கொள்ளை லாபத்திற்கான கொழுத்த வியாபாரமா அரசியல்?

-சாவித்திரி கண்ணன்

அரசியல் கட்சிகள் பெரு வியாபார நிறுவனங்களாக மாறி கோலோச்சுகின்றன! தலைவர்களே பிராண்ட் மாடல்கள்! 50 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சிகள் இயங்கிய விதத்திற்கும் இன்றைக்கும் மலையளவு வேறுபாடுகள் உள்ளன! இந்தச் சூழலின் உருவாக்கத்தையும், போக்குகளையும் அலசுகிறது இந்தக் கட்டுரை;

மக்களாட்சியில் கட்சிகளின் தோற்றத்துக்கு தேவைகள் இருந்திருக்கின்றன. நாட்டு விடுதலைக்காக காங்கிரஸ் கட்சி உருவானது. அன்றைக்கு காங்கிரஸ் ஒரு வரலாற்றுத் தேவை! அந்த வரலாற்றுத் தேவையின் பின்னணியில் இந்திய வணிகர்கள் தங்கள் நலன் சார்ந்து இருந்தனர். அதில் தலைவர்களாக  இருந்த எல்லோரும் சொந்த செலவில் தான் கட்சிக்காக வேலை பார்த்தார்கள். அதே சமயம் அன்றே டாடா,பிர்லா உள்ளிட்ட தொழில் அதிபர்கள் காங்கிரஸ் கட்சியின் செயல் திட்டங்களுக்கு நன்கொடை தந்தனர்.

நாட்டின் விடுதலைக்காக சர்வ பரித் தியாகம் செய்வோர்கள் ஒரு புறமும், காங்கிரஸ் கட்சி என்ற கோதாவில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பதவி, அந்தஸ்த்து, வாய்ப்புகளை பெற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்களும் காங்கிரஸுக்குள்ளேயே இருந்தனர். நாடு சுதந்திரம் பெற்று ஆட்சி அதிகாரத்தை முழுமையாக சுவைக்கத் தொடங்கி காலகட்டத்திலும் கூட ஓமந்தூர் ராமசாமி, ராஜாஜி, காமராஜ், கக்கன் போன்ற சுய நலமில்லாத நேர்மையான ஆட்சியாளர்கள் இருந்தனர். ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பெரும் செல்வத்தை ஈட்டிய டி.டி.கே.கிருஷ்ணமாச்சாரி, ஜெகஜீவன்ராம்… உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகளும் கணிசமாக இருந்தனர். காங்கிரஸ் கட்சியில் பிராமண ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த காரணத்தால் தான் வ.உ.சிதம்பரம் போன்ற தியாகத் தலைவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளானார்கள்!

நீதிக்கட்சி இங்கே இருந்த பிராமண ஆதிக்கத்தை முடிவு கொண்டு வருவதற்கான வரலாற்றுத் தேவையாக உருவானது. நீதிக்கட்சியில் படித்தவர்கள், வசதியானவர்கள் தான் அதிகம் இருந்தார்கள். பொதுக் காரியத்துக்காக சொந்த நிதியைச் செலவு செய்தார்கள். சமூக நீதிக்கான சில முன்னெடுப்புகளை முதன்முதலாக இவர்கள் செய்தனர். இதில் அதிகாரத்தை அனுபவிக்க துடித்த பிராமணர் அல்லாத மேல்சாதியினர் ஆதிக்கமே அதிகம் இருந்தது! எனவே, எளிய மக்களை அது சரியாக பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

சுதந்திரத்திற்கு பிறகு எளிய மக்களை அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்தும் செயல்பாட்டில் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் பின் தங்கி இருந்தது! இந்த காலகட்டத்தில் இந்த வரலாற்றுத் தேவையை நிறைவேற்றும் வண்ணம் திராவிட முன்னேற்றக் கழகம் வந்தது. திமுக மக்களிடையே பரவிய போது பாமர மக்கள் இதில் இணைந்து தங்களை தாங்களே அர்ப்பணித்துக் கொண்டு கட்சியை வளர்த்தனர்.

அன்றைய வரலாறுகளைப் படிக்கும்போது, ஏராளமானோர் கட்சிக்காக தங்கள் சொத்துகளை செலவழித்து இழந்தது தான் தெரிய வருகிறது. இராம. அரங்கண்ணல் தன் சுயசரிதையில் தான் மைலாப்பூரில் 1967-இல் போட்டியிட்டது பற்றி எழுதி உள்ளார். அண்ணா இவருக்கு வாய்ப்புத் தந்த நிலையில், மயிலாப்பூரில் சென்று இறங்குகிறார். அங்கே இருக்கும் எளிய திமுக தொண்டர்கள் கூட்டம் போட்டு, ‘’நமக்காகப் போட்டியிட அரங்கண்ணல் வந்துள்ளார். அவருக்கு எந்த சிரமமும் இல்லாமல் நாம் கவனித்துக்கொள்ளவேண்டும். அவரை வெற்றி பெற வைக்கவேண்டும்’’ எனப் பேசி செயல்படுகிறார்கள். ”கடைசிவரை தன்னிடம் தேர்தல் செலவுக்காக கட்சித் தொண்டர்கள் பத்து பைசா கூட கேட்கவில்லை..” என அவர் குறிப்பிடுகிறார்.  மிகவும் அடித்தட்டு நிலையில் இருந்த தொண்டர்களே முழுக்க உழைத்து செலவழித்து, அவரை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு நிலையும் தமிழ்நாட்டில் இருந்தது என்று சொன்னால் இன்று யாரும் நம்பமாட்டார்கள். பணக்காரர்களையும், ஏழைகளையும் சரிவிகிதத்தில் வைத்து பேலன்ஸ் செய்து அவரவர் தேவையை கட்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும் நிலைமைகள் காமராஜர், அண்ணா காலத்தில் இருந்தது.

1960 களிலேயே பெரு நிறுவனங்கள் பலனடையும் வண்ணமும், விவசாயிகளை அவர்கள் சுரண்டிக் கொழுக்கும் வண்ணமுமாக விவசாய வளர்ச்சி என்ற பெயரில் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன! இதில் பலனடையும் பெரு நிறுவனங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தேர்தல் நிதியை வழங்கினார்கள்! அப்போது தொடங்கி, தற்போது வரை கொண்டு வரப்படும் விவசாயத் திட்டங்கள் அனைத்துமே பெரு நிறுவனங்களை கொழுக்க வைப்பதாகவும், விவசாயிகளை சுரண்டுவதாகவுமே உள்ளன! காலப் போக்கில் இந்த பலாபலன்களின் பங்குதாரர்களாக விவசாய சங்க தலைவர்களும், என்.ஜி.ஓக்களும் சேர்ந்து கொண்டனர்.

1990களுக்குப் பின் தாராளமயக் கொள்கையால் இந்தியப் பொருளாதாரத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டது. நம் நாட்டின் இயற்கை வளங்களைக் குறிவைத்து அந்நிய நிறுவனங்கள் கடன் கொடுத்தன. முதல் தர தேயிலை முதல் முந்திரி வரை அவர்கள் வட்டியாகப் பெற்றனர். அதுமட்டுமல்ல, இந்நாட்டில் உள்ள அரசியல்வாதிகளையே தங்கள் முகவர்களாக செயல்பட வைத்தனர். ஆட்சியில் இருக்கும் கட்சிகள் இதனால் அபிரிமிதமான பணத்தைக் குவிக்க ஆரம்பித்தன. பல திட்டங்களில் அவர்களே பங்குதாரர்களாக மாறினர். மக்களுக்காக என்று சொல்லி கொண்டு வரப்படும் அனைத்து திட்டங்களிலும் ஆட்சியாளர்கள் பணம் பார்ப்பதை தங்கள் பிறப்புரிமையாக நினைக்கத் தலைப்பட்டனர்.

மாநில ஆட்சியாளர்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளுமே வெளி நாட்டுக் கடன்களில் மஞ்சக் குளிக்கத் தொடங்கின! மக்கள் சேவை என்பது பெரிய அளவில் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன! கொண்டுவரப்படும் திட்டங்களால் மக்களுக்கு என்ன பலன்? தொலை நோக்கு பார்வையில் இந்த திட்டம் ஏற்படுத்தப் போகும் விளைவுகள் என்ன? என்பதை யோசிக்காமல், அதில் தாங்கள் பெறப் போகும் பலாபலன்களை கணக்கில் கொண்டே திட்டங்களை செயல்படுத்தினர். தொண்டர்களுக்கும் இது புரிந்து, ‘அரசியல் என்பது பணம் சம்பாதிப்பதற்கான வழி’ என பார்க்க ஆரம்பிக்கின்றனர்.

 

தற்போது நிலைமைகள் பெரிய அளவில் மாறிவிட்டன! ஒரு அரசியல் கட்சி என்பதே கற்பனைக்கு எட்டாத வியாபார நிறுவனமாகிவிட்டது. கட்சி என்பதே வியாபாரத்திற்கான ‘பிராண்ட்’ ஆகிவிட்டது! கட்சித் தலைவர்களே கட்சியின் விளம்பரத்திற்கான மாடல்களாகிவிட்டனர். கட்சியை மக்களிடம் எடுத்துச் செல்லும் வாகனங்களாக மக்களுக்கான சேவைகளே இருந்த நிலை மாறி, பணத்திற்கு வேலை செய்யும் தனியார் நிறுவனங்கள் கட்சிக்கு தேவைப்படும் நிலை உருவாகிவிட்டது. பிரசாந்த் கிஷோர்,சுனில் போன்ற தொழில்முறை அரசியல் ஆலோசகர்கள்  தோன்றிவிட்டனர்.

அரசியல் தலைவர்களை வழி நடத்தும் ஆலோசகர்கள் பிரசாந்த் கிஷோர்,சுனில்!

தங்களை விளம்பரப்படுத்துவதற்கு மிக அதிகமாக கட்சிகள் செலவழிக்கின்றன! அதுவும் விஞ்ஞானம் வளர்ந்துள்ள சூழலில் தகவல், தொழில் நுட்ப சாதனங்களின் வழியே மக்களை மூளைச் சலவை செய்ய ‘ஐ.டி விங்க்’ ஏற்படுத்தி கொள்கின்றனர். இதில் ‘வார் ரூம்’ என்ற ஒன்றையும் உருவாக்கி, பெரும் சம்பளத்தில் அறிவாளிகளை நியமித்து சமூக ஊடகச் செல்வாக்கை வளர்க்கின்றனர். ஆட்சிக்கு வந்த கட்சிகள் தங்கள் ஊழலையும், முறைகேடுகளையும் பேசாது இருக்க, பெரிய ஊடகங்களை வளைத்து போட விளம்பரங்கள் தருவது..எனப் பல சலுகைகளைத் தந்து, மீடியாக்களை கைக்குள் போட்டுக் கொள்கின்றன!

கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் வெவ்வேறு அணிகளின் தலைவர், செயலாளர் பொறுப்புகள் அனைத்துக்குமே இன்று ஒரு விலை வைத்து தான் கொடுக்கிறார்கள்! ‘பணம் இல்லாதவர்களுக்கு கட்சி பொறுப்புகள் கிடைப்பது அரிதிலும் அரிது’ என்ற நிலை தோன்றிவிட்டது. இதற்கும் மேலாக பிறகு கவுன்சிலர்கள்,எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் ஆகிய வாய்ப்புகளை பணம் கொடுத்து போட்டி போட்டு வாங்குகின்ற நிலை தோன்றியுள்ளது. இப்படி அதிகாரத்திற்கு வருபவர்கள் பணத்தை எடுக்க, மக்களைத் தான் சுரண்டுகின்றனர். அதுவும் உள்ளாட்சி அமைப்புகள் ஏகத்துக்கும் மக்களை சுரண்டிக் கொழுக்கின்றன!

சமிப காலமாக அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களை போல இயங்கத் தொடங்கியுள்ளன! உதாரணத்துக்கு இப்போது கடைசியாக நடந்து முடிந்த திமுக இளைஞரணி மாநாட்டை எடுத்துக் கொண்டால், உலக அளவில் 100 ஏக்கரில் யாருமே செய்யாத அளவுக்கு மாநாட்டு ஏற்பாடு என்கிறார்கள். இரண்டரை லட்சம்பேர் கலந்து கொண்டதாகச் சொல்கிறார்கள். இரண்டரை லட்சம் பேருக்கு சைவ, அசைவ உணவுகள் திட்டமிட்டபடி சமைத்து பரிமாறப்பட்டன!

ஒன்றைரை லட்சம் நாற்காலிகள் போடப்பட்ட பிரம்மாண்ட பந்தல்! அவர்கள் தங்கள் நாற்காலிகளில் அமரும் போது பைகளில் பிஸ்கட், நீர் உள்ளிட்டவை போடப்பட்டு வைக்கப்படும் அளவுக்கு திட்டமிடல், ஒழுங்கு, நிதி போன்றவற்றை எண்ணிப் பார்த்தால் மலைப்பே ஏற்படுகிறது!  இதே போல அதிமுகவும் மதுரையில் ஒரு பிரம்மாண மாநாட்டை நடத்தியது. இவை தாம் பக்காவாக கார்ப்பரேட் மய பெருநிறுவனமயமாதலின் அடையாளம். பா.ம.க, வி.சி.க போன்ற கட்சிகளும் இதில் விதிவிலக்கல்ல! நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் சிலர் அதிகாரத்திற்கு வராமலே பெரும் செல்வந்தர்களாக தங்களை உருவாக்கி கொள்ள முடிந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.

நான் எண்பதுகளில் கட்சி கூட்டங்களுக்கு மாநாடுகளுக்குச் செல்லும் போது தொண்டன் தன் குடும்பத்துடன் சொந்தசெலவில் மிகுந்த ஆர்வத்துடன் வருவதையே கண்டுள்ளேன். திராவிட இயக்க குடும்பங்களில் பெரியார், அண்ணா பற்றி குழந்தையிலேயே சொல்லி வளர்ப்பர்கள். அரசியலில் ஈடுபடுவதை சமூக மாற்றத்துக்காக நாம் செய்யும் கடமையாகப் பார்த்தார்கள். ஆனால், இன்றோ நாம் இதில் என்ன பயனடைகிறோம் என்று பார்க்கும் நிலைக்கு கட்சித் தொண்டர்கள் வந்து விட்டனர். கட்சிகளும் இவர்களைப் பயனாளிகளாகவே மட்டுமே பார்க்கிறார்கள். ஓட்டுகளை போடவும் ,ஓட்டுகளை வாங்கித் தரவுமான பணியாளர்களாக பார்க்கிறார்கள்!

மாநாடுகள் என்பவை கொள்கைகள் முழங்கப்பட்டு, லட்சியங்கள் விதைக்கப்படும் களங்களாக இருந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு கூட்டத்தை சேர்க்க ஆள் திரட்டும் செல்வாக்கான முகவர்களாக கட்சி நிர்வாகிகள் மாறி நிற்கின்றனர்.

‘நீங்கள் மாநாட்டுக்கு வாங்க. சொகுசாக பேருந்தில் அழைத்துவந்து சாப்பாடு போட்டு, பணம் கொடுத்து திரும்ப அனுப்புகிறோம்’ என்று தான் அழைக்கிறார்கள். கேள்வி கேட்பவர்களாக கட்சித் தொண்டர்கள் இருக்கக்கூடாது என்பதும் இதன் பின்புலத்தில் ஒளிந்திருக்கிறது. அரசியல் கட்சிகளுக்குள் நிலவுவது ஒருவிதமான சர்வாதிகாரமே. சர்வ அதிகாரத்தையும் தலைவருக்கு கொடுத்துவிட்டு, பணிந்து நிற்கும் கூட்டங்களாக பொதுக் குழு கூட்டங்கள் உள்ளன! தலைவர் தனக்கானவர்களை எப்படியும் வாழ வைப்பார் என்ற நம்பிக்கை நிர்வாகிகளிடம் தோற்று விக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கோவையில் ஒரு தனியார் எம்.எல்.எம் நிறுவனத்தின் மீதான புகாரை விசாரிக்க அந்த நிறுவன உரிமையாளர் காவல்துறையால் அழைக்கப்பட்ட போது, அவர் தன் ஆதரவாளர்கள் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோரைத் திரட்டிக் காட்டி காவல் துறையை மிரள வைத்தார்! அதாவது, ஒருவரால் தொடர்ச்சியாக பலன் பெறுபவர்கள் ஒன்றுபட்டு தங்கள் நலன்களை பாதுகாக்கும் குறிக்கோளுக்காக அணி திரள்கிறார்கள்! எண்ணிக்கை பலம் அவர்களுக்கு எதையும் செய்யும் துணிச்சலைத் தருகிறது. இது போன்ற எம்.எல்.எம் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் மக்கள் சேர்ந்தாலும், நூற்றில் ஒருவர் மட்டுமே பலனடைய முடியும். மற்றுமுள்ள இரண்டு சதவிதம் பேர் சுமாராக பலனடையலாம். ஆனால், மொத்தத்தில் 97 சதவிகிதமானவர்கள் பணம் போட்டு, உழன்று போராடி அமைதியாகிவிடுவர்!

ஏமாற்றப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் அமைதி காப்பார்கள்! ஏமானோர் லட்சக்கணக்கில் இருப்பர். ஆனால், பலனடையும் அந்த மூன்று சதவிகிதமானோர் ஆர்ப்பாட்டத்துடன் தங்கள் அநீதியை நியாயப்படுத்தி, தங்கள் இருப்பை தக்க வைக்கப் போராடி நின்று கொள்வார்கள். அரசியல் கட்சிகளும் இன்று ஒரு வகையில் எம்.எல். நிறுவனங்களே! அதி சாமார்த்தியசாலிகளுக்கு அது வரப்பிரசாதம். அப்பாவியானவர்களுக்கு அது வெறும் அடையாளம். எப்போதாவது சிற்சில பலன்கள் கிடைக்கும், அவ்வளவே!

ஆக, லட்சியப் பிடிப்புடன் கூடிய கட்சிகளே இன்று அனேகமாக இல்லாத நிலை தோன்றியுள்ளது. இடதுசாரிகளும் பொது நலத் தொண்டில் இருந்து விலகிச் சென்றுவிட்டதாகவே தோன்றுகிறது. ஆனால், இன்னும் பிரதிபலன்கள் பாராத சில கொள்கை பிடிப்பாளர்கள், லட்சியவாதிகள் இந்த கட்சிகளில் எஞ்சியுள்ளனர். சுமார் அரைசதவீத வாக்குகள் கொண்டிருக்கும் இக்கட்சிகளுக்கு தமிழ்நாட்டில் சுமார் ஆறு இடங்களை பெரிய கட்சி தங்கள் கூட்டணியில் தருகிறது என்றால், அக் கட்சியில் இருக்கும் அணிகளின் பிரச்சார பலத்தைப் பயன்படுத்திக் கொள்ளவே தருகிறது. ஆட்சியாளர்களின் தேவைக்கேற்ப ஓயாது பிரச்சாரங்கள், போராட்டங்கள், அறிக்கைகள் என்று இக் கட்சிகளும் பாடுபடுகிறார்கள். வர்த்தகரீதியான பெருநிறுவனங்களின் செயல்பாடுகள் போல இதுவும் ஆகிவிட்டது.

இந்நிலையில் லட்சியபூர்வமான கட்சிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் மிக அரிது. இந்த பின்னணியில் தான் நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழர் வெற்றி கழகம் கட்சியின் நகர்வையும் நாம் பார்க்க வேண்டும்.

உட்கட்சி ஜனநாயகம் என்பது இன்று முற்றிலும் ஊனப்பட்டு நிற்கிறது. மக்கள் நலன் என்பது பின் தள்ளப்பட்டு சிறு குழுக்கள் பலனடையும் போக்கு மட்டுமே உள்ளது. ஜனநாயக மீட்பு என்பதை முதலாவதாக அந்ததந்த கட்சிக்குள் இருந்து ஆரம்பிக்க வேண்டிய நிலையில் தான் நாடு உள்ளது. கொள்கைவாதிகள், லட்சியவாதிகள், பொது நலன் விரும்பிகள் எந்த கட்சிகளுக்குள்ளும் தங்களை பொருத்திக் கொள்ள முடியாமல் உதிரிகளாக உழன்று கொண்டுள்ளனர். பொருத்திக் கொண்ட ஒரு சிலர் அமைதியாகிவிடுகிறார்கள்!

சாவித்திரி கண்ணன்

(அந்தி மழை இதழுக்காக நான் தந்த பேட்டியை சற்று விரிவுபடுத்தி எழுதியுள்ளேன்)

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time