மதவெறி அமைப்புகளுக்கு நீதிமன்றம் துணை போவதா?

-சாவித்திரி கண்ணன்

சமய நல்லிணக்கம் பேணப்படும் தமிழ் நாட்டில் அதை கெடுப்பதற்கு வேலை செய்யும் தீய சக்திகள் நீதி மன்றங்களின் வழியே தீர்ப்புகளை பெற்று, தமிழ்ச் சமூகத்தை பின்னோக்கி தள்ளுகின்றன! சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு பொதுத் தளத்தில் கடும் எதிர்ப்பை பெற்று வருகிறது..

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி அவர்கள் வழங்கி தீர்ப்பே சர்சை வெடிக்க காரணமாகும். அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டு இருப்பதாவது;

“இந்து மதத்தில் நம்பிக்கை இல்லாத இந்துக்களையும், இந்துக்கள் அல்லாதவர்களையும் கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று எதிர்மனுதாரர்களுக்கு உத்தரவிடப்படுகிறது. ‘இந்துக்கள் அல்லாதவர்கள் கொடிமரத்துக்கு அப்பால் அனுமதிக்கமாட்டார்கள்’ என கோயில் நுழைவாயில் மற்றும் முக்கிய பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இந்துக்கள் அல்லாதவர்கள் கோயிலுக்கு வந்தால், அவர்களிடம் இந்து கடவுள் மீதும், இந்து மதம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், கோயில் மரபுகளை பின்பற்றுவதாக உறுதிமொழி கடிதம் பெற்ற பிறகு அவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும். இதற்காக கோயில்களில் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும்.

கோயில் வளாகத்தில் ஆகம விதிகள், பழக்க, வழக்கங்களை தீவிரமாக பின்பற்ற வேண்டும். இந்து கடவுள்கள், இந்து மதம், விழாக்களில் சம்பந்தப்படாதவர்களை இந்துக்களின் வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கக் கூடாது. கிறிஸ்தவ ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள், மசூதிகளில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.’ என்று தனது உத்தரவில் கூறியுள்ளார்.

முதலாவதாக இந்த வழக்கின் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கை போட்டது விஷ்வ ஹிந்து பரிசஷத் என இந்துத்துவ தீவிரவாத அமைப்பாகும். இவர்கள் இந்தியா முழுமையிலுமே இது போன்ற பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர்! பல நூற்றாண்டுகளாக பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு வந்து சென்ற மாற்று மதத்தினரை தடுத்த புண்ணியவான்களும் இவர்களே!

தமிழ் கடவுளான முருகனின் அறுபடை வீடுகளில் காவடி எடுப்போரில் இஸ்லாமியர்களும் உள்ளனர்! அவர்கள் தங்கள் தீரா துயரத்தை தீர்க்க முருகனை நினைத்து வேண்டி விரதமிருந்து காவடி தூக்கி வருவது பல்லாண்டுகளாகவே உள்ளது! பழனிமலை அடிவாரத்தில் தேனீர் கடையை பல்லாண்டுகள் நடத்தி வருபவர் சாகுல் அமீது! இவர் முருக பக்தர்களுக்கு உதவும் மனம் கொண்டவர். ஆகவே, தன் வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு பழனிமலையை சுற்றிக் காண்பிக்க எண்ணி, அவர்களை விஞ்சில் ஏற்ற டிக்கெட் வாங்கியுள்ளார். இதைக் கண்ட வி.ஹெச்.பி ஆட்கள் தகராறு செய்து அங்கே களேபரத்தை ஏற்படுத்திவிட்டனர். ”கோவிலுக்குள் வரவில்லை ஐயா, பழனிமலையை சுற்றிப் பார்த்து திரும்பி விடுகிறோம்”என வேண்டுகோள் வைத்தார். அதற்கு, ”இது ஒன்றும் சுற்றுலா தலமல்ல” என்று அவரை விரட்டி அடித்ததோடு, வழக்கும் போட்டு தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்று உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி ஸ்ரீமதி கூறி இருப்பதாவது;

அறநிலையத் துறை அதிகாரிகள் அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் தவறிவிட்டனர். பழநி மலைப்பகுதி முழுவதும் இந்துக்களின் புனித இடமாகும். இது போன்ற நிலையை தவிர்க்க ரோப் கார் நிலையம், விஞ்ச் நிலையம் என அனைத்து இடங்களில் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழையக் கூடாது என அறிவிப்பு புலகை வைக்க வேண்டும். இந்த உத்தரவை தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அமல்படுத்த வேண்டும்.

தீர்ப்புக்கு முன்னதாக தமிழ்நாடு அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் வாதிடுகையில், “முருகனை இந்துக்கள் மட்டும் வழிபடுவதில்லை. முருகன் மீது நம்பிக்கை வைத்து பிற மதத்தினரை பின்பற்றுபவர்களும் கோயிலுக்கு வருகின்றனர். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 முதல் 28-ல் இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாப்பது மதச்சார்பற்ற அரசு மற்றும் கோயில் நிர்வாகத்தின் கடமை. கோயில் நுழைவு அனுமதி சட்டத்தில், கோயில் என்றால் கருவறை எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அங்குதான் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது. விஞ்ச் நிலையம், ரோப் கார் நிலையங்கள் கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ளன. இங்கு அறிவிப்பு பலகை வைப்பதால் எந்த பலனும் ஏற்படாது. இந்து மதத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் தமிழகத்தில் எந்தக் கோயில்களுக்கும் சென்று அந்தந்த கோயில்களின் மரபுகளை பின்பற்றி தரிசனம் செய்யலாம். கொடிமரம் வரை கோயில் வளாகத்தில் யாரும் நுழைவதை தடுக்க முடியாது…’’என வாதிட்டார்!

ஆனால், அவரது வாதத்தை நீதிபதி ஸ்ரீமதி நிராகரித்து கூறியதாவது;

இந்து கடவுள், இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து வருபவர்களை கோயிலுக்கு அனுமதிக்கலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்து கடவுள், மதம் மீது நம்பிக்கை வைத்துள்ள பிற மதத்தினரை எப்படி அடையாளம் கண்டுபிடிப்பது? இந்து அல்லாதவர்களின் உணர்வுகள் குறித்து கவலைப்படும் அதிகாரிகள், இந்துக்களின் நம்பிக்கை குறித்து கவலைப்படுவதில்லை. இந்து மதம், இந்து கோயில்களின் பழக்க, வழக்கம், பாரம்பரியத்தை பாதுகாக்கவே அறநிலையத் துறை கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்துக்களின் மத உணர்வுகளை பாதுகாப்பதில் அதிகாரிகள் தோல்வி அடைந்துள்ளனர்.

என நீதிபதி தன் தீர்ப்பில் வரம்புகளை மீறியும், தமிழக யதார்த்தங்களை புறந்தள்ளியும் பேசியுள்ளதால் இந்த தீர்ப்பை பொதுத் தளத்தில் அனைத்து தரப்பினரும் கடுமையாக எதிர்க்கின்றனர்!

சைவ சித்தாந்த அறிஞர் சத்தியவேல் முருகனார்

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளரும், சைவ சித்தாந்த அறிஞரும், 14,00க்கு மேற்பட்ட கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்தியவருமான மு.பெ.சத்தியவேல் முருகானார் இந்த தீர்ப்பு குறித்து கூறியதாவது;

இந்த தீர்ப்பில் நீதிபதியின் அறியாமை தான் வெளிப்படுகிறது. கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். மனிதன் தான் கடவுளை வகைப்படுத்தி வைத்திருக்கிறான். தான் படைத்த உயிர்கள் தன்னை நோக்கி வரும் போது கடவுளே வெறுக்க முடியுமா?

இந்துக்கள் யார்? ஆகமம் என்ன சொல்கிறது? அரசியல் சட்டம் என்ன சொல்கிறது? போன்ற எந்த புரிதலும் நீதிபதிக்கு இல்லை.

வெவ்வேறு கடவுள்களையும், நம்பிக்கைகளையும் கொண்ட அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து இந்து என்று சொல்கிறோம். சிவனை வழிபடும் சைவம், பெருமாளை வைணவம்,சக்தியை வழிபடும் சாக்கியம், சூரியனை வழிபடும் செளரம், முருகனை வழிபடும் கெளமாரம், பிள்ளையாரை வழிபடும் காணபத்தியம் ஆகியோர் ஒருவரை ஒருவர் ஏற்காமல் பன்நெடுங்காலமாக சண்டையிட்டு வந்தது மாறி இன்று நல்லுறவு மலர்ந்துள்ளது! இதற்கு பல ஆன்மீகப் பெரியோர்கள் பாடுபட்டுள்ளனர். ”ஹரியும்,சிவனும் ஒன்று, இதை அறியாதவன் வாயில் மண்ணு” என்றெல்லாம் பேசி வழிக்கு கொண்டு வந்துள்ளோம். இன்று எல்லோரும், எல்லா தெய்வத்தையும் ஏற்கச் செய்துள்ளோம்.

யதொரு தெய்வம் கொண்டீர் – அத்

தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார் தாம் வருவார்!

என்கிறார் சிவஞான சித்தியார்! ஒரு சிவனடியார் கண்களுக்கு ஏசுவும், சிவனாகவே தெரிவார்! பேதம் பார்க்கமாட்டார்.

நமது அரசியல் சட்டம் பெளத்தர்கள்,சமணர்கள், நாத்திகர்கள் என அனைவரையும் இந்து என்ற வரையரைக்குள் கொண்டு வருகிறது! ஆகமத்தில் இன்னின்னார் கோவிலுக்கு வரலாம், வரக் கூடாது என்பதெல்லாம் இல்லவே இல்லை! இங்கே கோவிலையும், உருவ வழிபாட்டையும் ஏற்க மறுத்த ஸ்மார்த்த பிராமணர்களையே அர்ச்சகராக நாம் ஏற்று இருக்கும் போது, இது போன்ற தீர்ப்புகள் சமூகத்தை பின்னோக்கி தள்ளிவிடக் கூடாது! இருக்கும் சமூக அமைதியை கெடுத்துவிடக் கூடாது!

நாகூர் ஆண்டவன் தர்க்காவில் ஏராளமான இந்துக்கள் செல்கிறார்கள்.  வள்ளலாரின் ஞான சபையின் ஸ்ததூபிக்கு தங்க முலாம் பூசுவதற்கு 15 தோலா எடையுள்ள தங்கத்தை கொடுத்தவர் ஒரு இஸ்லாமியரே! தமிழகத்தில் பல இந்து கோவில்களுக்கு இஸ்லாமியர்கள் இன்றும் எவ்வளவோ தானதர்மங்கள் செய்து வருகின்றனர்! ஆகவே, இது வரை இருக்கும் நிலை அப்படியே தொடர வேண்டும் என்பதே நம் விருப்பமாகும்.

தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அவர்கள்,  ”நீதிபதி ஸ்ரீமதி அவர்களின் தீர்ப்பில், இந்துக் கோயில்களின் ஆகமப்படி ஆச்சார அனுஷ்டானங்களைக் கடை பிடிக்காதவர்களைக்  கோயில் கொடி மரத்துக்கு அப்பால் – கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இது இந்து அல்லாத பிற மதத்தவரின் உரிமையை மட்டுமின்றி, இந்துக்களின் உரிமையையும் பறிப்பதாக உள்ளது. தமிழகத்தில் இந்து அல்லாத பிற மதங்களின் வழிபாட்டுத் தலங்களுக்குள் இந்துக்கள் செல்ல தடை இல்லை. இந்தத் தீர்ப்பு இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகளை முடக்குவதாக உள்ளது. அர்ச்சகர்கள் மற்றும் அவர்களைச் சேர்ந்த வகுப்பாரின் ஆதிக்கத்தின் கீழ் திருக்கோயில்களின் செயல்பாடுகளைக் கொண்டுவரும் தன்மையில் உள்ளது. இந்துக்கள் அல்லாதவர்கள் உள்ளே வரக்கூடாது என்று எச்சரிக்கைப் பலகையோ, கணக்குப் பதிவோ கூடாது. நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி, முழுவீச்சில் சட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்” என காட்டமாக அறிவித்துள்ளார்.

”இந்த தீர்ப்பு இறை நம்பிக்கையுள்ளவர்களை காயப்படுத்தும் தீர்ப்பாகும். தமிழகத்தில் ஒரே நேரத்தில் எல்லா மத வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று வரும் மக்களிடம் உள்ளது. மதம் கடந்து இறை வழிபாடு செய்கிற மக்கள் ஏராளமாக உள்ளனர். நாளையே ஒருவர் இது சைவ கோவில் வைணவர்கள் வரக்கூடாது என்றோ, இது வைணவ கோவில் எனவே, சைவர்கள் வரக்கூடாது என்றோ நீதிமன்றத்தை நாடலாம். இதுவெல்லாம் இந்து மதத்தின் பல்வேறு பிரிவினர்களிடையே முரண்பாட்டையும், பகைமையையும் உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்து விடும் வாய்ப்புள்ளது.  அதற்கு இந்த தீர்ப்பே தீனிபோடும் விதமாக அமைந்துவிடும்” எனக் கூறியுள்ளார் சிபிஎம் தலைவர் கே.பாலகிருஷ்ணன்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டால்  ஆதிகேசவ பெருமாள் கோவில் சம்பந்தப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு தற்போது நினைவு கூறத்தக்கது;

வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்ட இந்து கடவுளை நம்புவதைத் தடுக்கவோ, கோவிலுக்குள் நுழைவதைத் தடுக்கவோ முடியாது. கூடாது. பிறப்பால் கிறிஸ்தவரான டாக்டர்.கே.ஜே.யேசுதாஸின் பக்திப் பாடல்கள் பல்வேறு இந்துக் கடவுள்களின் கோவில்களில் எந்தத் தடையும் இல்லாமல் இசைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. நாகூர் தர்கா, வேளாங்கண்ணி தேவாலயம் போன்றவற்றில் ஏராளமான இந்துக்கள் வழிபடுகின்றனர்,” என்று குறிப்பிட்டு, இதே போன்ற மனு ஒன்றை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதை ஏன் நீதிபதி ஸ்ரீமதி அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரியவில்லை.

மத்திய ஆட்சியாளர்களும், சில இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களும் தான் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கத் துடிக்கிறார்கள்..  ‘நீதிமன்றமாவது நடு நிலையோடு செயல்படக் கூடாதா?’ என்ற ஏக்கமே மிஞ்சுகிறது! இப்படியே ஒவ்வொரு தடைகளாகப் போட்டுக் கொண்டே சென்றால், கடைசியில் கோவிலில் ஆதிக்க சமூகத்தினர் வைத்ததே சட்டம் என்றாகிவிடும். கோவிலில் கடவுள் சிலை இருக்கும். ஆனால், கடவுள் இருக்கமாட்டார்!

சாவித்திரி கண்ணன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time