நான் 20 நூல்கள் எழுதி இருந்தாலும், தற்போது சில மட்டுமே புழக்கத்தில் உள்ளன. 2001 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தான் நான் எழுதிய கட்டுரைகள் நூல் வடிவம் காணத் தொடங்கின! இவை பற்றி சில தகவல்கள்;
உலக நாடுகளில் தமிழர்கள், கண்டதும் கேட்டதும், சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம், நெஞ்சு பொறுக்குதில்லையே உடைபடும் மாயைகள், விடை தேடும் வினாக்கள், சங்கராச்சாரியார் கைது – குழப்பங்களும் விளங்கங்களும், சன் குழுமச் சதிகளும் திமுகவின் திசை மாற்றமும், சங்கராச்சாரியாரும், இந்து மதமும் – மறைக்கப்பட்ட உண்மைகள், எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்? 2011 தேர்தல் வெற்றிகளும் தோல்விகளும் அரசியலாக்கப்பட்ட சமச்சீர் கல்வி உண்மை நிலை என்ன? உள்ளாட்சித் தேர்தலும் அரசியல் அதிகாரங்களும், யாரைத் தான் நம்புவதோ? 2014 தேர்தல் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் – ஒரு ஸ்கேன் ரிப்போர்ட், கேபிள் தொழிலும் அரசியல் சதிகளும்.. என எழுதியுள்ளதில் தற்போது புழக்கத்தில் உள்ள சில நூல்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகம்;
நோய் தீர்க்கும் பாரம்பரிய உணவுகள்:
நமது தமிழ் சமூக மரபில் இயற்கையான முறையில் விளைவிக்கப்படும் பயிர்கள் ஒவ்வொன்றுக்குமே ஒரு மருத்துவ குணங்கள் உண்டு. அதே போல ஒவ்வொரு நோயும் பூரண குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன? தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன..? எனத் தெரிந்தாலேயே நாம் மருந்து, மாத்திரைகளை மருத்துவ செலவுகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழலாம். பல்லாண்டுகள் தேடலிலும், சொந்த அனுபவத்திலும், பல மருத்துவ நூல்களையும் அலசி ஆராய்ந்ததில் உருவான நூல் இது!
உழவர் குரல்;
இன்றைய மத்திய, மாநில அரசுகள் போடும், சட்டங்களும், திட்டங்களும் உழவர்களுக்கு உதவுவதைப் போல தோற்றம் காட்டி உழவர்களை சுரண்டிக் கொழுக்கும், கார்ப்பரேட்களையும், வியாபாரிகளையும் தான் வளர்க்கிறது. விவசாயக் கல்வியும், ஆராய்ச்சிகளும் உழவர்களுக்கும், இயற்கை சூழல்களுக்கும் மேலும்,மேலும் எவ்வாறு நெருக்கடிகளை உருவாக்குகின்றன என்பதை விவரிக்கும் நூல்.
விவசாயம் இன்று, நேற்று நாளை;
ஆதிகால விவசாயம் தொடங்கி அண்மை கால விவசாயம் வரை அதன் வளர்ச்சி போக்கையும், வீழ்ச்சியின் தொடக்கத்தையும் பேசுகிற நூல். விவசாயத்தில் திணிக்கப்பட்ட ரசாயான உரங்கள்.. பூச்சிக் கொல்லி மருந்துகள் அவற்றின் விளைவுகளைப் பற்றி விரிவாகப் பேசும் நூல்!
காந்தியின் வாழ்வியல் அறம்; நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியை வெறும் சுதந்திரம் வாங்கித் தந்தார் என்ற அளவில் மட்டும் சுருக்காமல், நம் அக வாழ்விலும். சமூக வாழ்விலும் அவர் காண விரும்பிய அறத்தின் விழுமியங்களை விவரிக்கும் நூல்!
அறத்தின் குரல்;
நான் ஆசிரியராக இருந்து நடத்தும் அறம் இணைய இதழில் சமகால அரசியல், சமூக நிகழ்வுகளை, அதன் யதார்த்த போக்குகளோடு அணுகி, ஏற்படுத்தப்பட்டுள்ள மாயைகளை விளக்கி உண்மைகளை எடுத்துக் காட்டி அறத்தின் குரலாய் ஒலிக்கும் கட்டுரைகளே இந்த நூல்!
அடிமைச் சமூகமும், அழிவு அரசியலும்;
நம் சமகாலத்தில் அரசியலிலும், சமூகத்திலும் புரையோடிப் போயுள்ள அடிமை மனோபாவத்தையும், சக மனிதனையும், இயற்கையையும் அழித்து உருவாக்கப்படும் செல்வத் தேடலையும் கேள்விக்குள்ளாக்கும் கட்டுரைகள்; பேராசை மனோவாத்தில் திளைக்கும் அதிகார, ஆதிக்க சக்திகள் அதன் விளைவாக அடிமை மனோபாவத்திற்கும் செல்வதை தோலுரித்துக் காட்டும் கட்டுரைகள்!
கேபிள் தொழிலும் அரசியல் சதிகளும்;
இன்றைக்கு ஊடக பலமே ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக வளர்ந்து நிற்கிறது. இங்கே சன் தொலைகாட்சி தொடங்கி உருவான ஊடக சாம்ராஜ்யங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய யுத்தங்களையும், அரசு கேபிள் தொலைகாட்சியால் ஊடக நிறுவனங்கள் சந்திக்கும் அடக்குமுறைகளையும் விவரிக்கும் நூல்.
இந்த நூல்கள் சென்னை நந்தனத்தில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் கடைசி வரிசையில் உள்ள (அரங்கு எண் 598-D) காக்கைக் கூடு அரங்கில் கிடைக்கும்.
சங்கராச்சாரியாரும் இந்து மதமும்- சிதைக்கப்பட்ட உண்மைகள்;
இந்தியாவின் பூர்வீக மதங்கள் பல சேர்ந்து உருவாக்கப்பட்டது இந்து மதம். இதில் பார்ப்பனர்கள் தங்களை தீர்மானிக்கும் சக்தியாக தலைமை பீடத்தில் இருத்திக் கொண்டதை விவரிக்கும் நூல்.
யாரைத் தான் நம்புவதோ?;
2014 தேர்தல் நேரத்தில் தமிழகத்திலும், இந்தியாவிலும் உள்ள சூழல்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் செயல் முறைகள் ஆகியவற்றை பதிவு செய்த நூல்.
சாவித்திரி கண்ணன்
தொடர்புக்கு; செழியன், தொலைபேசி; 9043605144
Leave a Reply