ராமர் கோவில் அரசியலும், பாரத் நியாய  யாத்திரையும்!

- ராம் புனியானி

ராமர் கோவில் திறப்புவிழா ஆர்எஸ்எஸ்- பாஜகவின் நிகழ்ச்சியாகும். அது சர்வாதிகார அரசியலை வலிமைப்படுத்துகிறது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணமானது, இந்திய அரசியலமைப்பின் ஜனநாயக விழுமியங்களை  பேசுகிறது. பரத் நியாய யாத்திரை ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த விஷயமில்லை..!

ராமர் கோவில் திறப்பு விழாவிற்காக பிரம்மாண்ட விளம்பரங்கள் செய்து, ஒரு ‘ஹைப்’ ஏற்படுத்தி, ஆட்களை திரட்டும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இந்திய நாட்டின் ஜனநாயகம் குறித்தும், அதன் நெறி முறைகள் குறித்தும் நாம் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த உடனே, பதினோறாம் நூற்றாண்டில் முகமது கஜினியால் கொள்ளையடிக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தை அரசாங்கம் புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. “நானும், பட்டேலும் மீண்டும் கோவிலை  கட்ட வேண்டும் என்று  மகாத்மா காந்தியை அணுகினோம். ஆனால் இதற்காக அரசாங்கமே பணத்தை தரக்கூடாது என்று காந்தி கருதினார்” என்று நேரு எழுதுகிறார். இதனையொட்டி, குடியரசுத் தலைவர் என்ற பதவியில் இருந்து கொண்டு, ராஜேந்திர பிரசாத் அந்தக் கோவிலை தொடங்கி வைக்கக் கூடாது என நேரு ஆலோசனை வழங்கினார். அவருடைய பங்கிற்கு இந்தியாவின் நவீன கோவில்கள் என்று சொல்லக் கூடிய அணைகள், பொதுத் துறை நிறுவனங்கள், சுகாதார கட்டமைப்புகள், கல்வி &  ஆராய்ச்சி நிலையங்களை நேரு கட்டமைத்தார்.

‘ ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு’ என்பதைத் தாண்டி, தொழிலாளர், விவசாயிகள் இயக்கங்களும், சமூகத்தின் மற்ற இயக்கங்களும் ஜனநாயக விழுமியங்களை ஊக்குவித்தன. அவசர நிலைகாலம் நீங்கலாக, ஜனநாயக வழிமுறைகளை வலுப்படுத்தும் திசையில்  இந்த நாடு சென்று கொண்டிருந்தது. ஆனால், ராமர் கோவில் இயக்கமானது, விடுதலை இயக்கத்தோடு உருவாகி வந்த வந்த ‘ இந்தியா என்கிற கருத்தாக்கத்திற்கு’ ஊறுவிளைவிக்கத் தொடங்கியது.

பாரத் நியாய யாத்திரை

1992 ம் வருடம், டிசம்பர் ஆறாம் நாள்  இடிக்கப்பபட்ட பாபர் மசூதி, இப்போது கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அடிகோலியது. பாரதிய ஜனதா கட்சி, மக்களின் உணர்ச்சிகரமான பிரச்சினைகளைப் பற்றி பேசுவது மட்டுமல்ல, இந்த நாட்டில் உள்ள ஜனநாயக வெளிகளை சுருக்குகிறது. இந்த நாட்டில் உள்ள ஜனநாயக வெளிகளை சுருக்குகிறது.

ஒட்டுமொத்தமாக உணர்ச்சிகரமான பிரச்சினைகளே பேசப்படுவதால், மேம்பட்ட வாழ்க்கைத்தரமானது அரசாங்கத்தால் கண்டுகொள்ளப்படுவதில்லை. விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கிறது; மக்களின் வாழ்க்கைத்தர அளவீடுகள் மோசமாகி வருகின்றன; சராசரி மக்களின் முதுகு ஒடிந்து கொண்டிருக்கும் வருத்தமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நல்ல எதிர்காலத்திற்கு நம்பிக்கை எங்கே இருக்கிறது ? கடந்த சில ஆண்டுகளில் ஓரளவு நம்பிக்கை தரும் ஒருசில போராட்டங்களைப் பார்த்து வருகிறோம். மூன்று வேளாண் சட்டங்கள் உருவானபோது, பெருமளவில் விவசாயிகள் தில்லியில் திரண்டு சக விவசாயிகள் 600 பேரின் உயிரை அந்தப் போராட்டத்தில்  தியாகம் செய்தனர். அவர்களின் வெற்றியானது ஜனநாயக இயக்கங்கள், நமது நாட்டின் எதிர்காலத்திற்கு உருக்கொடுக்கும் என நிரூபித்துள்ளது. பிறகு மோடி அரசாங்கானது, புத்திசாலித்தனமாக குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மூலமும், தேசிய குடிமக்கள் பதிவேடு மூலமும் பெருவாரியான முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கும் நிலையைப் பார்த்தோம். இதற்கு எதிராக பெருமை கொள்ளத்தக்க ஷீமீன் பூங்கா போராட்டம் நடந்தது.

 

மக்களின் வேதனையானது, ஒரு வருடத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்திய ஒற்றுமை பயணத்தில் ஒட்டு மொத்தமாக வெளிப்பட்டது. அதில் பலதரப்பட்ட மத,  இன வேறுபாடுகளைக் கடந்து  இந்த நாட்டின் ஒற்றுமைக்கான செய்தி தரப்பட்டது. வருந்தக்தக்க நிலையில் இருந்த சமூக நிலையை நம்பிக்கை தருவதாக மாற்றியது.

இந்தச் சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளான பசி, இருப்பிடம், வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளை நோக்கி நமது நாட்டின் கவனத்தை ஈர்த்தது. இப்படி ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என காத்திருந்தது போல மக்கள் இதற்கு எதிர்வினை ஆற்றினார்கள். தங்கள் வலியையும், ஏக்கங்களையைம் ஜனநாயக முறையில் வெளிப்படுத்தினார்கள். அனைவரையும் உள்ளடக்கிய, தேவைகளை உள்ளடக்கிய ஒரு சமூக உருவாக்கத்திற்கான நம்பிக்கை  உருவாக்கப்பட்டது. தேசிய விவாதத்திற்கான புதிய தளம்  உருவானது.

இது அதற்கான விளைவைத் தந்தது. ஆனால், வகுப்புவாத சக்திகள் தங்கள் வசம் உள்ள திறமைவாய்ந்த எந்திரங்கள் மூலமாக மக்களின் உண்மையான பிரச்சினைகளோடு தொடர்பு இல்லாத பிரிவினை பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்கள். எனவே தான் ராமர்கோவில் தொடக்கமானது இந்தியாவின் விடுதலைக்கு சமமான நிகழ்வு போல காட்டப்படுகிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் எல்லா பிரவுகளும் தங்கள் சக்தியை பயன்படுத்தி மக்களை ராமர்கோவில் தொடர்புள்ள நிகழ்ச்சிகளுக்குத் திரட்டுகின்றன.  மக்களின் கவனத்தை இராமர் கோவிலை நோக்கி ஈர்ப்பதற்காக, பேருந்துகள், அதிகப்படியான இரயில்களை இயக்கப் போவதாக தெரிகிறது.

ஜனவரி 22 ம் நாள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்கு காத்திருக்கும் வேளையில் – அன்று தான் பிரதம மந்திரி நரேந்திர மோடி அயோத்தி நிகழ்ச்சியில் மகுடம் ஏற்கப் போகிறார் – இன்னொரு நிகழ்வும் நடந்து கொண்டிருக்கிறது. மணிப்பூரில் இருந்து மும்பை வரை ஜனவரி 14 முதல் மார்ச் 20 வரை நடைபெற உள்ள இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை தொடங்குகிறது. அந்த மாநிலமானது இனக் கலவரத்தால் கடந்த ஏழு மாதங்களாக கடுமையாக பாதிக்கப்பட்டும் ஒன்றிய அரசு அதனை கண்டு கொள்ளவில்லை. மணிப்பூர் மக்கள் இந்த யாத்திரையில் எழுச்சியோடு பங்கேற்கிறார்கள்.

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி

இந்த யாத்திரையானது, எங்கும் அநீதி நடைபெறும் சூழலில்,  நீதியை முதன்மைப்படுத்தி நடக்கிறது. வேலை வாய்ப்பின்மை, விவசாயிகள் பிரச்சினை, பெருகி வரும் வறுமை, பெண்களின் கண்ணியம், வனவாசிகளின் உரிமை போன்றவற்றை இந்த யாத்திரை பேசும். இன்றைய  சூழலில் மக்களின் பிரச்சினைகளைப் பேச இது தான் ஜனநாயக ரீதியலான சாத்தியமான வழியாக இருக்கலாம்.

பெரும்பாலான ஊடகங்கள் ராமர் கோவில் விவகாரத்தில் பரவசமாக உள்ளன. எனவே, இந்த பாரத் நியாய யாத்திரை பற்றிய செய்தியை பரவலாக்க வேண்டும்.

ராமர் கோவில் பிரச்சினையானது ஆர்எஸ்எஸ்- பாஜகவின் நிகழ்ச்சியாகும். அது சர்வாதிகார அரசியலை வலிமைப்படுத்துகிறது. இந்திய ஒற்றுமை நீதிப் பயணமானது, இந்திய அரசியலமைப்பின்  ஜனநாயக விழுமியங்களை  பேசுகிறது. பாரத் நியாய யாத்திரையை ஒரு குறிப்பிட்ட கட்சி சார்ந்த விஷயமாக பார்க்கக் கூடாது. இது பன்முகத்தன்மை கொண்ட இந்த சமூகத்தின்  தேவைகளுக்கும், உரிமைகளுக்குமான ஒட்டுமொத்த வெளிப்பாடாகும். வகுப்புவாத பிடியில் இருந்து, ஜனநாயக வெளியை விரிவுபடுத்துவதற்கான ஒரு முயற்சியாகும்.

கட்டுரையாளர்; ராம் புனியானி

பேராசிரியர்,

Caste & Communalism, Facts Versus Myths, Deconstructing Terrorist Violence

போன்ற நூல்களின் ஆசிரியர்.

‘தி வயர்’ இதழ் கட்டுரையின் தமிழாக்கம்; பீட்டர் துரைராஜ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time