மாலத் தீவில் வலுக்கும் இந்திய எதிர்ப்பு! ஏன்? எதனால்?

- ஹரி பரந்தாமன்

மாலத்தீவு பெரும் பேசுபடு பொருளாகி உள்ளது. பிரதமர் மோடியை விமர்சித்த மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளது நியாயமே. அதே சமயம் இந்தியாவிற்கு எதிரான கொந்தளிப்பு மன நிலை மாலத் தீவில் ஏன் ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன என்பதை பார்க்க வேண்டும் – நீதிபதி ஹரிபரந்தாமன் கட்டுரை;

மாலத் தீவுக்கு அருகில் இந்தியாவின் லட்சத்தீவு இருக்கிறது .லட்சத் தீவுக்கு சென்ற பிரதமர் மோடி, லட்சத் தீவின் அழகை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தின் காரணமாகவும் அவரின் பதிவின் காரணமாகவும், கடந்த இரண்டு நாட்களாக மிகப் பெரிய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத்தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அமைச்சர்கள் மூவர் இதற்கு மோசமான எதிர்வினை ஆற்றினார்கள்.

மாலத்தீவின் இளைஞர் நலத் துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார்.மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

மாலத்தீவின் கலை துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடியை, ‘’இஸ்ரேலின் ஊதுகுழல்’’ என்று கடுமையாக சாடினார். ‘’மோடி முர்தாபாத்’’ என அமைச்சர் மால்ஷா ஷெரீப், எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

மோடியை எதிர்த்து பேசி பதவி இழந்த மாலத் தீவின் மூன்று அமைச்சர்கள்!

இதற்கு இந்திய பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். #BycottMaldives எனும் ஹேஷ்டாக் இந்தியாவில் சமூக ஊடக தளங்களில் டிரெண்டிங்கானது.

தற்போதைய முகமது முய்சுவுக்கு முன்னதாக, இப்ராஹிம் முகமது சோலி மாலத்தீவின் அதிபராக இருந்தார், அவருடைய அரசாங்கம் ‘இந்தியா ஃபர்ஸ்ட்’ (India First) என்ற கொள்கைப்படி நம்முடன் நெருக்கம் பாராட்டியது. ஆனால், முய்ஸு ‘இந்தியா அவுட்’ (India Out) என்ற முழக்கத்துடன் தேர்தலில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற பிறகு, முய்சுவின் அணுகுமுறைகளால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் சுமூக நிலை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை விட சீனாவுடன் அதிகம் நெருக்கம் காட்டுகிறார் முகமது முய்சு.

மாலத்தீவின் முன்னாள் துணை சபாநாயகரும் எம்.பியுமான ஈவா அப்துல்லா இந்தியாவிற்கு ஆதரவாக பேசியுள்ளார்.

“அமைச்சரின் கருத்து வெட்கக்கேடானது. அவரது இனவெறி கருத்துக்களை பொறுத்துக்கொள்ள முடியாது. இந்தியா மற்றும் இந்திய மக்கள் குறித்த அவரது கருத்துக்கள் மாலத்தீவு மக்களின் கருத்து அல்ல. நாங்கள் இந்தியாவைச் சார்ந்து இருக்கிறோம். எங்களுக்கு தேவைப்படும் போதெல்லாம், இந்தியா தான் முதலில் உதவி வருகிறது. பொருளாதார உறவுகள், சமூக உறவுகள், சுகாதாரம், கல்வி, வணிகம், சுற்றுலா போன்றவற்றுக்கு இந்தியா பெரிதும் உதவியுள்ளது. மாலத்தீவு மக்கள் இதை அறிந்து, இதற்காக அவர்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். தற்போதைய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தகைய இழிவான கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.” என்று கூறியுள்ளார் ஈவா அப்துல்லா.

இந்து மகா சமுத்திரத்தில் உள்ள மிகச் சிறிய நாடு மாலத்தீவு. அதன் மக்கள் தொகை 5 1/2 லட்சம் மட்டுமே. அந்த மக்கள் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள்.

இந்தியாவைச் சேர்ந்த லட்சத் தீவில் வாழும் மக்கள் அனைவரும் இஸ்லாமியர்களே. அவர்கள் பழங்குடி மக்களும் கூட. லட்சத்தீவு ஒரு யூனியன் பிரதேசம். ஒன்றிய அரசின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ளதே லட்சத்தீவு .லட்சத்தீவு நிர்வாக அதிகாரி ஒன்றிய அரசால் நியமிக்கப்படுபவர். பாஜக ஆட்சி செய்யும் காலத்தில் லட்சத்தீவின் பள்ளிகளில் அளிக்கப்பட்ட அசைவ உணவு நிறுத்தப்பட்டது. லட்சத்தீவு மக்கள் இதனை ஆட்சேபித்த போதும், அசைவ உணவு வழங்குவது நிறுத்தப்பட்டது.


மாலத்தீவு சுற்றுலாவை நம்பி இருக்கக் கூடிய நாடு. மேற்சொன்ன மாலத்தீவு அமைச்சர்களின் சமூக வலைதள பதிவிற்கு எதிர்வினையாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், சினிமா பிரபலங்கள், சச்சின் டெண்டுல்கர் என பலரும் மாலத் தீவுக்கான சுற்றுலாவை பாதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதன் விளைவாக ஒரே நாளில் ,மாலத்தீவில் 7,500 ஓட்டல் முன்பதிவுகளும் 2,300 விமான டிக்கெட்டுகளும் இந்தியாவில் இருந்து ரத்து செய்யப்பட்டுள்ளன. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் குரல் வளையையும் பெரிய அளவில்  நெரிக்கும். இந்தியா இன்று உலகிலேயே அதிக அளவில்  மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

இதற்கு பின்னால் உள்ள அரசியலையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நவம்பர் மாதத்தில் அதிபராக வெற்றி பெற்ற முகமது முய்சு, அந்த நாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்திய அரசின் ராணுவம் உடனே வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேர்தல் பிரச்சாரத்திலேயே அவர், ”நான் அதிபரானால் இந்திய ராணுவத்தை மாலத் திவீல் இருந்து வெளியேற வைப்பேன்” என வாக்குறுதி அளித்தார். ‘மக்களும் அவரை வெற்றி பெற வைத்துள்ளனர்’ என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சென்ற வாரம் டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு நேர்காணல் அளித்த மாலத்தீவின் அதிபர் முகமது முய்சு மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறாமல் இருப்பது அந்த நாட்டு மக்களின் எண்ணத்திற்கு விரோதமானது. அயலார் ராணுவம் எங்கள் மண்ணில் இருப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்தானது’’ என்றார்.

முன்னதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “இந்திய ராணுவம் இங்கே தளத்தை அமைத்துள்ளது. அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இந்தியா என்று இல்லை வேறு எந்த நாட்டின் ராணுவம் இங்கே இருந்தாலும் எனது நிலைப்பாடு இது தான்” என்று அவர் தெரிவித்தது கவனத்திற்கு உரியது.

ஆனால், இந்திய அரசு தனது ராணுவத்தை மாலத்தீவில் இருந்து திரும்பப் பெறுவதாக இதுவரை அறிவிக்கவில்லை. இதனால் மாலத் தீவு மக்களிடையே ஒரு பதற்றமும், அதிருப்தியும் உள்ளது. அதுவே இந்த மூன்று அமைச்சர்கள் உள்ளிட்ட சில அரசியல் தலைவர்கள் மோடிக்கு எதிராக பேசியதன் பின்னணி என நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், பாஜக ஆட்சி செய்தாலும், இந்தியாவின் வெளியுறவு கொள்கை அண்டை நாடுகளுடன் சுமூக உறவை பேணுவதாக இல்லை. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், மியன்மார் என்று உள்ள அனைத்து அண்டை நாடுகளுடனும் சுமூகமான உறவு இல்லை என்பதை அறிவோம்.

1988 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, மாலத்தீவு நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு கலகத்தை அடக்குவதற்காக இந்திய ராணுவம் சென்றது .அந்த கலகத்தை அடக்கியது. ஆனால், அதற்கு பிறகு இத்தனை வருடங்களாகியும் இந்திய இராணுவம் அங்கிருந்து வெளியேறவில்லை என்பதோடு, அந்த நாட்டுடன் பல்வேறு ஒப்பந்தங்களை போட்டு தன் கட்டுப்பாட்டிலேயே வைக்க முனைகிறது. இம் மாதிரியான செயல்களை இந்தியாவில் உள்ள ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்.

மாலத் தீவில் இந்திய ராணுவ வீரர்கள்!

முகமது முய்சு அதிபராக பதவியேற்ற பிறகு அடுத்த நாளே மாலத்தீவில் தனது ராணுவ வீரர்களை திரும்பப் பெறுமாறு இந்திய அரசாங்கத்திடம் முறைப்படி கோரிக்கை விடுத்தார் என்பது கவனத்திற்கு உரியது. இத்துடன் இந்தியாவுடனான பல ஒப்பந்தங்களை ரத்து செய்யவுள்ளதையும் தெரிவித்து இருந்தார்.

அயல் நாட்டின் உள் விவகாரங்களில் இந்திய அரசும், இந்திய ராணுவமும் தலையிட எந்த உரிமையும் இல்லை. மாலத்தீவு சென்ற ராணுவம் அங்கேயே தங்கிவிட இயலாது. அந்த நாடு வெளியே போகச் சொன்னால், வெளியே வருவது தான் அந்த நாட்டின் இறையாண்மையை மதிக்கும் செயல். இலங்கை சென்ற இந்திய அமைதிப்படை இலங்கையின் அதிபர் பிரமேதாசா வெளியேற வேண்டும் என்று கடுமையாக சொன்னதற்கு பின்னர் தான் வெளியேறியது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மாலத்தீவின் அதிபர் முகமது  முய்சு இப்பொழுது சீனாவிற்கு பயணம் செய்கிறார் . குறிப்பாக, இதுவரை பதவியில் இருந்த அதிபர்கள் முதலில் பயணம் செய்யும் நாடாக இந்தியா இருந்தது .ஆனால் இப்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாலத்தீவு அதிபர் சீனாவிற்கு பயணம் செய்கிறார். இந்தியாவை விட சீனாவை நட்பு நாடாக பார்க்கிறார். காரணம், இந்திய ராணுவம் அவர்கள் மண்ணில் இருந்து வெளியேற மறுக்கிறது. இந்திய ராணுவ வெளியேற்றத்தை அவர் ஒரு பிரச்சனையாக உலக அரங்கில் வைக்கிறார். அந்த நேரத்தில் தான் மேற்கண்ட விரும்பத் தகாத நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

மாலத் தீவின் அமைச்சர்கள் அல்லது வேறு எவரும் நமது பிரதமர் மோடியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது கண்டிக்கத்தக்கது, அது நமக்கு வருத்தம் தருகிறது என்பதை நான் தெளிவாக கூறுகின்ற அதே நேரத்தில், மாலத்தீவில் இருந்து நமது ராணுவம் வெளியேற வேண்டும் என்பதையும், அந்த சின்னஞ்சிறிய நாட்டின் குரல் வளையை நெரிக்கும் வண்ணமோ, சுற்றுலா வியாபாரத்தை பாதிக்கும் செயலிலோ இந்தியா  ஈடுபடக்கூடாது என்பதையும் இந்தியாவில் உள்ள ஜனநாயக சக்திகளாகிய நாம்  வலியுறுத்த வேண்டும். இந்தியா ஜனநாயகத்தை மதிக்கும் நாடு என்ற பெயர் உலக அரங்கில் நிலைக்க வேண்டும்.

கட்டுரையாளர்; ஹரி பரந்தாமன்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time