மக்களை அச்சுறுத்தும் பயங்கரவாத செயல்கள் நிச்சயம் ஒடுக்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆனால், பாஜக அரசு கொண்டு வந்துள்ள உபா சட்டத்திருத்தமும்,அதைத் தொடர்ந்த கைதுகளும்,சிறை வைப்புகளும் இந்த சட்டத்தின் நோக்கத்தை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தம் பற்றி உரையாற்றுகையில், ’’ தீவிரவாதங்கள் துப்பாக்கியால் உருவாவதில்லை. அவற்றைத் தூண்டக்கூடிய செய்திகள்,எழுத்துகள், இலக்கியங்கள்… ஆகியவற்றால் உருவாகிறது. ஆகவே, அத்தகைய தூண்டல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவே உபாவில் சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என்றார்.
அமித்ஷா கூறியது போல தீவிரவாதம் துப்பாக்கியால் உருவாகவில்லை! அதே சமயம் எங்கே மனித உரிமைகள் பறிக்கப்படுகிறதோ, எங்கே பாகுபாடும்,அவமானங்களும் நிகழ்த்தப்படு கின்றனவோ அங்கெல்லாம் தீவிரவாதம் தோன்றியுள்ளன என்பது தான் அன்று முதல் இன்று வரை வரலாறு உணர்த்தும் உண்மை!
2019 ஆம் ஆண்டு, நரேந்திர மோடி அரசு உபாவில், சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. அதன்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை 180 நாட்களாக நீடித்தார்கள். மாநில அரசின் அனுமதி இல்லாமலே மத்திய அரசின் தேசியப் புலனாய்வு நிறுவனம் ஒருவர் மீது வழக்குத் தொடுக்க முடியும் என்ற கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான பிரிவும் அதில் சேர்க்கப்பட்டது.
நாட்டின் “பொருளாதாரத்தை நிலைகுலைகிறார்கள்” என்று சொல்லி சேலம் எட்டு வழிச் சாலையை எதிர்ப்பவர் களையும், சுற்றுச் சூழல் மசோதாவை எதிர்ப்பவர்களையும், தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் செய்பவர்களையும் கைது செய்ய முடியும். 19 வயது பெண் ஹாத்ராவில் வன்புணர்வு செய்யப்பட்டு இரவோடு இரவாக அவருடைய உறவினர்களுக்கு கூடத் தெரியாமல் காவல்துறையினரால் எரியூட்டப்பட்ட சம்பவம் உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். இது குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரளாவைச் சார்ந்த சித்திக் காப்பன் என்ற பத்திரிகையாளர் உத்தரப்பிரதேச அரசால் உபாவின் கீழ் 15 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுதான் தற்போதைய செய்தி !
பூனாவின் பீமா கொரேகானிலும் (2018), பெங்களூரிலும் (2020) கலவரம் ஏற்பட்டது. இதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ( Unlawful activities prevention act – UAPA சுருக்கமாக உபா) அரசைக் கேள்வி கேட்பவர்கள் குறி வைக்கப் படுகிறார்கள். தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் கீழ், மக்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுகின்றன.
’15 இலட்ச ரூபாய் என்ன ஆனது, இரண்டு கோடிப் பேருக்கு வேலை என்ன ஆனது’ என்று முகநூலில் பதிவிட்ட ஒரு உத்திர பிரதேச இளைஞன் உபாவின் கீழ் கைது செய்யப்பட்டார்.தமிழ்நாட்டில் மே 17 இயக்கத்தைச் சார்ந்த திருமுருகன் காந்தியும் இதே சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.
தடா சட்டம், பொடா சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டவர்களின் விகிதாச்சாரம் (Conviction Rate) மிகவும் குறைவு. தொழிற்சங்க தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சிறுபான்மையினர் தான் அதிகம் பாதிப்புக்கு ஆளானார்கள். உதாரணமாக சித்தூரில் பள்ளிக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் போராடினார்கள்; பேருந்துகளை நிறுத்தி, காற்றை இறக்கிவிட்ட கல்லூரி மாணவர்கள் மீது பொடா சட்டம் பாய்ந்தது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்பு பிணை வழங்குவது இயல்பான மனித உரிமையாகும். Bail is a rule, Jail is exception (பிணை என்பதுதான் விதி; தளை என்பது விதிவிலக்கு) என்பார்கள். ஏனென்றால் ‘குற்றவாளி என்று முடிவு செய்யப்படும் வரை ஒருவரை நிரபராதி என்று கருத வேண்டும்’ என்பது உலகமெங்கிலும் உள்ள நெறிமுறை ஆகும். இத்தகைய உரிமைகளை யெல்லாம் இந்த உபா சட்டம் பறிக்கிறது.
1985 ல் நிறைவேற்றப்பட்ட தடா- TADA – Terrorist and Disruptive Activities (Prevention) Act சட்டத்தை 1995 ல் மத்திய அரசு புதுப்பிக்காமல் விட்டுவிட்டது. மனித உரிமை ஆணையமும் இந்த சட்டத்திற்கு எதிரான நிலை எடுத்து இருந்தது.
“1999ல் பொறுப்பேற்ற பாரதிய ஜனதா கட்சியின் வாஜ்பாயி தீவிரவாதத்தை எதிர் கொள்ள தனியான சட்டம் வேண்டும் என்று கூறினார். அதாவது இது போன்ற கொடூரமான சட்டங்கள் தேவை என்பதுதான் பாஜகவின் அரசியல் நிலைப்பாடு” என்கிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளரான வி்.சுரேஷ்.
தடா சட்டத்தின் மறு பதிப்பாக, பொடா சட்டம் இயற்றப்பட்டது. இதற்கும் எதிர்ப்பு வந்தது. எனவே கூட்டுப் பாராளுமன்றத்தை கூட்டி ( இந்தியா ஒளிர்கிறது என்று பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு முன்பு ), பாராளுமன்ற தாக்குதல் நடந்த சூழலில் வாஜ்பாயி அரசு பொடா (POTA – Prevention of Terrorist Act) சட்டத்தை 2002 ல் நிறைவேற்றியது.
ஆனால் அடுத்து ஆட்சி அமைத்த ஐக்கிய முன்னணி அரசு 2004 -ல் பொடாவை திரும்பப் பெற்றது. பொடா சட்டம் ரத்து ஆனாலும் அதிலிருந்த சில பிரிவுகள் 2004 ல் கொண்டு வரப்பட்ட உபா சட்டத்திலும் இருந்தன ” என்கிறார் வி.சுரேஷ்.
எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் சொன்னதைப் போலவே, உபா சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.2014 ம் ஆண்டுக்கு முன்பு வரை உபாவின் கீழ் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. இப்போது பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. இதுவரை3500 வழக்குகள் நாடு முழுவதும் பதிவாகி உள்ளன. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் போடப்படும் உபா வழக்குகளின் எண்ணிக்கை அதிகம்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரான சீதாராம் எச்சூரி,யோகேந்திர யாதவ், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவராக இருந்த அபராஜிதா உள்ளிட்ட பலர் மீது, தில்லி காவல்துறை உபாவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்கள் கடந்த ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள்.
இந்தச் சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள தொடங்கி உள்ளனர். கடந்த 21ஆம் தேதி மக்கள் சிவில் உரிமைக் கழகம்(PUCL) நடத்திய பொது நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், திமுகவின்கனிமொழி, காங்கிரஸின் சசி தரூர், மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் எச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி ராஜா, தேசியவாத கட்சியின் சுப்ரியா பூலே ஆகியோர் ஒன்றிணைந்து இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
“உபாவை எதிர்கட்சிகள் எதிர்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் அந்த எதிர்கட்சிகள் அதிகாரத்திற்கு வந்தால் இதுபோன்ற அடக்குமுறைச் சட்டங்களை பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை அவை மக்களுக்கு அளிக்க வேண்டும். அந்த உறுதிமொழியை அவை காப்பாற்ற வேண்டும்” என்று கூறினார் வாழ்நாள் சிறைவாசியாக இருக்கும் போது காரல் மார்சின் மூலதனத்தை தமிழில் மொழிபெயர்த்த தோழர் தியாகு.
தில்லி கலவரத்தில் வெறுப்பு பேச்சை உமிழ்ந்த பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த கபில் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதேபோல பீமா கொரேகான் கலவரத்திற்கு காரணமான இந்துத்துவா குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் கலவரம் செய்தவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர்கள் உபாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
” கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் இறந்து போனவர்களுக்கு எளிய அஞ்சலியை செலுத்துங்கள் “என்று மக்கள் சிவில் உரிமைக் கழகம் தில்லி மாநகர காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதியிருக்கிறது. 53 பேர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை இல்லை. ஆனால் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராடிய,33 வயதான உமர் காலித் என்ற ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீமா கோரேகான் வழக்கில் இதுவரை 16 பேர் உபாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் அனைவருமே நாடறிந்த முக்கியமான ஆளுமைகள். தமிழ்நாட்டை சேர்ந்த 83 வயதான ஸ்டேன் சாமி ஆதிவாசிகளுக்காகவே தன்வாழ்வை ஒப்படைத்தவர். புகையிலை விவசாயிகள் ஒப்பந்தக்காரர்களால் சுரண்டப்படுவதைத் தடுக்க பணிபுரிந்த மகேஷ் ராவத், நாக்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் சோமா சென்,80 வயதான தெலுங்கு கவிஞர் வரவர ராவ், தலித் சிந்தனாவாதியான ஆனந்த டெல்டும்டே,தொழிற்சங்கவாதியான சுதா பரத்வாஜ் போன்ற அனைவருமே மக்களுக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தவர்கள்.
Also read
இவர்கள் செய்த குற்றம் இதுவரை விசாரிக்கப்படவில்லை.உடல்நிலை,வயோதிகம், கொரோனா காரணமாக முறையிட்டும் பிணை இல்லை.குற்ற விசாரணை முடியும்வரை வெளியில் வரமுடியாது.அதற்கு ஐந்து ஆண்டுகள் ஆகுமா ? அதற்கு மேல் ஆகுமா என்றுதெரியாது. அதன் பிறகு நிரபராதி என்று விடுதலையானால் அவர்களின் வாழ்வுக்கு யார் பொறுப்பு. பொய் வழக்குப் போட்ட அதிகாரிகளுக்கு எந்த தண்டனையும் இல்லை.
இந்த சட்டப்படி 180 நாட்கள் வரையிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஒருவரைச் சிறையிலேயே வைத்து இருக்கலாம்.179 ம் நாளில் அதே வழக்கில் இன்னும் சிலரை சேர்த்து விசாரணை நடக்கிறது என்ற பெயரில் மேலும் 180 நாட்கள் அவர்களை சிறையிலேயே வைத்து இருக்கலாம். இப்படி பீமா கொரோகான் வழக்கில் மூன்று குற்றப் பத்திரிகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் யாரை வேண்டுமானாலும் தேசிய புலனாய்வு முகமை நினைத்தால் சேர்க்கலாம்.
” தடா, பொடாவைப் போலவே உபாவும் ஒரு கொடூரமான சட்டம்தான். இது தனி நபர் சுதந்திரத்திற்கு மட்டுமல்ல,அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது. இதில் பெயில் கிடையாது. நீதிமன்ற விசாரணை கிடையாது என்பது ஆபத்தானது. ஆனால், தற்போதைய ஆட்சியாளர்கள் இதனை நிரந்தரமாக வைத்திருக்க விரும்புகிறார்கள் ” என்கிறார் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஹரி பரந்தாமன்.
.
Why visitors still use to read news papers when in this technological world everything is accessible on web?
It’s really a nice and helpful piece of information. I am glad that you shared this helpful info
with us. Please keep us up to date like this. Thank you for
sharing.
Helpful info. Fortunate me I discovered your website by chance, andI’m surprised why this coincidence didn’t came about earlier!I bookmarked it.