மீனவ கிராமங்களில் கூட சாதிப் பாகுபாடா?

-பீட்டர் துரைராஜ்

 தமிழகத்தின் சில மீனவ கிராமங்களில் நிலவும் நாட்டாமைத்தனங்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு மீன் பிடிக்க  உள்ள தடைகள் , இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள், இலங்கை சிறையில் வாடும் 120  மீனவர்கள் குறித்தெல்லாம் மீனவ தொழிலாளர் சங்கத்தின் சின்னதம்பி அதிர்ச்சி தகவல்களை நேர்காணலில் பதிவு செய்கிறார்.

அதிராம்பட்டினத்தைச் சார்ந்த நான்கு குடும்பங்களை ஊர் ஊர்விலக்கம் செய்துள்ளார்கள்! என்ன நடந்தது?

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காந்திநகர் என்ற மீனவக் கிராமம் உள்ளது. இங்கே சேகர் என்பவரின் மகன், வெளியூரில் இருந்து வந்த நண்பர்களை தனது படகில் ஏற்றி சுற்றிக் காண்பித்து  இருக்கிறார். ஆனால், அன்று மீன் பிடிக்கக் கூடாது என்று ஊர்க்கட்டுப்பாடு இருந்தது. இந்த இள வயது பிள்ளைகள் ஆர்வக் கோளாறால் அதை மீறி சென்றுவிட்டனர். அதற்காக அந்த குடும்பம் படும் துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த குடும்பத்தை முற்றிலும் ஊர்விலக்கம் செய்துவிட்டனர்.

கடந்த  எட்டு மாதங்களாக அவர்களால் மீன் பிடிக்கச் செல்ல முடியவில்லை.  மீன் பிடிக்காவிட்டால், அவர்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. இது எல்லோருக்கும் தெரியும். இதனால் அவர்களுக்கு பரிந்து பேசிய  முத்து ராமு, சத்தியா, காளிதாஸ் என்பவர்களையும் தண்டோரா போட்டு ஊர்விலக்கம் செய்துள்ளனர்! இதனால் அவர்களோடு யாரும் பேசினாலோ, உதவினாலோ அவர்களும் தண்டிக்கப்படுவர். இதனால் கடந்த எட்டு மாதங்களாக அவர்கள் வாழவே முடியாமல் சிரமப் படுகிறார்கள்.

அதில் உள்ள காளிதாஸ் மீனவர் சங்கத்தில் உள்ளவர்.  ஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக இத்தகைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை உயர்நீதிமன்றம் சென்றனர்.

 இப்போது தீர்ப்பின் தொடர்ச்சியாக வட்டாட்சியர் தலையிட்டுள்ளார். அவர் கூட்டிய கூட்டத்தில் இரண்டு தரப்பிலும் கலந்து கொண்டனர். ”நாட்டாமை தரப்பில், ஊர் விலக்கம் செய்தது தவறு என தண்டாரோ போட்டு அறிவிக்க வேண்டும்” என்று வட்டாட்சியர் கூறிய அறிவுறுத்தலை ஏற்றுக் கொள்ளாமல், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாமல் நாட்டாமைகள் திரும்பிச் சென்றுவிட்டனர்!

 இது போன்ற ஊர்ப் பஞ்சாயத்துகளை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். இவையெல்லாம் தனிமனித உரிமைகளுக்கு எதிரனவை. தவறிழைத்தால் அரசு நிர்வாகம் தான்  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மற்றவர்கள் துணையின்றி அவர்களால் மீன் பிடிக்க முடியவில்லை. படகை தள்ளிவிட, ஒத்தாசை செய்ய மற்றவர்கள் வராமல் இவர்களால் தனியாக மீன் பிடிக்க முடியாது. உள்ளூர் கடைகளில் பால், மிளகாய், காய்கறி போன்றவை கூட வாங்க முடியவில்லை.

மீனவ கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக சொல்லப்படுகிறதே?

ஆமாங்க. திருவாரூர் மாவட்டம், தம்பிக்கோட்டை கீழக்காடு பகுதியில் தாழ்த்தப்பட்டவர்கள் கடலுக்கு செல்ல தடை போடுகிறார்கள்! அப்படியே போனாலும் மீனவத்தொழில் செய்ய அந்தப் பகுதி மீனவர்கள்  நடைமுறை சாத்தியமற்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீனவர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்  ஆவதே ஒரு சவாலாக இருக்கிறது, அதன் மீன்பிடித் தொழிலுக்கான பலன்களை பெறுவதிலும் தடைகள்  உள்ளன. இது ஏதோ திருவாரூர் பகுதிகளில் மட்டும் இல்லை. நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆற்காட்டுத் துறையிலும் இதே போல நிலமை தான் இருக்கிறது. இதுபற்றி நாகப்பட்டினம், திருவாரூர் ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை.

திருவாரூர் மாவட்டத்தில் முத்துப் பேட்டை பகுதி  அலையாத்திக் காடுகளைப் பார்க்க வரும் சுற்றுலா பயணிகளிடம் படகு கட்டணம் தாறுமாறாக வசூலிக்கிறார்களே? நியாயமா?

நாங்க பணம் வசூலிக்க முடியாது. முத்துப்பேட்டை பகுதியில் உள்ள 13 மீனவக் கிராமங்களில் புகழ்பெற்ற   அலையத்தி காடுகளை வனத் துறை எடுத்துக் கொண்டது. இதனால் அதற்கான சுற்றுலா படகுகளை வைத்து தொழில் செய்த மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதும் மீன்வளத்துறை படகுகளில் அவர்களை அழைத்துச் செல்வதும் அதே மீனவர்கள் தான். அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.800 என்றால், முன்னூறு, நானூறு என சட்டவிரோதமாக ஊழியர்கள் வசூலிக்கிறார்கள். இந்த பணியை மீனவர்கள் வசமே ஒப்படைக்கலாம்.

இந்தக் காடுகளில் உள்ள உயிரினங்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் மீன்துறை வசம் இருந்த ஒருசில கட்டுப்பாடுகள் வனத்துறையிடம் கொடுக்கப்பட்டு விட்டன. படகுகளில் அழைத்துச் செல்வது மீனவர் துறையிடமும், காடுகள் என்ற பெயரில் வனத் துறையிடமும் உள்ளன.பெரும் குழப்பமே நிலவுகிறது. பக்கத்தில் உள்ள இறால் பண்ணைகளின் கழிவுகள் இந்தப் பகுதியை நாசப்படுத்துகின்றன.

தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரதான பிரச்சினை என்ன?

எங்களுக்கு பெரும் ஆபத்தே இலங்கை கடற்படை தான். இவங்க ஒரு திமிங்கலமாக வந்து தமிழக மீனவர்களை விழுங்கி செல்கிறார்கள்! இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, இலங்கை கடற்படையினரால் ஏற்படும் பாதிப்புகள் கடுமையானவை. இலங்கை சிறைகளில் 120 க்கும் மேற்பட்ட இந்திய மீனவர்கள் சிறையில் இருக்கின்றனர். அவர்கள் பற்றிய விபரங்களை இலங்கை அரசு தெரிவிப்பது இல்லை. இங்கிருந்து இலங்கை சிறைக்குச் சென்று வந்த  மீனவர்கள் சொல்லிதான் அவர்கள் குடும்பத்தாருக்கே தகவல் தெரிய வருகிறது. 2007, 2008, 2009 ஆம் ஆண்டுகளில் நாகப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்றவர்கள் 12 பேர் காணாமல் போய்விட்டனர். அவர்கள் நிலை என்ன என்று இன்று வரை தெரியாது.

2018 ல் இலங்கை நாடாளுமன்றம் எல்லைதாண்டி வரும் படகுகளை இலங்கையின்  தேசியச் சொத்தாக அறிவிக்கலாம் என சட்டம் போட்டது. 26 இலட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும், சிறைத் தண்டனை விதிக்கவும் அது வகை செய்தது. 143 படகுகள் இலங்கை அரசின் வசம் இன்னமும் உள்ளன. இலங்கை கடற்படையினர் தங்கள் படகை இந்திய மீனவர்களின் படகுகள் மீது மோதி சேதம் விளைவிப்பதும், மீனவர்களைத் தாக்கி,உடல் ஊனம் விளைவிப்பதும் எப்படி சரியாக இருக்கும். இதனால் கை கால் பாதிக்கப்பட்ட மீனவர்களும் உள்ளனர். மத்திய அரசு தமிழர்களை அசட்டையாகத் தான் பார்க்கிறது.

இலங்கை கடற்படை தாக்குதலால் படு காயமடைந்த மீனவரின் கை!

இப்படி காணாமல் போன மீனவர்களுக்கு ஏழு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகும் இறப்புச் சான்றிதழ் வாங்குவது சிரமமாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குவதை எளிமைப் படுத்த வேண்டும்.

மீன் வளத்தை கார்பரேட்டுகள் கொள்ளையிடுவதாக சொல்லப்படுகிறதே ? 

இப்ப அரசு போடுகிற சட்டம், திட்டம் எல்லாமே கார்ப்பரேட்டுகள் கடலை களவாடவே துணை போகின்றன! 1983 ஆம் ஆண்டு சட்டபடி படகின் அளவு எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறை இருந்தது. இது விபத்துகளை கட்டுப்படுத்த உதவியது.  இப்போது ஒன்றிய அரசு வகுத்துள்ள கொள்கைகள் அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கும், பெரிய விசைப் படகு வைத்திருப்பவர்களுக்கும் ஆதரவாக உள்ளன. நீலப் பொருளாதாரம், நீர்வளச் சட்டம் 2020, நீலப் புரட்சி என்று சொல்லக்கூடிய எந்தக்  கொள்கை வகுக்கும் போதும் மீனவர் அமைப்புகளோடு கலந்து பேசுவதில்லை.

1991 ஆண்டு வரையறைபடி கடலில் இருந்து 500 மீ தூரம் வரை அனுமதி இல்லாமல் கட்டுமானம் செய்ய முடியாது. இதனை 2019 ம் ஆண்டில்  CRZ-ல் திருத்தம் செய்து 200 மீ. என குறைத்தார்கள். இதனால் இந்த இடங்களில் பெருநிறுவனங்கள் கேளிக்கை விடுதி போன்றவை கட்டி கடல் சூழலையே கெடுத்துவிட்டனர்.

அதானி துறைமுகத்தை எதிர்த்து மீனவர்கள் ஊர்வலம்

திருவள்ளுவர் மாவட்டம் காட்டுப் பள்ளி துறைமுகத்தை அதானிக்கு கொடுத்துள்ளனர். இது அரபிக் கடலும், வங்காள விரிகுடாவும் சங்கமிக்கும் முகத் துவாரம். முக்கியமான இடம். விதியைத் தளர்த்தி கடற்கரையை ஒட்டி தொழிற்சலைகள் கட்ட அனுமதிக்கப்பட்டதால்  சென்னையில் எண்ணைய்க் கசிவு ஏற்பட்டது. அமோனியா வாயு தாக்கி மக்கள் பாதிப்பு அடைந்தனர். 12 கடல் மைல் உள்ளே  தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்குமடி போன்ற வலைகளை வைத்து விசைப் படகுகளில் மீன் பிடிக்கிறார்கள். இதனால் நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன் தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஆழ்கடல் மீன்பிடிப்பு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருகிறது.

மீனவர்களுக்காக தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன ?

பட்டியலினத்தைச் ( தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை )சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீன்பிடி தொழில் செய்ய விரும்பினால் அதற்கு தடை இருக்கக் கூடாது. ஒரு சில மீனவ கிராமங்கள் இதனை எதிர்க்கின்றன. இந்த சாதியைச் சேர்ந்தவர்தான் இந்த தொழிலைச் செய்ய வேண்டும் என்பது எப்படி சரியாக இருக்கும். இந்தியாவில் 9 கடற்கரை மாநிலங்கள் உள்ளன. 1076 கி.மீ. நீளத்திற்கு தமிழ்நாட்டில் கடற்கரை உள்ளது. 12 கி்மீ. கடல் மைல் வரை மாநில அரசின் அதிகார வரம்பில் வரும். அங்கு நாட்டுப் படகில் மீன் பிடிப்பார்கள்.

ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர் / மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்களில் ஏழு இலட்சத்திற்கு அதிகமான மீனவத் தொழிலாளர்கள்  உறுப்பினர்கள் உள்ளனர்.

மீனவர் சங்கங்களில் உறுப்பினராக இருந்தால்தான் அரசின் உதவி, மானியம் போன்றவை, வீடுகட்ட உதவி போன்றவை கிடைக்கும். எனவே கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களுக்கு அரசியல் தலையீடின்றி, சாதி பாகுபாடின்றி பலன்பெற ஆவன செய்ய வேண்டும். மீனவர்களுக்கு என மீன்வள வங்கி உருவாக்க வேண்டும். மீனவர் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவைகளை அமலாக்க வேண்டும்.

நேர்காணல்: பீட்டர் துரைராஜ்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time