கல்வித் துறையை கபளீகரம் செய்யும் காவிகள்!

-ச.அருணாசலம்

பொதுச் சொத்தை சூறையாடி, பல அதிகார அத்துமீறல்களை செய்யும் பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் பாஜக தலைவர்களாலும், ஆளுநராலும் கொண்டாடப்படுகிறார்! கல்வித் துறையில் காவிச் சிந்தனைகளை வளர்க்க, பெரியார் பெயரிலான பல்கலைக் கழகத்தையே கையில் எடுத்துள்ளன இந்துத்துவ சக்திகள்!

சமீப காலமாக பல சர்சைகளில் சிக்கி வருகிறது பெரியார் பல்கலைக் கழகம்.

வினாத்தாளில் சாதி குறித்த கேள்விகள்,

பெரியார் குறித்து ஆய்வு செய்த பேராசியர் தண்டிக்கப்படுவது,

‘கருப்பு சட்டை அணியக் கூடாது’ என சட்டாம்பிள்ளைத்தனம் செய்வது,

பாலியல் புகார்கள்.. என அணிவகுக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளின் பின்னணியிலும் ஆர்.எஸ்.எஸால் ஆதரிக்கப்படும் துணைவேந்தர் இருக்கிறார்!

1997 ஆம் ஆண்டு தமிழக அரசால் – தமிழக மக்களின் வரிப்பணத்தால் – நிறுவப்பட்ட பெரியார் பல்கலைக்கழகம் என்பது, மக்களின் -அரசின்- பொதுக் கல்வி அமைப்பாகும்.

இந் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் அரசின் விதிமுறைகளுக்கேற்பவே பணியாற்ற வேண்டும்.

தமிழக அரசுக்கு தெரியாமலே, அரசின் அனுமதி பெறாமலே ஒரு தனியார் நிறுவனத்தை முதல் போட்டு துவக்கி அதை பல்கலைக்கழக பணிகளுக்கு அமர்த்தியதோடன்றி, அந்நிறுவனத்திற்கு இட வசதி மற்றும் நிதி அளிப்பு ஆகியவற்றை பல்கலைக்கழகத்தின் கஜானாவில் இருந்தே துணை வேந்தர் ஜெகன்னாதன் வழங்கியுள்ளார் என்பது குற்றச்சாட்டு.

இந்த வகையில் பல்கலைக் கழக வளாகத்தில் சுமார் 2,000 சதுர அடியில் விதிகளை மீறி, அரசு அனுமதியின்றி தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை என நிறுவனத்தை நிறுவி, பலகலைக்கழகத்திற்கு வரும் பல கோடி நிதிகளை அபேஷ் செய்துள்ளார், பெரியார் பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகன்நாதன். பாஜகவின் ஆதரவு உள்ளதால் அத்துமீறி அடாவடித்தனமாக நடந்துள்ளார். மத்திய ஆட்சியாளர்கள் தயவு இருப்பதால் மாநில அரசு இயந்திரத்தை துச்சமாக எண்ணுகிறார்!

நாய் வாலை மட்டை வைத்து கட்டினாலும் நிமிர்த்த முடியாது! அண்மையில் உச்ச நீதி மன்றமும், சென்னை உயர்நீதி மன்றமும் ஆளுனர் தலையில் வைத்த குட்டுகள் கூட ஆர்.என். ரவி யிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிய பெரியார் பல்கலைகழக துணை வேந்தர். ராமசாமி ஜெகன்னாதனை – வன்கொடுமை எதிர்ப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டிகளில் கைது செய்யப்பட்டு இடைக்கால பிணையில் உள்ள ஜெகன்னாதனை – ஆளுனர் சென்று சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு திரியும் பொலி காளை போல் ” ஆய்வு கூட்டம்” நடத்துகிறேன் கறை படிந்த துணை வேந்தரை அவசர அவசரமாக ஆளுனர் சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?

அரசியல் நாகரீகங்களுக்கு நான் பணிய மாட்டேன் , ஏனெனில் இது “அமிர்த காலம்” என்று கூற விழைகிறாரா ஆர். என் ரவி.? அல்லது ஜெகன்னாதன் எங்களது ஆள், அவரைத்தொட்டால் நடப்பதே வேறு என எச்சரிக்கை மணியை அடிக்கிறாரா ஆர்.என். ரவி?

பல மாதங்களுக்கு முன்பாகவே கிளப்பப்பட்ட பிரச்சினைகள், அக்டோபர் மாதத்தில் குற்றச்சாட்டுகளாக சேலம் , கருப்பூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்குப்பின் டிசம்பர 26ல் துணை வேந்தர் ஜகன்னாதன் கைது செய்யப்படுகிறார்.

கைது நடவடிக்கையை அடுத்து நீதிமன்ற காவல் கோரி , கீழமர்வு நீதிபதியை அணுகிய போது ஜெகன்னாதனுக்கு நிபந்தனையின் பேரில் இடைக்கால பிணை வழங்கப்பட்டது. சில நாள் மருத்துவ மனை “சிகிச்சைக்குப்பின்” பணியில் சேர்ந்திருந்தாலும், துணை வேந்தர் ஜெகன்னாதன் குற்றஞ்சாட்டப்பட்டவரே ஒழிய குற்றத்திலிருந்து விடுபட்டவரல்ல!

முறைகேடுகள் செய்து கைதான துணைவேந்தர் ஜெகன்நாதன்.

இவருடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், தங்க வேல் (பல்கலைக்கழக பதிவாளர்) மேலும் மற்றொரு பேராசிரியர் திருப்பதி ஆகியோர் இன்னும் “தலை மறைவாகவே” உள்ளனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.

இவர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் பெரியார் பல்கலைக்கழக தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அடிக்கட்டமைப்பு -Periyar University Technology Entrepreneurship And Research Foundation- என்ற தனியார் நிறுவனமாகும்.

இந்நிறுவனம் ஆராய்ச்சியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றுவதும், இதற்காக ஆராய்ச்சிகளுக்காக தொழில்நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் ஒருசேர பயணிப்பதை உறுதி செய்யும் அமைப்பாகும்.

எளிமையாக கூறினால், இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களின் பலத்தையும், பகட்டையும் படம் பிடித்து காட்டுவதும், ஒத்துழைப்பு, பேட்டன்ட் ரைட் – காப்புரிமை- என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் ஆராயச்சியின் விளைவாக மலரும் புது கண்டுபிடிப்புகளை கார்ப்பரேட்டுகளை நம்பியுள்ள தொழில் முனைவோர்களின் தனி உரிமையாக மாற்றுவதை நோக்கமாக கொண்ட ஒரு அமைப்பு.

உலகெங்கும் ” புதிய தாராளமயக் கொள்கை ” என்ற பெயரில் பன்னாட்டு மூலதனம் காப்புரிமை சட்டத்தை இவ்வாறே – பொதுப்பண முதலீட்டால் ஏற்பட்ட ஆராய்ச்சி மூலம் விளைந்த கண்டுபிடிப்புகள் தனியாருக்கு சொந்தமாக (காப்புரிமை) மாற்றும் நடைமுறை- உலகில் அமல் படுத்துகிறது. அதற்கு இந்திய கல்வி கொள்கையும், பல்கலைக் கழகங்களும் விதிவிலக்கல்ல.

இதில் ஜெகன்னாதனின்  அயோக்கியத்தனம் என்னவென்றால் துணைவேந்தரான அவரே  தொழில் முனைவோராக மாறியதும், அதுவும் அரசாங்க பணத்தை முதலீடு செய்து தன்னை தொழில் அதிபர் ஆக்கிக் கொண்டதும் தான்!

இதற்கு துணையாக பல்கலைக்கழகத்தை சார்ந்த ஒரு சில  பேராசிரியர்களையும் கூட்டாளி ஆக்கியுள்ளார் . இத்தகைய ” அரிப்பை” தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின், உயர் கல்வித் துறையின் கடமை.

பெரியார் பல்கலைகழக ஊழியர்களும், ஆசிரியர் அமைப்புகளும் இத்தகைய முறைகேடுகளை, இதைத் தவிர்த்த ஜெகன்னாதனின்  வேறுசில முறைகேடுகளையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற நிலையிலும் ஜெகன்னாதன் தன் பாதையை மாற்றவில்லை!

பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு (AUT), மாநில தலைவர் எம். எஸ். பாலமுருகன் , நவம்பர் 6-ல் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில், ‘பல்கலைகழக நிர்வாகம் ஒரு ‘டேபிள் அஜண்டா’ மூலம், பல்கலை கல்வி முறைகளை ஒரு தனியார் நிறுவனத்துடன் ஒன்றிணைந்து மேம்படுத்த வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. அந்த தனியார் நிறுவனம் , ஜெகன்னாதன் முதலீடு செய்து துவக்கிய PUTER அடிக் கட்டமைப்பு தான்.  இதற்கு முகவரி பெரியார் பல்கலை வளாகம்தான். ”இத்தகைய மோசடியை உயர் கல்வித் துறை தடுக்க வேண்டும்” என்றார் . இதே போன்று பதிவாளர் தங்கவேலும் ஒரு நிறுவனத்தை துவங்கியுள்ளார். ”இது பல்கலைக்கழகத்தையே சீரழித்து விடும்” என அரசுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதைப் போன்றே , தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பும் உயர் கல்வித் துறைக்கு நவம்பர் மாதமே புகார் கொடுத்துள்ளது, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலந்தாழ்த்தியது, ஜெகன்னாதன் போன்றோர் மேலும் தவறிழைக்க தூண்டுகிறது என்கிறார்  கூட்டமைப்பின் மாநில பொருளாளர் பி. பிரகாஷ். பாட்டாளி மக்கள் கட்சி மாணவர் அணியும் நவம்பரிலேயே சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் புகார் மனு கொடுத்துள்ளது.

ஆனால், அண்ணாமலையோ, ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிகார பூர்வ ஏடான ஆர்கனைசரோ காவல்துறை நடவடிக்கையை, தமிழக அரசின் விசாரணையை குறை கூறுவது வேதனையாக உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் இவ்விவகாரத்தில் ஒரு நிலை எடுக்க பா ஜ க மட்டும் “குறுக்கு சால் ” ஓட்டுகிறது. மாணவர் அமைப்புகள், ஆசிரியர் அமைப்புகள் அனைத்து துணைவேந்தரை எதிர்க்கின்றன!

ஆளுனர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கு வருவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்.

இதை மெய்ப்பிக்கும் விதமாகவே ஆளுனர் ஆர். என். ரவி சேலம் விரைந்து  ஆய்வுக் கூட்டம் என்பதின் பெயரில் தனியாக துணை வேந்தர் ஜெகன்னாதனை சந்தித்து அளவளாவி உள்ளார்.

2021ம் ஆண்டு, அன்றைய தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் துணை வேந்தராக நியமிக்கப்பட்ட ராமசாமி ஜெகன்னாதன் கோவை வேளாண் கல்லூரியின்  முன்னாள் முதல்வர், பாவை கல்வி குழுமங்களின் தலைவர். இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியதாக கூறப்படுகிறது, பல்வேறு ஆராய்ச்சி களில் மாணவர்களை நெறிப்படுத்தி வெற்றிகரமாக பணமாக்கும் (வணிக) கண்டு பிடிப்புகளை வேளாண்முறையில் நிகழ்த்தியுள்ளார் என தகவல் களஞ்சியம் கூறுகிறது.

இவர் பல்வேறு மேலை நாட்டு பல்கலைகழகங்களுடன் இணைந்து வேளாண்விதை மற்றும் உர உற்பத்தி மற்றும் வினியோகத்தை கட்டுப்படுத்தும் பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளவர் .

இந்தியாவில் கல்வி அமைப்பை, அது தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று புலம்புவோரின் ஒரே நோக்கம், கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்ட உயர் கல்வித் துறை உதவ வேண்டும் என்பது தான்.

மக்களின் வரிப்பணத்தில் எழுப்பபட்ட கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி அமைப்புகள் பல்கலைகழகங்கள் (IITs,Research Institutes, Public Universities )பொதுமக்களின் வாழ்வு முன்னேற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்பது பத்தாம் பசலித்தனமாம்.

அவை – கல்வி அறிவும், ஆராய்ச்சி விளைவுகளும்- தனியார் காப்புரிமைகளாக மாறி வணிக நோக்கில் அதிக லாபம் ஈட்டும் கருவியாக மாற வேண்டும் என்பதே இன்றைய கல்விக்கொள்கையின் நோக்கமாம் . இதை கருத்தில் கொண்டே தொழில்துறையுடன் உயர் கல்வி துறை ஒருங்கிணைந்து பாடதிட்டங்கள் வகுப்பதும்,ஆராய்ச்சிகள் மேற்கொள்வதும் நடைபெறுகிறது.

வறுமை ஒழிப்பு, வேளாண்உற்பத்தி பெருக்கம், நீர் மேலாண்மை, வன பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேம்பாடு போன்ற எல்லாவற்றிலும் மக்கள் நலனுக்குப் பதிலாக கார்ப்பரேட்டுகளை நுழைத்து அதிக லாபம் பார்பப்தற்கு அரசு முன்னுரிமை கொடுக்கிறது, அதற்காவே கொள்கைகளும் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

நீதிமன்றத்தில் உடல் நிலை சரியில்லை ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்துள்ளேன். ஆகவே ஆஜராக முடியாது, சிறைக்கும் போகமாட்டேன் என விலக்கு வாங்கிவிட்டு, பல்கலைக் கழக வளாகத்தில் கைப்பந்து போட்டிகளை துவக்கி வைத்து அவருமே அதில் விளையாடுகிறார், எந்தக் குற்றவுணர்வுமின்றி என்றால், இது அவருக்கு பின்னுள்ள அதிக்க சக்திகளின் பலத்தை தான் உணர்த்துகிறது.

கட்டுரையாளர்;ச.அருணாசலம்

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time