இசைஞானி இல்லத்தில்  ஒரு சோக ராகம்!

-வசந்த் பாரதி

இதமாக இதயத்தை வருடிச் செல்லும் கிராமியக் குரல்வளம்! அதிகப் பாடல்களை பாடா விட்டாலும், பத்தே படங்களில் பாடிய தியாகராஜ பாகவதர் இன்னும் நினைவு கூறப்படுவதைப் போல பவதாரிணி பாடல்களும் நினைவு கூறப்பட்டு நெஞ்சில் நிலைக்கும்! அழியாத அமுத கீதங்களை தந்துள்ள பவதாரிணி குறித்த ஒரு பார்வை;

இத்தனை ஆண்டுகளாய் தமிழ் இதயங்களை குளிர்வித்து வந்த இசைஞானி இளையராஜா வீட்டு வீணை நரம்பில் ஒன்று அறுந்து போனது .அவர்  மகள் பவதாரிணி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று 24-ந்தேதி இலங்கை கொழும்பு லங்கா ஆயூர்வேத மருத்துவமனையில் காலமானார்..! இலங்கையில் அவர் பித்தப்பை புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு அவருக்கு வயிற்று வலி இருந்திருக்கிறது. அது பித்தப் பை கல் என்று சிகிச்சை பெற்று வந்துள்ளார் பிறகு தான் பித்தப்பை புற்று நோய் இருப்பது தெரிய வந்தது! அதுவும், அது நான்காவது முற்றிய நிலை என்பது தாமதமாக கண்டறியப்பட்டுள்ளது.ஆயுர் வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றிருந்தார்.

1976-ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பிறந்த பவதாரிணி பள்ளியில் இருந்த நேரத்தை விட தந்தையின் ஸ்டுடியோவில் இருந்த நேரமே அதிகம். சிறு வயதில் இருந்தே அவர் தந்தை இசை அமைக்கும் போது வேறு ஒரு பாடகர் பாடுவதற்கு உதவியாக   ட்ராக் பாடல் பாடி வந்துள்ளார்.

மைடியர் குட்டி சாத்தான் (1984) படத்தில் “தித்தித்தை தாளம்” என்கிற பாடல் மூலம் அவர் குரல் முதன் முதலாய் ஒலித்தது. அதனை தொடர்ந்து வெளிவந்த “என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு” (1988) என்கிற படத்தில் “குயிலே, குயிலே குயிலக்கா” என்கிற பாடல் மூலம் இசைஞானியின் வீட்டு குயில் ஒன்று தமிழர்கள் காதுகளுக்கு அறிமுகமாகி பிரபலமானது.

மணிரத்னம் இயக்கிய அஞ்சலி (1990) படத்து அனைத்து ஐந்து பாடல்களிலும் இவரின் குரல் ஒலித்தது  .

பாரதி திரைப்படத்தில் “மயில் போலப் பொண்ணு ஒன்னு” என்ற இவர் பாடிய பாடல் இவருக்குச் சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது.

பிரபுதேவா நடிப்பில் 1995ஆம் ஆண்டு வெளியான ராசய்யா படத்தில் வரும், ”மஸ்தானா மஸ்தானா” பாடல் பவதாரிணிக்கு என்று தனித் தன்மை வாய்ந்த  அடையாள குரல் ஒன்று இருக்கிறது  அழகி படத்தில்  “ ஒளியிலே தெரிவது தேவதையா “ அவரின் தனித்த குரல் வளத்தை வெளிப்படுத்தக் கூடிய பாடலாகும்!

அது போலவே காதலுக்கு மரியாதை படத்தின் “ என்னை தாலாட்ட வருவாளோ” என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிக நெஞ்சங்களை தாலாட்டி இருப்பார். எம் .குமரன் படத்தின் அய்யோ..அய்யோ என்கிற பாடல் வேறு ஒரு ரகம். உதித்நாராயணன் ஒரு பிட்சில் பாடலை பாட, இவர் பவ்யமாய் ஒரு ஸ்வரத்தில் ஆடம்பரமில்லாமல் பாடி இருப்பார்!

அநேகன் படத்து “ஆத்தாடி ஆத்தாடி செம்பருத்தி பூக்காரி ” என்கிற பாடலும் இவரின் தனித்த குரல் வளத்திற்கு ஒரு எடுத்துகாட்டு!

அதேபோல், ஆயுத எழுத்து படத்தின் ”யாக்கைத் திரி” , காக்க காக்க படத்தின் ”என்னைக் கொஞ்சம் மாற்றி” போன்ற தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க பாடல்களை அவர் பாடியுள்ளார். இளையராஜா மட்டுமின்றி, கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா,ஹாரிஸ் ஜெயராஜ் ,தேவா, சிற்பி  ஆகியோரது இசையிலும் 30 படங்களுக்கும் மேல்   பாடல்களைப் பாடியுள்ளார்.

அவர் பெரும்பாலான தொலைக்காட்சி பேட்டிகளில் சற்று வெட்கத்துடன்  மிகவும் அடக்கமாகவே  பதில் அளித்துள்ளார். பேட்டியில்  “ சிறுவயதில் உங்களோடு உங்கள் தந்தை பொழுதை கழித்தது  உண்டா என்கிற கேள்விக்கு “ வாரம் தோறும் ஞாயிற்று கிழமை கோல்டன் பீச்சுக்கு குடும்பத்தோடு செல்வோம் அங்கு  எங்கள் தந்தைக்கு என்று பிரத்தியேகமாய் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அரை ஒன்றில் தங்கி யிருந்து  இசை கம்போசிங் செய்து கொண்டே எங்களோடும் பொழுதை கழிப்பார். அது ஒன்று தான் அப்போது எங்களுக்கு இருந்த ஒரே பொழுது போக்கு” என்றார்.

தமிழ் நாடு அரசு பள்ளிகளில் காலை நேர கூடுகைக்காக கவிஞரும், சமூக போராளியுமான அரசு பள்ளி ஆசிரியை சுகிர்த ராணி எழுதிய, சமூக நீதி பாடல்களில் ஒன்றை பவதாரிணி இசையமைத்து பாடியுள்ளார் .அதோடு மட்டுமல்லாமல், பாடல் வரியை குறித்து  கவிஞரை பாராட்டியும் இருக்கிறார்.

“அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் தாம்   எழுதிய கவிதையை, இசைஞானி இசையமைக்க,  பவதாரணியின்  அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது என்கிறார் நாடாளுமன்ற உறுப்பினரும் தி மு க பிரமுகருமான கவிஞர் கனிமொழி

பவதாரிணி  திருமணம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் பிரபல பத்திரிகையாளர் ராமசந்திரனின் மகன் ஆர். சபரிராஜ் உடன்  கடந்த 2005ம் ஆண்டு நடைபெற்றது. அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது  மனைவிக்கு புற்று நோய் இருப்பதை அறிந்து எப்படியாவது அவரை காப்பற்றி விடவேண்டும் என்று அவர் கணவர் சபரிராஜ்  பல இடங்களுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார்! பவதாரிணி  தம்மை ஒரு கூண்டு கிளியாய் சுருக்கி கொள்ளாமல் பருந்து போல இசை வானில் உயர சிறகடித்து பறக்க முயன்றுள்ளார். கலைத் துறையில் மற்றும் இசைத்துறையில் தமது இருப்பை ஒரே இடத்தில் அமைத்து கொள்ளாமல் வெவ்வேறு பரிமான வளர்ச்சியை அடையவும் தனக்குள் மறைத்துள்ள திறமைகளை வெவ் வேறு பரிமானங்களில் வெளிபடுத்தவும் விரும்புவர். தந்தையும், சகோதரும் பெரிய இசையமைப்பாளர்களாக இருந்தும் ஏனோ இவர் அதிக பாடல்களை பாடும் வாய்ப்பை பெறவில்லை.

அந்த வகையில் இவருக்கு இயல்பிலேயே வாய்த்த இசை பின்னணி சூழல் இவரை வேறு தளத்திற்கு கொண்டு சென்றது.

அதன் வெளிப்பாடுதான் இசையமைப்பாளர் அவதாரம். 2002ஆம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இந்தியில் ரேவதி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ஃபிர் மிலெங்கே என்ற படத்திலும் இசையமைத்தார்.

1991ஆம் ஆண்டு இளையராஜா உருவாக்கிய ராஜாவின் ரமணமாலை என்ற இசைத் தொகுப்பில் ”ஆராவமுதே..” என்ற பாடலை பவதாரிணி பாடினார்.

அலெக்சாண்டர், கருவேலம் பூக்கள், காதலுக்கு மரியாதை, டைம், பாரதி, அழகி, பிரெண்ட்ஸ், ஒரு நாள் ஒரு கனவு, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, தாமிரபரணி, நாளைய பொழுதும் உன்னோடு, உளியின் ஓசை, தனம், கோவா, மங்காத்தா, அனேகன் ஆகிய தமிழ்ப் படங்களில் இடம்பெற்ற பாடல்களை அவர் பாடியுள்ளார்.

தமிழில் அமிர்தம், இலக்கணம், வெள்ளாச்சி, கள்வர்கள், போரிடப் பழகு ஆகிய படங்களுக்கு இசை அமைத்துள்ள இவர் இறுதியாக தமிழில் 2019 ல் மாயநதி என்கிற படத்திற்கு  இசையமைத்திருந்தார் . தமிழ் உட்பட  இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில்  பத்து  படங்களுக்கு இசையமைத்துள்ளார். அது மட்டுமன்றி, நீண்ட நாட்கள் கழித்து சமீபத்தில்  தான் அவருக்கு மூன்று படங்களில் புதிதாக  இசை அமைக்க வாய்ப்பு கிடைத்தது. அரங்கேற வேண்டிய ராகங்கள் இசைக்கப் படாமலேயே போனது..!

கொழும்பில் இன்று (27-01.2024) மற்றும் அதற்கு மறு தினம் (28.01.2024) ஆகிய தினங்களில் இசைஞானி இளையராஜாவின்  பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், பவதாரணி மரணம் அடைந்துள்ளார். அவரின் உடல் 26.01.2024 அன்று மாலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது . தி.நகர் இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்த வைக்கப்பட்டு, அன்று இரவே தேனி பண்ணைய புரத்திற்கு  கொண்டு செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்படும்.

மரணமே உனக்கு மரணம் வருவது எப்போது என்று ஒரு கவிஞன் மரணத்தை பார்த்து கேட்டது நினைவுக்கு வருகிறது இளம் வயது எதிர்பாரா மரணகளை எதிர்கொள்ளும்போது . இசை ஞானி இசை கூட்டில் 47 வயதே நிரம்பிய ஒரு குயிலின் குரல் வலையை இரக்கமில்லா இறைவன் நசுக்கி போட்டு விட்டான்.

தமிழ் இருக்கும் வரை பாரதி வாழ்ந்து வருவான். அது போல திரை இசை இருக்கும் வரை “மயில் போல பொண்ணு ஒன்னு பாடல்..’’  ”ஒளியிலே தெரிவது தேவதையா” “குயிலே, குயிலே குயிலக்க” ”என்னைக் கொஞ்சம் மாற்றி” போன்ற இனிய கீதங்கள் தமிழர் தம்  செவிகளில் ஒலித்து கொண்டே இருக்கும்!

கட்டுரையாளர்; வசந்த் பாரதி

‘இருள் வெளியில் புலப்படும் சலனங்கள்’ போன்ற நூல்களின் ஆசிரியர்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time