சார வெளிச்சத்திலேயே ஆட்சி நடத்த முடியுமா? கொள்கை, சித்தாந்தம் என்றெல்லாம் பொதுவெளியில் பேசிவிட்டு, நடைமுறையில் சரணாகதி அரசியலை சற்றும் கூச்சமில்லாமல் முன்னெடுக்கும் அபார துணிச்சலுக்கு உண்மையிலேயே உலக அளவில் திமுகவை அடிச்சிக்க முடியாது!

நிர்வாக ரீதியில் எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்யாமல் தட்டிக் கழித்துவிட்டு, கமுக்கமாக அமைதியும் காத்துக் கொண்டு, எல்லாவற்றுக்கும் கூட்டணிக் கட்சிகளை பேச வைத்து, ஆட்சித் தலைமை தன்னை வெளிப்படுத்தாமலும், தெளிவுபடுத்தாமலும் அமைதி காத்து வருவது தான் திமுக அரசின் நடத்தையாக உள்ளது.

நாடு மிக இக்கட்டான சூழலில் உள்ளது! பல ஜனநாயக விரோத சட்டத் திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்த வண்ணம் உள்ளது. பாஜக ஆட்சி மாநில சுயாட்சியை  மதிக்காமல் காலில் போட்டு நசுக்கிறது! நமது மாநில அரசு எந்த ஒன்றையும் செய்யவிடாமல் மத்திய அரசின் ஏஜெண்டான கவர்னர் ஓயாது முட்டுக் கட்டை போட்டவண்ணம் உள்ளார்! ஒருகாலத்தில் மாநில சுயாட்சிக்காக உரிமைக்குரல் கொடுத்த திமுக இன்று மெளனித்துக் கிடக்கிறது.

சர்ச்சைக்குரிய மசோதாக்களை மட்டுமல்ல, எந்த சர்சைக்கும் இடமில்லாத மிக முக்கியமான மசோதாக்களையும் கூட கவர்னர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த போதெல்லாம், முதல்வர் வாய் திறக்காமல் மெளனம் காப்பதும், அவரது கட்சி எந்த போராட்டமும் நடத்தாமல் பம்மிக் கிடப்பதும் கூட்டணிக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்னரை கடுமையாக விமர்சித்து பேசியும், கவர்னர் மாளிகை முன்பு போராட்டங்கள் நடத்தியும் வந்ததையும் நாம் கவலையோடு பார்த்தோம்.

இந்தச் சூழலில் கவர்னர் அழைத்த தேனீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் மேற்படி காரணங்களுக்காக ஒட்டுமொத்தமாக புறக்கணித்த நிலையில் முதல்வரும், அவர் மகன் உதயநிதியும் கவர்னர் கொடுத்த தேனீர் விருந்தில் கலந்து மகிழ்ந்த விசித்திரங்களை எல்லாம் தமிழ்நாடு கண்டது.

பிறகு கேரளா, மேற்குவங்கம், தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில அரசுகள் கவர்னரை எதிர்த்து போர்ட்டுக்கு சென்று தீர்ப்பு வாங்கிய நிலையில் காலதாமதமாக தமிழ்நாடு அரசும் கோர்ட்டை நாடியது! ஆனால், அதன் பின்பும் பெரிதாக பலன் இல்லை. ஏனெனில், ‘அரசியல் ரீதியாக முதல்வர் என்பவர் விவேகமோ, வேகமோ இல்லாதவர்’ என்பது ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு உறுதிப்பட்ட நிலையில், ‘குட்டக்குட்ட குனியட்டும், கொட்டிக் கொண்டே இருப்போம்’ என முடிவெடுத்து விட்டனர். இதனால் தமிழ் நாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் முழுக்க, முழுக்க மத்திய பாஜக அரசின் ஆளுமைக்கு போய்விட்டனர் என்பது சமீப காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சிதரத்தக்க உண்மையாகும்.

சமீபத்தில், ‘பாஜக அரசால் மாற்றப்பட்டுள்ள மூன்று கிரிமினல் சட்டங்கள் எளிய மக்களை, ஒடுக்கப்பட்டவர்களை கடுமையாக பாதிக்கும்’ என காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர் கட்சித் தலைவர்களும் வலுவாக எதிர்த்து அறிக்கைவிட்டனர். ஆனால், ஸ்டாலின் வாய் திறக்கவில்லை.

காஷ்மீரில் 370 விஷேச அந்தஸ்த்தை பாஜக அகற்றி. அதை மூன்றாகக் பிரித்து யூனியன் பிரதேசம் ஆக்கியது! ஸ்டாலின் எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை.

தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை ஒழித்துக் கட்டி, முதலாளிகள் தொழிலாளர்களை சுரண்டி கொழுக்க பாஜக அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை கொண்டு வந்தது. முதல்வர் ஸ்டாலின் அமைதி காத்தார்.

எட்டு மணி நேர உழைப்பை 12 மணி நேரமாக்கிட பாஜக அரசு கொண்டு வந்த சட்டத்தை தமிழக சட்டசபையில் விவாதங்களின்றி அதிரடியாக அமல்படுத்தினார். ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்தது. பிறகு தான் அரை மனதுடன் பின் வாங்கினார்.

அதானி நிறுவனங்கள் தமிழகத்தில் கடை விரிக்க மோடி கட்டளை இடுகிறார். ஸ்டாலின் பழவேற்காடு துறைமுகம் தொடங்கி மின் உற்பத்தி நிலையங்கள்.. என ஏகப்பட்ட அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்!

அதுவும் தமிழ்நாட்டில் காவல்துறை வரலாறு காணாத வகையில் முழுக்கவே மத்திய பாஜக அரசின் ஏவலாளாகிவிட்டது!

குஜராத் கலவரங்கள் படுகொலை தொடர்பான பி.பிசியின் ஆவணப்படத்தை இந்தியா முழுக்க எல்லோருமே சாதாரணமாக பார்க்க முடிந்தது. ஆனால், தமிழக காவல்துறையோ தன்னுடைய செல்போனில் பார்த்த மார்க்சிஸ்ட் கவுன்சிலரைக் கூட கைது செய்தது!

அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த தின நிகழ்வில் கோவையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்ற நிகழ்வை பேசிய போது, அந்த பகுதியின் காவல் நிலைய ஆணையர் உடனே, மைக்கை புடுங்கி, ‘அம்மாதிரி பேச அனுமதியில்லை’ என்றார்.

அதிமுக ஆட்சியின் போது மோடி தமிழகம் வருகையில் கருப்பு பலூனை பறக்கவிட்டு, ‘கோபேக் மோடி’ எனப் பிரச்சாரம் செய்த திமுக தலைமை, ஆட்சிக்கு வந்தவுடன் ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அதே போன்ற  போராட்டங்களை செய்த இயக்கங்களை, இரும்பு கரம் கொண்டு ஒடுக்கியது.

தமிழ்நாட்டில் பாஜகவினரோ, பாஜக ஆதரவு இயக்கங்களோ, நபர்களோ அல்லது மேலாதிக்கச் சிந்தனையுள்ள பார்ப்பனர்களோ செய்கின்ற  குற்றச் செயல்களை சட்டப்படி தண்டிக்க முடியாத நிலையில், தமிழக காவல்துறையினர் உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக பல விவகாரங்களில் உறுதிப்பட்ட வண்ணம் உள்ளன!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சிட்டுக் குருவிகளைப் போல சுட்டுக் கொல்லப்பட்ட மனித உயிர்களுக்கு நீதி கிடைக்க அருணா ஜெகதீசன் ஆணையம் தந்த அறிக்கையை இன்று வரை கிடப்பில் போட்டு 17 கொலைகார காவல்துறை அதிகாரிகளை பாதுகாப்பதோடு, ஒரு சிலருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.

வேங்கை வயல் விவகாரத்தில் குடிநீர் தொட்டியில் மலத்தைக் கலந்த குற்றவாளி ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்புக்கு போன நிலையில், திமுக அரசின் காவல்துறை இன்று வரை ‘கப்சிப்பாகி’விட்டது.

கள்ளக் குறிச்சி விவகாரத்தில் மாணவியை கற்பழித்துக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தரான பள்ளிக் கூட உரிமையாளரை காப்பாற்ற தமிழக காவல்துறை படாதபாடுபடுகிறது. குற்றவாளியை தண்டிக்க போராடிய கட்சிகள், ஜனநாயக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள், சம்பந்தமே இல்லாத தலித் இளைஞர்கள் என பல நூறு பேரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து அவர்களின் எதிர்காலத்தையே சிதைத்துவிட்டது. மாறாக, உண்மையிலேயே அங்கு கலவரத் தீயை ஏற்படுத்திய குற்றவாளிகள் இந்த அரசால் இன்று வரை பாதுகாக்கப்படுகின்றனர்!

பாஜகவின் மாநிலத் தலைவரான அண்ணாமலை என்பவர் நாளும், பொழுதும் நாராசமாய் திமுக அரசின் ஒவ்வொரு நகர்வையும் குதர்க்கத்தோடும், உள் நோக்கத்துடனும் விமர்சித்து வருகிறார். அதை திமுக தலைமை முறையாக எதிர்கொண்டு தகர்க்காமல், பம்மி பதுங்குவதை அரசியல் கையாகத்தனமாகவே மக்கள் பார்ப்பார்கள்!

பாஜக அரசின் கட்டளையை ஏற்று இங்கு பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் சனாதனப் போக்குள்ள – ஏற்றத் தாழ்வுள்ள – எளியோருக்கு கல்வியை மறுக்கிற தேசிய கல்விக் கொள்கையை சகல வழிமுறைகளிலும் திமுக அரசு அரங்கேற்றி வருகிறது. அதே போல வாகன ஓட்டிகளுக்கு படுமோசமான அபராதங்கLai விதிக்கும் மோட்டார் வாகன சட்டத்தை அரங்கேற்றியதில் ஆயிரமாயிரம் மக்கள் நொந்து சாபமிட்டவண்ணம் உள்ளனர்.

அரசுத் துறைகளில் நிரந்தரப் பணியிடங்களை ஒழித்து, ஒப்பந்தக் கூலிகளாக வேலைக்கு வைப்பது, போக்குவரத்து துறையை தனியார் மயமாக்குவது, இந்து அற நிலையத் துறை சனாதனத் தன்மையில் இயங்குவது ..என சகலத்திலும்  பாஜக பாணியில் ஆட்சி நடத்திக் கொண்டே திராவிட மாடல் ஆட்சி..என வெற்றுப் பேச்சுக்கள்!

எல்லாவற்றுக்கும் சிகரமாக பசுமையான விவசாய நிலங்களை கார்ப்பரேட்களுக்கு தாரை வார்க்கும் ‘நீர் மேலாண்மை சட்டத்தை’ நிறைவேற்றி, தங்கள் வாழ்வாதரத்திற்காக போராடிய விவசாயியின் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சியுள்ளது. டெல்லியில் ஓராண்டாக சாலைகளை மறித்து போராடிய விவசாயிகள் மீது கூட மத்திய பாஜக அரசு குண்டர் சட்டத்தை பிரயோகிக்க துணியவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த நிகழ்வுகளை யதார்த்தமாக உள்வாங்கினாலே, இன்றைக்கு தமிழகத்தை ஆளும் திமுக அரசு ‘தான் செய்து கொண்டிருக்கும், ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும் மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ ஆகியவற்றை ஏவி தண்டித்துவிடக் கூடாது’ என்ற அச்சத்தால் அடி பணிகிறதோ…, என்ற சந்தேகமே மக்களுக்கு வருகிறது!

இவை போதாது என்று முதல்வர் ஸ்டாலின் சென்னை வரும் போதெல்லாம் பிரதமர் மோடியிடம் குழைந்தும், குலவியும் உரையாடுவதை தமிழக மக்களும், கூட்டணிக் கட்சிகளும் அமைதியாக பார்த்தபடி தான் உள்ளனர். ஆரம்பத்தில் ”ஒன்றிய அரசு” என பேசி வந்த ஸ்டாலின் இன்று ‘இந்தியப் பிரதமர்’ என்று கூட அழைக்காமல் ”பாரதப் பிரதமர்” என அழைக்கிறார் என்றால், இந்த மாறிய மன நிலை மக்களுக்கு புரியாமல் இல்லை.

அரசியலில் கத்துக் குட்டியான உதயநிதி ஸ்டாலின் இது வரை பிரதமர் மோடியை டெல்லி சென்று தனியாக இரண்டு முறை சந்தித்து உள்ளார்! இந்த முறை சந்தித்தற்கு பிரதமரை தமிழ் நாட்டில் நடக்கவுள்ள கேலா விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு அழைத்ததாக காரணம் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் சென்ற ஆண்டு கேலோ போட்டிகள் நடந்த போது கூட பிரதமர் மோடியை அழைக்காமல் தானே தான் முன்னின்று நடத்தினார் முதல்வர் சிவராஜ் செளகான். ஆனால், ‘திராவிட மாடல் அரசு ஏன் எடுத்தற்கெல்லாம் பிரதமரை அழைக்கிறது.. ‘என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது.

தன்னைத் தானே ஒளித்து, மறைத்து போலித்தனமான அரசியலை முன்னெடுத்துச் செல்வது நீண்ட காலம் நிலைக்காது! தலைமைப் பண்பு என்பதே தன்னை உண்மையாக வெளிப்படுத்தி, மற்றவர்களையும் பின் தொடரச் செய்வதே ஆகும். ஒளிவுமறைவு அரசியலானது ஒரு அரசியல் இயக்கம் ஒழிந்து போகவே வழிவகுக்கும்.

கூட்டணிக் கட்சிகள் இன்னும்மின்னும் திமுக அரசை, ‘பாஜக எதிர்ப்பு’ என்ற காரணத்தைக் காட்டி பொத்திப் பாதுகாக்க முடியுமா? எனத் தெரியவில்லை..! நமக்கு கிடைத்துள்ள தகவல்களின் படி திமுக கூட்டணிக் கட்சிகளிடையே மேற்படி சம்பவங்களின் அடிப்படையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது..! அது விரைவில் வெளிப்படக் கூடும் எனத் தெரிய வருகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time