வீதியில் வீசப்பட்ட பெண்கள் விடுதி..!

-ம.வி.ராசதுரை

திருவல்லிக்கேணி ஓ.வி.எம். தெருவில் வீட்டு உபயோகப் பொருட்கள் சிதறிக் கிடந்ததைக் கண்டு அதிர்ந்தோம்! சில பெண்கள் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தனர். அந்த குறுகிய தெருவில் இந்த பொருட்களை பார்த்தவாறு வாகன ஓட்டிகள் மெல்லக் கடந்தனர்! என்ன தான் நடந்தது..? என விசாரித்தோம்.

புதுயுகம் என்ற இந்த பெண்கள் விடுதியை நடத்தும் பவா சமத்துவன் ஒரு ஊடகவியலாளர், மற்றும் எழுத்தாளராகும். அவரிடம் பேசினோம். ”20 ஆண்டுகளுக்கு முன்பு , மறைந்த தமிழறிஞர் கி.த. பச்சையப்பன், ஓவியர் வீர சந்தானம் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், திருவல்லிக்கேணி ஓ.வி.எம். தெருவில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, பராமரிப்பு இல்லாமல் இருந்த  வீட்டை வாடகைக்கு எடுத்து புதுயுகம் பெண்கள் விடுதி என்ற பெயரில் நடத்த தொடங்கினேன்.

பவா சமத்துவன்

கட்டிடம் பாழடைந்து கிடந்ததால், ஊரப்பாக்கத்தில் உள்ள என் நிலத்தை விற்றும், வங்கியில் கடன் பெற்றும் சில லட்சம் செலவில்  கட்டிடத்தை புதுப்பித்து, இதை நிர்வகித்து வந்தேன். கட்டிட உரிமையாளருக்கு மாத வாடகை ரூ 45,000 கொடுக்கிறேன். இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள் 22 பேர் ,  அரசு பெண் ஊழியர்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள்,  பெண் மருத்துவர்கள் உள்பட 45 பெண்கள் தற்போது தங்கியிருந்தனர். விடுதி பணியாளர்களாக 5 பெண்கள் தங்கி உள்ளனர்.

திங்கள் கிழமை ( ஜனவரி-8) மதியம் நான் இல்லாத நேரத்தில் சுமார் ‌ 100 பேர் அதிரடியாக இங்கு வந்துள்ளனர். ஓரிரு அறைகளைத் தவிர மற்ற அறைகளிலிருந்த பெண்கள் கல்லூரிகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்றிருந்தனர்.

விடுதி பணியாளர்களின் பேச்சுக்கு காத்திராமல் வந்திருந்தவர்கள் அறைகளை உடைத்து அத்தனை உடைமைகளையும் ரோட்டில் கொண்டு வந்து போட்டனர். அங்கு திரண்ட தெருவாசிகள் கூட்டத்தை ”இது நீதிமன்ற உத்தரவு” என்று போலீசார் கலைய வைத்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப்  பெண்கள் விடுதியை சிறப்பாக ஒரு சமூகப் பார்வையுடன்  நிர்வகித்து வருகிறோம். கலைஞர் முதல்வராக இருந்த போதும் ஒரு அராஜகம் நிகழ்த்தப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி நேரில் வந்து, ‘இனி இப்படி ஒரு நிகழாமல் பார்த்துக் கொள்வதாக’ கூறிவிட்டுச் சென்றார்.

இந்த வீடு அரசியல் பின்புலம் கொண்ட பத்மினி மோகன் என்பவருக்கு சொந்தமானது ஆகும். இவர் அன்பு மணி ராமதாஸின் நெருங்கிய உறவினர் ஆவார். இந்த விடுதி தொடர்பாக அவருக்கும் எனக்குமான பிரச்சினையில் கோர்ட் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வந்தது. எனவே, நான் உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளேன். நீதிக்காக காத்திருந்த சூழலில் பட்டப்பகலில்  இப்படிப்பட்ட ஒரு அராஜகம் நிகழும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. என்னிடம் பேசி இருப்பார்களேயானால், நானே ஒரு கால அவகாசம் கேட்டு அதற்குள் காலி செய்து தந்திருப்பேன். தற்போது இந்தப் பெண்களை பாதுகாக்க முடியாத பேரவலத்தை தவிர்த்து இருப்பேன். ஒரு சில பெண்கள் ‘நகைகளை காணவில்லை’ என்கிறார்கள். ஒரு சிலர் ‘தங்கள் உடமை சிதைக்கப்பட்டுள்ளது’ என்கிறார்கள்! தற்போது எல்லோரும் தாங்கள் கட்டிய பணத்தை உடனே திரும்ப கேட்கிறார்கள். ஏனென்றால், வேறு இடத்தில் அவர்கள் உடனடியாக சேர வேண்டியுள்ளது. விழி பிதுங்கி நிற்கிறேன்’’ என்றார் வேதனையுடன்.

விடுதி நிர்வாகி பிரமீளா

விடுதி நிர்வாகி பிரமிளா நம்மிடம் கூறியதாவது; காலி செய்ய நீதிமன்ற உத்தரவு  இருந்தாலும், உரிய அவகாசம் கொடுக்க வேண்டும். எந்தவித அறிவிப்பும் எங்களுக்கு செய்யவில்லை என்று. நிர்வாகி பாவா சமத்துவன் வெளியூரில் இருக்கும் போது மிகவும் திட்டமிட்டு மனசாட்சி இன்றி நடந்து கொண்டனர்.

சுமார் 30 போலீசார் உடன் வந்திருப்பார்கள். தொடக்கத்தில் பெண் காவலர் யாரும் வரவில்லை. ‘’இந்த விடுதி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. நிர்வாகியும் இப்போது இல்லை. விடுதியை காலி செய்யப் பிறப்பிக்கப்பட்ட  நீதிமன்ற உத்தரவை காட்டுங்கள்’’ என்று கூறினேன்.  ‘’அதைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை’’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

‘’அறைகளில் இருப்பது மாணவிகள் மற்றும் பெண் ஊழியர்களின் உடைமைகளும் உடைகளும் மாலையில் அவர்கள் வந்து விடுவார்கள் அதன் பிறகு நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்’’ என்று கேட்டுக் கொண்டேன். அவர்கள் எங்கள் பேச்சை காது கொடுத்து கூட கேட்கவில்லை. அறைகளை உடைத்து அனைத்து பொருட்களையும் அள்ளி வெளியே போட்டார்கள்.மிக மோசமாக நடந்து கொண்டார்கள். தங்களை வக்கீல்கள் என்று சொல்லிக் கொண்டார்கள் .

ஆனால், அவர்கள் பேசிய வார்த்தைகள் மிக மோசமானதாக இருந்தது.பெண் என்றும் பார்க்காமல் தகாத வார்த்தைகளைப் பேசினர். போலீசாரிடம் சென்று,  ”இப்படி ஒரு சம்பவம் நடப்பதை நீங்கள் அனுமதிக்கலாமா? எங்களுக்கு அவகாசம் பெற்று தர வேண்டாமா?” என்று கேட்டேன். அவர்கள் பாராமுகமாக இருந்தனர்.

அங்கு கூட்டம் சேர்ந்து விடக்கூடாது என்பதில் தான் கண்ணும் கருத்துமாக இருந்தனர். தாமதமாக வந்த ஒரு பெண் காவலர் மட்டும் என் அருகில் வந்து தன் வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.” இவ்வாறு அவர் வேதனை தெரிவித்தார்.

தமிழ் உணர்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டு ரோட்டில் வீசப்பட்ட உடைமைகளுடன் கண்ணீர் சிந்தி நின்ற  45 பெண்களையும்  அருகில் உள்ள விடுதியில் தங்கி வைத்துள்ளனர். இந்த விவகாரம் திருவல்லிக்கேணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ.வி.எம்.தெரு நெடுகிலும்  45 பெண்களின் உடைமைகள் அங்கு நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வின் சாட்சியமாக இரண்டு நாட்களாக கிடந்தது. பிறகு மெல்ல, மெல்ல அப்புறப்படுத்தப்பட்டன! இதற்கிடையில் இந்த கட்டிட உரிமையாளர் தரப்பு விளக்கத்தை பெற முயன்றோம். பாமக தரப்பு நண்பர்களிடம் தொடர்பெடுத்து கேட்டோம். ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. கட்டிட உரிமையாளரின் தொடர்பு எண் கிடைக்கவில்லை. அவர்கள் தரப்பு விளக்கத்தை தந்திருந்தால் அதை இந்தக் கட்டுரையுடன் சேர்த்தே வெளியிட்டு இருப்போம்.

கட்டுரையாக்கம் ; ம.வி.ராசதுரை

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time