மூச்சுவிட முடியவில்லை! இரும்பை உருக்கும் நாற்றம் குடலை புரட்டுகிறது! ஆலையின் புகையால் ஊரில் காணும் இடமெல்லாம் கருமை படிந்து கிடக்கிறது! செடிகள், இலைகள், நீர் நிலைகள், நிலமெல்லாம் கருந்துகள்கள்! வாழ்வாதாரத்தை அழிக்கும் தொழிற்சாலைகள், குவாரிகளின் பின்னணியில் ஆட்சியாளர்களா..?
பாத்திரத்தில் தண்ணீர் பிடித்துவைத்துவிட்டு சற்று நேரம் கழித்து பார்த்தால் கருந்துகள்கள் மிதக்கின்றன! விவசாயக் கிணறுகள் எல்லாம் கருந்துகள்கள்! இதனால் ஊரில் உள்ள மூன்று கிணறுகளுமே மூலியாகிவிட்டன!ஊரில் கருந்துகள் படிந்த செடிகளை உண்டு ஆடு, மாடுகள் மடிந்து சாகின்றன! கடந்த சில ஆண்டுகளில் பல்லடம் தாலுகாவில் உள்ள அனுப்பட்டியில் இந்த இரும்பாலையால் கேன்சர் வந்து இறந்தோர் எண்ணிக்கை 19. இறப்பை நோக்கி சென்று கொண்டிருப்போர் எண்ணிக்கை சில ஆயிரம்!
பல்லடம் அனுப்பட்டியில் இயங்கும் கிஸ்கால் எனப்படும் கண்ணப்பன் அலாய்ட் அண்ட் ஸ்டீல் கம்பெனி ஏற்படுத்தியுள்ள சூழலியல் சீர்கேடுகள் தாம் மேலே விவரிக்கப்பட்டுள்ளன!
2011 முதல் இந்த ஆலை இங்கே இயங்குகிறது! சுமார் 12 ஆண்டுகளாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் யாவும் பயனற்று போகின்றன! இந்தக் கொடிய சூழலில் 28,800 டன்கள் இருந்த ஆலையின் உற்பத்தி திறனை மேலும் மூன்று மடங்கு அதிகரித்து விரிவாக்க – 2019 ஆம் ஆண்டு 88,800 டன்கள் அதிகரித்துக் கொள்ள – தமிழ்நாடு சுற்றுச் சூழல் மதிப்பீடு ஆணையம் அறிக்கை தருகிறது.
கொடுமைக்கு துணை போகும் சுற்றுச் சூழல் அறிக்கை!
காற்றில் மிதக்கும் துகள்கள் 82 இருக்கிறது! நூறு வரை இருக்கலாம் என்ற வகையில் பரவாயில்லை. காற்றில் சல்பர் ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு இல்லாமல் இல்லை. ஆனால் சமாளிக்கும் அளவில் தான் இருக்கிறது! மண் அமிலத் தன்மைக்கு செல்கிறது.என்றாலும் விவசாயமே செய்ய முடியாத நிலை இல்லை. தண்ணீர் மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மிகாமல் இருக்கிறது. தொழிற்சாலை ஏற்படுத்தும் சவுண்ட் ( ஒலி) காது கிழியக் கூடிய அளவுக்கு போகவில்லை. ஆக, சுற்றுச் சூழல் விதிகளின்படி இந்த ஆலை தடை செய்யக் கூடிய அளவுக்கு ஆபத்தானதில்லை என்கிறது சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை!
இந்த ஆலையின் விளைவால் ஊரில் 19 மனித உயிர்கள் பலியான தகவலைக் கூட சாமார்த்தியமாக மறைத்து எழுதப்பட்டுள்ளது இந்த அறிக்கை! இப்படியான அறிக்கை தரும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊரில் குடும்பத்துடன் குடியிருக்க வேண்டும் என்ற விதியை சட்டத்தில் இணைத்தால் தான் இந்த அட்டுழிய அறிக்கைகளுக்கு ஒரு தீர்வு ஏற்படும்!
15 டன் கொள்ளளவு திறன் உள்ள உலை!
மேலும் 17 டன் கொள்ளளவு கொண்ட ரீ ஹீட்டிங் உலை!
இத்தனை கொதி நிலையுள்ள ஆலை விவசாயப்பர்ரப்பில் குடியிருப்புகளுக்கு மத்தியில் எப்படித்தான் அனுமதிக்கிறார்களோ..?
பத்தாண்டுக்கு மேற்பட்ட போராட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் தீர்வு, என நம்பி அதிமுகவுக்கு மாற்றாக திமுகவுக்கு வாக்களித்தனர் மக்கள்! ஆனால், ஆலை முதலாளியின் பாதுகாப்புக்கு ஆட்சி மாற்றம் இன்னும் செளகரியமாகிவிட்டது. காரணம், ஆலை முதலாளியின் குடும்பமும், முதலமைச்சர் ஸ்டாலினின் குடும்பமும் மிக நெருக்கமான நட்பை கொண்டுள்ளதை பின்னரே மக்கள் அறிய வருகின்றனர்! முதலமைச்சர் செல்லுக்கு மனு மேல் மனு கொடுத்து மனம் விரக்தி அடைந்தது தான் கண்ட பலன்!
இதோ தங்கள் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க 300 நாட்களுக்கும் மேலாக அனுப்பட்டி மக்கள் பந்தல் போட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ”நாங்கள் வாழ்வதா? சாவதா? சொல்லுங்கள் முதல்வரே” என மக்கள் கேட்கின்றனர். மனசாட்சி உள்ள அரசென்றால் மனம் பதறி இருக்க வேண்டும்.
பல்லடம் தாலுக்காவில் மாதப்பூர் ஊராட்சியில் இயங்கி வரும் கார்பன் தொட்டிக்கரி தயாரிக்கும் தொழிற்சாலை வி.கள்ளிப்பாளையம் ஊராட்சி துத்தாரி பாளையத்தில் இயங்கி வரும் இரும்பு உருக்காலை உள்ளிட்ட நிறுவனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப்புகை, சுற்றுச்சூழல் விவசாய நிலங்களுக்கு பாதிப்பும், சீர்கேடும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு நோய்த் தொற்றுக்கள் உடல் ஊனம் ஏற்பட்டு வருவதாக தொடர் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் எதுவுமே ஆட்சியாளர்களின் காதுகளை எட்டாத வண்ணம் குற்றவாளிகளுடம் கூடிக் குலவுகின்றனர்!
பல்லடம் தாலூக்கா நடுவேலம்பாளையம் பிரிவில் தனியார் தார் பிளான்ட் தொழிற்சாலை அமைந்துள்ளது. இதற்கு மிக அருகில் வி.ஆர்.பி.நகர் மற்றும் அதைச் சுற்றிலும் தோட்டத்து பகுதிகளிலும் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன! இங்கு மக்கள் விவசாயம் மற்றும் பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனியார் தார் பிளான்ட் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் இரசாயன கரும்புகை மாசுத் துகள் மற்றும் தார் துர்நாற்றம் அதிகமாக வருவதால் மூச்சுத்திணறல் நுரையீரல் புற்றுநோய், மூளை பாதிப்பு சம்பந்தமான பிரச்சனைகளால் உடல் உபாதைகளால் மக்கள் உயிர்வாதை அடைகின்றனர்.
இவை போதாது என விவசாய நிலங்களில் எல்லாம் குவாரிகளுக்கு அனுமதி தந்த வண்ணம் உள்ளார் அமைச்சர் துரைமுருகன். கல்குவாரிகளால் விவசாயம் செய்ய முடியாத நிலைமை தோன்றியுள்ளது. நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. பாறைகளை பெயர்த்தெடுக்கும் குவாரிகளால் சுற்றுச் சூழலில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பூர், சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல்..என பல பகுதிகளில் நாளும் மக்கள் கல்குவாரிகள், மணல் குவாரிகளுக்கு எதிராக போராடிய வண்ணம் உள்ளனர்.
Also read
ஆட்சியில் உட்கார்ந்து விட்டால் தமிழ் நாட்டு சுற்றுச் சூழலையே அழித்து இயற்கை வளங்களை எல்லாம் சூறையாடித் திளைக்கலாம் என்ற தைரியத்தை இந்த ஆட்சியாளர்களுக்கு யார் தந்தார்களோ…? ஆட்சிக்கு வருவதன் நோக்கமே ஆன வரை பணம் பார்ப்பது என்றால்.., அந்நிய ஆட்சியாளர்களை விரட்ட நடந்த விடுதலை போராட்டத்திற்கே அர்த்தமில்லாமல் போய்விடுகிறது!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
பஞ்சபூதங்களையும் தமிழ்நாட்டை விட்டே துரத்தி விட்டுத்தான் (எந்த) ஆட்சியாளரும் ஒய்வர்
உண்மை தான். நாடு விடுதலை பெற்றதற்கு அர்த்தமில்லாமல் போய்விட்டது. வெள்ளையர்களிடம் இருந்து இந்தக் கொள்ளையர்களிடம் மாட்டிக்கொண்டது .