நீரோடும் ஆறுகளே நம் வாழ்வாதாரங்கள்..!

-தமிழ்தாசன்

நம் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் இயற்கை பற்றிய புரிதல் இன்றியே நாம் வாழ்கிறோம். தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் வாழ்வாதாரமாக உள்ள ஆறுகள் அழிவை நோக்கி சென்று கொண்டுள்ளன! அவற்றை மீட்டெடுக்கும் நோக்கமே இந்த தொடர்! இது தமிழ்நாட்டில் ஓடும் இயற்கை நீர் வழித் தடங்களின் ஆவணம்!

ஆறுகள் மனித சமூகத்தின் நாகரிகத் தொட்டிலாக விளங்குகின்றன. உலகின் பல்வேறு தொன்மையான நகரங்கள் ஆற்றங் கரைகளில் தான் அமைந்துள்ளன. எனவே, ஆறுகள் பண்பாட்டு முக்கியத்துவம் பெறுகின்றன. உலகெங்கும் ஆறுகள் வேளாண்மை, குடிநீர் ,மின்னாற்றல், தொழிற்கூட பொருளுற்பத்திக்கு அடிப்படைத் தேவையாக இருக்கின்றன. தனியார் மய நெருக்கடியில் நீர் என்பது பண்டமாகிவிட்டது. எனவே, ஆறுகள் பொருளியல் முக்கியதுவம் பெறுகிறது. உலக தேசங்கள், மாநிலங்கள், வட்டார எல்லைகள் ஆறுகளைக் கொண்டே தீர்மானிக்கபடுகின்றன.

உலகில் 23% பன்னாட்டு தேச எல்லைகள்,

17% மாநில எல்லைகள்,

12% வட்டார எல்லைகள்

ஆறுகளைக் கொண்டே வரையறுக்கப்பட்டுள்ளதாக (GSRB) ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே, ஆறுகள் அரசியல் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆறுகள் என்பது நீரோடும் குழாய்களல்ல. ஆறு என்பது இரு கரைகளுக்குள்ளாக வெள்ளம் அல்லது கழிவுநீர் வடிந்தோடும் நீரியல் அமைப்பு என்கிற புரிதலில் இருந்தே பெரும் தொழிற்சாலை நடத்துபவர்களின் நலனுக்காக ஆறுகள் கண்மூடித்தனமாக சிதைக்கப்பட்டு நகரங்கள் எழுப்பப்படுகின்றன.

ஆறுகளின் உயிர்சூழல் தான் பண்பாட்டு – பொருளியல் – அரசியல் கட்டுமானங்களுக்கு அடித்தளமாக விளங்குகிறது. ஒப்பிட்டளவில் ஆறுகளின் சூழலியல் முக்கியத்துவம் பற்றி உலகில் உள்ள எந்த அரசுகளும் கவலை கொள்வதில்லை. ஆறுகளின் இயல்பை பாதுகாப்பதும், மீட்பதும் தான் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும்.

ஆளும் அரசுகளால், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் காடுகள், மலைகள், ஆறுகள், கடல், பல்லுயிரியச் சூழல் என இயற்கை வளங்கள் வரைமுறையின்றி வேட்டையாடப்படுகின்றன.  இயற்கை வளங்கள் மீதான வன்முறைத் தொடரவும் நாளுக்கு நாள் அதிகரிக்கவும் செய்கின்றன.

இப்போக்கு கால நிலை மாற்றத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது. புயல், பெருமழை, வெள்ளம், வறட்சி உள்ளிட்ட ஒவ்வொரு பேரிடருக்கும் அடுத்த பேரிடருக்குமான இடைவெளி குறைந்திருக்கிறது. கால நிலைமாற்றம் ஏற்படுத்தும் கொடிய விளைவுகள் அனைத்துயிர்களையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பல உயிரினங்கள் அழிவின் விளிம்பு நிலைக்கு சென்று இருக்கின்றன. பல உயிரினங்கள் அற்றுப் போய்விட்டன. உழைக்கும் ஏழை,எளிய விளிம்பு நிலை மக்களே பேரிடர்களில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். சூழலியல் அகதிகளாக ஆக்கப்படுகிறார்கள்.

ஆறுகளின் குறுக்கே கட்டப்படும் பெரிய அணைகள் ஆறுகளின் நீரோட்டத்தை, ஆற்றின் பல்லுயிரியச் சூழலை, அதன் பரவலை, ஆறுகள் மற்றும் கடல் உயிரிகளின் உணவை, ஊட்டச் சத்தை முற்றிலும் சிதைத்து விடுகின்றன.  ஆறுகள் வேர்பிடித்து தோன்றும் காட்டுப் பகுதியை அழித்துக் கட்டப்படும் சுரங்கங்கள், சாலைகள், சுற்றுலா விடுதிகள், அந்த மண்ணுக்குச் சம்பந்தமில்லாத அயல் தாவர பூங்காக்கள், வணிகப் பயிர்களான தேயிலை, தைல மற்றும் தேக்கு மரத் தோட்டங்கள், தண்ணீரைத் தேக்கி வைத்து வடிய விடும் காட்டின் இயல்பையும், சிற்றோடைகளின் நீர்வழித் தடங்களையும் சிதைத்து விடுகின்றன.

தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கழிவுநீர் நேரடியாக ஆற்றில் விடப்படுகிறது. ஆற்று மணல் கொள்ளையால் ஆறுகள் தோலுரிக்கப்பட்ட எழும்புக் கூடுகாளாக ஆக்கப்பட்டுள்ளன. நகரமயக்களால் ஆறுகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சுருக்கப்பட்டுள்ளன. கரையோரம் பக்கவாட்டில் சுவர்கள் எழுப்பப்பட்டு ஆறுகள் ஒரு கால்வாயைப் போல மாற்றப்பட்டுள்ளன. ஆற்றின் உயிர்ச் சூழல் கவலைக்கிடமான நிலையில் உள்ளது. எனவே, புயல்வெள்ளம் ஏற்படுத்தும் சேதங்களில் மீளமுடியாத இழப்புகளை மானுடச் சமூகம் சந்திக்கிறது.

நகர்புற வளர்ச்சி ஆற்று வழித் தடங்களை ஆக்கிரமித்தே எழுப்பப்படுகின்றன..!

தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை போன்ற பெரிய ஆறுகளின் நிலையே இவ்வாறு உள்ள சூழ்நிலையில் சிற்றாறுகள், ஓடைகள் நிலை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. எல்லா பெரிய நதிகளும் சிறிய மலையோடைகளில் இருந்து தான் துவங்குகின்றன. பல சிற்றாறுகளின் கூட்டிணைவு தான் பேராறுகள். கவலைக்கிடமாகிக் கிடக்கும் பேராறுகளின் நலம் விசாரிப்புகள் மலையோடைகளில் இருந்தும் சிற்றாறுகளில் இருந்தும் துவங்க வேண்டும். அதற்கு நம் மலையோடைகள், சிற்றாறுகள் பற்றிய உரையாடல்கள் நிகழ வேண்டும். ஆறு, நதி, ஓடை, வாரி, பள்ளம், நல்லா, பாய்ச்சி என மக்கள் பெயர் சூட்டியுள்ள இயற்கையான நீரோடும் வழித்தடங்களை நோக்கி ‘ஆறுகளைத்தேடி’என்கிற என் ஆற்றலுக்குட்பட்ட இந்த பயணத்தை துவங்குகிறேன்.

முழு வீதியையும் மூழ்கடிக்கும் பேரிடர்கால வெள்ளம், நம் வீட்டு கதவுகளின் கழுத்தை நெரிக்கிற போதெல்லாம் நீர்வழித் தடங்கள் குறித்த கரிசனம், உரையாடல்கள் உயிர்ப் பெறுகின்றன. வெள்ளம் வடிவதற்குள் நீர்வழித் தடங்கள் குறித்த சலசலப்புகளும் வடிந்து விடுகிறது. அடுத்த பேரிடர் வரும் வரை உறக்க நிலைக்குச் செல்லும் உரையடல்களை நீட்டிக்கச் செய்யும் சிறு முயற்சியாக இயற்கை நீர் வழித்தடங்களை ஆவணம் செய்யும் ‘ஆறுகளைத் தேடி’ என்கிற என் பயணம் வழியான உரையாடல் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆறுகள் உருவாகும் இடம், ஆற்று நீர் வடிந்தோடும் வழித் தடங்கள், ஆறுகளும், மக்களுக்குமான உறவு, ஆறும் கடலும் சேருமிடம் என ஆறுகள் பற்றிய என் சேகரிப்புகளை இந்தப் பயணத்தின் நோக்கம் என்று திட்டமிட்டுள்ளேன். ஆறுகள் பற்றிய மேலும் அறிய வேண்டிய செய்திகளை அறிந்து கொண்டு ஆறுகளைத் தேடிப் பயணிப்போம்.

கட்டுரையாளர்; தமிழ்தாசன் (எ) ஜான்சன் (37)

சொந்த ஊர், மதுரை மாவட்டம், மேலமடை.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் தொடங்கிய இவரது பொது வாழ்வுப் பயணம் ஈழப் போராட்டங்கள், சுற்றுச் சூழல் இயக்கங்கள் என விரிந்தன!   கடந்த பத்தாண்டுகளாக ஒத்த சிந்தனையுள்ள தோழர்களுடன்  நாணல் நண்பர்கள் மற்றும் மதுரை இயற்கை பண்பாட்டு மையம் என்கிற இரு சுழலியல் அமைப்புகளின் வழியே இயற்கை பாதுகாப்பு சார்ந்த பணிகளை முன்னெடுத்து வருகிறார். தன் நண்பர் கார்த்திக்குடன் இணைந்து ‘மண்ணின் மரங்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார். பண்பாட்டு சூழலியல் சார்ந்த தளங்களிலும் இயங்கி வருகிறார். தமிழ் இயற்கை நல்வாழ்வியல் மையத்தில் அக்குஹீலராக உள்ளார்.

முகப்பு ஒளிப்படம்: தமிழ்தாசன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time