சண்டிகரில் சாகடிக்கப்பட்ட ஜனநாயகம்!

-சாவித்திரி கண்ணன்

சண்டிகர் மேயர் தேர்தலில் சண்டித்தனத்தை அரங்கேற்றி பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ”நானே குற்றவாளி, நானே நீதிபதி, தண்டிப்பேன் ஜனநாயகத்தை! யாராலும் தடுக்க முடியாது என் தப்பாட்டத்தை!” இது தான் பாஜக ஸ்டைல்!

டெல்லிக்கு மிக அருகில் இருக்கும் சண்டிகரானது இந்தியாவின் ஒரு விசேச நகரமாகும். காரணம், இந்த சண்டிகர் பஞ்சாப், ஹரியானா என இரண்டு மாநிலங்களுக்கும் தலைநகராக விளங்குகிறது. இந்த காரணத்தால் இந்த பெரு நகரை இரு மாநிலங்களுமே ஆள முடியாத ஒரு யூனியன் பிரதேசமாக அறிவித்து தன் ஆளுகைக்குள் வைத்துள்ளது மத்திய அரசு!

இந்தச் சூழலில் தான் சண்டிகர் மாநகராட்சிக்கு நடந்த மேயர் தேர்தலை பார்க்க வேண்டும். இந்த மாநகராட்சிக்கான மேயர் தேர்தலில் ஆம் ஆத்மியும், காங்கிரசும் கைகோர்த்துக் கொண்டன! மொத்தமுள்ள 36 இடங்களில் இருவருமாக சேர்ந்து 20 இடங்களை கைப்பற்றிய நிலையில், மேயர் பொறுப்பு ஆம் ஆத்மிக்கு எனவும், மூத்த துணை மேயர் பதவி மற்றும் ஒரு துணைமேயர் பதவி  காங்கிரஸுக்கு எனவும் தங்களுக்குள் ஒருமித்து முடிவுக்கு வந்தனர்!

இந்தக் கூட்டணிக்கு ஒரு பின்னணி உண்டு. சென்ற தேர்தலில் ஆம் ஆத்மி 14, பாஜக 12 காங்கிரஸ் 8 அகாளிதளம் 1 என வெற்றி பெற்றனர். மேயர் தேர்தலை அன்று காங்கிரஸ் புறக்கணித்துவிட்டது! இந்தச் சூழலைப் பயன்படுத்தி காங்கிரசில் உள்ள ஒரு கவுன்சிலர்களை பாஜக விலைபேசி இழுத்துக் கொண்டதோடு, ஆம் ஆத்மியின் ஒரு ஓட்டை செல்லாது என அறிவித்து மேயர் பதவியை குறுக்கு வழியில் கைப்பற்றியது! ‘அது போல தற்போதும் நடக்கக் கூடாது’ என்பதால், தான் தெளிவாக தங்களுக்கு முடிவெடுத்து 20 ஓட்டுகளையும் ஒரு சேர ஆம் ஆத்மியின் மேயர் வேட்பாளர் குல்தீப் குமாருக்கு போட்டனர்.

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக -அகாலிதள் கூட்டணி  16 இடங்களை மட்டுமே பெற்ற நிலையில், இந்த மேயர் தேர்தலின் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அனில்மிகிஹ் என்பவர் ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணியின் 8 வாக்குகளை செல்லாததாக அறிவித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டார்!

தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஏற்க முடியாமல் ஆழ்ந்த வேதனைக்குள்ளான குல்தீப் குமார்!

இது பட்டபகலில் நடந்த மாபெரும் கண்கட்டு வித்தையாகும்! ‘மிகத் தெளிவாக பெரும்பான்மை உள்ள ஒரு கூட்டணியின் வெற்றியை செல்லாது’ என ஜனநாயகத்திற்கு விரோதமாக ஒரு தேர்தல் அதிகாரி எப்படி அறிவிக்க முடியும்..? என கேள்வி கேட்டால், தேர்தல் அதிகாரி பாஜகவின் மிகத் தீவிர விசுவாசி! பாஜக சிறுபான்மை பிரிவின் தலைவராக செயல்பட்ட அனில்மிகிஹ் தான் தற்போது தேர்தல் அதிகாரி ஆக்கப்பட்டு, ஜனநாயகம் அளித்த தீர்ப்பை மாற்றி எழுதிவிட்டார்!

தற்போது பாஜகாவால் சண்டிகரின் மேயராக அறிவிக்கப்பட்ட மனோஜ் சொன்கர் ஒரு பிரபல சாராய வியாபாரி மட்டுமல்ல, அராஜகவாதி என்பது ஊர் அறிந்த செய்தியாகும். உண்மையிலேயே வெற்றி பெற்ற குல்தீப் குமார் ஒரு நல்ல சமூக செயற்பாட்டாளர், பட்டதாரி இளைஞர். மக்களின் நன் மதிப்பை பெற்றவர்.

நியாயம் கேட்டு போராடும் ஆம் ஆத்மி கவுன்சிலர்கள்

இதே போலத் தான் டெல்லி மாநகராட்சியிலும் வெற்றி பெற முடியாமல் போன நிலையில் வெற்றியை  களவாடிக் கொண்டது பாஜக! டெல்லி மாநகராட்சியில் மொத்தமுள்ள 250 இடங்களுக்கு கடந்த டிசம்பரில் தேர்தல் நடைபெற்றது. டிசம்பர் 7-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ஆம் ஆத்மி 134, பாஜக 104, காங்கிரஸ் 9, சுயேச்சைகள் 3 பேர் என வெற்றி பெற்றனர். ஆம் ஆத்மி சார்பில் மேயர் பதவிக்கு ஷெல்லி ஓபராயும் துணை மேயர் பதவிக்கு ஆலே முகமது இக்பாலும் அறிவிக்கப்பட்டனர். தேர்தலில் ஆம் ஆத்மி பெரும்பான்மை பெற்றபோதிலும், பாஜகவும் மேயர், துணை மேயர் வேட்பாளர்களை அறிவித்து அதிர்ச்சியூட்டியது மறக்கக் கூடியதல்ல!

எச்சரிக்கை செய்யும் பா. சிதம்பரம்

இந்த அபகரிக்கப்பட்ட வெற்றி தொடர்பாக ஆம் ஆத்மி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. ஆனால், நீதிமன்றமோ, ”இந்த வெற்றிக்கு இடைக்கால தடை தர முடியாது” என சொன்னதோடு, வழக்கு விசாரணையை மூன்று வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளது. இந்த மூன்று வாரத்திற்குள் பதவி ஏற்பு நடந்து முடிந்துவிடும். இதற்கிடையில் கவுன்சிலர்களை விலை பேசவும் வாய்ப்புள்ளது.

சண்டிகர் மாநகராட்சியை களவாடி களிப்பில் மிதக்கும் பாஜக!

காந்தி கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட இந்த மோசடி வெற்றி ஜனநாயகம் கொல்லப்பட்ட நாளாக பார்க்கப்படும்! அரவிந்த கேஜ்ரிவால் கூறியது போல தேர்தலில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். தோற்கலாம். ஆனால், நாடு தோற்க கூடாது. இந்த நாள் ஜனநாயகத்திற்கு ஒரு கறுப்பு நாள் தான்!

ஒரு மாநகராட்சி தேர்தல் வெறும் 36 உறுப்பினர்கள் தான்! யாருக்கு ஆதரவு என நேரில் அழைத்து கைதூக்க வைத்து, கண் எதிரே ஒரு சில நிமிடங்களில் தீர்ப்பு கூறலாம். ஆனால், நீதியை சாகடிப்பது என முடிவு செய்துவிட்ட பிறகு மறு பேச்சே இல்லை! நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு சொல்ல எடுத்துக் கொள்ளும் காலகட்டத்திற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும். ஐந்தே நிமிஷத்தில் தீர்ப்பு சொல்லக் கூடிய வழக்கை கூட ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆறப்போடுவது தான் இந்திய நீதித் துறையின் ஸ்டைல்!

அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அதற்கு பிறகு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதே பாணியில் வெற்றி பெறுவார்கள்! இனி, இந்த நாட்டை மீட்க அந்த ஆண்டவனால் கூட முடியாத நிலையை உருவாக்கிவிடுவார்கள்!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time