ஆறுகளின் தோற்றமும், இயல்பும்!

-தமிழ்தாசன்

ஆறுகளைத் தேடி – 2

ஆறுகள் உலக இயற்கை வளங்களின் ஒரு அங்கம். இயற்கையின் சுழற்சியில்  பல்வேறு விதங்களில் எவ்வாறு ஆறுகள் உருவாகின்றன என்பதே சுவாரஷ்யமாகும்.காலம் தோறும் ஆறுகள் தங்கள் வழித் தடத்தை மாற்றி கொண்டும் ஓடுகின்றன! ஆறுகள் என்பவை இயற்கையின் ரகசிய உயிரோட்டமாகும்;

பொதுவாக மேடுகளில் இருந்து பள்ளங்களை நோக்கிப் பாயும் இயற்கையான நீர்வழித்தடங்களை ஆறுகள் என்கிறோம். இரு கரைகளுக்குள்ளாக வெள்ளம் பாய்ந்தோடும் இயற்கை நீரியல் அமைப்பை ஆறுகள் என்று நீரியல் அறிஞர் கே.எல் ராவ் கூறுகிறார்.

மனித முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட நீர்வழித் தடங்களைக் கால்வாய்கள் என்கிறோம்.

உயர்வான இடத்தில் இருந்து தாழ்வான பகுதி அல்லது சமவெளிகளுக்கு ஆறுகள் நன்னீரைக் கொண்டுச் செல்கிறது. ஆறுகள் மலைப் பகுதிகளில், ஏரிகளில் இருந்து துவங்குகின்றன. பொதுவாக பனிமலைகள் உருகுவதன் வழியாகவும், மலைக் காடுகளில் பொழியும் மழைநீர் வழியாகவும் நீரைப் பெற்று ஆறுகள் உருவாகுகின்றன!

வெகுசில ஆறுகள் நீரூற்றுகள் (artesian) மூலமும் நீரை பெறுகின்றன. மலைக் காட்டில் பொழியும் மழைநீர் ஓடைகளின் வழியே ஆறுகளை வந்து சேர்கிறது. பல ஓடைகளின் கூட்டிணைவே ஆறு எனலாம்!

நிலத்தின் மேற்பரப்பில் மட்டுமல்ல, நிலத்தால் உறிஞ்சப்பட்ட மழைநீர்  நிலத்தின் அடியிலும் ஊர்ந்து ஆறுகளுக்கு, ஏரிகளுக்கு நீர்வரத்தைக் கொண்டுச் சேர்க்கிறது. மேற்பரப்பில் ஓடும் நீரின் போக்கு வேகமாகவும், நிலத்தின் அடியில் ஊரும் நீரின் போக்கு மெதுவாகவும் இருக்கும்.

மலைகளில் இருந்து உருவாகும் ஆறுகள் மற்றொரு ஆற்றில் அல்லது ஏரியில் அல்லது கடலில் கலந்து தன் பயணத்தை நிறைவு செய்கிறது. ஆறுகள் மலைகளில் இருந்து உருவாகி நிலத்தினூடே ஓடி கடலில் கலக்கும் என்கிற இயற்கையின் இயல்பை புறநானூற்று ப் பாடலில் குறிப்பிடுகிறார் இடைக்காடனார்.

மலையின் இழிந்து மா கடல் நோக்கி

நில வரை இழிதரும் பல் யாறு போல (புறம் 42: 19 – 20)

பாலைவனத்தில் ஓடும் சில ஆறுகள் ஏரி அல்லது கடலில் கலக்கும் முன்பே வறண்டுப் போகிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் இருந்து உருவாகும் ஆறுகள் கிழக்கு நோக்கி ஓடி வங்க கடலில் கலக்கின்றன. நீரோட்டம் தான் ஆற்றின் முக்கிய இயல்பாகும். ஆற்றில் ஓடிவரும் வெள்ளம் மணலை கொண்டு வருகிறது. இதனை,

வரு புனல் தந்த வெண் மணல் கான்யாற்று‘ (பட்டி: 161)

பெருக்கெடுத்து வரும் வெள்ளம் கொண்டு வரும் வெண்மையான மணலையுடையக் காட்டாறு  என்கிறது பட்டினப் பாலை. ஆண்டு தோறும் கனிமங்கள், கூளங்கள் உள்ளிட்ட ஏறக்குறைய 300 கோடி டன் பருப் பொருட்களை நீரின் ஊடாகவும், 1,000 கோடி டன் பருப் பொருட்களை வண்டல் மணல் (Sediment) ஊடாகவும் உலகில் உள்ள ஆறுகள் கடத்துவதாக நீரியல் அறிஞர் கே.எல். ராவ் கூறுகிறார். பூமியின்  ரத்தநாளங்களாக ஆறுகள் விளங்குகின்றன

பூமியை 70% சூழ்ந்துள்ள கடலில் தான் பெரும் பகுதி மழைநீர் கொட்டித் தீர்க்கிறது. நிலத்தில் பொழியும் மழைநீரின் பெரும் பகுதி ஆவியாகிவிடுகிறது. சமவெளிகளில் மண்ணும், தாவரங்களும் உள்வாங்கிக் கொண்டதுப் போக மீதமுள்ள சொற்பமான மழை நீரே மலைக் காடுகளில் விழுந்து ஆறுகளாகப் பிறப்பெடுக்கிறது.

மலைக் காடுகளில் விழுந்து ஆறாகப் பிறப்பெடுக்கும் காவிரி!

மேற்குத் தொடர்ச்சி மலை தொடர்களில் உள்ள சோலைக் காடுகள், புல்வெளிகள், தாவரங்கள் மழை நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு பல்வேறு நீர்க் கசிவுகளை, சிற்றோடைகளை பிறப்பிக்கிறது. ஆற்றின்  பிறப்பிடமான நீராதார (River Source) பகுதியை தலைப் பகுதி அல்லது மூலப் பகுதி என வழங்குவர். காவிரி, வையை ஆறு உருவாக்குமிடத்தை தலைக் காவிரி, மூல வைகை என்று அழைப்பது வழக்கம்.

சோலைக் காட்டு நீர்கசிவுகள், மலைச் சிற்றோடைகள் (Creeks), அருவிகள் (Waterfalls), ஓடைகள் (Streams), காட்டாறுகள் உள்ளிட்டவைகள் ஆற்றின் தலைப்பகுதியில் அமைந்திருக்கும். மலைச் சிற்றோடைகள் இணைந்துக் காட்டாற்று ஓடைகளாக,  சிற்றாறுகளாக, பேராறுகளாக சமவெளியை வந்தடைகிறது. இருவேறு ஆறுகள் ஒன்றிணையும் இடத்தை கூடல் (Confluence) என்பர். இருக் கரைக்குள்ளாக நீரோடும் ஆற்றின் அடிப்பகுதியின் மேற்பரப்பில் (Riverbeds) வண்டல் மணல்கள் நிறைந்திருக்கும்.

ஆற்றின் நிலப்பரப்புக்கு அடியில் ஓடும் நிலத்தடி நீருக்கு கூரையாக ஆற்றுமணல் விளங்குகிறது. ஆறுகளில் நீரில்லாத காலத்திலும் கூட நீர்வாழ் உயிரினங்களின் முட்டைகளை, நீர்த்தாவரங்களின் விதைகளை ஆற்றுமணல் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. அவைகளின் பரவலுக்கு உதவுகிறது. ஆற்றங்கரையோர (River Banks) பகுதிகளின் நிலத்தடிநீரையும் வளப்படுத்துகிறது.

ஆற்றின் இருகரைகளிலும் பரந்து விரிந்து கிடக்கும் வளமான பகுதியை ஆற்றுப் படுகை (River Basin) என்பர். உலகின் தொன்மையான குடியிருப்புகள் நகரங்கள் ஆற்றுப் படுகைகளில் தான் தோன்றின. வெள்ளப் பெருக்கு காலங்களில் ஆறுகள் தன் பாதையில் நிலத்தை அரித்து உண்டாக்கும் நெளிவு வளைவுகளை நெளியாறு (Meander) என்பர். பேராற்றின் வெள்ளப் போக்கு நன்னீர் துருத்திகளை (River Islands) உருவாக்குகிறது.

பல நீர்நிலைகள், நன்னீர் ஈரநிலங்கள், வேளாண்மை செய்ய தகுந்த வளமிக்க நிலப்பரப்பு உருவாக ஆறுகள் காரணமாக இருக்கிறது. கடலும் ஆறும் கலக்கும் இடத்தின் அருகில் ஆற்றின் வேகம் குறைவாக இருக்கும். ஆற்றோடு வந்த மண்ணும் மணலும் வேகம் குறையும் இடத்தில் படிந்து விடும். மண் படிந்து கொண்டே இருப்பதால் நாளடைவில் அங்கு ஒரு படுகை உண்டாகிறது. அதனை கழிமுக படுகை (Delta) என்பர். ஆறுகளுக்கிடையில் உள்ள மலைகள், காடுகள், ஓடைகள், பள்ளத் தாக்குகள், காற்றுகள், சிற்றாறுகள், மேடுகள், ஏரிகள், படுகைகள் என ஆற்றுக்கு நீரை கொண்டு வரும் வடிநிலப்பரப்பை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதி (Catchment Area) அல்லது வடிநிலப் பகுதி (Drainage Area) என்பர்.

ஆறும் கடலும் சேருமிடத்தை கடற்பொழி அல்லது கழிமுகம் (Estuary) என்பர். ஆற்றுநீரும் கடல் நீரும் சேருமிடத்தில் கண்டல் காடுகள் அல்லது அலையாத்திக் காடுகள் (Mangrove Forest) உருவாகுகிறது. ஆறுகள் உருவாகும் மலைக் காடுகள் துவங்கி அது கடலில் கலக்கும் பொழி (கழிமுகம்) வரை பல்வேறு வகை உயிரினங்களின் வாழிட பகுதியாக ஆறுகள் விளங்குகிறது. ஆற்று நீர், கடல்வாழ் உயிரிகளுக்கும் தேவையான தாதுக்கள், கனிமங்கள், உயிர் சத்துகளை நீரின் ஊடக ஆறுகள் எடுத்து செல்கிறது.

அலையாத்திக் காடு

‘ஆறு என்பது வெறும் நீரோட்டம் அல்ல. அதற்கும் வாழ்க்கை உண்டு. ஆறுகளின் வாழ்க்கை பருவத்தை இளமை நிலை, பக்குவ நிலை, முதுமை நிலை என்று மூன்று நிலைகளாக பிரிக்கலாம் என்கிறார் சூழலியல் எழுத்தாளர் நக்கீரன்.

“ஆறு மலைப் பகுதிகளில் உருவாகும் நிலையே இளமை நிலை. உயரத்திலிருந்து விரைந்து கீழிருங்கம் முயற்சியில் பாறைகளை அரித்து ஆழமாக்கிப் பள்ளத் தாக்குகளை உருவாக்கும். இதற்கு கண்டத் திட்டுகளின் நகர்வும் ஒரு காரணம். மலைப்பகுதி உயர்ந்து கொண்டிருந்தால் அரித்துப் பள்ளமாக்கும் தன்மையை அதிகரிக்கும். V வடிவப் பள்ளத் தாக்கு உண்டாகும். மாறாக நிலம் கீழே அமிழ்ந்தால் அதன் வீரியம் குறைவாக இருக்கும்.

ஆறு சமவெளியில் இறங்கிய நிலைப் பக்குவநிலை எனப்படும். முதன் நிலையின் வீரியம் இங்கு கணிசமாக குறைந்து விடும். அதே சமயம் கடல் மட்டத்தை விட உயரத்தில் இருப்பதால் அரிக்கும் தன்மையும் பள்ளமாக்கும் தன்மையும் ஓரளவு இருக்கும். சமவெளியில் ஓடுகையில் ஒரு மருங்கில் மணலைக் கொட்டியும், மறு மருங்கில் மண்ணை அரித்தும் செல்லும். வெள்ளம் பெருகும்போது இரு மருங்கிலும் வெள்ளப் படுகைகளை உருவாக்கும். இது 40, 50 வயது கொண்ட மனிதரின் பக்குவ நிலையோடு ஒப்பிட்டு இப் பெயர் வழங்கப்படுகிறது.

தளர்ந்த மென் நடையில் காவிரி கடலில் சேர்கிறது!

கடலோர பகுதியை அடைவது முதுமை நிலை. தன்னுடைய ஆற்றல், மண் கற்கள் சுமக்கும் வேகம் அத்தனையும் இந் நிலையில் ஆறு இழந்து விடும். கடற் பொழியில் அலைகள் எதிர்ப்பதால் தள்ளாடிச் செல்கிறது. இது முதிர்ந்த மனிதரின் நிலைக்கு ஒப்பாகும்.

மலைமிசைத் தொடுத்த மலிந்து செலல் நீத்தம்

தலை நாள் மா மலர் தண் துறைத் தயங்கக்

கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று (அகம் 136: 3-5)

‘மலைகளினூடே தோன்றிப் புறப்பட்ட காவிரியின் வெள்ளநீர் பூங்காக்கள் செறிந்த நீர்த் துறைகளை சேர்ந்து பின்னர் கடற்கரையை அணுகியதும் வேகம் குறைந்து, பரவிப் பாய்கிறது.’ என்ற பாடல் ஆறுகளின் மூன்று  நிலைகளையும் கூறும் அறிவியல் செய்தியாக உள்ளது. மூன்று நிலைகளையும் கொண்ட முதிர்ந்த ஆற்றுக்கு ஓர் எடுத்துக்காட்டுக் காவிரி.

புவியின் கண்டத்திட்டுக்கள் நகர்ந்து கொண்டே இருப்பதால், நாம் வசிக்கும் இந்திய கண்டத்திட்டு வடக்கேயுள்ள யூரேசிய கண்டத் திட்டுடன் எப்போதும் முட்டிக் கொண்டே இருக்கிறது. இதன் விளைவால் சில இடங்களில் நிலப் பகுதி உயர்கிறது. சில இடங்களில் நிலத்தில் வெடிப்புகள் உண்டாகின்றன. இதுவொரு இயல்பான தொடர்ப் புவியியல் நிகழ்வு. இதன் தாக்கம்தான் ஆறுகளின் போக்கில் மாற்றத்தை உண்டாக்குகிறது. ’’ (நீர் எழுத்து – நக்கீரன்)

ஆண்டு முழுதும் நீரோடும் ஆறுகளை பேராறுகள் அல்லது வற்றாத ஆறுகள் (Perennial Rivers) என்றும் மழைக் காலங்களில் மட்டும் நீரோடும் ஆறுகளை சிற்றாறுகள் அல்லது பருவகால ஆறுகள் (Non-Perennial Rivers) என்றும் வகைப்படுத்துகின்றனர். வேறொரு இடத்தில் தனியே உருவாகி இன்னொரு பெரிய ஆற்றில் சென்று கலக்கும் ஆறுகள் துணையாறு (Tributary) என்றும், ஒரு தாய்யாற்றில் இருந்து கிளைத்துத் தனியே பிரிந்துச் செல்லும் ஆறுகள் கிளையாறு (Distributary) என்றும் அழைப்பர்.

நீரியல் வல்லுநர் கே.எல் ராவ் அவர்கள் இந்திய ஒன்றியத்தின் ஆறுகளை அதன் வடிநில பரப்பை பொறுத்து மூன்று பிரிவுகளாக பிரித்தார்.

2000 ச.கி.மீ அளவுக்குள் உள்ளவை சிற்றாறுகள்.

2000 – 20,000 ச.கி.மீ அளவுக்குள் இருந்தால் நடுத்தர ஆறுகள்.

20,000 ச.கி.மீ அளவுக்கு மேல் உடையவை பெரிய ஆறுகள்.

இந்த அளவீட்டின்படி இந்தியாவில் 14 பேராறுகள், 46 நடுத்தர ஆறுகள், கணக்கிலடங்கா சிற்றாறுகள் இந்திய ஒன்றியத்தில் உள்ளன. இந்த 14 பேராறுகளுள் தமிழ்நாட்டுக்குள் ஓடும் ஒரே பேராறு காவிரி மட்டுமே.

தமிழ்நாட்டில் 33 ஆற்று வடிநிலங்கள் உள்ளன. மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகளை 34-வது வடிநிலமாகக் கொள்வர். எனினும், சிறு வடிநிலங்களைப் பெரிய வடிநிலங்களோடு இணைத்து 17 வடிநில பகுதிகளாக நீரியல் வல்லுநர்கள் வகுத்துள்ளனர். இவைத் தவிர ஏராளமான சிற்றாறுகள், ஓடைகள் தமிழ்நாட்டில் உள்ளன.

தொல் தமிழ் இலக்கியங்கள் கூறும் ஓடை, ஆறு, காட்டாறு, சிற்றாறு, பேராறு என்பதென்ன? ஆறுகளுக்கு தமிழர் பெயரிட்ட முறைப் பற்றி ஆறுகளைத் தேடி தொடரின் அடுத்த கட்டுரையில் அறிந்து கொள்வோம்.

மேலும் தேடுவோம்.

கட்டுரையாளர்; தமிழ்தாசன்

சுற்றுச் சூழலியல் செயற்பாட்டாளர்

ஆறுகளைத் தேடி – தொடர் 1

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time