ரத்தக் களரியில் எழுந்து நிற்கும் ராமர்கோவில்!

-ச.அருணாசலம்

மதவெறி அரசியலின் ‘வெற்றி’ அடையாளமாக அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக  திறக்கப்பட உள்ளது. பாபர் மசூதி சர்ச்சையான வரலாறு, அதை காங்கிரஸ் கையாண்ட விதம், இந்துத்துவ அமைப்புகள் வகுத்த வியூகம், நீதி மன்றத்தின் அணுகுமுறைகள் ஆகியவற்றை பின்னோக்கி பார்த்து ஒரு அலசல்;

கி.மு. 1550 முதல் இஸ்லாமியர்களுக்கான இறைவனை தொழும் மசூதியாக பாபர் மசூதி இருந்தது என்பதை எந்த நீதிமன்றமும் இந்த நேரம் வரை மறுதலிக்க முடியவில்லை.

முதன்முதலில் 1853 ஆம் ஆண்டு ” நிர்மோகி அமோரா” அமைப்பை சார்ந்த சிலர் மசூதி இருக்குமிடத்தில் வழிபாடு நடத்த கோரிக்கை முன் வைத்தனர்.

இக்கோரிக்கை வழக்காடு மன்றத்திற்கு வந்த பொழுது 1885ல் பைசாபாத் நீதி மன்றம் இக் கோரிக்கையை தள்ளுபடி செய்து நிராகரித்தது. 1947ம் ஆண்டுவரை இதே நிலையே நீடித்தது எனலாம்.

1949 ஆம் ஆண்டு சில “நபர்கள்” சட்டபுறம்பாக, குற்றமிழைக்கும் நோக்கில் சில விக்ரகங்களை மசூதிக்குள் கடத்தி கொணர்ந்து அங்கு நிறுவினர். அதை சட்ட புறம்பானது என அறிவித்த மத்திய அரசு அதை நீக்க உத்தரவிட்டது. ஆனால், ”அப்படி நீக்கினால் அத்தகைய செயல் கலவரத்தை ஏற்படுத்தும்” என சால்ஜாப்பு கூறி, மொத்த மசூதி வளாகத்திற்கே பூட்டு போட்டார் அன்றைய பைசாபாத்  கலெக்டர் கே.கே. நய்யார் . அவர் ஆர். எஸ். எஸ் அமைப்பின் தீவிர அனுதாபி !

மிகுந்த சிரமங்களுக்கிடையில் பாபர் மசூதியில் தொழுகை நடத்தும் உரிமைகளை மீண்டும் பெற்ற இஸ்லாமியர்கள் தொடர்ந்து தொழுகை நடத்தினர். 1992 டிசம்பர் 6 வரை.

விஸ்வ ஹிந்து பரிஷத்தும், மற்ற பா ஜ க துணை அமைப்புகளும் ராம ஜென்ம  பூமி கோரிக்கையும் போராட்டத்தையும் முன்னெடுத்தனர். 1980கள் வரை யாரும் சீண்டுவாரில்லாத நடந்த ராம ஜன்ம பூமி இயக்கம் இந்திரா காந்தி உயிருடன் இருந்த வரை நாட்டு அரசியலில்  ஒரு  பேசுபடு பொருளாகவோ, மக்களின் கவனத்தை ஈர்க்கும் பிரச்சினையாகவோ  ஒரு போதும் இல்லை.

அசாதாரண விபத்தால் ஆட்சி கட்டிலில் அமர்ந்த ராஜீவ் காந்தி, தன்னுடைய அனுபவமின்மையால், இந்து பழமைவாதிகளை திருப்திபடுத்தும் விதத்தில் 1949 முதல் பூட்டி கிடக்கும் சட்ட புறம்பான ராமர் “வழிபாட்டு ” தலத்தை 1986 பிப்ரவரி 1ல் ” வழிபாட்டிற்காக” திறக்க அனுமதித்தார்.

சட்ட முறைப்படி வரும் முடிவுக்கு ஒத்துக் கொள்ளாத  விஸ்வ இந்து பரி ஷத்தும், அதன் அரசியல் ஆதரவாளர்களான பா ஜ கட்சியும், நீதி மன்ற தீர்ப்பிற்கு  ஒரு போதும் இணங்கியதில்லை.

1986 முதல் 1989 வரை விஸ்வ இந்து பரிஷத்தின் அசோக் சிங்கால், ப்ரவீன் தோகாடியா போன்றோரின் பின்னால் இருந்து இயக்கிய பா ஜ க வினர் 1989 இவர்கள் நடத்தும் ஷிலன்யாஸ் என்ற பூமி பூஜைக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்!

இதற்கு அடுத்த கட்டமாக , அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் அடிப்படையில் அரசியல் கட்சியாக உள் நுழைந்த பா ஜ க,  ”நீதி மன்றங்களுக்கோ, சட்ட மரபுகளுக்கோ ராமர் கோவில் விவகாரத்தில் கட்டுப்படமாட்டோம்” என கூச்ச நாச்சமின்றி கூற ஆரம்பித்தனர்.

”பெரும்பான்மை இந்துக்களின் மத உணர்வுகளை புரிந்து கொண்டு,பாபர் மசூதி இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், அப்படி விட்டுக் கொடுத்தால், இஸ்லாமியர்கள்  தேச பற்றுமிக்க இந்தியர்களாக அறியப்படுவர்” என கூறி அதற்காக காஞ்சி சங்கராச்சாரியார் முதல் ஏகப்பட்ட மதச் சாமியார்களையும், அரசியல் “விற்பன்னர்களையும்” பேச்சுவார்த்தையில் பா ஜ க வினர் ஈடுபடுத்தினர்!

1990 செப்டம்பர் 25ல் ராம ஜன்ம பூமிக்கான ” ரத யாத்திரையை” குஜராத்தில் உள்ள சோம்நாத்திலிருந்து அத்வானி துவக்கினார் அயோத்தியா என்ற சிற்றூரின் பிரச்சினையை இந்தியாவில் வாழும் அனைத்து இந்துக்களின் வாழ்வாதார பிரச்சினையாக சித்தரித்தனர் பா ஜ கவினர்.

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பையும், மதக்கலவரத்தையும் வழிநெடுக கிளப்பிய இந்த ரத  யாத்திரை லல்லு பிரசாத் யாதவால் பீகாரில் 1990ம் ஆண்டு அக்டோபர் 30-ல் தடுத்து நிறுத்தப்பட்டது, அத்வானி கைது செய்யப்பட்டார்.

ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டவுடன் இந்தியா முழுவதும் கலவரங்கள் வெடித்து ராம பக்தர்கள் சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு, வன்முறை வெறியாட்டம் ஆடினர். சிறு பான்மையினர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

இத்தகைய மதச் சேர்க்கையை ஆயுதமாக கொண்டு பா ஜ க வினர் கல்யாண் சிங் தலைமையில் உத்தர பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தனர். 1990 நாடாளுமன்ற தேர்தலில் பா ஜ க 80 இடங்களை பெற்றது.

1990 1992 களில் இந்தியா முழுவதும் ராமர் கோவிலுக்கான சேவைகளும் , கட்டுமான பொருள்களை திரட்டவும் பா ஜ க இயக்கம் நடத்தியது. மத உணர்வின் அடிப்படையில் ஆட்களை திரட்டி அரசியல் செய்யும் பாங்கு முன்னெடுக்கப்பட்டது பா ஜ கவினரால்.

அயோத்தியிலும் இந்த பதற்றம் பற்றிக்கொண்டது, நாடு முழுவதும் மத மோதல்களுக்கான சூழலை உருவாக்கிய சங்கிகள், உச்ச நீதி மன்றத்தில், ”பாபர் மசூதியை பாதுகாப் போம்,  இடிக்க ஒரு போதும் உதவமாட்டோம்” என்ற உறுதி மொழியை வழங்கினர்.

உறுதி மொழி கொடுத்த அக்கணத்திலிருந்து பாபர் மசூதியை சட்ட விரோதமாக  இடித்துவிட பகீரத முயற்சிகள் எடுத்தது பா ஜ க. கர சேவகர்கள் என்ற பெயரில் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு ஆட்கள் திரட்டப்பட்டது, பல்வேறு யாத்திரைகள், பேரணிகள், ‘இந்துக்களின்  நம்பிக்கை ‘ என்ற பெயரில் நடத்தப்பட்டன, மத வெறி , பாலூட்டி வளர்க்கப்பட்டது, பாமரர் முதல் படித்த மேல்தட்டு இந்துக்கள் வரை இந்த பிரச்சாரத்திற்கு பலியாயினர்.

1992 டிசம்பர் ஆறாம் நாள் , உச்ச நீதி மன்றத்தில் கொடுத்த உ. பி . அரசின் வாக்குறுதியை மீறி “கர சேவகர்களால்” பாபர் மசூதி சட்ட விரோதமாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதை அனுமதித்தது உத்தர பிரதேச கல்யாண் சிங் தலைமையிலான பா ஜ க அரசு, அதை வேடிக்கை பார்த்தது நரசிம்மராவ் தலைமையிலான ஒன்றிய காங்கிரசு அரசு.தொடர்ந்து இந்தியா முழுவதும் மதக் கலவரங்கள் மூண்டன, சிறுபான்மை இசுலாமியர்கள் பலி கடாவாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

மசூதியை இடிப்பதற்காக கர சேவகர்களை அயோத்திக்கு வரவழைத்து வன்முறையை தூண்டி பேசிய வாஜ் பேயி, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீது உ. பி. அரசும், ஒன்றிய அரசும் வழக்கு தொடர்ந்தன.

லைபர்கான் ஆணையம் அமைக்கப்பட்டது. உ.பி மற்றும் நான்கு மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டு அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது.

அன்றைய இந்திய பிரதமர் நரசிம்மராவ், உ.பி.முதல்வர் கல்யாண் சிங்.

பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர் நிலத்தையும் , உ.பி அரசு வசமிருந்த மசூதியை சுற்றிய 67.7 ஏக்கர் நிலத்தையும் ஒன்றிய அரசு கைப்பற்றியது. இதற்கிடையில் 1991ல் வழிபாட்டு தலங்களை மாற்றுவதை தவிர்க்கும் விதமாக வழி பாட்டு தலங்கள் தனி சட்டம் 1991ல் பிரகடனப்படுத்தப்பட்டது.

வி எச் பி, பஜ்ரங் தள், போன்ற மதவெறி அமைப்புகள் ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டன.

இந்திராவின் மறைவாலும், ராஜீவின் தவறுகளாலும் புத்துயிர் பெற்ற மதவாத சக்திகள் மீண்டும் தமது சுய ரூபத்தை காட்ட தொடங்கினர்.

இது நாள் வரை இரட்டை நாக்கு, இரட்டை முகம், மொத்தத்தில் பித்தலாட்டம் என  பவனி வந்த சங்கிகள் 1998ல் இந்திய அரசியலரங்கில் முதன்மை இடங்களை பெற்றனர்.

அரசியல் அதிகாரத்திற்காக தாங்கள் பேசிய கொள்கைகளையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, ஆட்சியில் அமர இதர கட்சிகளுடன் சமரசம் செய்து கொண்டனர். மீண்டும் பாபர் மசூதி- ராமர் கோவில் விவகாரம் வாஜ்பாய் ஆட்சியில் இருந்த 2004 வரை கிடப்பில் போடப்பட்டது.

மீண்டும் ராமர் கோவில் விவகாரத்தை முழுக்க முழுக்க அரசியல் பகடைக்காயாய் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட பா ஜ க முனைந்து அதில் பெரு வெற்றியும் கண்டது.

2011ல் வெளியான அலகாபாத் உயர்நீதி மன்றம் மசூதி இருந்த நிலப்பரப்பை 3 சம பாகங்களாக பிரித்து தீர்ப்பளித்ததை எதிர்த்து மூன்று தரப்புகளும் உச்ச நீதி மன்றத்தை நாடினர்.

மீண்டும் 2019 ஜனவரியில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, அப்பொழுது தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு வழக்கை விசாரிக்கு முன்பு மூன்று பேர் அடங்கிய ஒரு சமரசக் குழுவை நியமித்தது. அதில் முன்னாள் நீதிபதி கஃலிபுல்லா, வாழுங்கலை ஶ்ரீஶ்ரீரவி சங்கர், வழக்கறிஞர். ஶ்ரீராம் பஞ்சு ஆகியோர் இருந்தனர்.

மார்ச் மாதம் நியமிக்கப்பட்ட இந்த குழு வின் முயற்சிகள் தோற்று விட்டன !

சமரச முயற்சிகள் தோற்றதற்கு மூல காரணம் அங்கு இஸ்லாமியர்கள் மசூதி இடத்தை நிபந்தனையின்றி நல்லெண்ண அடிப்படையில் விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதே வலியுறுத்தப்பட்டது என்கிறார்கள் விபரமறிந்தோர்.

இஸ்லாமியர்களுக்கெதிரான விரோத பிரச்சாரம் லவ் ஜிகாத், மத மாற்ற தடை சட்டம், மாட்டிறைச்சி கடத்தல் தடுப்பு என பல கோணங்களில் இஸ்லாமிய மக்களின் இருப்பையும், வாழ்வையும் கேள்வி கேட்டு தகர்க்க முனைந்தது .

இந்தச் சூழலில் 2019 அக்டோபர் மாதத்திலிருந்து தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்தது. 2019 நவம்பரில் தீர்ப்பு வெளியானது.

# மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயம் மட்டுமே.

# ராமர் கோவிலை இடித்து அதன்மேல் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

# மசூதி 500 ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள இஸ்லாமியர்களின் தொழுகை இடமாக நீடித்து வந்துள்ளது.

# 1949ல் மசூதி வளாகத்தில் விக்கிரகங்களை திருட்டுத்தனமாக நிறுவியது சட்ட விரோதசெயல்.

#.  1992 டிசம்பர் 6ல் கர சேவகர்களால் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது சட்ட விரோத கிரிமினல் நடவடிக்கை.

#    1991ல் நிறைவேற்றப்பட்ட வழி பாட்டு தலங்கள் பற்றிய தனிச்சட்டம் செல்லும், அதை தவறாமல் பின்பற்ற வேண்டும்

என்றெல்லாம் தீர்ப்பில் குறிப்பிட்ட மேன்மையான நீதிபதிகள். ரஞ்சன் கோகோய், அசோக் பூஷன், எஸ். ஏ. பாப்டே, டி. ஒய். சந்திரசூட், எஸ். அப்துல் நசீர் ஆகிய ஐவர் அமர்வு தீர்ப்பை யார் எழுதியது என்று குறிப்பிடாமலே -அனாமதேய தீர்ப்பாக – இடிக்கப்பட்ட பாபர் மசூதி இடத்தை, சட்ட விரோதமாக இடித்த வி. ஹெச். பி யை சார்ந்த இந்துக்களுக்கே கொடுத்து அவர்கள் ராமர் கோவில் கட்டி எழுப்ப அனுமதி கொடுத்து தீர்ப்பு வழங்கியது.

மசூதி இருந்த இடம் யாருக்கு  சொந்தம் என்பதற்கு இடத்தின் ஆவணங்கள், அந்த இடம் யாருடைய வசத்தில் இத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதை வைத்தே முடிவு எடுப்பதே சட்ட நெறிமுறை.

ஆனால், சட்டவிரோதமாக இந்துக்கள் கைப்பற்றிய வெளிபகுதியையும் சேர்த்து முழு இடத்தையும் (2.77ஏக்கர்) இந்துக்களுக்கு வழங்கி தீர்ப்பு வழங்கியது எந்தவிதமான சட்ட நெறிமுறை? எந்த வகை நியாயம்?

நமக்கு நினைவிற்கு வருவதெல்லாம் ” வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்ற ‘நியாயந்தான்’.

இவ்வாறு நீதிமன்றமே பெரும்பான்மை ஆதிக்கத்திற்கு அடிபணிந்து போவதே சட்டமுறை என்ற புது நெறியை இந்தியாவில் புகுத்துகிறார்கள். இதற்கு, உதாரணங்களாக காஷ்மீர் வழக்கு தீர்ப்பு, அதானி வழக்கு தீர்ப்பு, வழிபாட்டு தல சட்டத்திற்கு  வியாக்கியானம் கொடுத்து கியான்  வாப்பி தொடங்கி பல மசூதிகளை இடிக்க மடைதிறந்து விட்ட நீதிபதி சந்திரசூட்டின் தீர்ப்பு ஆகியவற்றை கூறலாம்.

இவ்வாறு நேர்மையற்று, நியாயங்களை மறுத்து வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் இன்றைய ராமர் கோவில் நிர்வாகிகளிடம் இந்த இடம் வழங்கப்பட்டது.

இக் கோவிலை கட்டி எழுப்புவதில், அதற்கான நன்கொடைகள் வசூலிப்பதில், தொடங்கி நகரை விரிவு படுத்துவது, மேம்படுத்துவது , புதிய அமைப்புகளை நிர்மாணிப்பது வரை அனைத்திலும் பா ஜ க வினரும், உ. பி. அரசும் செய்துள்ள பல தில்லுமுல்லுகள், ஊழல்கள் தினம் தினம் வெளி வந்து அயோத்திய நகரம் மட்டுமல்ல, அகில இந்தியாவே நாறுகிறது எனலாம்.

இதற்கிடையில் ‘அனாமதேய தீர்ப்புக்கு மூல காரணம் மோடி தான்’ என சங்கிகளின் பிரச்சாரம் , ‘மோடி நினைத்தால் எதுவும் நடக்கும்’ என ஜால்ராக்களின் அலறல் சமூக வலைதளங்களில் நிரம்பி வழிகிறது.

இத்தனை களேபரங்கள் மத்தியில், திறப்பு விழாவிற்கு யாரையெல்லாம் அழைப்பது என்ற பிரச்சினை வேறு உள்ளது. அத்வானியும்,  முரளி மனோகர் ஜோஷியும்  அழைக்கப்பட்டு அவர்களும் வந்து விட்டால்.., முழுக் கவனமும் மோடி மேல் திரும்பாது என்ற பயம் ஒருபுறம்,

அழைக்கப்பட்ட எதிர்கட்சி தலைவர்கள் விழாவிற்கு வந்தால் உதாசீனப்படுத்துவது, வராவிட்டால் ”இந்து விரோதிகள்” என வசை பாடுவது போன்ற உத்திகள் பல பாஜக கைவசம் வைத்துள்ளது!

பகவான் ராமர் இத்தனை கலாட்டாக்களையும் கண்டு ரசிப்பாரா? அல்லது கண்டனம் செய்வாரா?

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time