மண்ணின் மக்களை மறுதலிக்கும் ஜல்லிக்கட்டு!

ஜல்லிக்கட்டு போராட்டத்தை 2017க்கு முன்பு, பின்பு என இரு வேறாக அணுக வேண்டியுள்ளது. முன்பெல்லாம்  மண்ணின் மக்கள் விழாவாக -அந்தந்த ஊர் சம்பந்தப்பட்ட அளவில் – நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு, தற்போது அரசியல், அதிகாரம், பெருவணிகம்.. ஆகியவற்றின் ஆதிக்கத்தில் மண்ணின் மக்களை அந்நியப்படுத்தியுள்ளது;

தமிழர்களின் வீர விளையாட்டு என பெரிய ‘ஹைப்’ தரப்பட்டு, மிகப் பெரிய அளவில் சென்னை மெரீனா தொடங்கி தமிழகம் தழுவிய போராட்டங்கள் நடத்தி, ஜல்லிக் கட்டுக்கு ஒரு மவுசு வந்த பிறகு அரசியல், அதிகாரம், வணிகம் ஆகியவை சம்பந்தப்பட்ட ஆதிக்க விளையாட்டாக உருமாறிவிட்டது. ஆயினும் முன்பிருந்த ஜாதிய ஆதிக்கம் இன்னும் தொடர்கிறது.

ஜல்லிக் கட்டு அறுவடை காலத்தை ஒட்டி தை மாதத்தில் நடத்தப்படும் விழாவாக மட்டும் இருந்தது மாறி, தற்போது ஆண்டுக்கு ஐந்து மாதங்கள் நடக்கும் விழாவாகிவிட்டது. இதில், ”இதை ஆண்டு முழுவதும் நடத்த வேண்டும்” என்ற கோரிக்கையும் வரத் தொடங்கிவிட்டது!

ஜல்லிக் கட்டுக்காக அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள மிகப் பெரிய ஸ்டேடியமானது ஜல்லிக்கட்டு தற்போது கார்ப்பரேட் தளத்திற்கு சென்றுவிட்டதை துல்லியமாக நமக்கு உணர்த்துகிறது. மிகப் பிரம்மாண்ட மட்டுமின்றி, குளிரூட்டும் அரங்கு உள்ளிட்ட இன்னபிற வசதிகள் இன்னும் ஜல்லிக்கட்டை மண்ணின் மக்களிடம் இருந்து முற்றிலுமாக அன்னியப்படுத்திவிடும் என உறுதியாகச் சொல்லலாம்.

66 கோடிகள் செலவில் பிரம்மாண்டமாக எழுந்துள்ள ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்!

எந்த ஒன்றுமே பெரிய விளம்பரம் பெறும் போது அதன் இயற்கைத் தன்மையும், இயல்பு நிலையும் பறிபோவது தான் நடக்கிறது. தற்போது ஜல்லிக்கட்டு எந்த ஊருல் நடக்கிறதோ அந்த ஊர் மக்களுக்கும், மாடு வளர்ப்போருக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் அன்னியமாகிவிட்டது! அதுவும் ‘ஆன்லைன் புக்கிங்’ முறையை அறிமுகப்படுத்தி உள்ளூர் வீரர்கள், உள்ளூர் மாடுகள் போட்டியில் பங்கு பெறுவதை அரிதாக்கிவிட்டனர். அரசியல்வாதிகள், அதிகாரிகள், பெரிய வணிகர்கள், செல்வாக்கானவர்கள் ஆகியோருக்கான விழாவாகிவிட்டது! உள்ளுர் மாடுகளும், வீரர்களும் 10 சதவிகிதம் பங்கு பெறுவதே சவாலாகிவிட்டது.

இந்தப் போட்டியில் பங்கெடுப்பதற்காக உள்ளூர் மக்கள் படும் அவமானங்களும், வாங்கும் அடி, உதைகளும் சொல்லி மளாது. இவர்களை காவல்துறையும் , அதிகார வர்க்கமும் படுகேவலமாக நடத்துவது சகிக்க முடியாததாகிவிட்டது. செல்வாக்கானவர்களின் மாடுகளும். வி.வி.ஐ.பி சிபாரிசு செய்யும் வீரர்களும் மட்டுமே பங்கு பெற அனுமதிக்கப்படுவதாக உள்ளூர் மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்! உள்ளூர் மக்களை புறக்கணித்தும், அவர்களின் உள்ளங்களை ரணப்படுத்தியும் நடத்தும் விழா, உலகம் போற்ற நடத்தப்படுவது போல தோற்றம் காட்டுவது வேதனையே!

இவை யாவும் பெரும்பாலும் பிரதான ஊடகங்களில் செய்தியாகாது! பிரதான ஊடகங்களுக்கு இதை ‘லைவ் கவரேஜ்’ செய்வதன் மூலம்’ டி.ஆர்.பி.ரேட்டிங்’ மற்றும் விளம்பர வருமானத்தை அள்ள வேண்டும் என்பதே குறியாக உள்ளது. அரசியல்வாதிகளுக்கோ இந்த போட்டியின் மூலம் ‘தங்கள் செல்வாக்கை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்ற ஆசை பிறந்துவிட்டது.

வெற்றி பெறும் களைகள் தங்களுடையதாகவோ அல்லது தங்களுக்கு வேண்டப்பட்டவர்  களுடையதாகவோ இருக்க வேண்டும் என்ற விருப்பம் மட்டுமல்ல, மாடுபிடி வீரரும் தங்களவராக இருக்க வேண்டும் என எண்ணத் தலைப்படுவது தான் இந்த ஆண்டு பெரும் சர்சையாக வெடித்துள்ளது. சில இடங்களில் டோக்கனை ரூ50,000 ஆயிரம் வரை பிளாக்கில் விற்று உள்ளனர்!

இந்த ஆண்டு ஜல்லிக் கட்டு போட்டியை நேரலையில் பார்த்தவர்கள் அதில் அரசியல் எந்த அளவுக்கு உட்புகுந்துவிட்டது என்பதை அறியலாம். மிகத் திறமையாக விளையாடி அதிக மாடுகளை பிடித்த மாடுபிடி வீரர் அபிசித்தர் என்ற இளைஞர் வலுக்கட்டாயமாக இரண்டாம் ஆட்டத்தில் வெளியேற்றப்பட்டார். ஒருவரே வருகிற பெரும்பாலான மாடுகளை பிடிக்கும் போது இவ்வாறு இரண்டாவது ஆட்டத்தில் வெளியேற்றப்பட்டு கடைசி சுற்றுக்கு அனுமதிக்கபடுவார் என்பது விதியாகச் சொல்லப்பட்டது. ஆனால், அந்த விதி இவரைப் போன்றே அதிக மாடுகளை பிடித்த கார்த்திக் விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. அந்த கார்த்திக் என்பவர் அமைச்சர் மூர்த்தின் சொந்த தொகுதிகுட்பட்டவர். அவருக்கு அமைச்சரால் அதிக முக்கியத்துவம் தரப்பட்டது என அபிசித்தர் குற்றம் சாட்டி உள்ளார்.

அபிசித்தர் ஊடகங்களில் பகிரங்கமாகவே பேசினார். நான் சிவகங்கை மாவட்டம் பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த அபிசித்தர். கடந்த 2023 ஆம் ஆண்டு இதே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 30 மாடுகளை பிடித்து முதல் பரிசு வாங்கினேன். ஆனால் 26 மாடு தான் பிடித்தேன் என்று அறிவித்தார்கள். அப்பொழுதும் அரசியல் பண்ணிவிட்டார்கள்.

நான் 2 சுற்றில் (பேட்ஜ்) 11 மாடுகள் அடக்கினேன். அவர் 3 சுற்றில்தான் 11 மாடுகளைப் பிடித்தார். நான் கார்த்தியைக் காட்டிலும் இரண்டாவது சுற்றிலேயே அதிக மாடுகள்  பிடித்தேன். இதை விழாக் குழுவினரும் பொருட்படுத்தவில்லை. நான் நீதிமன்றத்துக்குச் செல்வேன். எனக்கு இரண்டாம் பரிசு தேவையில்லை. வீடியோவைப் பார்த்து, இதே மேடையில் என்னை முதல் பரிசு பெற்றதாக அறிவிக்க வேண்டும். எனக்கு பரிசு பொருளான கார் கூட வேண்டாம். என் திறமைக்கான அங்கீகாரம் தந்தால் போதும். இங்கே அரசு அரசியல் தான் பண்றாங்க. களத்திலேயே அமைச்சரின் ஆட்கள் என்னை மாடுகள் பிடிக்கவிடாமல் இடைஞ்சல் தந்தார்கள். இதற்கு முழுக்க முழுக்க அமைச்சர் மூர்த்தி தான் காரணம். இந்த வருஷம் முதலிடம் அறிவித்துள்ள கருப்பாயூரணியை சேர்ந்த கார்த்திக் அமைச்சரின் ரெக்கமண்டில் வந்தார். சக வீரர்கள் எல்லாரையும் கேட்டு விசாரித்து இதற்கு ஒரு நியாயம் வழங்க வேண்டும்’’ என்றார்.

ஜல்லிக்கட்டில் பரிசு பெறும் வீரர்கள் மேலே மேடைக்கு வந்து கெளரவமாக பரிசு பொருட்களை வாங்க அனுமதிக்காமல் அவர்கள் அந்த பந்தலின் மூங்கில் கழியில் ஏறி தொங்கியபடியே பரிசை பெறும் அவலங்களால் பார்ப்போர் மனதை சங்கடப்படுத்துகின்றனர்.

இவை தவிர, ஜல்லிக் கட்டு நடைபெறும் ஒரு சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களும், அவர்களின் காளைகளும் பங்கெடுப்பதை தடுப்பதும் அரங்கேறியுள்ள செய்திகள் இங்கே சமூக நீதி மறுக்கப்படுவதை உணர்த்துகின்றன! இந்த ஆண்டு காளைகள் வளர்ப்போர் மற்றும் வீரர்களின் பெயர்களை ஜாதியைச் சொல்லி அறிவிக்க தமிழக அரசு தடை விதித்தது ஒரு நல்ல அம்சம் தான்!

ஜல்லிக்கட்டு குறித்த துல்லியமான பதிவுகளை வழங்கும் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலில் ஓரிடத்தில் சொல்வார்;

”ஜல்லிக்கட்டு என்பது மனிதர்களுக்கு தான் விளையாட்டு. காளைகளுக்கு அல்ல” என்பார்.

உண்மை தான். அதை நாம் வலிந்து பயிற்சி தந்து வன்முறை விளையாட்டுக்கு அழைத்து வருகிறோம். ஆயினும் பல காளைகள் நடப்பது என்னவென்பதை புரிந்து கொள்ள முடியாமலே விட்டால் போதுமென வாடிவாசலில் இருந்து வெளியேறிய நொடியில் அதிவேகமாக ஓடிவிடுவதையும் காணலாம்.

மற்றும் சில காளைகள், ”என்னிடம் யாரும் விளையாட முயன்றால் தொலைத்துவிடுவேன்..”என எச்சரிக்கையோடு நிற்பதையும், அவற்றை அங்கிருந்து போக வைப்பதற்கே பெருமுயற்சி எடுப்பதையும் காணலாம். இன்னும் பல காளைகள் வாடிவாசலில் இருந்து வெளியேறுவதற்கே அச்சப்பட்டு தயங்கி பின்வாங்குவதையும், அதன் உரிமையாளர்கள் அதனை நிர்பந்தப்படுத்தி வெளியேற்றுவதையும் ஒவ்வொரு முறையும் பார்க்க முடிகிறது.

ஜல்லிக்கட்டு காளைகளை மட்டுமே இயற்கையான முறையில் கூடி இனவிருத்தி செய்ய இந்த அரசாங்கம் அனுமதிக்கிறது. மற்ற மாடுகளுக்கு அந்த வாய்ப்பை இந்த கார்ப்பரேட் களவாணி அரசாங்கம் மறுக்கிறது. ‘இந்த ஒரு வாய்ப்பை தவறவிடக் கூடாது’ என்பதற்காகவே பல கிராமங்களில் இந்த ஜல்லிக்கட்டு உயிர்ப்போடு இருக்கிறது’ என்ற உண்மையையும் நாம் மறுக்க முடியாது. வருங்காலத்தில்  கார்ப்பரேட்களின் பல கோடிகள் புரளும் ஹைடெக் விழாவாக மாறக் கூடிய அறிகுறிகளும் தென்படுகின்றன! அப்போது அரசியல் அழுத்தங்கள் மேலும் அதிகரிக்கலாம்.

சாவித்திரி  கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time