அமெரிக்க தேர்தல்; படுதோல்வியை சந்திக்கிறாரா டிரம்ப்?

சாவித்திரி கண்ணன்

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மூன்றாம் தேதி(வரும் செவ்வாய் கிழமை) நடக்கவுள்ளது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு! பலநாட்டு மக்கள்,பல இனமக்கள், பல கலாச்சார மக்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழும் சமூக கட்டமைப்பை கொண்ட நாடு என அமெரிக்கா பேர் பெற்று இருந்தாலும், அங்கு நடக்கும் தேர்தல்களிலும் அடாவடிப் பேச்சுகள்,அற்பமான வாக்குறுதிகள், நாடகத்தனமான போலி பிம்பங்களை கட்டமைத்து வாக்காளர்களை கவரும் முயற்சிகள் என யாவும் அரங்கேறத் தான் செய்கின்றன!

அதிபர் தேர்தலுக்கு போட்டியிடும் டிரம்ப் ,ஜோபைடன் ஆகிய இருவர் மீதும் பாலியல் புகார்கள் விவாதிக்கப்படுகின்றன! இருவருமே பொய்பேசும் கலையில் விற்பன்னர்களாக உள்ளனர். இதையெல்லாம் கடந்து இரண்டு அதிபர்களில் யாரை தேர்ந்தெடுத்தால் நாட்டுக்கு ஓரளவேனும் நல்லது என்ற கண்ணோட்டத்தில் அமெரிக்கர்கள் இந்த தேர்தலை அணுகுகின்றனர். அந்த வகையில் டிரம்ப் ஏன் பின் தங்கியுள்ளார் என்பதை பார்ப்போம்.

டிரம்ப் பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசுக் கட்சி பொதுவாக பிற்போக்குவாதக் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. காரணம் வெள்ளையினத்தினரின் ஆதிக்க மனோபாவத்தை பல நேரங்களில் ஆதரிக்கும் கட்சியாக அது வெளிப்பட்டுள்ளது. மேலும் கறுப்பர் இன மக்களை சற்றே ஒடுக்கி வைக்கவேண்டும் என்ற கொள்கை கொண்டதாகவும் உள்ளது. சமூக நீதி,சமூக சமத்துவம், சிறுபான்மையினர் உறவு ஆகியவற்றில் இந்த கட்சிக்கு அவ்வளவாக நல்ல பெயர் இல்லை! அதே சமயம் அமெரிக்காவின் மீதான அதிக தேசப்பற்றை வெளிப்படுத்தும் கட்சியாகத் தன்னை காட்டிக் கொள்கிறது. இந்தக் கட்சி அமெரிக்க போலீஸின் அத்துமீறல்களை நியாயப்படுத்தும்,எளிய நாடுகளின் மீதான அமெரிக்காவின் ராணுவ அராஜகங்களை ஆதரிக்கும் மனோபாவம் கொண்டது. இதனால் தான், ’’ஜனநாயக கட்சி ஜெயித்து வந்தால்,அமெரிக்காவில் போலீஸ் மற்றும் ராணுவத்தின் நிலைமை பரிதாபகரமாகிவிடும்’’ என்றெல்லாம் டிரம்ப் சொல்கிறார்.

ஜனநாயககட்சி பல இனமக்களையும் ஆதரிக்கும் கட்சியாக உள்ளது. குறிப்பாக கறுப்பர் இன மக்களை அரவணைத்துச் செல்லும் கட்சியாகப் பார்க்கப்படுகிறது. அதனால் தான் அந்த கட்சியின் சார்பில் ஒரு கறுப்பராகவும் பூர்வீகத்தில் இஸ்லாமியராகவும் அறியப்பட்ட ஒபாமாவை அதிபர் வேட்பாளராக அறிவிக்க முடிந்தது.அதே போல தற்போதைய துணை அதிபர் வேட்பாளராக ஆப்பிரிக்க, ஆசிய பெண்ணான கமலா ஹாரிசை அறிமுகப்படுத்த முடிந்தது. இந்த கட்சி அமெரிக்காவின் பன்முகத்தை கட்டிக்காப்பதில் கூடுதல் ஆர்வம் கொண்ட கட்சியாக அறியப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளையின போலீசின் அத்துமீறல்களை கண்டிக்கும் கட்சியாகவும், மற்ற நாடுகள் மீதான அமெரிக்க இராணவத்தின் அத்துமீறல்கள் அளவோடு இருக்க வேண்டும் என்று கருதும் கட்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு கட்சிகளுமே அமெக்காவில் ஏறத்தாழ சமபலத்துடன் உள்ளன என்றும் நாம் சொல்லலாம்! ஆகவே, இவர்கள் இருவருமே மாறி,மாறி ஆட்சியைக் கைப்பற்றுவது வாடிக்கையாகவுள்ளது. அமெரிக்காவின் மொத்தமுள்ள 50 மாநிலங்களில் இந்த இரண்டு கட்சிகளும் தலா இருபது மாநிலங்களை தங்கள் வசம்வைத்துள்ளன! அதாவது இந்த மாநிலங்களில் இருந்து தேர்வாகும் பிரதிநிதிகள் பெரும்பாலும் அந்தந்த கட்சிகளின் ஆட்களாகவே இருப்பார்கள்! அந்த வகையில் இந்த இரு தரப்புமே இங்கெல்லாம் அதிக மெனக்கிடல்களை செய்யமாட்டார்கள். கண்மூடித்தனமான ஆதரவு என்றில்லாமல் பிரச்சினைகளின் அடிப்படையிலும், நபர்களின் அடிப்படையிலும் ஓட்டுப்போடும் சுமார் பத்து அல்லது பதினொரு மாநிலங்களே இந்த இரு கட்சிகளின் டார்கெட்டாகும்!

இந்த தேர்தலில் அமெரிக்க மக்கள் அதிகமாக விவாதித்த – அதிக தாக்கத்தை ஏற்படுத்திய –   விஷயங்களை பார்த்தோமென்றால், குறிப்பாக கோவிட்19 தான்! கொரானாவால் அமெரிக்காவில் இது வரை 2,29,000 பேருக்கும் அதிகமாக இறக்க நேர்ந்ததற்கு டிரம்பின் அலட்சியமான நிர்வாகமே காரணம் என பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள்! தன்னுடைய நிர்வாகத்தின் மீதான தவறுகளை மறைக்கவே அவர் உலக சுகாதார நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுகள் வைத்ததோடு அதற்கு வழங்கும் நிதிஉதவியையும் மறுத்துள்ளார் என்பது எதிர்கட்சி வைத்துள்ள குற்றச்சாட்டாகும்! அமெரிக்காவின் தற்போதைய பெரும் பொருளாதார சரிவுகள்,வேலைவாய்ப்பின்மை,சீனாவின் அதிகரித்து வரும் ஆதிக்கபோக்குகள் ஆகியவை இந்த தேர்தலில் பெரும் விவாத பொருளாகிவிட்டன.

இத்துடன் டிரம்ப் அதிக ’லூஸ் டாக்’ உள்ளவராக, நிதானமற்ற தலைவராக வெளிப்பட்டுவிட்டார். இதே குற்றச்சாட்டு முன்பு அவருக்கு எதிராக போட்டியிடும் ஜோபைடன் மீதும் இருந்தது. ஆனால், அவர் தனது நீண்ட நெடிய சுமார் 47 ஆண்டுகால அரசியல் வாழ்வில் தற்போது ஓரளவு நிதானத்திற்கு வந்து விட்டார். ஜோபைடன் தனக்கு அடுத்தபடியாக துணை அதிபர் போட்டிக்கு கமலா ஹாரிசை அறிவித்தது அவரது புத்திசாலித்தனத்திற்கு எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகிறது!

அமெரிக்காவில் இந்தியர்கள்

அமெரிக்காவில் இந்தியர்கள் வாக்குகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடாது! ஏனெனில், மொத்த இந்திய வாக்காளர்களே 26 லட்சம் தான்! அதே சமயம் இந்தியர்களின் ’லாபி’ சக்தி வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால்,அமெரிக்க நாடாளுமன்றத்திற்கான வேட்பாளர்கள், மானில சட்டமன்றத்திற்கான வேட்பாளர்களாக சுமார் 60 இந்தியர்கள் களம் காண்கிறார்கள். இவை தவிர்த்து, அமெரிக்க உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்கனவே சுமார் 100 இந்தியர்கள் பொறுப்பில் உள்ளனர். பொதுவாக அமெரிக்காவில் இந்தியர்கள் மீது நல்ல நிர்வாகத் திறமையுள்ளவர்கள் என்ற பெயர் உள்ளது! அதேசமயம் இந்தியர்களிடையே அங்கும் சாதிபாகுபாடு இருப்பது குறித்து தற்போது வாஷிங்டன் போஸ்டிலேயே விரிவாக செய்திகள் வருமளவுக்கு இந்தியர்கள் விவகாரம் பேசப்படுகிறது. ஆனால், இந்தியர்களில் 70% க்கும் மேற்பட்டவர்கள் ஜனநாயக கட்சியைத் தான் ஆதரிக்கின்றனர் எனத் தெரியவருகிறது. கமலாஹாரிஸ் துணைவேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் இதற்கு முக்கியகாரணமாக பார்க்கப்படுகிறது. கமலா தன் பணிகளை சிறப்பாக செய்து நல்ல பெயர் வாங்கினால், அவர் அடுத்ததாக அதிபர் தேர்தலில் போட்டியிட்டு ஆவதற்கும் அதிபராகவும் வாய்ப்பு இருக்கிறது.

யாருக்கு வெற்றி வாய்ப்பு!

தற்போதைய நிலவரப்படி பார்த்தால் ஜனநாயக கட்சியின் ஜோபைடனுக்குத் தான் வாய்ப்பு அதிகம் இருப்பதாக பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் தேர்தல் முறையில் உள்ள சிக்கல் என்னவென்றால், மக்கள் அதிகமாக ஓட்டுப் போட்டுவிடுவதால் மட்டுமே ஒரு அதிபரை தேர்ந்து எடுத்துவிடமுடியாது. மாகாணங்களின் சார்பான பிரதிநிதிகள் 538 பேர் போடும் ஓட்டு தான் அதிபர் தேர்வை உறுதிபடுத்துகிறது. இந்த வகையில் சென்ற முறை போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் டிரம்பைவிடப் 30 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றும் கூட பிரதினிதிகள் ஓட்டு குறைவாக பெற்றதால் தோல்வியடைய நேரிட்டது! அதுமட்டுமின்றி, ஒரு மாகாணத்தில் 55 பிரதிநிதிகள் என்றால்,அவர்களில் 40 பேர் ஒருவரை ஆதரித்ததாக தெரிய வந்தால் ஒட்டுமொத்த 55 பிரதினிதிகள் ஓட்டுகளையும் வெற்றிபெற்ற வேட்பாளருக்கே காணிக்கையாக்கிவிட வேண்டும் என்ற ஒரு நியதி உள்ளது. இந்த தந்திரமான நியதி காரணமாக ஜனநாயகத்தின் மாண்பே சிதைக்கப்படுகிறது என்றும்,இது மாற்றப்பட வேண்டும் என்றும் அடிக்கடி சொல்லப்பட்டாலும் இது மாறாமல் தொடர்கிறது! ஆனபோதிலும் எப்படிப் பார்த்தாலும் டிரம்பின் வெற்றிக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time