7.5% உள் ஒதுக்கீடு வெற்றியா தோல்வியா? – தீர்வில்லாத குழப்பங்கள்!

சாவித்திரி கண்ணன்

’’அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த அளவாவது ஒரு வாய்ப்புக்கு உத்திரவாதம் கிடைத்ததே’’ என ஆறுதல் பெற முடியாத அளவுக்கு இதில் பல சந்தேகங்கள்,குழப்பங்கள்… நிறைந்துள்ளன!

மேலும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு மிகவும் அபாரமானது! இதில் வெற்றி பெற்றது சமூக நீதியா? சாதுரியமான பாஜகவின் அணுகுமுறையா?

யாருமே எதிர்பார்த்திராத வகையில் தமிழக அரசு நேற்று ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல்  அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சதவிகிதத்தை அவசரச் சட்டம் கொண்டு வந்து அறிவித்தது! ’’இதன் பின்னணியில் என்ன நடந்தது?’’ என்ற நமது விசாரணையில் தெரிய வந்ததாவது;

# 7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுகவின் அரசியல் செல்வாக்கு வெகு அதிகமாக ஓங்கி வளர்கிறது. அதிமுகவின் இமேஜ் அதள பாதாளத்திற்குப் போகிறது…ஆகவே இது தேர்தலில்  அதிமுகவைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற உளவுத்துறை ரிப்போர்ட்.

# ’’மார்ச் 21 லேயே நாம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு, ஏப்ரலில் நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைத்து,முறைப்படியான பரிந்துரை பெற்று,செப்டம்பரில் சட்ட மன்றத்திலும் தாக்கல் செய்து,கவர்னருக்கு அனுப்பினோம்! இந்த காலகட்டத்தில் ஒவ்வொரு அசைவையும் கவர்னரும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார். இதற்குப் பிறகும் அவர் காலதாமதம் செய்து வருவது ஆட்சிக்கும்,கட்சிக்கும் மிகப் பெரிய பின்னடைவை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது! இதற்கெல்லாம் காரணம் கவர்னர் தான்! ஹைகோர்ட் வலியுறுத்தியும் அதிக கால அவகாசம் எடுக்கிறார். இதை சொலிசிடர் ஜெனரல் துஷார் எதிர்க்கவாய்ப்பில்லை என்பதும் தெரியவருகிறது. ஆகவே,அதிரடியாக அரசாணை போட்டு நிறைவேற்றுவதன் மூலம் தான், இழந்த செல்வாக்கை மீட்க முடியும் எனவே, அரசாணை போட்டு நிறை வேற்றிவிட்டு கவர்னரைப் பார்த்து சமாதானம் செய்து கொள்ளலாம்.’’ என்பதாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் கேரள கவர்னராக இருந்தவருமான சதாசிவம் சொன்ன யோசனையின் அடிப்படையில் தான் எடப்பாடி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிய வருகிறது.

# அனைத்து எதிர்க்கட்சிகள், நீதிமன்றம், தமிழக பாஜக ஆகிய அனைத்து தரப்பும் 7.5%  ஒதுக்கீட்டை  ஆதரித்த நிலையில் கவர்னரின் தாமதம் மக்களிடையே உருவாகியுள்ள கவர்னருக்கு எதிரான கொந்தளிப்பை அவரை மீறுவதன் மூலம் ஆளும் கட்சியே அறுவடை செய்யும் நோக்கமும் இதன் பின்னணியிலிருந்துள்ளது.

# அதே சமயம் கவர்னரின் தாமதத்திற்குப் பின்னணியில், எந்த  நீட்டுக்கு எதிராகத் தமிழக எதிர்க்கட்சிகள் போராடினவோ, அவை அனைத்தையும் இந்த நீட்டுக்குள் 7.5% உள் ஒதுக்கீடை தந்தே ஆக வேண்டும் என கதறி,போராட வைத்தாயிற்று. ஆக,அவர்கள் இனி இதன் மூலம் நீட் எதிர்ப்பை முற்றிலும் முனை மழுங்கச் செய்தாயிற்று!

எனவே, இந்த 7.5% ஒதுக்கீட்டில் எத்தனைவிதமான குழப்பங்களும்,சந்தேகங்களும் உள்ளன எனப் பாருங்கள்;

# இது அரசு பள்ளிகளுக்கு மாத்திரமா? அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளையும் உள்ளடக்கியதா என்பது சரியாகத் தெளிவுபடுத்தப்படவில்லை!

# அரசு உதவி பெறும் பள்ளிகளை உள்ளடக்கினால்,அவர்களே சுமார் 90% சதவிகித ஒதுக்கீட்டை அபகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அரசு எவ்வாறு எதிர்கொள்ளும்?

# இது ஒன்றாம் வகுப்பிலிருந்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமானதா? அல்லது ஆறாம் வகுப்பிலிருந்து அரசு பள்ளியில் படித்தாலே போதுமானதா? இதில் இரண்டாவது வாய்ப்பு வழங்கப்படுமானால், ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை  தனியார்ப் பள்ளியில் படித்துவிட்டு ஆறாம்வகுப்பில் இருந்து அரசு பள்ளியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அப்நார்மலாக அதிகரிக்குமே…?

# கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, தனியார்ப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர் களுக்கும் இது பொருந்துகிறது என்றால், பாரதீய வித்தியா பவன்,பத்ம சேஷாத்திரி ஆகிய பள்ளிகளில் அரசு கோட்டாவில் படிக்கும் மாணவர்களுக்கும் இது போய்விடும் வாய்ப்புள்ளதே…!  எனில் ஏழை,எளிய கிராமப் புற பின்தங்கிய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி என்பது எப்போதுமே ஒரு எட்டாக் கனிதானா?

# 35% அரசு பள்ளிகளில் பிசிக்ஸ்,கெமிஸ்டிரி,பயாலஜி ஆகிய பாடங்களில் ஆசிரியர்களே இல்லை. அவர்களுக்கு இந்த ஒதுக்கீட்டால் என்ன பயன் கிடைக்க முடியும்.ஆகவே அனைத்து காலியிடங் களையும் தகுந்த ஆசிரியர்கள் கொண்டு நிரப்ப அரசு உத்திரவாதம் அளிக்குமா?

# மொத்த அரசு பள்ளிகளில் சுமார் ஐந்து சதவிகித பள்ளிகளில் மட்டுமே மிக சிறப்பான கல்வித் தரம் பேணப்பட்டு வருகிற நிலையில் அந்த குறிப்பிட்ட அரசுபள்ளிகளின் மாணவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பு போய்விடும் வாய்ப்பும் உள்ளது!

# ஒட்டுமொத்த அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கி  அவர்களை தனியார் பள்ளி மாணவர்களோடு போட்டியிடும் தகுதியை வழங்கும் எண்ணம் வருங்காலத்திலாவது அரசுக்கு வருமா? அல்லது உள் ஒதுக்கீடு தான் இருக்கிறதே என விட்டுவிடுமா?

# இது எல்லாவற்றையும் விடக் கொடுமையானது எந்த நீட் தேர்வு வேண்டாம் என தமிழகத்தில் இவ்வளவு நாட்களாக நாம் போராட்டம் நடத்தி வந்தோமோ, இப்போது அதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளும் சாட்சியாக இந்த 7.5% ஒதுக்கீடு அமைந்துவிட்டது என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. ஆக, இதன் மூலம்  நீட் எதிர்ப்பை நீர்த்துப்போகச் செய்துவிட்டது அதிமுக அரசு! ’’அதான் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குதே இனி நீட்டாவாது? எதிர்ப்பாவது…’’ என ஒரு வகையில் நீட் எதிர்ப்பு முடிவுக்கு வந்துவிட்டது என அரசு விட்டுவிடுமா? அல்லது நீட்டை எதிர்க்கும் சட்ட போராட்டத்தை வலுவாக நடத்துமா?

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time