காதலின் மேன்மையை சொல்லும் கவித்துவ சினிமா!

-சாவித்திரி கண்ணன் & பீட்டர் துரைராஜ்

‘காதல் the core’ காதலின் உன்னதத்தை இப்படியும் சொல்லலாமோ..! ஒரு சண்டை சச்சரவு இல்லை! இருவரும் பரஸ்பர மரியாதையும், அன்பும் கொண்டுள்ளனர். எனில், இப்படிப்பட்ட தம்பதினர் ஏன் விவாகரத்து கோருகின்றனர்! பேசவியலாத விஷயத்தைக் கூட, சூட்சுமமாக காட்சி மொழியில் கடத்துவதே படத்தின் வெற்றி:

இயக்குனர் ஜோ பேபி இயக்கியுள்ள இந்த மலையாளப் படம் பேசாப் பொருளை நுட்பமாகப் பேசுகிறது! இயக்குனரின் நயத்தக்க நாகரீக அணுகுமுறையாலும், மம்மூட்டி, ஜோதிகாவின்  பண்பட்ட தேர்ந்த நடிப்பாலும், விவாதமாக வேண்டிய  ஒரு கதையை அனைவரும் ஏற்கும்படி படைத்துள்ளனர்.

மாத்யூவும், ஓமனாவும் ஞாயிற்றுக் கிழமை கோவிலில் வேண்டிக் கொள்வதில் கதை தொடங்குகிறது. மாத்யூ, கிறிஸ்தவக் குடும்பத்தைச் சார்ந்தவன். வசதி உள்ளவன். அப்போது நடைபெற உள்ள வார்டுக்கான இடைத் தேர்தலில் அவனை நிற்க வைக்க விரும்புகிறது சிவப்புக்கட்சி. நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பேசுபவனை கட்சி பயன்படுத்திக் கொள்ள விரும்புவது இயல்புதானே ! சிவப்புக் கட்சி ஆதரவு பெற்ற வேட்பாளராக மேத்யூ களம் இறங்குகிறான்.

கல்லூரியில் படிக்கும் பெண் வீட்டிற்கு வந்த அன்றே தந்தையிடம்  சொல்லாமல் மீண்டும் விடுதிக்கு செல்கிறாள். மகளுக்கும் தாய்க்கும் நெருக்கமான பிணைப்பு ஏனோ இல்லை. அந்த ஊரில் வாடகை டாக்சி  ஓட்டும் தங்கனை ஊர் மக்கள் கிண்டல் செய்கிறார்கள். இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பல சம்பவங்கள் முதல் பாதியில் வருகின்றன. வெகுநேரம் கடந்தும் கதை ஓட்டம்  நமக்குப் புரிவதில்லை.

கேரளாவின் இயற்கை எழில் சூழ்ந்த சிற்றூர் ஒன்றில் நடக்கும் கதையில் தென்படும் அத்தனை கதாபாத்திரங்களும் அவரவர்களின் இயல்பு மாறாமல் வாழ்ந்து செல்கின்றனர்.

மம்மூட்டி மாத்யூவாக நடிக்கிறார் என்றால், அவருக்கு சமதையாக ஓமனாவாக ஜோதிகா நடிக்கிறார். இருவருக்கும் திருமணமாகி இருபது ஆண்டுகள் முடிந்து விட்டன. ஓமனா எப்போதோ போட்ட விவாகரத்து வழக்கு இப்போது விசாரணைக்கு வருகிறது. தேர்தல் நேரத்தில் வழக்கு விசாரணைக்கு  வருவதால் அவர்களின் அந்தரங்கம் பொது வெளிக்கு வருகிறது.

இப்போது அதிகாரத்தில் இருக்கும் மூவர்ண கட்சி முதலில்  வீடு வீடாகத் தனியாகவும், பிறகு பகிரங்கமாகவும் மாத்யூவின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது. அவன் சொந்த வாழ்க்கைப் பற்றி எங்களுக்கென்ன என்று எதிர்க் கேள்வி கேட்கிறார் ஒரு வாக்காளர். இப்படித் தான் அரசியல் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக இயக்குநர் இந்த காட்சியை வடிவமைத்து இருக்கலாம். விவகாரத்து வழக்கு தொடுத்த மனைவியே – பொதுவெளியில் கணவனின் கெளரவத்தை காப்பாற்ற – அவனுக்காக வீடுவீடாக பிரச்சாரம் செய்வது அந்தப் பெண் கதாபாத்திரத்தின் முதிர்ச்சியைக் காட்டுகிறது.

தேர்தல் நேரம் என்பதால் இப்போது வழக்கை திரும்பப் பெற்று விடு என்று நிர்பந்திக்கப்படுவதை ஓமனா ஏற்க மறுக்கிறாள். அவர்கள் ரோமன் கத்தோலிக்க சபையைச் சேர்ந்தவர்கள். அதைச் சார்ந்த மதகுரு இருபது ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு இப்படி ஒரு விவாகரத்து வழக்கு தேவையா என ஆலோசனை கூறுகிறார். தன் மகளைப் போல நேசிக்கும் மருமகளை வழக்கை திரும்பப் பெறும்படி மாமனார் கூறுகிறார். அவளது மகளின் திருமணம் என்னவாகும் என்பதை யோசிக்கும்படி கூறும் அவளது சகோதரன் கூறுகிறான்.

சகோதரன், தந்தை, உறவினர், மதம், அரசியல் கட்சி போன்றவைகள் எடுக்கும் நிலைபாடுகள் திருமணம் என்கிற நிறுவனத்தை எப்படி பாதிக்கின்றன என்று நாம் பொருள் கொள்ளலாம். அவள்படும் துயரம் வெளியில் சொல்ல முடியாதது! தனிநபர்களுக்கு யார் பொறுப்பு ! அப்படியானால் அவர்கள் எவ்வளவு பொறுப்போடு கருத்து சொல்ல வேண்டும்; நடந்துகொள்ள வேண்டும்.

தன்பாலின ஈர்ப்பு குறித்த படத்தில் நடிக்க மம்மூட்டியைப் போன்ற ஒரு மூத்த நடிகர் ஒத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமானது. அதுவும் குற்றவுணர்வுடனே வாழுகின்ற ஒரு கேரக்டர்! இயல்பான  நடிப்பால் மம்மூட்டி அசத்துகிறார். கண்ணியமும், கடமை உணர்வுமிக்க குடும்பத் தலைவியாக வரும் ஜோதிகா இறுதியில் மிகத் துணிச்சலாக முடிவெடுக்கும் அசாத்திய துணிச்சல் மிக்கவராக வெளிப்படுகிறார்.

மாத்யூ தேர்தலில் நிற்பதை, அதே வீட்டில் இருக்கும் தந்தைக்கு சொல்லவில்லை; மனைவி மூலமாக சொல்லச் சொல்கிறான்.  தந்தையும் மகனும்  ஒரு வார்த்தைகூட நேரடியாக பேசிக் கொள்வதில்லை. ஒரே வீட்டில் இருப்பவர்களுக்கு இடையில் அப்படி என்ன மனஸ்தாபம் இருக்க முடியும் ..? என்றெல்லாம் நாம் குழம்பித் தவிக்கையில் அதற்கான விடையும் கடைசில் வருகிறது.

“நான் கல்யாணம் வேண்டாம் என்று சொன்னாலும், ‘ஒரு கல்யாணம் நடந்தால் எல்லாம் சரியாகிவிடும்’ என என்னை திருமண பந்தத்தில் இணைத்தீர்களே..பார்த்தீர்களா..?” என மம்முட்டி ஒரு காட்சியில் கதறி அழும் போது, தந்தையும் சேர்ந்து அழுகிறார்! ஆக, மகனின் பலவீனத்தை மறைத்து தந்தை அவனுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளார். இது தன் பாலினத்தவர்களால் இயல்பான திருமண வாழ்க்கைக்குள் ஒரு போதும் வாழ இயலாது என்ற யதார்த்தத்தை பொட்டில் அடித்தது போல உணர்த்தும் காட்சியாகும். தன் பாலினத்தவர்களின் பெற்றோர்கள் பெற வேண்டிய பாடமாகவும் இந்த படத்தை கருதலாம்.

அரசியல் கட்சிகளுக்கு உள்ள பொறுப்பையும் இயக்குநர் கேள்விக்கு உட்படுத்துகிறார். பொதுவாழ்வோடு தொடர்பற்ற, தனிப்பட்ட வாழ்வை தேர்தலில் கேள்விக்கு உள்ளாக்கலாமா? மூவர்ண கட்சி கேள்வி கேட்டு தவறு செய்கிறது? சிவப்புக் கட்சியோ அதிகாரப்பூர்வமாக ஆதரவளிக்காமல் தவறு செய்கிறது. இப்படி நுட்பமான பல செய்திகள் வருகின்றன.

வழக்கு நடக்கும் நீதிமன்றத்திற்கு கணவன் மனைவி இருவரும் ஒரே காரில் பயணிக்கின்றனர். சாட்சி சொல்கையில் ஓமனாவின் கைப்பையை மாத்யூதான் வாங்கி வைத்துக்கொள்கிறான். விவாகரத்து என்பது ஏதோ பாவமானது என நாம் நினைக்க வேண்டியதில்லை. ஒருவரை ஒருவர்  வெறுக்காமல் வாழ்வதற்காக கூட விவாகரத்து நடக்கலாம்.

அவர்களுக்கு இடையில் எத்தனை முறை உடலுறவு நடந்தது என யாருக்குத் தெரியும்? ஏன் தெரிய வேண்டும்.? நீதிபதி கேட்டதால் மட்டுமே அதையும் அவள் தன் வழக்கிற்காகக் கூறுகிறாள்! இதில் தான் அவள் தரப்பு நியாயம் துல்லியமாக வெளிப்படுகிறது. நேர்மையாக நடப்பதாக காட்டப்படும் மாத்யூ, தன் மனைவியிடம் நேர்மையாக இருக்கிறானா..? இப்படி இயக்குநர் பல அடுக்குகளில் கேள்வி எழுப்புகிறார்.

இவர்களுக்கு ஆதரவாக வாதிடும் இரண்டு பேரும் பெண்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் ஆத்திரமூட்டாமல் வாதிடுகிறார்கள். ஒருவேளை இப்படித் தான் உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள் இணைந்து பேச வேண்டுமோ! இத்தகைய ஆரோக்கியமான காட்சிகள் வேறு படத்தில் வந்ததில்லை.

கிறிஸ்தவத் திருமணம் என்பது சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் வருவது ! அதன்படி விவாகரத்து கிடைப்பது எளிதல்ல. கிறிஸ்தவ தம்பதியினரை தேர்ந்தெடுத்தற்கு ஏதும் சிறப்பான காரணம் இருக்குமோ !  பிரைம் தளத்தில் ஓடும் இந்த இரண்டு மணிநேர படம் ‘கரணம் தப்பினால் மரணம்’  என்ற பழமொழிக்கு ஒப்ப சிக்கலான விவகாரத்தை மிக நேர்மையாக கையாள்கிறது. அதனால் மரணம் நிகழவில்லை.

இருவரும் பிரிவதற்கு முன்பான அந்த கடைசி இரவில் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவி அழுகிறார்களே..! இந்த ஒரு காட்சி போதாதா.. இருவரது காதலின் மேன்மையை விளக்க!

பாலியல் காட்சிகள் ஏதுமின்றி, ஒரு ஆழமான கதையை சித்தரித்த இயக்குநரை பாராட்ட வேண்டும். குடும்ப பெண்ணின் வலியைக் கூறும் தி கிரேட் இந்தியன் கிச்சனை இயக்கிய ஜோ பேபிதான் பெண்ணுரிமையை உரக்க பேசும் இந்தப் படத்தையும் இயக்கி உள்ளார். ஆபாசமான வசனங்களும் இல்லை; காட்சிகளும் இல்லை.

படத்தின் முடிவு அனைவருக்கும் ஏற்ற வகையில் இசைவாக இருப்பதற்காக யாரையாவது ஒருவரை மரணிக்கக் கூட வைத்திருப்பார்கள் சராசரி இயக்குனர்கள்! ஆனால், அதிர்ச்சி தரக்கூடிய முடிவென்றாலும், இப்படிப்பட்டவர்கள் இந்த முடிவைத் தான் எடுக்க முடியும் என்பதை ஏற்க வைக்கிறார் இயக்குனர்.

இப்படிப்பட் படைப்புகள், நாம் பார்க்க மறுக்கும் வாழ்வின் இருட்டான பக்கங்களை நமக்கு பார்க்கவும், உணரவும் கற்றுக் கொடுக்கிறது ஒரு கலைப் படைப்பின் மேன்மை என்பதே மனித மனதை இன்னும் பண்படுத்துவதில் தானே அடங்கியிருக்கிறது.

திரை விமர்சனம்; சாவித்திரி கண்ணன் & பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time