பாதிக்கப்படும் பெண்களுக்கு போராடக் கற்றுத் தரும் படம்!

-வசந்த் பாரதி

‘நெரு’ (Neru). மலையாளச் சொல்லுக்கு  ‘உண்மை’ என்று அர்த்தம். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பார்வையற்ற இளம் பெண், உண்மையை நிலை நாட்ட நடத்தும் சட்டப் போராட்டமே கதை! ஆரம்பம் தொடங்கி இறுதி வரை அறம் பிறழாமல், விறுவிறுப்பு குறையாமல் சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் திரைக் கதை, இயக்கம் அசத்துகிறது!

மலையாள இயக்குனர்கள் தமக்குள்ள சமூக பொறுப்பில் சிறிதும் சமரசம் செய்து கொள்வதில்லை. தாம் கூற வருவதை அவர்கள்  தெள்ள தெளிவாக கூறி பரந்த அளவில் பாராட்டையும் பெற்று வணிக ரீதியாகவும் வெற்றியடைகிறார்கள்! திரைக்கதை உருவாக்கத்தில் அவர்கள் கோடம்பாக்கத்தை விட  மேம்பட்ட தளத்தில்இருப்பதை இது போன்ற திரைப்படங்கள் நிரூபித்து வருகின்றன.

திரிஷியம் படைத்தை இயக்கிய ஜீத்து ஜோசப்பின் சமீபத்திய படமே  நெரு. இந்த படத்தின் குற்றவாளியான மைக்கேல் ஒரு பெரும் செல்வந்தரின் மகன்!  கண் பார்வையற்ற ஒரு இஸ்லாமிய இளம்  பெண்ணை வீட்டில் தனியே இருக்கையில் அந்த மிருகம் சிதைத்து விடுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குரலை நசுக்க பார்க்கிற முயற்சிகள் பல விதங்களில் அரங்கேறுகிறது.

இயக்குனர் ஜித்து ஜோசப்புடன் மோகன்லால்.

வலுவான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகர்  ( சித்திக்) மூலமாக பணத்தை கொடுத்து சரி கட்டி விடலாம் என்ற ரீதியில், கொலை மிரட்டல் மூலமாக முயற்சிகள் அரங்கேறுகிறது. குற்றவாளியை தப்பிக்க செய்யும் சாட்சியங்களை ஆதாரங்களை எல்லாவற்றையும் தவிடு பொடியாக்குகிறார் நாயகன் மோகன்லால்!

பொதுவாக ஒரு குற்றம் நிகழும் போது அந்த குற்றவாளியை தப்பிக்க வைக்க கையாளுகிற உத்தி, அந்த குற்ற சம்பவம் நிகழும்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் அந்த குற்ற சம்பவம் நடந்த இடத்தில இல்லை என்பதே. இந்த உத்தியை திரிஷ்யம் படத்தில் இயக்குனர் லாவகமாக பயன்படுத்தியிருப்பார். அதில் குற்ற சம்பவம் நிகழ்ந்த அன்று மோகன்லால் குடும்பத்தினர் அந்த ஊரிலேயே இல்லை என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்து அந்த குடும்பம் தண்டனையிலிருந்து தப்பித்து இருக்கும். அந்த படத்திற்கு நேர்மாறாக இந்தப் படத்தில் நிஜமாகவே திமிர்த்தனத்துடன் அரங்கேறிய  குற்றத்தை மறைக்க குற்றம் சுமத்தப்பட்டவரின் வழக்கறிஞர் தன்னுடைய சாதூர்யத்தனத்தால் வீடியோ  ஆதாரங்களை அழித்து, நீதிமன்றத்தை திசை திருப்ப முயல்வதை அறிந்து நாயகன் மோகன்லால் அதனை பொய் என்று நிரூபிக்கிறார்.

பாதிக்கப்பட்ட இஸ்லாமிய இளம் பெண்ணின் தாய் இரண்டாம் தாரமாக வாழ்க்கைபட்டவள்! ஆகவே, வளர்ப்பு தந்தையே தன் மகளை கற்பழித்திருக்க வாய்ப்புண்டு என்ற கொடூர திசைதிருப்பல்கள் நடக்கின்றன! இதனையும் மோகன்லால் மிக நேர்த்தியாக முறியடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு இன்னொரு சிறப்பம்சம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு பழக்கப்பட்ட  தனிச் சிறப்பம்சம் கையால் தடவி உருவத்தை மனக்கண்ணால் உள்வாங்கி களிமண்ணால் உருவத்தை வடிக்கின்ற ஆற்றல் அதனைக் கொண்டு அந்தப்பெண் அந்த குற்றவாளி உருவத்தை களி மண்ணால்  வடித்து கொடுத்ததால்  போலிஸ் குற்றவாளியை  கண்டு பிடித்து விடுகிறது. இது பற்றியும் நீதிமன்றத்தில் கேள்வி எழுகிறது குற்றம் சுமத்தப்பட்டவரின் வழக்கறிஞர் மூலமாக!

அது எப்படி உன்னை ஒருவன் பலாத்காரம் செய்யும்போது அவன் முகத்தை கைகளால் வருடிக்கொண்டிருப்பாய் .அவன் செயலை நீ  அனுபவித்தாயோ என்பதான கேள்விகள் எல்லாம்  முகம் சுளிக்க செய்யும் கேள்விகள்! அதற்கு பதிலாக இயக்குனர் வைக்கும் வாதம் தான் அருமையான ஒன்று;

அந்த காமக் கொடூரனிடம் தான். தப்பிக்க முடியாது சிக்கி கொண்டவுடன் அந்த குற்றவாளியை தப்பிக்க விடக்கூடாது என்பதால் தான் அந்த இளம் பெண் அந்த கொடியவன் முகத்தை தனது கைகளால் தொட்டு பார்த்தாள்  என்று மோகன்லால் மூலமாய் இயக்குனர் தமது நியாயப்படுத்துதல் வாதத்தையை முன் வைத்திருப்பார். அந்த இளம் பெண்ணின் அந்த சிறப்பு திறமை தான் குற்றவாளியை தப்பிக்க விடாது செய்தது .அதோடு மட்டுமன்றி, அந்த பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் அந்த திறமையை நம்ப மறுக்கிறது  குற்றவாளி தரப்பினர் .

அப்போது நீதிமன்றத்தின் முன்பாகவே அந்த பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் உருவத்தை தொட்டுத்தடவி களிமண்ணால் உருவமாக படைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டதைத் தொடர்ந்து அவர் எதிர் தரப்பினர்  ஒருவரின் உருவத்தை உருவாக்க ஒத்து கொள்கிறார் .

அந்த உருவம் உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் சித்திக்கின் உருவம் ஏற்கனேவே இந்த வழக்கு தோற்று விடும் என்கிற வெறியில்  இருக்கும் இவர் தம்மை இந்த இளம் பெண் உருவமாய் வடிக்கக்கூடாது என்று அவரை திசை திருப்ப வக்கிரத்தன கேள்விகளை எல்லாம் கேட்டு வார்தைகளால் கொடுமைப்படுத்துவார். அதனை எல்லாம் கண்ணீரோடு சகித்துக் கொண்டு   அந்த இளம் பெண் நேர்த்தியாய் அந்த வழக்கறிஞர் உருவத்தை வடித்து தமது தனித் திறமையை நீதி மன்றத்தில் நிருபிப்பார்!

இது போன்ற வழக்குகளில் எல்லா வழக்கறிஞர்களும் மோகன்லால் போல புத்திக் கூர்மை உள்ளவர்களாக இருப்பதில்லை. முதலில் இந்த வழக்கை விசாரிக்கும் அரசு தரப்பு வழக்கறிஞரை எதிர்தரப்பு விலைபேசி விடுவதால் அவர் சொதப்புவார்! இதைத் தொடர்ந்து ஒரு திற்மையான வழக்கறிஞ்ரை தேடும் போது ஆரம்பத்தில் மோகன்லால் மறுப்பார்! ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிமன்றத்தில் நீதி மறுக்கப்படக் கூடிய சூழல்கள் அவர் கவனத்திற்கு வரவும் தானே மனம் மாறி, இந்த வழக்கிற்குள் நுழைகிறார்! அதன் பிறகு விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் அவமானப்பட வேண்டியதில்லை. துணிந்து போராட முடியும். அதற்கு உதவ மனித நேயம் கொண்ட வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் உண்டு! எதிர் தரப்பினர் எவ்வளவு வலுவானவர்கள் ஆனாலும், உண்மையை நிலை நாட்ட முடியும் என இந்தப் படம் தரும் செய்தி மிக முக்கியமானது.

 

பாதிக்கப்பட்ட பெண் சாராவாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன், அவமானங்களை பொறுத்துக் கொண்டு உறுதி குலையாமல் போராடுவதில் பார்வையாளர்களின் இதயங்களில் இடம் பெறுகிறார்! குறிப்பாக, உச்சகட்ட க்ளைமாக்ஸ் காட்சியில் எதிர்த ரப்பு வழக்கறிஞரின் வக்கிரமான வாதங்களை எதிர் கொண்டதில் அசத்தி இருக்கிறார்! பிரியாமணி, சித்திக், சாந்தி, ஜெகதீஷ், மேத்யூ வர்கீஸ்  ஆகிய அனைத்து நடிகர்களும் சிறந்த பங்களிப்பை தந்துள்ளனர். ஜித்து மற்றும் சாந்தி மாயாதேவியின் திரைக்கதை வசனம், விநாயக்கின் நுணுக்கமான படத் தொகுப்பு விஷ்ணு ஷ்யாமின் சூழலுக்கு உகந்த பின்னணி இசை அகியவை படத்தை தூக்கி நிறுத்துகின்றன!

இந்த படம் ஆரம்பம் முதல் இறுதி வரை தான் கையில் எடுத்த விசயத்திலிருந்து எள்ளளவும் விலகி செல்லாது வணிக ரீதியிலான மசாலாத்தனங்கள் இன்றி ஒரே நேர்கோட்டில் பயணித்துள்ள வகையில் இயக்குனர் தனக்குள்ள சமூக பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதை பாராட்டியாக வேண்டும்.

மலையாளம் மட்டுமின்றி, தமிழ், இந்தி, தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இந்த சினிமாவை  ஹாட் ஸ்டார் ஓடிடியில் பார்க்கலாம்!

விமர்சனம்; வசந்த் பாரதி

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time