அரசு மருத்துவர்களின் அபார சாதனைகள்! அலட்சியம் காட்டும் தமிழக அரசு!

சாவித்திரி கண்ணன்

கொரோனாவை வெற்றிகரமாக சமாளித்து, மக்களை குணப்படுத்தியதில் அரசு மருத்துவர்களின் பங்களிப்பு மறுக்க முடியாததாகும்! தமிழகத்தில் இது வரை 7,22,000 க்கு மேற்பட்டவர்கள் கொரானாவில் பாதிக்கப்பட்டு,அதில் 6,88,000 பேர் குணமடைந்துள்ளனர் என்றால்,அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்பால் தான் குணமடைந்துள்ளனர் என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும்! வெறும் பதினெட்டாயிரம் அரசு மருத்துவர்கள் கடும் உழைப்பை ஈந்ததில் தான் இது சாத்தியப்பட்டது. இதில் அரசு மருத்துவர்களோடு பட்ட மேற்படிப்பு மாணவர்களும் சேர்ந்து பாடுபட்டனர். நோயாளிகளை குணப்படுத்தும் போது ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களும் கொரனாவால் தாக்கப்பட்டனர்.

அரசு மருத்துவர்களின் அயராத செயல்பாடுகளால் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பை குறைந்துள்ளதோடு, புதிதாக  தொற்று ஏற்படுவதும் குறைத்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கையும் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது என்பதற்கு ‘’மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் வியூகத்தை பின்பற்ற வேண்டும்’’ என ICMR நிறுவனம்  அறிவித்ததே அத்தாட்சியாகும்!

#  கொரோனா  காலகட்டத்திலும் கூட,  தமிழக அரசின் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 6846 பிரசவங்கள்( 3886 சுகப் பிரசவங்களும், 2960 சிசேரியனும்) நடந்துள்ளதுள்ளன. இங்கு 24 உதவி பேராசிரியர் பணி இடங்களுக்கு 15 டாக்டர்கள் உள்ளனர். அதிலும் ஒருவர் மகப்பேறு விடுமுறையில் உள்ளார். 7 பேராசிரியர்கள் மற்றும் 2 இணை பேராசிரியர்கள் உள்ளனர். மருத்துவர்கள் பற்றாகுறையிலும் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.

# கீழ்ப்பாக்கம் கே.எம்.சி மருத்துவமனையில் மார்ச் முதல் செப்டம்பர் வரை இங்கு 4,467 பிரசவங்கள் நடந்துள்ளன. அவற்றில் 400 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானது.

# வடசென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் 2,300 கொரோனா நோயாளிகளுக்கு இதய நோய் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

# எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில்( ICH) ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று ஏற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளித்து குணப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்று இல்லாத குழந்தைகளுக்கு மேஜர் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதற்காக  ICH க்கு நேரில் வந்து,   தமிழக சுகாதாரத் துறை செயலாளர்  மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார் என்பது கவனத்திற்குரியதாகும்

# செங்கல்பட்டு அரசு மருத்துவமனை 5,249 நோயாளிகளுக்கு டையாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று ஏற்பட்ட 414 நோயாளிகளுக்கும் டையாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது

இந்த கொரானா காலத்தில் ஒரிரு மருத்துவர்கள் இறக்கவும் நேரிட்டது. மக்கள் பணிக்காக மருத்துவர்கள் இவ்வளவு தூரம் தங்களை அர்ப்பணித்த நிலையிலும், அவர்கள் தொடர்ந்து தமிழக அரசால் அலட்சியப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மாநில நிர்வாகி, டாக்டர் பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசு மருத்துவர்களின் அவல நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது.

#  உலகத்தையே புரட்டி போட்டுள்ள  கொரோனாவிடமிருந்து,  தமிழகத்தில்  18 ஆயிரம் அரசு மருத்துவர்களை வைத்தே, மக்களை காப்பாற்றி வருகிறோம். அதுவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 9 ஆயிரம் கோடி உள்பட கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு தாராளமாக செய்யப்படுகிறது.

#  கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்தே அரசு மருத்துவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இதற்கிடையே தொற்று ஏற்படும்  மருத்துவர்கள் சிகிச்சை,  குவாரண்டைன் என செல்வதால், பணிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது கொரோனாவால் உயிருக்கு உத்தரவாதம் இல்லாததோடு, பணிச்சுமையும் அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்களுக்கு உரிய ஊதியமும் தரப்படவில்லை என்பது தான்  வேதனையளிக்கிறது.

#  சுகாதாரத் துறை செயல்பாடுகளில் 25 வது இடத்தில் உள்ள பீகார் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் எல்லாம் மருத்துவர்களுக்கு, தகுதிக்கேற்ற ஊதியம் தரப்படுகிறது. ஆனால் முன்னணி மாநிலமாக உள்ள தமிழகத்தில் அரசு  மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே குறைவான ஊதியம் தரப்படுகிறது.

#  மாண்புமிகு முதல்வரின் வேண்டுகோளை ஏற்று சென்ற வருடம் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். இருப்பினும் ஒரு வருடமே முடிந்த நிலையிலும், கோரிக்கை நிறைவேற்றப்படாதது தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு வருத்தமளிக்கிறது.

# தற்போது கர்நாடகாவில் மருத்துவர்கள் போராட்டத்தை தொடங்கும் முன்னரே, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் மருத்துவர்கள் 3 வருடத்திற்கும் மேல் போராடியதோடு, மூன்று தடவை சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துள்ளோம். மேலும் ஊதியக் கோரிக்கைக்காக மருத்துவர் ஒருவர் உயிரையே இழந்துள்ளார்.

எனவே மாண்புமிகு முதல்வர்  தமிழகத்திற்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் அரசு மருத்துவர்களுக்கு நியாயமான ஊதியம் அல்லது அரசாணை 354 ன் படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு அல்லது மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தருவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் மாநில நிர்வாகி டாக்டர் பெருமாள் அறிக்கை தெரிவிக்கிறது. கொடூரமான கொரானா காலத்திலும் நன்கு பணி செய்த அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time