மக்களை முட்டாளாக்கும் முதலீட்டாளர்கள் மாநாடு!

-சாவித்திரி கண்ணன்

தமிழ்நாட்டை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளாராம்! “தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு மிகப் பெரிய பாய்ச்சல்” என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார்! உண்மை தான்! ஆனால், இது பின்னோக்கிய பாய்ச்சல்!

இந்தக் கட்டுரை தற்போதைய தமிழ்நாடு அரசாங்கத்திற்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உடனடி முடிவுக்கு வந்துவிட வேண்டாம். ஏனென்றால், ‘இந்த கட்டுரையில் சொல்லப்பட்ட விவரங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்தியாவிலும் பல மாநிலங்களில் நடப்பதே..’ என முழுமையாகப் படித்து முடிக்கும் போது உணர்வீர்கள்!

ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாம்…!

இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாம்..!

எல்லாம் பேப்பரில் தான்! இது போல எத்தனையோ பூ சுத்தல்களை அடிக்கடி பார்த்தாகிவிட்டது.

இதைப் போன்ற முதலீட்டாளர்கள் மாநாட்டை எடப்பாடி பழனிச்சாமியும் நடத்தி காண்பித்தார்!

அதற்கு முன்பு ஜெயலலிதாவும் இதே போல 2015 ஆம் ஆண்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கான முதலீடுகள் கிடைத்துள்ளன. ”இது 1991 முதல் 2011 வரையிலான 20 ஆண்டுகளில் கிடைத்த முதலீடுகளைப் போல இருமடங்கு” என்று பெருமை பேசினார்!

2015 ல் தான் சென்னையில் முதல் முறையாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் 9 நாடுகள் கலந்து கொண்டதாகவும், 23 பங்குதாரர் நிறுவனங்கள் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது. ”ஐந்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்” என அடித்துவிடப்பட்டது.

2019 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3.43 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும், பெரு நிறுவன முதலீடுகள் மட்டுமே ரூ.1,54,648 கோடி முதலீடு கிடைத்துள்ளதாகவும், இதன்  மூலம் 4,73,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அளந்துவிடப்பட்டது.

இவை எல்லாம் நடந்திருந்தால் தமிழக வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை பல மடங்கு குறைந்திருக்க வேண்டுமே! தமிழ் நாட்டில் வேலைக்கு ஆளே இல்லையே.. என்ற நிலை கூட தோன்றி இருக்குமே!

உண்மை என்னவென்றால், 2011-ல் தமிழகத்தில் 73,298 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக ஜெயலலிதாவின் அதிமுக அரசு அறிவித்தது. ஆனால், அவற்றில் வெறும் 238 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே தமிழகத்துக்கு வந்துள்ளது என்பது பிறகு தெரிய வந்தது!  இது சொல்லப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெறும் 0.3 சதவீதம் தான்.

ஆக, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் லட்சணங்கள் இவ்வளவு தான்! இப்படி பகிரங்கமாக அம்பலப்பட்ட போதும் மீண்டும், மீண்டும் இது போன்ற ஒப்பந்தங்களை ஏன் போடுகிறார்கள்? எதற்காக போடுகிறார்கள்? என்றால், இதற்கு பின் இருப்பது சர்வதேச கார்ப்பரேட் அரசியலாகும்.

ஸ்டாலினுடன் நின்று முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தங்கள் போட்டதாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த இதே நிறுவன முதலாளிகளே ஆந்திராவிலும், குஜராத்திலும், உத்திரகாண்டிலும், உத்திரபிரதேசத்திலும் அந்தந்த மாநில முதலமைச்சர்களுடன் நின்றும் போஸ் தருகிறார்கள்! அங்கேயும் பல்லாயிரம் கோடிகளை அறிவிக்கிறார்கள். இறுதியில் அவர்கள் என்ன முடிவு எடுப்பார்கள் என்பது கடைசி நேர பேரம் வரைக்கும் யாருக்கும் தெரியாது.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் ரூ.16,000 கோடி, டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி, ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி நிறுவனம் ரூ.10,000 கோடி, கோத்ரேஜ் நிறுவன விநியோக மையம் ரூ.515 கோடி, பெகாட்ரான் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1,000 கோடி..

என வெளிநாட்டு மற்றும் வட இந்திய நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளனராம்.

இது தவிர, ஏற்கனவே தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் சில நிறுவனங்களை அழைத்து அவர்கள் தொழிலை இன்னும் சற்று விரிவாக்கம் செய்யச் சொல்லி ஒப்பந்தம் போட்டுள்ளனர். அவற்றில் சில;

டிவிஎஸ் குழுமம்; வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்ப துறையில் கூடுதல் முதலீடுகள்!

பெகட்ரான் நிறுவன மின்னணு உற்பத்தி தொழிற்சாலை; செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த ஆலையின்  விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

ஹூண்டாய் நிறுவனம்; கூடுதலாக ரூ. 6 ஆயிரம் கோடி முதலீடு செய்வதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மிட்சுபிஷி நிறுவனத்தின் குளிர்சாதன தயாரிப்பு தொழிற்சாலை; கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள இந்த ஆலையின் விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவன ஸ்மார்ட் போன்கள்,மின்னணு பாகங்கள்  தொழிற்சாலை; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

டி.வி.எஸ்.வேணு சீனிவாசன், மத்திய அமைச்சர் பியுஸ் கோயல், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

இந்த விரிவாக்க விவகாரங்கள் வரை சில உண்மைகளாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், இவர்கள் ஏற்கனவே நம்மிடையே இயங்கி வருகிறார்கள் என்ற வகையில், சொல்லப்பட்டதில் ஒரளவேனும் நடக்க வாய்ப்புள்ளது.

ஆனால், மற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் என்பவை நிச்சயமல்ல. நடந்தால் நடக்கலாம். இந்த மாநாடு என்பதே பரஸ்பர புரிதலுக்கான முயற்சி. அவ்வளவே! இதை வைத்து தேர்தல் நேரத்தில், ‘இவ்வளவு வேலை வாய்ப்புகள் தந்துள்ளோம்’ எனச் சொல்லிக் கொள்ளலாம்! ”எங்கே துல்லியமாக சொல்லுங்க பார்ப்போம்” என யாரும் கேட்க போவதில்லை.

இவர்களுக்காகத் தான் விவசாய நிலங்களை விழுங்கும் ‘நில ஒருகிணைப்பு மசோதா’ கொண்டு வரப்பட்டுள்ளது. தொழிலாளர் சட்டத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டு, ‘தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு எப்படி வேண்டுமானாலும் சுரண்டிக் கொள்ளூங்கள்’ எனத் தூக்கித் தருகிறார்கள்! ‘நிலமா? எங்க வேண்டும் சொல்லுங்க.., விவசாயிகள் இடமிருந்து பிடுங்கி தருகிறோம். மின்சாரமா? இதோ எடுத்துக் கொள்ளுங்க, சலுகை கட்டணம் தந்தால் போதும்..’ என அள்ளித் தருகிறார்கள்!

இதைத் தவிர ஏற்கனவே அம்பானி, அதானிகளெல்லாம் தமிழ்நாட்டை கணிசமாக குத்தகைக்கு எடுத்து சூறையாடி வருகின்றனர்!

விவசாயம் செழித்தோங்கும் தஞ்சை டெல்டா பகுதியில் கணிசமான தொழிற்சாலைகளுக்கு இடம் தருகிறார் டி.ஆர்.பி.ராஜா! இத்தனைக்கும் இவர் டெல்டாகாரர் தான்! சொந்த மண்ணின் மைந்தர்களான விவசாயிகளை துச்சமாக மதித்து, இங்குள்ள விவசாயம் மற்றும் சிறுகுறு தொழில்களை செயலிழக்க வைத்து, முடக்குவதே நமது ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்கின்ற வேலையாக உள்ளது. இந்த முதலீட்டாளர் மாநாட்டில் பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்தின் மாதிரி வடிவத்தை காட்சிப்படுத்திய வகையில் தங்கள் கல் நெஞ்சை கண்ணாடி போல காண்பித்துக் கொண்டனர் ஆட்சியாளர்கள்!

உண்மையில் சிறுகுறு தொழில்களே அதிக வேலை வாய்ப்பை தருகின்றன. எளிய மனிதர்களை சுயமரியாதையுடன் வாழ வைக்கின்றன. ஆனால், அவற்றை முடக்கி, ‘சிறு, குறு தொழில் முனைவோர்களை பன்னாட்டு தொழிற்சாலைகளின் கூலிகளாக்கிவிடுவதே எங்கள் லட்சியம்’ என மத்திய, மாநில அரசுகள் கங்கணம் கட்டிச் செயல்படுவது தான் கொடுமை!

ஒரு கிழக்கிந்திய கம்பெனியை விரட்டத் தான் மாபெரும் சுதந்திர போராட்டம் நடத்தப்பட்டு ரத்தம் சிந்தப்பட்டது. ஆனால், இன்றோ பல கிழந்திந்திய கம்பெனிகள் மட்டுமல்ல, பல வட இந்திய கம்பெனிகளே கூட, அந்த கிழக்கிந்திய கம்பெனிகளை விட மோசமாக நடந்து கொள்வதை பார்க்க முடிகிறது! பெற்ற சுதந்திரத்தை விற்ற பாவிகளாக உள்ள ஆட்சியாளர்கள் தானே நம்மை ஆள்கிறார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time