அந்தரங்கத்தை புனிதப்படுத்தும் திரைக் காவியம்!

-பீட்டர் துரைராஜ்.

‘ஆட்டோகிராப்’ படத்தில்  சேரன் முந்தைய காதலிகளை நினைவு கூர்வார்.  கிட்டத்தட்ட அந்த சாயலில்  ஆணுக்கு மாற்றாக ஒரு பெண்ணை மையப்படுத்தி வந்துள்ள இந்திப் படம் – three of us. கல்லூரி செல்லும் மகன் உள்ள ஒரு பெண்ணின்  பால்ய காலமும், நிகழ் காலமும் காட்சி மொழியில் விரியும் கவித்துவமாகிறது!

ஷைலஜா மத்திய வயதைக் கடந்த ஒரு பெண். அவளுக்கு ஏற்பட்டுள்ள மறதி நோயின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறுகிறாள். கல்லூரியில் படிக்கும் மகனைக் கூட மறந்து போகும் நிலை அவருக்கு வரலாம். தனது கணவனிடம் தான் படித்த நடுநிலைப் பள்ளி இருக்கும்  ஊருக்குச் செல்ல வேண்டும் என்கிற விருப்பத்தை தெரிவிக்கிறாள். ‘கிட்டத்தட்ட இறுதி ஆசையாக இருக்கலாம்’ என்ற நிலையில் அந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறான் அவள் கணவன்.

மும்பையில் வசிக்கும் இவர்கள் கொங்கன் பகுதியில் இருக்கும் கிராமத்திற்கு செல்கிறார்கள். அங்குதான் ஷைலஜா ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்தாள். ”அங்கு படித்ததாக இது வரை நீ சொன்னதில்லையே” என்று கேட்கிறான் அவள் கணவன் திபங்கர்.  ”சொல்லக் கூடாது என்ற எண்ணம் இல்லை, ஆனால் சொல்லவில்லை அவ்வளவு தான்” என்கிறாள் ஷைலஜா.

விடுமுறை தினத்தன்று பள்ளியைப் பார்க்கும் அவளுக்கு அந்தப் பள்ளியின் சிறந்த மாணவர்கள் பெயர் இருக்கும் அறிவிப்புப் பலகையில் ‘பிரதீப் காமத்’ பெயரைப் பார்த்து நினைவுகள் ததும்புகின்றன. இவளை அடையாளம் கண்டு கொண்ட இவளது பள்ளித் தோழி அந்த ஊரிலேயே வாழ்கிறாள்.  ”பிரதீப் காமத் எப்படி இருக்கிறான் என்று தெரியுமா?” என்று கேட்கிறாள் ஷைலஜா ! ”பிரதீப் எப்போது பிரதீப் காமத் ஆனான்?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறாள் அவளது தோழி. பிரதீப் உள்ளூர் வங்கியிலேயே மேலாளராக இருக்கிறான். மனைவி மகள்களோடு இருக்கிறான். பிரதீப் பெயரைக் கூறும் போது, ஷைலஜாவின் முக பாவனை மாறுவதை அவளது கணவன் கவனிக்கிறான்.

ஷைலஜா ஐந்தாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை அங்கு படித்தவள். நடுநிலைப் பள்ளியில் படித்த மாணவிக்கு அப்படி என்ன பெரிய கடந்த காலம் இருக்கக் கூடும்!  அந்தந்த பருவங்களுக்கே உரிய கதைகளும், நினைவுகளும் உள்ளனவே !  அவினாஷ் அருண் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். மும்பையில் தொடங்கும் கதை, கொங்கன் பகுதி கடற்கரை, ஊர் என அந்தக் கிராமத்திலேயே முடிந்து விடுகிறது. காட்சிகள் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் பள்ளி மாணவியாக இருந்தவள், திருமணமாகி தன் கணவனோடு வந்திருக்கிறாள். 28 ஆண்டுகள் கழிந்து தன் பள்ளி பருவத் தோழனைச் சந்திக்கும் போது என்ன பேசமுடியும் !

நுணுக்கமான உணர்வுகளை ஷைலஜவாக நடிக்கும் ஷெபாலி ஷா அற்புதமாக  வெளிப்படுத்துகிறாள். அவள் பேசுவதும் ஒரு செய்தி; பேசாமல் இருப்பதும் ஒரு செய்தி. பார்ப்பதும் ஒரு செய்தி. இந்த இடைவெளி நுணுக்கமான பல யூகங்களை நமக்குத் தருகிறது.

யூகங்களாகவே காட்சிகளும் நமக்குத் தென்படுகின்றன. பின்னோக்கு காட்சிகள் (flashback) இல்லை. நடந்தவை  அனைத்தையும் நாமே மனதுக்குள் காட்சிப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான். தேர்ந்த நடிகையான ஷெபாலி ஷா பெருமையை கொள்ள வைக்கிறார். ‘திரைப்படம் ஒரு காட்சி ஊடகம், அதில் வசனங்கள் குறைவாக இருக்க வேண்டும்’ என்பார் திரை விமர்சகரான இலியாஸ். அதற்கு சரியான உதாரணமாக இந்தப் படம் உள்ளது.

ஷைலஜாவின் கணவனான திபங்கருக்கு தன் மனைவி பற்றி, தனக்குத் தெரியாத பல விவரங்களை பிரதீப் சொல்வது ஆச்சரியமாகவும் இருக்கிறது; பொறாமையாகவும் இருக்கிறது. கண்ணியத்தோடு அவர்கள் இருவரும் தனியாக பேசும் வாய்ப்பை தருகிறான். அவர்களை புரிந்து கொள்கிறான். ”நாம் இப்படி எப்போது கடைசியாக இவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தோம்”  என்று கேட்கிறான் கணவனான திபங்கர். ”நாம் எப்போது கடைசியாக வருத்தமாக இருந்தோம்” என்று பதில் கேள்வி கேட்கிறாள் ஷைலஜா.

பிரதீப் மனைவி, இரண்டு குழந்தைகளோடு வாழ்கிறான்; ஷைலஜாவைப் பற்றி அவள் மனைவிக்கு ஏற்கனவே தெரியும். இரண்டு குடும்பங்களும் சேர்ந்து ஒரு வாரம் பழகுகின்றன. அவர்கள் இருவருக்கும் தேவையான space ஐ வழங்குகிறார்கள். மனம் விட்டு பேசி சிரிக்கிறார்கள். கடந்தகால துயரங்களை மறக்கிறார்கள்.

ஷைலஜா, திபங்கர், பிரதீப் என மூவருக்கு இடையில் கதை நடப்பதால் இதற்குப் பெயர் three of us என்று கூறலாம். இப்படி ஒரு கதைக் களன், அதுவும் பெண்ணை மையப்படுத்தி வந்ததில்லை. வசனங்கள் கவித்துவமாக உள்ளன. ப்ரதீப்பாக நடிக்கும் அலாவத் அற்புதமாக நடித்துள்ளார். பள்ளிப் பருவத்தில் நடந்த சம்பவங்கள் இன்னமும் அவர்கள் மனதில் அச்சாக உள்ளன. மறதி நோய் உள்ளவளுக்கு இவையெல்லாம் இன்னமும் நினைவில் இருப்பது, எவ்வளவு விநோதமானது. அந்த ஊரில் நடந்த அவளது தங்கை மரணம்  ஏற்படுத்திய காயத்தினால் அங்கு வராமல் இருந்தாளோ ! எல்லாவற்றிற்கும் பதில் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லையே !

ஷைலஜா, பிரதீப், அவள் மனைவி அவர்களை மையப்படுத்தியும், three of us என்ற பெயர்க்காரணம் இருந்திருக்கலாம். அல்லது ஷைலஜா, பிரதீப் மத்தியில் மூன்றாவதாக வரும் மாணவியும் three of us என்ற வரையறையில் வருவார்களோ ! ஷைலஜா வந்த பிறகு கவிதை எழுதும் பிரதீப்பும், அவனை புரிந்து கொள்ளும் அவன் மனைவியும் அற்புதமானவர்கள். நெட்பிளிக்சில் ஓடும் இந்த நூறு நிமிட படம், மெல்லிய தென்றலாக வருடிச் செல்கிறது. அன்பின் நீட்சியாக அமைவதெல்லாம் மகிழ்ச்சிக்குரியது தானே !

திரை விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time