ஆன்மீகத் தளமாகுமா..?அயோத்தி ராமர் கோவில்!

-சாவித்திரி கண்ணன்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் காந்தியின் ராம ராஜ்யம் கனவுக்கு உயிர் கொடுத்துள்ளதாம் மோடியின் பாஜக அரசு! காந்தி தீவிரமான ராம பக்தர் தான்!  ஆனால், தற்போது எழுப்பப்பட்டுள்ள ராமர் கோவில் நமது தேசத் தந்தை காண விழைந்த ராமர் கோவிலா? இது தான் காந்தியின் கனவா..? என்பதை பார்ப்போம்.

முதலாவதாக ஒன்றை தெளிவுபடுத்திக் கொள்வோம். காந்தி ராம ராஜ்யத்தை விரும்பியவரே அல்லாது, ஒரு போதும் பாபர் மசூதியை இடித்து, அங்கு ராமர் கோவில் கட்ட வேண்டும் எனக் கேட்டதாக எங்குமே வரலாற்றில் பதிவாகவில்லை.

காந்தி தான் வணங்கும் ராமர், ‘வரலாற்று ராமர் அல்ல’ என்றும், ‘நித்தியமானவர், பிறக்காதவர்,  புராணங்களில் சொல்லப்படுபவரல்ல’ என்றும் தெளிவுபடுத்தி உள்ளார். ‘தன்னுடைய  ராமன் அனைவருக்குமானவர், எல்லோரையும் சமமாக பாவிப்பவர், பஞ்சம், பசி, வறுமை, வன்முறையற்ற இந்தியாவுக்கானவர்’ என விவரித்துள்ளார் காந்தி!!

காந்தி விரும்பியது எளிமையை! பாஜக அரசு விரும்புவது மிகப் பெரும் பிரம்மாண்டங்களை! ராமர் கோவிலோ பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமே! 1,800 கோடிகள் செலவில் ராமர் கோவிலாம்! ஆனால், வசூலிக்கப்பட்ட தொகையோ இதைவிட இரண்டு மடங்கு! மீதி தொகையைக் கொண்டு பற்பல வியக்க வைக்கும் கட்டுமானங்களை கட்டி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் வரிப்பணத்தைக் கொண்டு அயோத்தி நகரத்தை ஒரு சுற்றுலா தளமாக்க பல ஆயிரம் கோடிகளில் சாலை வசதிகள், ரயில்வே பாதை விரிவாக்கம் மற்றும் பெரிய ரயில்வே ஸ்டேசன், சர்வதேச தரத்தில் ஏர்போர்ட், பளபளக்கும் அகன்ற சாலைகள்.. என அனைத்திலும் பிரம்மாண்டம்!

மொத்தம் 70 ஏக்கர் நிலமாம்! அதில் பிரதான கோவில் 2.7 ஏக்கர் தாம்! இராமர் சிலை ஐந்தடி உயரமாம்! மூன்று சிலைகள் செய்ததில் ஒன்றை மட்டும் தேர்வு செய்துள்ளனராம். இந்த பிரதான இடம் தவிர  மற்றவை தோட்டங்கள், நீருற்றுகள், உணவகங்கள் கருத்தரங்கு கூடங்கள், இன்னும் பற்பல பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கியதாம்!

எந்த ஒரு கோவிலும் அர்ப்பணிப்பால், தியாகத்தால் எழுந்து நின்றால் தான் அதன் பலன்கள் மக்களுக்கு போய்ச் சேரும். நாம் தற்போது கும்பிடுகின்ற பாரம்பரிய மிக்க கோவில்கள் சுயநலம் துறந்த ஒரு சிலரின் தவ வலிமையாலும், அர்ப்பணிப்பாலும் எழுப்பபட்டவையாகும்! அதனால் தான் சில நூற்றாண்டுகளைக் கடந்தும் மீனாட்சி அம்மன் கோவிலும், திருவண்ணாமலை சிவன் கோவிலும், ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலும் இன்னும் சக்தி வாய்ந்த தளங்களாக உள்ளன!

கோவில் கட்டுவதற்கு பணமும், அதிகாரமும் போதுமானதல்ல! பணத்தாலும், அதிகாரத்தாலும் பிரம்மாண்ட கட்டிடத்தை வேண்டுமானால் எழுப்பலாம். ஆனால், காலாகாலத்திற்கும் மனிதர்களின் மன அமைதிக்கும், உள்ளத்தின் உத்வேகத்திற்கும் உரமளிக்கும் ஆன்மீகத் தளமாகும் கோவிலை எழுப்ப முடியாது.

இந்தக் கோவிலை கட்டி எழுப்ப ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தின் பன்சி என்ற வனப்பகுதியில் உள்ள பழங்குடிகளின் கிராமமே சூறையாடப்பட்டு அங்குள்ள மலைகள் நொறுக்கப்பட்டு கிரானைட் கற்கள் எடுக்கப்பட்டுள்ளன!

அதுவும் இந்த ராமர் கோவில் சில நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த பாபர் மசூதியை இடித்து கட்டப்பட்டது! இந்தியாவில் உள்ள சுமார் 15 கோடி இஸ்லாமியர்களின் இதயத்தை ரணமாக்கியதோடு, பாபர் மசூதி இடிப்புக்கு பின்பான கலவரங்களில் இரண்டாயிரம் மனித உயிர்களை காவு வாங்கி எழுப்பப்பட்டுள்ளது. அத்வானியின் ரத யாத்திரைகளிலும், கலவரங்களிலும் சிந்தப்பட்ட ரத்தங்கள் கொஞ்சமா? நஞ்சமா? எரித்து சேதாரமாக்கப்பட்ட சொத்துக்கள் எவ்வளவு? இந்தக் கலவரங்களில் நிர்கதியான குடும்பங்களில் இன்னும் சோகம் தொடர்கிறதே..?

இந்தியாவில் சுமார் 300 ராமாயணங்கள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்தை ராமர் பிறந்த இடமாக குறிப்பிட்டுள்ளன!. கடந்த காலங்களில் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள சீன யாத்ரீகரான யுவான்சுவாங் உள்ளிட்ட எந்த யாத்ரீகரும் அயோத்தியில் ராமர் கோவில் இருந்ததாக பதிவு செய்யவில்லை. அயோத்தியில் கோவிலுக்காக தோண்டப்பட்ட போது கீழே எந்த ராமர் சிலையும் கிடைக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சி உள்ளிட்ட எந்த வரலாற்று ஆவணத்திலும் அங்கு ராமர் கோவில் இருந்ததாக பதிவுகள் இல்லை.

ராம ராஜ்ஜியம் என்பதை தான் கண்ட கிராம சுய ராஜ்ஜியத்துடன் இணைத்து பார்த்தார் காந்தி. வெளிநாட்டு உதவிகளை தவிர்ப்பது, பெரும் தொழில்களை தவிர்த்து சிறு, குறுந்தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, வெளி முதலீடு தேவையில்லாத தொழிலாக விவசாயத்தை பேணுவது, ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தை பெருமளவு தவிர்ப்பது, ராணுவச் செலவை குறைத்து அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டுவது, தனி மனித சுதந்திரமும், சமூக சுதந்திரமும் உத்திரவாதப் படுத்தப்பட்ட ராஜ்ஜியமே ராம ராஜ்ஜியம் என காந்தி கூறியுள்ளார்!

மேற்குறிப்பிட்ட அனைத்துக்கும் எதிராக தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் கட்சி தான் பாஜக. வெளிநாட்டுக் கடன்களை 100 லட்சம் கோடிகள் என்ற உச்சத்திற்கு கொண்டு போயுள்ள ஆட்சி தான் பாஜக ஆட்சி. சிறு,குறுந்தொழில்களை அழித்து அதானி, அம்பானி போன்ற வெகுசில கார்ப்பரேட்டுகளிடம் தேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் அடகு வைத்துள்ள ஆட்சி தான் பாஜக அரசு! ராணுவச் செலவை ஆண்டுக்காண்டு பிரம்மாண்டமாக அதிகப்படுத்தி வரும் ஆட்சியே பாஜக ஆட்சி! நாட்டை எப்போதும் வன்முறைக் களமாகவும், பதட்டத்திலும் வைத்திருக்க விரும்பும் ஆட்சியே பாஜக ஆட்சி. எல்லாவற்றுக்கும் மேலாக எல்லோரையும் சமமாக பாவிக்க முடியாத ஆட்சியே பாஜக ஆட்சி!

ராம நவமி என்ற பெயரில் நடத்தப்படும் மதவெறி ஊர்வலங்களை காந்தி எப்போதாவது ஆதரித்து உள்ளாரா?  1923 மற்றும் 1924 ஆம் ஆண்டுகளில் நடந்த ராம நவமி விழாக்களில் வெடித்த வன்முறைகளை எவ்வளவு கண்டித்து பேசியுள்ளார் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

பாஜகவின் அரசியல் தலைமை பீடமான ‘இந்து ஸ்வயம் சேவக் சங்கம்’ என்ற பெயரில் செயல்படும் ஆர்எஸ்எஸூம், அதன் கிளை அமைப்புகளான 12 அமைப்புகளும் பேசுவது என்ன? சாவர்க்கர் முன்வைத்த இந்து பண்பாட்டு தேசியம்! ஒற்றைப் பண்பாட்டை பொதுமையாக்கும் ராணுவ மயப்பட்ட தேசியம்! காந்தி விரும்பியதோ பல பண்பாடுகளை உள்ளடக்கிய பன்மைத்துவமுள்ள தேசியம்!

உங்கள் அதிகாரத்தாலும், பணபலத்தாலும் பிரம்மாண்ட கோவிலை கட்டி எழுப்பிவிடலாம். ஆனால் இறைவன் விரும்பாத பட்சத்தில் அதை பயன்படுத்த முடியாமல் போகலாம். ஏன் அதுவே உங்களை திருப்பியும் தாக்கலாம்! இறை சக்தியை ஏமாற்ற முடியாது! ‘’அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’’ என திருவாசகத்தில் மாணிக்க வாசகர் எழுதி இருப்பார்! இறைவனின் அருள் கிடைத்தால் மட்டுமே அவனை வணங்க முடியும் என்பதே நம் முன்னோர் வாக்கு.

கோவிலை அரசியல் வெற்றியாக கருதுவதே பிழையானது. அந்த அரசியல் வெற்றிக்காக முழுப் பணிகளையும் முடிக்காமல் அரைகுறையாக உள்ள நிலையில் அவசரமாகத் திறப்பது மிகத் தவறானது! அதையும் பிரதமர் மோடியைக் கொண்டே ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தால் தான் இந்து வாக்கு வங்கி பலமாகும் என அரசியல் கணக்கு போடுகிறீர்களே! என்னே அறியாமை! என்னே ஆணவம்! இறைவன் வேறு கணக்கு போட்டு வைத்திருந்தால், அப்போது உணர்வீர்கள் உங்கள் அறியாமையையும், ஆணவத்தையும்!

டெல்லி அருகே 2005 ல் நாராயணனின் அக்சர்தம் கோவில் இந்தியாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தவிர்க்க முடியாத இடமாகக் கருத வேண்டும் என்ற நோக்கத்தில் மிகப் பெரும் ஆடம்பரமாக உருவாக்கப்பட்டது., ஒரு மாபெரும் சுற்றுலா தளம் போல நீர் ஊற்றுக்கள், திறந்த வெளியில் பெரும் தோட்டம், நவீன திரை அரங்கம், கருத்தரங்கு மண்டபங்கள்.. உணவகங்கள், படகோட்டும் வசதிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு வசதிகளுடன் கூடிய இடமாக தற்போதைய அயோத்தி கோவில் போலவே உருவாக்கப்பட்டது. இந்தியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபரே இந்தக் கோவிலின் பிரம்மாண்டத்தைக் கண்டு அசந்து போனதாகச் சொன்னார்!

பிரம்மாண்ட சுற்றுலா தளமாக காட்சியளிக்கும் டெல்லி அக்சர்தாம் நாராயணன் கோவில்!

ஆனால், என்னவாயிற்று? 2009 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் நினைவுச் சின்னத்துக்கு உள்ளே மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தில் 11-அடி உயரமான சுவாமி நாராயணன் சிலை உட்பட ஆறு உலோகச் சிலைகள்  கருகி சேதமாகின. இந்த ஆறு சிலைகளும் மரத்தாலான பீடத்தில் வைக்கப்பட்டிருந்த காரணத்தால், அப்பீடம் தீக்கு இரையாகியது. சிலைகள் தலைகீழாகக் கவிழ்ந்து, நடைபாதையில் உருண்டு சேதராமாகின. அன்றிலிருந்து நினைவுச் சின்னம் மூடப்பட்டுள்ளது! மற்றபடி இது ஒரு மிகப் பெரும் சுற்றுலா தளமாக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை!

அதே போல அயோத்தியும் வருங்காலத்தில் மக்களை கவரும் மிகப் பெரும் சுற்றுலா தலமாகலாம்! உண்மையான இறை நம்பிக்கையாளர்களுக்கு அயோத்தியில் ஒன்றும் இல்லை. பேரழிவுகளாலும், பெரும் கலவரங்களாலும், அரசியல் நோக்கங்களாலும் ஆன்மீகத் தளங்கள் உருவாவதில்லை. மத நம்பிக்கைகளைக் கடந்த அன்பிலும், அர்ப்பணிப்பிலும் உருவாவதே ஆன்மீகத் திருத்தலமாகும்! பாஜக ஆட்சியாளர்கள் தன்னை கடவுளாக நினைக்கிறார்களா? அல்லது தங்கள் அரசியல் வெற்றிக்கான கருவியாக கருதுகிறார்களா…? என்பதை அந்த ராமர் இன்னும் கூடவா அறியாமல் இருப்பார்..?

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time