பலிகடாவாகும் பொதுக் கல்வி! களம் காணும் கல்வியாளர்கள்!

-க.யோகராஜன்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது கல்வித் துறையில் கடும் நெருக்கடிகள்! நம் சமுதாயத்தை பல நூற்றாண்டு பின்னுக்கு இழுக்கும் சூட்சும முயற்சிகள் கல்வித் துறையில் கட்டி எழுப்பப்படுகின்றன, ஆட்சியாளர்களால்! இதை மெளனமாக வேடிக்கை பார்க்க முடியாத கல்வியாளர்கள் செய்யப் போவது என்ன..?

கல்விக்கான வாய்ப்பு சுருக்கப்படுகிறது,  நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுகிறது,  கல்வியின் தன்னாட்சி உரிமை பறிக்கப்படுகிறது..!  கல்வியை முழுக்க, முழுக்க  தனியார் மயம், வணிகமயம் ஆக்குவதற்கான  மடைக் கதவுகள் திறந்து விடப்பட்டிருக்கின்றன. ஆசிரியர்கள், பேராசிரியர்கள் முதலானோர் வெறும் ஒப்பந்த கூலிகளாக பார்க்கப்படும் அவலங்கள் அரங்கேறிக் கொண்டுள்ளன! கல்வித் துறையை காவி மயமாக்கவும், கார்ப்பரேட்டுகள் வசமாக்கவுமான முன்னெடுப்புகள் வேகம் பெற்றுள்ளன!

இத்தகைய சவாலான சூழ்நிலையில், வருகின்ற சனவரி 27,  2024 அன்று சென்னை, சேப்பாக்கம்  பத்திரிக்கையாளர்கள் கில்டு அரங்கத்தில் மாநில அளவில்  பொதுக் கல்வி பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது.  அகில இந்தியக்  கல்விப்  பாதுகாப்புக் கமிட்டியின் தமிழகக் கிளை   இந்த மாநாட்டை நடத்த உள்ளது.  தேசிய கல்விக் கொள்கையில் உள்ள (NEP 2020)   பல்வேறு அபாயகரமான  அம்சங்களை பட்டியலிட்டு கல்வியாளர்கள் மாநாடு விவாதிக்க உள்ளது. அது பற்றிய முன்னோட்டமே இந்தக் கட்டுரையாகும்.

சுதந்திர இந்தியாவில்,  கல்வி முறை முற்போக்கு சிந்தனையை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும் என ராஜாராம் மோகன் ராய்,  ஈஸ்வர சந்திர வித்யாசாகர்,  ஜோதி  ராவ் பூலே,  சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட இந்திய மறுமலர்ச்சியுக  முன்னோடிகள் தம் மனக் கண்ணால் கண்டனர். மதச்சார்பற்ற,  அறிவியல்,  ஜனநாயக மனித  மதிப்புகளைச்  செழித்து வளர்க்கக் கூடிய கல்விக்  கட்டமைப்பும்,  சமூகத்தின்  அனைத்துப் பிரிவு மக்களும் பெறும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் தொலைநோக்குப் பார்வை.  அதேபோல் ஆங்கில  ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்திய விடுதலைப் போராட்டத்தை கட்டி எழுப்பிய  காந்தி, நேரு, அபுல் கலாம் ஆசாத் போன்ற மாபெரும் தலைவர்களும் அனைத்துப் பிரிவு  மக்களையும்   உள்ளடக்கிய ஒரு சமத்துவமான  கல்வி அமைப்பைத் தோற்றுவிப்போம்  என்று உறுதி பூண்டு அதை மக்களிடம் வாக்குறுதிகளாகவும் அளித்தனர்.

ஆனாலும்,  சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள்  ஆன பிறகும்,  இந்த உன்னதமான நோக்கங்கள்   நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன.  நமது நாட்டில் கல்வி என்பது  விற்பனைப்பண்டமாக மாற்றப்பட்டு கல்வி வணிகர்களின்  கடைச்சரக்காகத் தாழ்ந்து விட்டது. விடுதலை மூலம் பெற்ற அதிகாரமானது  பொது மக்களின் கரங்களுக்கு வராமல் ,  மக்களின் நலனிற்கு  எதிரான நலன்களைக் கொண்டுள்ள  ஆளும் வர்க்கத்தின் பிடிகளுக்குள்   சென்றுவிட்ட நிகழ்வே, இன்றைய துயரமான நிலைக்கான  மூலகாரணமாகும். விடுதலை பெற்ற ஆரம்ப நாட்களில் கல்வி மீது இப்படிப்பட்ட வெளிப்படையான தாக்குதல்கள் நடைபெறவில்லை,  ஆனால் நாட்கள் செல்லச்  செல்ல இந்தத்  தாக்குதல்கள் இரக்கமற்று நடைபெற்று வருகின்றன.

குறிப்பிடத்தக்க இத் திருப்பு முனை தேசியக்  கல்விக் கொள்கை 1986 அறிமுகப்படுத்தப்பட்டவுடன்  தொடங்கியது.  இக்கொள்கை,  கல்வியைத்  தனியார் மயம், வணிக மயம் ஆக்குவதற்கான மடைக்கதவைத்  திறந்து விட்டதோடு,  கல்வி என்பது தனியார் முதலீடு செய்து லாபம் பெறுவதற்கான ஒரு தனித்துவக்  களம் என்று வெளிப்படையாகவே அறிவித்தது.  அதனைத்  தொடர்ந்து கைக்கொள்ளப்பட்ட கொள்கைகளான  மாவட்ட தொடக்க கல்வி திட்டம் ( DPEP),  அனைவருக்கும் கல்வி திட்டம் ( SSA),  கல்வி  பெரும் உரிமைச் சட்டத்தின் கீழ் தடையில்லாத்  தேர்ச்சி அல்லது  பள்ளியில் சேர்ந்தாலே தேர்ச்சி  போன்ற கொள்கைகள் நாட்டின் கல்வித் தரத்தை சீரழித்து விட்டன.

இந்த  பின்னணியில்தான் தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கம் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ (NEP 2020)  கொண்டு வந்தது.  30 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விக் கொள்கையை திருத்துகிறோம் என்ற பகட்டான விளம்பரத்தோடு கொண்டு வந்தனர்.  ஆனால் ஏற்கனவே நிலவி வருகின்றச் சிக்கல்களுக்குத்    தீர்வு காண்பதற்கு மாறாக  NEP 2020 பொதுமக்களின் நலன்களை காவு கொடுத்து விட்டு கார்ப்பரேட் நலன்களுக்கு ஆதரவான வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இது பன்னிரெண்டாம் வகுப்பு வரை  தேர்வுகளுக்கு முக்கியத்துவமே  இல்லை என்கிறது.

ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வு மட்டுமே மாணவனின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் ஒற்றை வழியாக இருக்கும். மேலும் மிகவும் முக்கியமான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்கிறது. இது கலை,  அறிவியல்,  வர்த்தகம்  போன்ற பல்வேறு  பாடப்பிரிவுகளில் எந்த வேற்றுமையும் இல்லை என்கிறது,  அறிவியல்  பூர்வமாக கற்பதை  அழிக்கப் பார்க்கிறது.  இந்திய  அறிவு முறைமையை (INDIAN KNOWLEDGE SYSTEM – IKS)   கல்வியின் அனைத்து மட்டத்திலும் செயற்கையாகப் பொருத்துவதன் மூலமாக கல்வியை மதமயமாக்க NEP 2020  எத்தனிப்பது  மிகவும் அபாயகரமான போக்காகும்.

இன்றைய நவீன அறிவியல் மிக நுட்பமாகவும் விரிவாகவும் வளர்ந்திருக்கிறது. அதோடு  ஒப்பிடும் போது NEP 2020 குறிப்பிடும்  பண்டைய இந்திய அறிவியல் முறை மிக மிக பின்தங்கியது. பண்டைய இந்திய  அறிவு முறையை (IKS) வலுக்கட்டாயமாக பாடத்திட்டத்தில் நுழைப்பது என்பது  காலாவதியாகிப்போன,  நிலப்பிரபுத்துவ,  மூட நம்பிக்கை,  அறிவிற்கு முரண்பட்ட பண்டைய சிந்தனைகளை   இன்றைய தலைமுறை மாணவர்களிடம் திணிப்பதாகும்.  இதன் மூலம் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளை திரித்துத்   தவறான மதவாதக்  கருத்துக்களைக்  கொண்டு வருவதற்கு  முயற்சிக்கிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக  NEP 2020  ஆறாம் வகுப்பு முதலே “கல்வியைத்   தொழில் மயம் ஆக்குவதற்கு”  பரிந்துரைக்கிறது.  இது, மாணவர்களுக்கு,  பல்வேறு பாடங்களை ஒன்றிணைத்து படித்து ஒரு முழுமையான அறிவைப்  பெறுவதற்குத் தடையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். ஒவ்வொரு  பள்ளியிலும்  முறையான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்துவதற்கு மாறாக,  இருக்கக் கூடிய கட்டமைப்புகளையும் வசதிகளையும் பகிர்ந்து கொள்கிறோம் என்ற பெயரில் “பள்ளித் தொகுப்புகள்” எனும் School complexes  உருவாக்குவதற்கு பரிந்துரைத்துள்ளது.  ஆனால் எதார்த்தத்தில் இது கிராமப்புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடுவதற்கு இட்டுச் செல்லும்.  இதனால் கிராமப்புற சாமானிய மாணவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கல்வி வாய்ப்பை இழக்கின்றனர்.

இருக்கும் சிக்கல்களை   NEP 2020 உயர்கல்வியில் மேலும் மேலும்  அதிகரிக்கிறது. கல்லூரிகளில்,  பல்கலைக்கழகங்களில்,  ஏன் ஐஐடிகள் போன்ற  மதிப்பு மிக்க கல்வி நிறுவனங்களில் கூட   ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.  தகுதி வாய்ந்த ஆசிரியர்களை  நிரந்தர அடிப்படையில் நியமிப்பதற்கு மாறாக  கௌரவ,  ஒப்பந்த,  பகுதி நேர ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் கல்வியின் தரம் சீரழிக்கப்படுகிறது.

“பல நுழைவு பல வெளியேற்றம்”  (Multiple Entry and Multiple Exit) என்ற அடிப்படையில் நான்கு வருட இளநிலை பட்டப்படிப்புகளை  இந்த கொள்கைப்  பரிந்துரைக்கிறது.  இதற்குக் கல்லூரிகளில் இருந்தும் பல்கலைக்கழகங்களில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இத்தகைய மோசமான பரிந்துரைகளை கொண்டுள்ள  NEP 2020,   வரைவுக்  கொள்கையாக 2019ல்  வெளியிடப்பட்டது முதலே, அகில இந்தியக்  கல்விப் பாதுகாப்புக்   கமிட்டி (AISEC)  கடுமையாக எதிர்த்து வருகிறது.  இத்தகைய மோசமான கொள்கைக்கு எதிராக  ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் சேர்ந்தும்,  தனியாகவும்  நாடு முழுவதிலும்  போராட்ட இயக்கங்களை அகில இந்தியக்  கல்விப் பாதுகாப்புக்   கமிட்டி  நடத்தி வருகிறது.

இதன் மூலம்  கல்விக்குப்  பேராபத்தை விளைவிக்க இருக்கும் இக் கல்விக் கொள்கையை மிகுந்த கவலையோடு பார்க்கக் கூடிய  புகழ் பெற்ற கல்வியாளர்கள்,  அறிவியலாளர்கள், வரலாற்று அறிஞர்கள்,  தேச சர்வதேச அறிவு ஜீவிகள்,  அதோடு பொதுமக்களையும் அகில இந்தியக்  கல்விப் பாதுகாப்புக்   கமிட்டி  தன் பால் ஈர்த்துள்ளது. நேரடியான மற்றும் இணைய வழியிலான கருத்தரங்கங்கள்,  பயிலரங்கங்கள்,  மாநாடுகள்,  எதிர்ப்பு போராட்ட இயக்கங்கள் ஆகியவற்றை  பல்வேறு மாநில அளவிலும் தேசிய அளவிலும்  நடத்தி இந்த கொள்கையின் ஆபத்தான கருத்துக்களை அம்பலப்படுத்தியதன் மூலம்  பரந்த  ஆதரவைப்  பெற்றுள்ளது.

இந்த மோசமான NEP 2020 கொள்கையைத் திரும்ப பெற்று அதற்கு மாறாக மதச்சார்பற்ற,  விஞ்ஞானபூர்வ, ஜனநாயகபூர்வ,  அனைவருக்குமான   கல்வியை உத்திரவாதப்படுத்தும் உண்மையான  மக்கள் நலக் கல்விக் கொள்கையைக் கொண்டுவர வலியுறுத்த உள்ளது.

அரசுப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு பொதுக் கல்வி அமைப்பையே நிர்மூலமாக்கும் பணியை மத்தியில் ஆளும் பாஜகவும் மாநிலத்தில் ஆளும் திமுக அரசாங்கங்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்து வருகின்றன.

எனவே, பொதுக்  கல்வி அமைப்பை பாதுகாக்கக் கோரி, அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் தமிழ்நாடு (AISEC) மாநில அமைப்பு சார்பில் பல்வேறு கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பொதுக் கல்வி  பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இதில் புகழ்பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள் உரையாற்ற உள்ளனர். மக்களின் அடிப்படைக் கல்வி உரிமையை பாதுகாக்கக் கோரி நடைபெறும் இம்மாநாட்டை மாபெரும் வெற்றி பெற வைக்க தங்களால் இயன்ற அனைத்து ஆதரவையும், பங்களிப்பையும் வழங்கக் கோரி அறைகூவி அழைக்கிறோம்.

கல்வி மீது கொடிய தாக்குதல் நடத்தப்படும் இந்தநேரத்தில் மதச்சார்பற்ற,  அறிவியல்பூர்வ,  சனநாயகபூர்வக்  கல்வியை  அனைவருக்கும் கிடைக்கச் செய்யும் வகையில்  கல்வி அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக  AISEC போராடும்  இந்த நெருக்கடியான நேரத்தில்  நாட்டில் உள்ள  நல்லெண்ணம் கொண்ட குடிமக்கள்,  கல்வியாளர்கள்,  அறிவுஜீவிகள்  கரங்கோற்க வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். கல்வியை எதிர்வரும் தலைமுறைக்கு  பாதுகாத்துக் கொடுப்பதற்காக நாம் எல்லோரும் கரம் கோர்ப்போம்.

ஜனவரி 27, 2024 – பத்திரிக்கையாளர்கள் கில்டு, சேப்பாக்கம், சென்னையில் முழு நாள் நிகழ்வாக நடக்க உள்ளது. இந்த மாநாட்டின் நோக்கங்களை கோஷங்களாக வைத்துள்ளோம்;

மேற்படியான விவகாரங்கள் குறித்தே விவாதிக்க உள்ளோம்.

இந்த மாநாடு பேரா  தி.மருதநாயகம் தலைமையில் நடக்க உள்ளது. பேரா S. ரகுரதி பாண்டியன், (AISEC, தமிழ்நாடு) வரவேற்புரை ஆற்ற உள்ளார்.

பேரா ஜ. காந்திராஜ் (மாநிலத் தலைவர் AUT), ச. மயில் (பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி), ஆர். பெருமாள்சாமி (மாநிலத் தலைவர், தமிழ்நாடு பட்டதாரிகள் ஆசிரியர் கழகம்), பேரா பி.கே.அப்துல் ரஹிமான் ( சென்னை பல்கலைகழகம்),  பழ.கௌதமன் (மாநிலத் தலைவர் ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்), கே.பாலகிருஷ்ணன் ( மாநில ஒருங்கிணைப்பாளர், ஐக்கிய விவசாயிகள் முன்னணி -SKM), எம்.ஜே.வால்டேர் (மாநிலத் தலைவர், அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், தமிழ்நாடு),  பேரா. சே. சோ. ராமஜெயம் (அரசு கலைக் கல்லூரி, திண்டிவனம்), ஆசிரியை சு.உமா மஹேஸ்வரி ( AISEC, மாநிலத் தயாரிப்புகுழு, தமிழ்நாடு), வி.பி. நந்தகுமார்( AISEC, அகில இந்திய செயற்குழு), பேரா க.யோகராஜன்( AISEC, மாநிலத் தயாரிப்பு குழு, தமிழ்நாடு) ஆகியோர் உரையாற்ற உள்ளனர்!

பேரா அ.கருணானந்தன் ( மேனாள் துறைத் தலைவர், வரலாற்றுத் துறை விவேகானந்தா கல்லூரி), பேரா லெ.ஜவகர் நேசன்( மேனாள் துணை வேந்தர், ஜே எஸ் எஸ் பல்கலைக்கழகம்), பேரா ப.சிவக்குமார் (மேனாள் முதல்வர், குடியாத்தம் அரசு கல்லூரி), வா. அண்ணாமலை ( அகில இந்தியச் செயலாளர் – IFETO) பேரா. பிரான்சிஸ் குலோத்துங்கல் (AISEC, அகில இந்திய செயற்குழு உறுப்பினர், கேரளா ) ஆகியோர் பேரூரை ஆற்ற உள்ளனர். இறுதியில்  லெனா குமார் நன்றியுரை  வழங்க உள்ளார்.

கட்டுரையாளர்; க.யோகராஜன் (AISEC – மாநில தயாரிப்பு குழு உறுப்பினர்)

கல்விச் செயற்பாட்டாளர்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time