சொற்களால் மனிதன் உயர்ந்து நின்றான். மனிதர்களிலே சொற்களை நயமாக கையாளத் தெரிந்தவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பதையும், அவற்றைப் பயன்படுத்த தெரியாதவர்கள் பாதாளத்தில் கிடப்பதையும் பார்க்கிறோம். நாம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் நம் வாழ்வையே தீர்மானிக்கிறது;
உரையாடலால் உயர்ந்தான் மனிதன்.
மனிதன்,பேசும் திறனால் மகத்தானவன் ஆனான்.
பேச்சு அவனை விலங்குகளிடம் இருந்து வேறுபடுத்தியது.
எழுத்து அவனை நாகரீகப்படுத்தியது. கடிதம் மனித இதயங்களை இணைத்தது.
நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லுமே மகத்துவம் உடையது என்பதை அறிந்து கொள்ளாமலே நாம் பயன்படுத்துகிறோம். சொற்கள் வலிமை வாய்ந்தவை. சரியான தருணத்தில் சரியான ஏற்ற இறக்கத்தோடு அவற்றை உச்சரிக்கும் போது அவை அசுரபலம் பெற்று விடுகின்றன!
ஒரே ஒரு வாக்கியத்தின் மூலம் ஒருவரை எழ வைக்கவும் முடியும், விழ வைக்கவும் முடியும்.
நாம் பயன்படுத்தும் தகவல் பரிமாற்றம் நம்முடைய வாழ்வையே தீர்மானித்து விடுகிறது.
வளாக நேர்காணல்களில் கூறும் பதில்களும், விடையளிக்கும் முறையும் வேலையை தீர்மானிக்கின்றன!
பெண் பார்க்கும் போது பேசும் சொற்கள் மண வாழ்வைத் தீர்மானிக்கின்றன!
அலுவலகத்தில் சக பணியாளர்களோடு நாம் பரிமாறும் தகவல்கள் நம் பணித் திறனை முடிவு செய்கின்றன!
ஒரு காலத்தில் ஒன்றை சொல்லிவிட்டு, ‘’நான் சொல்லவே இல்லை’’ என்று மறுக்க முடியும். ஆனால், இன்று எழுதுபவை மட்டுமல்ல, பேசுபவையும் ஆவணப்படுத்துகிற காலம். காற்றில் கரையாமல் அவற்றை கச்சிதமாக பதிவு செய்யும் கருவிகள் வந்துவிட்ட காலம்.
சொற்களை சரியாகப் பயன்படுத்தியவர்களே வரலாற்றில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்! ஊக்கப்படுத்தும் சொற்களை உபயோகித்தவர்கள் வீரர்களாகி நிற்கிறார்கள். பேசத் தெரிந்தவர்கள் மக்கள் மனதில் நிலை பெற்றார்கள்! ஆபிரகாம் லிங்கனுடைய கெட்டிஸ்பர்க் உரை உலகப் புகழ் பெற்றது.
அரங்கத்தில் மட்டுமல்ல, அறையில் பேசுவதும் முக்கியம் என்ற காலகட்டம் இது. நாம் சொல்கிற சொற்களை வைத்து நம் ஆளுமையை ஊகித்துவிடும் மதி நுட்பம் இன்று மக்களுக்கு வந்துவிட்டது. இன்று தனிப்பட்ட வாழ்க்கை என்பது மிகவும் குறைவு! நாம் நடித்து யாரையும் ஏமாற்றிவிட முடியாது.
இன்று நேரத்தின் அருமை அதிகம் உணரப்பட்டுவிட்டது. தொணதொணவென்று பேசுபவர்களையும், அரைத்த மாவையே அரைப்பவர்களையும் யாரும் விரும்புவதில்லை. ஒரு பக்கம் நேரக் குறைவு. மறுபக்கம் கவனத்தை ஈர்க்கின்ற சாதனங்களின் பெருக்கம். இவற்றுக்கு இடையில் தகவல்களை பரிமாற வேண்டி இருக்கிறது.
சரியான சொல்லை
சரியான இடத்தில்
சரியான விதத்தில்
பயன்படுத்துவதே தலையான தகவல் தொடர்பு!
குடும்பத்திலும் விரிசல்கள் ஏற்படுவது தகவல்கள் பரிமாற்றத்தில் உள்ள தகராறுகளால் தான்! எந்த மன நிலையில் யார் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு பேசுவது, இல்லத்திலும் இன்றியமையாதது ஆகிவிட்டது.
தகவல் பரிமாற்றம் என்பது பேசுவது மட்டும் அல்ல. கவனிப்பதும் கூட! இயற்கையில் இருந்து கவனிக்கத் தொடங்கி கூர்மையாக மனதை செலுத்தி வைத்திருப்பவர்களுக்கு இதயங்களையும் கவனிக்க முடியும்.
தகவல் பரிமாற்றம் என்பது ஓசை மட்டுமல்ல. மெளனமும் கூடத் தான். எந்த இடத்தில் மெளனமாக இருக்க வேண்டும், எந்த வாக்கியங்களுக்கு இடையில் எவ்வளவு அமைதி நீடிக்க வேண்டும் என்பவை எல்லாம் தகவல் பரிமாற்றத்தை அழகு செய்கிற சரிகை வேலைகள்! சில நேரங்களில் மெளனமே சிறந்த தகவல் பரிமாற்றமாகவும் இருந்து விடுவது உண்டு.
நல்ல தகவல் பரிமாற்றத்துடன் உள்ளவர்கள் படிப்படியாக உயர்ந்து தலைமை பீடத்தை அலங்கரிக்கிறார்கள்! அவர்கள் உணர்ச்சி மேலாண்மையில் உயர்ந்தவர்களாக உள்ளார்கள்! கோபத்தை அடக்கி ஆளவும், பதற்றத்தை மறைக்கவும் கற்றவர்கள், எதிரிகளிடம் கூட புன்ன்கையுடன் பேசுவார்கள். ஏதேனும் ஒரு கட்டத்தில் எதிரி கூட நண்பனாகும் வாய்ப்பு உண்டு. நல்ல தலைமைப் பண்பு உள்ளவர்கள் எங்கு தகவல் பரிமாற்றத்தை தொடங்குவது என்பதில் மட்டும் அல்ல, எங்கு முடிக்க வேண்டும் என்பதையும் தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள்.
நல்ல தகவல் பரிமாற்றத் திறன் உள்ளவர்கள் எல்லா இடங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் பரிமாற்றம் நேர்மையாக இருக்கும் போது தான் வாழ்க்கையிலும் அது வெற்றியைத் தரும்.
வெ.இறையன்புவின்
என்ன பேசுவது! எப்படிப் பேசுவது!!
என்ற நூலில் இருந்து சில துளிகள்!
வெளியீடு; நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்
பக்கங்கள்; 816
விலை; ரூபாய் ;1,000
41.பி.சிட்கோ இண்டஸ்டிரியஸ் லிமிடெட்
அம்பத்தூர் சென்னை 600050.
போன்; 044-26251968, 26258410
Leave a Reply